‘தி கேரளா ஸ்டோரி’ என்னும் மலையாளத் திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்னும் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. திரைப்படம் இன்று தமிழ்நாட்டிலும் வெளியாகிறது. படத்தில் எத்தகைய கருத்திருந்தாலும் சரி, அதை வெளியிடத் தடை விதிப்பது கருத்துரிமைக்கு எதிரானது. அதேசமயம் ‘தடை செய்ய வேண்டும்’ என்று கோருவதற்குரிய ஜனநாயக உரிமையை மறுக்கக் கூடாது. நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. படத்தைக் காண்போம். அதன் கருத்தியலும் காட்சிகளும் மோசமானதாக இருந்தால் கடுமையாக விமர்சிப்போம்.
இப்போது அந்தப் படத்தைப் பற்றியோ கருத்துரிமை பற்றியோ எழுதுவது என் எண்ணமில்லை. கலை இலக்கியங்கள் தொடர்பான சர்ச்சைகள் ஏற்படும்போது நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். அதற்கு எத்தனையோ வழிகள். வீடு பற்றி எரியும் போது ‘தீப்பட்டெரிந்தது, வீழும் மலரின் அமைதி என்னே’ (மொழிபெயர்ப்பு: மகாகவி பாரதி) என்று ஜப்பானியக் கவிஞன் ‘ஹொகூஷிப் புலவர்’ எழுதிய மனநிலை அதில் ஒன்று. இதை அப்படியும் கொள்ளலாம். இல்லை, நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த கதையாகவும் கொள்ளலாம்.
‘தி கேரளா ஸ்டோரி’ தமிழிலும் வெளியாகிறது. அதையொட்டித் தமிழ்நாட்டுத் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டு காவல்துறைத் தலைவர் சைலேந்திர பாபு காவல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை நாளிதழ்களிலும் இணையத்திலும் வெளியாகியுள்ளது. அதில் ஒரு தொடர் ‘பதட்டமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்’ என்றுள்ளது. ‘பதட்டம்’ என்னும் சொல்லையே ஊடகங்கள் அனைத்தும் பயன்படுத்தி உள்ளன. அறிக்கையிலும் அந்தச் சொல்லே இருந்திருக்கலாம்.
ஆனால் ‘பதட்டம்’ என்பது சரியான சொல் வடிவம் அல்ல. ‘பதற்றம்’ என்பதே சரி. றகரம் டகரமாதல் பேச்சு வழக்கு. ஒலிப்புக் குழப்பம் காரணம். பள்ளி வகுப்புகளில் ‘கற்று’ என்பதைப் பிள்ளைகள் ‘கட்று’ என்று எழுதுவதுண்டு. பதற்றம் அப்படித்தான் பதட்டம் என்றானது. பெரும்பாலும் ‘ற்’ தான் ‘ட்’ ஆகும். இச்சொல்லில் ‘ற்ற’ ஆகிய இரண்டு எழுத்துக்களுமே மாறியுள்ளன. பதறு என்னும் வினையடியிலிருந்து பதற்றம் உருவாகிறது. தொழிற்பெயர் இது.
பதட்டம் பல காலமாக வழக்கிலிருக்கிறது. எழுத்து வழக்குக்கும் வந்துவிட்டது. 1930களில் வெளியான ‘தமிழ் லெக்சிகனில்’ ‘பதட்டம்’ குறிப்பிடுகிறது. இது பேச்சு வழக்கு என்று சொல்லிக் ‘see : பதற்றம்’ என்று கொடுத்துள்ளது. பின்னர் வந்த அகராதிகள் அனைத்தும் அதையே பின்பற்றியுள்ளன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியிலும் ‘பதட்டம் பெ. (பே.வ.) காண்க: பதற்றம்’ (ப.892) என்றே கொடுக்கப்பட்டுள்ளது. பேச்சு வழக்காக இருப்பினும் இன்று எழுத்திலும் ‘பதட்டம்’ வந்து நிலைபெற்றுவிட்டது. இப்போதைய ஊடக மொழியில் கணக்கெடுத்தால் பெரும்பாலும் ‘பதட்டம்’ தான். படிப்படியாகப் பதற்றம் குறைந்து பதட்டம் மிகுந்துவிட்டது. வினையாகப் பயன்படுத்தும்போது மட்டும் சரியாகப் பதறப் பார்க்கிறார்கள்; பதறுகிறார்கள்; பதறித் துடிக்கிறார்கள்.
எனக்கு ஒருபோதும் பதட்டம் இல்லை; எப்போதும் பதற்றம் தான்.
000
05-05-23