திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

 

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024 திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

 

கற்றுக்கொள்ளுங்கள்

 

அனைவருக்கும் வணக்கம்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் ‘பட்டமேற்பு விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பட்டச் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றக் கிடைத்த வாய்ப்பை  மகிழ்ச்சி மிக்க தருணமாகக் கருதுகிறேன். இவ்விழா அழைப்பிதழைப் பார்த்தவுடன் இரண்டு புதுமைகள் சட்டென்று என் கண்ணுக்குப் பட்டன. வழக்கமாகப் ‘பட்டமளிப்பு விழா’ என்றுதான் சொல்வார்கள். ஆனால் இங்கே ‘பட்டமேற்பு விழா’ என்றிருந்தது. இரண்டும் ஒன்றுதான் என்றபோதும் பயன்படுத்தும் சொற்கள் நம் பார்வைக் கோணத்தை வெளிப்படுத்துகின்றன. பட்டமளிப்பு என்பது வழங்குபவர் நிலையிலிருந்து உருவான சொல்லாட்சி. பட்டமேற்பு என்பது பெறுபவர் கோணத்திலிருந்து உருவாகியுள்ள சொல்லாட்சி.

பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம், கல்லூரி, முதல்வர், சிறப்பு விருந்தினர் உள்ளிட்டவை முதன்மையா? தம் வாழ்நாளில் சில ஆண்டுகளை முழுமையாகச் செலவிட்டுக் கற்றுத் தேர்வெழுதிப் படிப்பை முடித்துப் பட்டச் சான்றிதழைப் பெற ஆர்வத்தோடு வந்திருக்கும் மாணவர்கள் முதன்மையா? மாணவர்கள்தான் முதன்மை. பெரிய கட்டிடங்கள் இருக்கலாம். பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கலாம். மாணவர்கள் இல்லையேல் அவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? பயன்பாடுதான் என்ன? பொறியியல் படிப்புக்கு மவுசு குறைந்ததும் சில சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் வெறும் கட்டிடங்களாக நின்றன. ஒரு படிப்பில் மாணவர்கள் சேரவில்லை என்றால் அப்படிப்பை நிறுத்திவிடுவதே இயல்பு. ஒரு கல்வி நிறுவனத்திற்கு உயிர்ப்பைத் தருபவர்கள் மாணவர்கள். ஆகவே எந்த நிலையிலும் மாணவர்களே முதன்மை.

நாம் ஜனநாயகத்தில் வாழ்கிறோம். அதன் அடிப்படையே மக்கள்தான். எல்லாவற்றையும் மக்கள் நோக்கில் இருந்து காண வேண்டும். அப்பார்வை மொழியிலும் செயல்படும் காலம் இது. எத்தனையோ சொற்கள் இன்று மாறிவிட்டன; மாறி வருகின்றன. ‘உடல் ஊனமுற்றோர்’ என்னும் சொல்லை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை. ‘மாற்றுத் திறனாளர்’ என்கிறோம்.  ‘மூன்றாம் பாலினம்’ என்று வழங்கி வந்ததைத் ‘திருநர், திருநங்கை, திருநம்பி’ முதலிய சொற்களால் இன்று அழைக்கிறோம். அழைப்பவர் நோக்கிலிருந்து அழைக்கப்படுபவர் நோக்குக்கு மொழி மாறுகிறது என்பதற்கு இவை சான்று. மொழி மாறுகிறது என்றால் பார்வை மாறுகிறது, விழுமியம் மாறுகிறது என்று பொருள்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

மொழியில் பாலின சமத்துவம் வேண்டும் என்னும் குரல்களும் இன்று எழுந்து வருகின்றன. நம் மொழி ஆண் நோக்குக் கொண்ட மொழியாக இருக்கிறது. மனிதன் என்று சொல்கிறோம். அதற்குப் பெண்பால் கிடையாது. குடிமகன் என்கிறோம். அதற்கும் பெண்பால் கிடையாது. இவற்றை எல்லாம் பொதுப்பாலில் சொல்ல வேண்டும் என்னும் கருத்து மேலோங்கி வருகிறது. மனிதர், குடிமக்கள் எனக் குறிப்பிடும் போக்கு அதிகரித்து வருகிறது. இலக்கியத்திலும் இந்த மாற்றத்தைக் காணலாம். பெண்கள் எத்தனை வயதானவர்களாக இருந்தாலும் அவர்களை ‘அவள், இவள்’ என்று ஒருமையில் அழைக்கும் வழக்குத்தான் நிலவி வந்தது; இப்போதும் நிலவி வருகிறது. ‘அம்மா வந்தாள்’ என்பது தி.ஜானகிராமனின் நாவல் தலைப்பு. பேச்சில் அம்மா வந்தாள், பாட்டி வந்தாள், அக்கா வந்தாள் என்றுதான் வழங்குவோம். இல்லையென்றால் பெண்களை அஃறிணையாக்கி ‘அம்மா வரும், பாட்டி வரும்’ என்று ஆடு வரும், மாடு வரும் என்பது போலச் சொல்வோம். அப்பா வந்தான், தாத்தா வந்தான் என்று வழங்குவதில்லை. அப்பா வந்தார், தாத்தா வந்தார் என்பதே வழக்கு.

இப்போது அம்மாவுக்கும் பாட்டிக்கும் மொழியில் மரியாதை வழங்க வேண்டும் என்னும் போக்கு உருவாகி வருகிறது. என் அம்மாவைப் பற்றித் ‘தோன்றாத்துணை’ என்னும் தலைப்பில் நூல் ஒன்றை எழுதினேன். அதில் முழுக்கவும் வந்தார், போனார், செய்தார், சொன்னார் என்றுதான் எழுதியிருக்கிறேன். அம்மாவை அவள், இவள் என்று குறிப்பிடுவதற்கு எனக்கு மனம் வரவில்லை. என் படைப்புகளிலும் இப்போது மரியாதைப் பன்மையைத்தான் பயன்படுத்துகிறேன். இவையெல்லாம் இன்றைய காலம் கொண்டு வந்திருக்கும் மாற்றம். அத்தகைய மாற்றத்தின் இன்னொரு வெளிப்பாடாகவே ‘பட்டமேற்பு விழா’ என்பதைக் காண்கிறேன். இந்தப் புதுமை பரவலாக வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

அதே போல  இன்னொரு புதுமை ஓர் எழுத்தாளரைப் பட்டமளிக்கச் சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பதாகும். வழக்கமாகப் பல்கலைக்கழகத்தில் உயர்ந்த பதவி வகிப்போர், அரசு பணிகளில் உள்ள உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் என்னும் நிலையில் உள்ளவர்கள்தான் இத்தகைய விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பர். அதுதான் வழக்கம். இக்கல்லூரி முதல்வர் வ.கிருஷ்ணன் என்னை அழைத்த போதுகூட ‘விருந்தினர்களில் ஒருவராக நானும் இருப்பேன்’ என்றுதான் நினைத்திருந்தேன். ஒரேஒரு சிறப்பு விருந்தினர்தான்; அது நான்தான் என்பதை அழைப்பிதழ் பார்த்து அறிந்தேன்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில் பெரும்பங்கு வகிப்பவர்கள் எழுத்தாளர்கள். ஆனால் எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் ஒருபோதும் முதன்மைப்படுத்துவதில்லை. தமிழ் மொழி செம்மொழி என்றும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட இலக்கியம் உள்ள மொழி என்றும் பெருமை பேசுவோம். இம்மொழியைக் காலம் கடந்து கொண்டு வந்திருப்போர் எழுத்தாளர்கள்தான் என்பதை வசதியாக மறந்துவிடுவோம். சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம் என்னும் பேரிலக்கியங்களைப் படைத்துத் தமிழ் மொழியைக் காலத்தைத் தாண்டிக் கொண்டு வந்திருப்போர் கவிஞர்கள்தானே. ஆகவே இப்படி ஒரு கௌரவத்தை இந்தக் கல்லூரி எனக்கு வழங்கியிருப்பதற்கு எழுத்தாளர்கள் சார்பாக நன்றி கூற விரும்புகிறேன். பட்டமேற்பு விழாவில் எழுத்தாளர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் இந்தப் புதுமையும் பரவலாக வேண்டும்.

எழுத்தாளராக என் அடையாளத்தை  முன்னிறுத்திக் கொண்டாலும் அரசு கல்லூரியோடு இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவன். 1996 முதல் 2022ஆம் ஆண்டு வரைக்கும் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பண்புரிந்தேன்; முதல்வராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றேன். ஆகவே அரசு கல்லூரி மாணவர்கள் எப்படிப்பட்ட பின்னணியில் இருந்து வருபவர்கள் என்பதை நன்றாக அறிவேன். பலர் இப்போதுதான் கல்லூரியை எட்டிப் பார்க்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இன்று பட்டம் பெற்றிருப்பவர்களில் பலர் முதல் தலைமுறைப் பட்டதாரி என்னும் பெருமையைப் பெறுபவர்கள். இதைப் பெருமை என்று சொல்லலாமா எனத் தெரியவில்லை.

1980களில் கல்லூரிக்குச் சென்று படித்துப் பட்டம் பெற்ற முதல் தலைமுறைப் பட்டதாரி நான். என் பெற்றோருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. என் தாத்தா பாட்டி உள்ளிட்ட என் முன்னோர் எவரும் கல்வி கற்றவர்கள் அல்ல. அவர்கள் எல்லாம் கற்றவர்கள் அல்ல; நான் தான் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தேன் என்பதில் என்ன பெருமை இருக்கிறது? பல தலைமுறையாகக் கல்வி கற்க வாய்ப்பு அமையாதது அவர்கள் குறையல்ல. நம் சமூக அமைப்பில் நேர்ந்த குறைபாடு. அதைச் சரிசெய்யும் வகையிலான நவீன கால முன்னெடுப்புகள்தான் என்னைப் பட்டதாரியாக்கின. உங்களை எல்லாம் பட்டதாரி ஆக்கியிருக்கின்றன.

நம்முடைய முன்னோருக்குக் கிடைக்காத கல்வி வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அதைச்  சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்னும் பொறுப்பு நமக்கு வந்து சேர்கிறது. முன்னோருக்கு மட்டுமல்ல, நம்முடன் பயின்ற பல நண்பர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு இது என்றும் பார்க்க வேண்டும். ஆம், பள்ளிக் கல்வி முடிப்போர் அனைவரும் உயர்கல்விக்கு, கல்லூரிப் படிப்புக்கு வந்துவிடுவதில்லை. பள்ளிப் படிப்போடு தம் கல்வியை முடித்துக்கொண்டு வேறு வேலைகளுக்குச் சென்று விடுவோர் பலர். படிக்க விருப்பம் இருந்தும் உயர்கல்வியில் இடம் கிடைக்காமல் அப்படியே தங்கி விடுபவர்களும் உண்டு. பள்ளிகளின் எண்ணிக்கைக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்தாலே நமக்கு இது புரியும்.

இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 1996இல் நாங்கள் அரசு கலைக் கல்லூரிப் பணிக்கு வந்தபோது மொத்தமாக அறுபது கல்லூரிகள்தான் இருந்தன. இன்று அரசு கலைக்கல்லூரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூற்றைம்பது. சுயநிதிக் கலைக்கல்லூரிகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது. எனினும் இவையும் போதுமானவை அல்ல. பள்ளிப் படிப்பை முடிக்கும் அனைவருக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். அந்த அளவு கல்லூரிகள் பெருக வேண்டும்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024 திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024 திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

உயர்கல்வி கற்பது எதற்காக? உடல் உழைப்பாளர்களைக் கேட்டால் ‘நிழலில் உட்கார்ந்து செய்யும் வேலைக்குப் போகலாம்’ என்பார்கள். கொங்குப் பகுதியில் ‘நெவுலொணத்தி’ என்று ஒரு வழக்கு இருக்கிறது. வெயிலில் காய்ந்து வேலை செய்வோர் சற்றே ஓய்வு கிடைத்தால் நிழல் தேடி ஓடுவார்கள்.  ‘நிழலின் அருமை வெயிலில் தெரியும்’ என்பது பழமொழி.  ‘வேகாத வெயில்’ என்றும் கடும்வெயிலைக் குறிப்பிடுவதுண்டு. இந்த வெயிலில் உடல் வேகவில்லை என்பதுதான் அதிசயம் என்பது பொருள். உயர்கல்வி கற்றுப் பட்டம் பெற்றால் வெயில் படாமல் வேலை செய்யலாம். இது சாதாரணமான ஒன்றல்ல. வெயிலில் வெகுகாலம் உழைத்து வந்த மக்களின் பெருங்கனவு. ஆகவே நம் சமூகத்தைப் பொருத்தவரை இன்று கல்வி கற்றுப் பட்டம் பெறுவது என்பது நல்ல வேலைக்குச் செல்வதற்குத்தான். வேலைக்குத்தான் முன்னுரிமை.

பல தலைமுறையாக வேகாத வெயிலில் உழைத்துக் கிடந்த குடும்பத்திலிருந்து ஒருவர், ஒரே ஒருவர் படித்துப் பட்டம் பெற்று ஒருவேலைக்குச் சென்றுவிட்டால் அது பெருமாற்றத்தைக் கொண்டு வந்துவிடும். முதலில் அந்தக் குடும்பத்தின் நிலை மாறிவிடும். அதே தலைமுறையில் இருக்கும் இளையவர்களுக்குக் கல்வியில் ஆர்வம் வந்துவிடும். சொந்தக்காரர்கள் படிப்பார்கள். அந்த ஊரில் உள்ளவர்களுக்குக் கல்வி பற்றிய விழிப்புணர்வு தோன்றும். ஒரே ஒருவர் படித்து வேலைக்குச் சென்றதால் அப்படி மாறிய கிராமங்கள் பல. அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அடுத்தடுத்துப் பலர் வருவர். ஆகவே கல்விக்கும் வேலைக்கும் உள்ள தொடர்பை முதன்மையானதாக நாம் உணர்வதில் தவறில்லை.

இன்று படித்துப் பட்டம் பெற்றுவிட்டால் மட்டும் வேலை கிடைத்துவிடாது. அதற்கு மேல் பல படிநிலைகள் இருக்கின்றன. அரசு சார்ந்த எந்த வேலையாக இருந்தாலும் இப்போது போட்டித் தேர்வுகள் நடக்கின்றன. அவற்றுக்குத் தயாராக வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் வேலைவாய்ப்புகளும் பட்டம் இருந்தால் கிடைத்துவிடாது. அதற்கும் பல படிநிலைகள் தேர்ச்சி பெற வேண்டும். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் அரசே இப்போது கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்து வேலைக்குத் தயார்ப்படுத்துகிறது. அப்படியானால் இன்றைய பட்டப்படிப்பு வேலை தராதா?

வேலைக்கு விண்ணப்பிக்கப் பட்டச் சான்றிதழ் உதவும். புதிதாக ஒருவரைப் பார்க்கும்போது அவரிடம் நமது அறிமுக அட்டையை (Visiting card) நீட்டுவோம் அல்லவா? அத்தகைய அறிமுக அட்டைதான் பட்டச் சான்றிதழ்கள். அதற்கு மேல் துறை சார்ந்த அறிவுதான் நம் வேலைவாய்ப்புக்குப் பயன்படும். நாம் எந்தத் துறையில் கற்கிறோமோ அதில் ஆழ்ந்த அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஆகவே வேலைவாய்ப்புக்கு என்று நினைத்துக் கல்வி கற்கக் கூடாது. குறிப்பிட்ட துறையில் திறம் பெற்றவராக மாற வேண்டும் என்னும் நோக்கத்தில் கற்க வேண்டும்.

திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024 திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024 திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி, பட்டமேற்பு விழா உரை, 23-01-2024

நம்முடைய பாடத்திட்டம் பாதை தெரியாதோர்க்கு வழி சுட்டிச் சொல்லும் விரல் போன்றது. நாம்தான் அந்தப் பாதையைக் கண்டறிந்து வெகுதூரம் செல்ல வேண்டும். மூன்றாண்டு காலப் படிப்பு. ஆறு பருவங்கள். ஒவ்வொரு பருவத்திலும் பல பாடங்களைப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தும். அவ்வளவுதான். அந்த அறிமுகத்தைப் பற்றிக்கொண்டு அத்துறைக்குள் ஆழச் செல்ல வேண்டும். தேர்வு நோக்கத்தில் மட்டும் கற்கக் கூடாது. துறை சார் அறிவைப் பெறும் நோக்கத்தில் கற்க வேண்டும். அப்படிக் கற்றால் அறிவுடையவர்களாக ஆவோம். வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

கல்வியைப் பற்றித் தமிழ் மரபில் பலவிதமாகப் பேசியுள்ளனர்.  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர் தத்துவம் என விதந்து பேசுவதைக் கேட்டிருப்போம். எல்லாவற்றையும் ஊராகவும் எல்லோரையும் நண்பர்களாகவும் காணும் இந்தப் பார்வை எதன் அடிப்படையில் வந்தது? கல்வி நோக்கில் இதைக் காண வேண்டும். நம்முடைய ஊரிலேயே இருந்து கொண்டிருந்தால் எவற்றை எல்லாம் கற்க முடியும்? அந்த நிலப்பரப்புக்கு ஏற்பவும் அங்குள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்பவும் அளவானவற்றைத் தான் கற்க முடியும். ஊரை விட்டு வெளியே வரும்போது தான் நம் பார்வை விரிவடையும். இந்த உலகத்தில் நாம் மட்டுமல்ல, நம்மைப் போல எத்தனையோ மக்கள் வாழ்கிறார்கள். பலவிதமான வாழ்க்கை இருக்கிறது என்னும் உணர்வு நமக்குத் தோன்றும்.

எழுத்தறிவு என்பதும் அப்படித்தான். பல ஊர்களில் தொடக்கப் பள்ளி மட்டும் இருக்கும். உயர்நிலைப் பள்ளிக்கோ மேல்நிலைப் பள்ளிக்கோ செல்ல வேண்டும் என்றால் சில கிலோ மீட்டர் பயணம் செய்துதான் ஆக வேண்டும். உயர்கல்விக்காகக் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றால் தங்கிக் கற்கும்படியான வெளியூருக்குச் செல்ல வேண்டும். உணவுக்காக மனிதர் இடம்பெயர்ந்தது ஒருகாலம். வேளாண்மையைக் கண்டுபிடித்து ஒரே இடத்தில் நிலைகொண்டு வாழ ஆரம்பித்த பிறகு கல்விக்காக இடம்பெயர நேர்ந்திருக்கிறது. இதை இரண்டாம் இடப்பெயர்வு என்று சொல்லலாம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதன் விளக்கமாகத் திருவள்ளுவர் ஒரு குறள் எழுதியுள்ளார். அது:

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையும் கல்லாத வாறு.

ஒருவர் தாம் சாகும் வரையும் கற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார். அது மட்டுமல்ல, கற்பதற்காக எந்த ஊருக்கும் செல்லலாம், எந்த நாட்டுக்கும் செல்லலாம் என்கிறார். ‘யாதானும் நாடு; யாதானும் ஊர்’ என்பது அவர் வாக்கு.  ‘எதுவாக இருந்தாலும் அது மனிதர் வாழும் ஊர்தான். எதுவாக இருந்தாலும் அது மனிதர் வாழும் நாடுதான். ஏன் நாம் சாகும் வரைக்கும் கல்வி கற்கக் கூடாது என்று கேட்கிறார் வள்ளுவர். ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்பது சங்க இலக்கியப் பாடல். ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்பது ஔவையார் வாக்கு. கல்வியை இத்தனை வலியுறுத்திய மரபு வேறெங்கும் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த காரணத்தால் அதை இப்படி எழுதி வைத்திருக்கிறார்களா? உணராமல் இருந்த மக்களுக்கு உணர்த்த வேண்டி இப்படி எழுதி வைத்திருக்கிறார்களா?

எப்படியாயினும் சரி. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பது தமிழர் மரபு. ஆகவே வேலைவாய்ப்புக்கு மட்டும் என்று கருதாமல் அதையும் உள்ளடக்கி ஓர் அறிவுத்துறையைப் பயில வேண்டும் என்னும் நோக்கில் நாம் கல்வியைக் கற்க வேண்டும். இப்போது பட்டம் பெற்றிருப்பவர்கள் மேலும் படியுங்கள். உயர்கல்விக்குச் செல்லுங்கள். அதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் சுயமாகக் கற்றுக் கொள்ளுங்கள். இன்று அதற்கான வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன. பயன்படுத்திக் கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி. வணக்கம்.

—–