கல்வித் துறை என்றால் பெரும்பாலும் மாணவர்களைப் பற்றியே பொதுத்தளத்தில் பேசுகிறோம். அவர்களை ஒழுக்கம் அற்றவர்களாகவும் எல்லாவகைத் தவறுகளையும் செய்பவர்களாகவும் சித்திரிக்கும் பொதுமனப் பிம்பம் ஒன்று அழிக்க இயலாதவாறு பரவியிருக்கிறது. காரணம் சமூகக் கருத்துருவாக்கத்தில் மாணவர் பங்கே இல்லை. கல்வி நிறுவனங்களில் மாணவர் பிரதிநிதித்துவம் இப்போது சிறிதும் இல்லை. மாணவர் அமைப்புகளே நிறுவனங்களில் கிடையாது. தேர்தல் இல்லை. ஆகவே மாணவர் தலைவர், செயலர் முதலிய பதவிகளும் இல்லை. ஆகவே எங்கோ நடக்கும் சில தவறுகளைப் பொதுமைப்படுத்தி ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தின் மீதும் சுமத்தும்போது அதை எதிர்கொண்டு கருத்துச் சொல்லப் பிரதிநிதித்துவம் இல்லை. இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் களத்தில் வேரூன்றிச் செயல்படவில்லை. சில பொதுப் பிரச்சினைகள் சார்ந்து களமாடுகிறார்களே தவிர, கருத்துருவாக்கம் குறித்த கவனம் இல்லை.
ஆனால் ஆசிரியர்கள் செய்யும் தவறுகள் பற்றிப் பொதுத்தளத்தில் அவ்வளவாகப் பேசுவதில்லை. பேசினாலும் பாதுகாப்பதற்கு ஆசிரியர் அமைப்புகள் முன்வந்து நிற்கின்றன. யாரோ ஒரு ஆசிரியர் தவறு செய்தால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் குறை சொல்லக் கூடாது என்னும் கருத்தை அவர்கள் தொடர்ந்து முன்வைக்கிறார்கள். தவறு செய்யும் ஆசிரியர்களுக்குச் சட்ட ரீதியாகவோ நிர்வாக ரீதியாகவோ உதவுவதற்கு அமைப்புகள் இருக்கின்றன. தவறில்லை, அது இயல்புத்தான். அதற்காக ஆசிரியர்களின் தவறுகள் குறித்துப் பேசாமல் இருக்கக் கூடாது. தொடர்ந்து பேசியாக வேண்டும். ‘மாணவர்கள் பதவிகளிலோ பணிகளிலோ இல்லாதவர்கள். எனவே பெரிய தவறுகள் செய்ய வாய்ப்புக்கள் இல்லை. அவர்கள் வயது அப்படி. பதவிகளிலும் பணிகளிலும் உள்ள ‘பெரியவர்கள்’ தவறு செய்ய பல வாய்ப்புக்களைக் கொண்டவர்கள். ஆகவே ஒப்பீட்டளவில் ஆசிரியர்களுக்குத்தான் கூடுதல் வாய்ப்பு’ என்று நான் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
ஆசிரியர் ஒருவரது செயலைப் பற்றித்தான் இப்போது எழுதப் போகிறேன்.
நண்பர் ஒருவர் மூலம் ‘பெயர்பலகை’ என்னும் சிறுகதைத் தொகுப்பு ஒன்று கைக்கு வந்தது. பத்து எழுத்தாளர்களின் கதைகளைக் கொண்ட நூல். பட்டியல்:
- கி.ராஜநாராயணன் – கோமதி
- ஜெயமோகன் – ஆழமற்ற நதி
- எஸ்.ராமகிருஷ்ணன் – பெயர்பலகை
- பாவண்ணன் – அன்னபூரணி மெஸ்
- அம்பை – வாகனம்
- லஷ்மி சரவணக்குமார் – ஆவாரம்பூ
- எஸ்.செந்தில்குமார் – புலி சகோதரர்கள்
- சந்திரா – புளியம்பூ
- குட்டி ரேவதி – காது
- ஜி.ஆர்.சுரேந்திரநாத் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி
இந்த நூலின் தொகுப்பாசிரியர் சகோதரி அ.அருள்சீலி. அவர் கோயம்புத்தூர், நிர்மலா கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர். உடனே எனக்குப் புரிந்துவிட்டது. அது தன்னாட்சி பெற்ற மகளிர் கல்லூரி. பட்ட வகுப்பு மாணவியருக்குப் பொதுத்தமிழ்ப் பாடத்திட்டத்தில் ஒரு பருவத்திற்குச் சிறுகதைத் தொகுப்பு வைக்கப்பட்டிருக்கும். அதற்காக அவர்களே உருவாக்கிய நூல் இது. தமிழ்த்துறைத் தலைவர் பெயரில் இருந்தாலும் துறை ஆசிரியர் யாரேனும் கதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கலாம். அல்லது தலைவரே தேர்ந்தெடுத்திருக்கலாம். அக்கல்லூரியில் மூன்று ஆண்டுகளுக்கு இந்நூல் பாடத்திட்டத்தில் இருந்திருக்கும். சில ஆயிரம் மாணவியருக்கு விற்பனை செய்திருப்பர். எல்லாம் சரி. கதாசிரியர்களுக்கு தம் கதை இப்படி ஒருதொகுப்பில் வெளியாகியிருக்கிறது, அது பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது, பல்லாயிரம் படிகள் விற்பனை ஆகியுள்ளது என்னும் விவரம் தெரியுமா?
அம்பையின் ‘வாகனம்’ கதை தொகுப்பில் உள்ளது. அவரிடம் கேட்டால் ‘அப்படியா?’ என்று ஆச்சரியப்பட்டார். தம்மிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை என்றும் சொன்னார். எஸ்.செந்தில்குமாரின் ‘புலி சகோதரர்கள்’ கதை இருக்கிறது. அவருக்கும் தம் கதை இப்படி ஒரு தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் விவரம் தெரியவில்லை. பாவண்ணனின் ‘அன்னபூரணி மெஸ்’ கதை உள்ளது. அவருக்கும் இந்த நூல் பற்றிய விவரம் தெரியவில்லை. அப்படியானால் எந்த எழுத்தாளரிடமும் அனுமதி பெற்றிருக்க வாய்ப்பில்லை. தெரிய வந்தால் உரிமை கோருவார்களா என்று தெரியவில்லை. கோரினால் மன்னிப்பு கேட்டாக வேண்டும்; உரிமைத் தொகையும் கொடுக்க வேண்டும். விதிமுறை அதுதான். ‘என்னவோ செய்துவிட்டுப் போகிறார்கள். நம்ம கதை மாணவர்களுக்குப் போய்ச் சேர்கிறது. அது போதும்’ என்று எண்ணம் கொண்டவர்கள்தான் எழுத்தாளர்கள். அவர்களிடம் அனுமதி கேட்டிருந்தால் தொகை எதுவும் கேட்காமலே அனுமதி கொடுத்திருப்பார்கள். அனுமதி வாங்கிக்கொண்டு நூலின் ஒருபிரதியை அனுப்பி வைத்திருக்கலாம்.
இப்படிப் பிரச்சினை வரும் என்று அறிந்த பேராசிரியப் பெருந்தகைகள் சிலர் இறந்துபோன எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துத் தொகுத்து நூலாக்கிவிடுவார்கள். இறந்தவர் எழுந்து வந்தா கேட்கப் போகிறார்? எழுத்தாளரின் வாரிசுகளுக்கும் விவரம் போதாது. இன்னொரு நடைமுறையும் உண்டு. இந்தப் பிரச்சினை எல்லாம் எதற்கு? துறையில் இருக்கும் ஆசிரியர்களே ஆளுக்கொரு கதை எழுதி அதை நூலாக்கிப் பாடத்தில் வைத்துவிடுவார்கள். கட்டுரைத் தொகுப்பு வேண்டுமா? ஆளுக்கொன்று. கதை, கட்டுரை எழுதுவதெல்லாம் பிரமாதமா என்ன?
கல்லூரி அளவில் நூல் முடங்கியிருந்தால் என் பார்வைக்கு வந்திருக்காது. அதை ஒரு பதிப்பகம் வெளியிட்டுப் பொதுவிற்பனைக்கு வந்திருக்கிறது. வெளியீட்டு விவரம்: சிவகுரு பதிப்பகம், 7/40 கிழக்குச் செட்டித் தெரு, பரங்கிமலை, சென்னை 600016. ஆண்டு: 2020. இன்னும் பல கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் வைத்தும் வெளிவிற்பனையிலும் லாபமீட்டும் நோக்கம் பதிப்பகத்திற்கு இருந்திருக்கிறது. அது சகோதரிக்குத் தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான்.
தொகுப்பாசிரியர் தம் முன்னுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்:
‘நல்ல கருத்துக்களை எழுத்தாளர்கள் இச்சமுதாயத்திற்கு சிறுகதையின் வழியாக தருவதை இளம் உள்ளங்களுக்கு உணர்த்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும். இத்தொகுப்பில் பத்து சிறுகதைகள் உள்ளன. இச்சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும். (முன்னுரை, ப.5)’
நல்ல கருத்துக்களை இளம் உள்ளங்களுக்கு உணர்த்துவதே நோக்கம் என்கிறார். ‘உரிமை: தொகுப்பாசிரியருக்கு’ என்று நூல் விவரப் பகுதியில் இருக்கிறது. ‘பெயர்பலகை’ என்பது நூல் தலைப்பு. ‘பெயர்ப்பலகை’ என ஒற்று மிகுந்து வர வேண்டும் என்பதைக்கூட அறியாத தொகுப்பாசிரியர் யார் யார் கதைக்கோ உரிமை கொண்டாடுகிறார். ‘இது இலக்கியத் திருட்டு வகையில் சேர்வது; திருட்டு தவறுதானே, சகோதரி’ என்னும் நல்ல கருத்தை அவருக்கு எப்படி உணர்த்துவது?
—– 17-10-2024
Add your first comment to this post