இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

You are currently viewing இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

தலித் சாதியினரில் அருந்ததியர் மீது பல்திசைத் தாக்குதல் நிகழும் காலமாக இது இருக்கிறது. தமிழக மேற்கு மாவட்டங்களில் அடர்த்தியாகவும் பிறபகுதிகளில் பரவியும் வாழும் அருந்ததியரை ஏற்கனவே பல நூற்றாண்டுகளாக ஆதிக்க சாதியினர் சுரண்டி வருகின்றனர். தமிழ்நாட்டின் பணப்புழக்கம் மிகுந்த, தொழில் சிறந்த கொங்குப் பகுதியின் முன்னேற்றத்திற்கு அவர்கள் உழைப்பு முக்கியமானது. உழைப்பின் அளவில் சிறிதுகூடப் பலன் பெறவில்லை.

பழங்குடி இயல்புகளைப் பெரிதும் கொண்ட அருந்ததியர் தமிழ்நாட்டின் பிற சாதியினரால் அரசியல் ரீதியாகவும் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் வீட்டு மொழியாகத் தெலுங்கு இருப்பதால் தமிழ்த் தேசியர்கள் தங்கள் எதிரியாகப் பார்க்கின்றனர். ‘வந்தேறிகள்’ என்று இழிவுபடுத்துகின்றனர். வட இந்தியர்கள் தமிழ்நாட்டு வணிகத்தைப் பெருமளவு கைப்பற்றிக் கொண்டிருக்கும் நிலையில் சொத்துடைமையோ அதிகாரமோ அற்ற அருந்ததியர்களை எதிரிகளாகப் பாவிப்பது என்ன வகை அரசியல் என்று புரியவில்லை.

தமிழ்நாட்டில் செயல்படும் தெலுங்கு பேசும் ஆதிக்க சாதியினர் எண்ணிக்கைக்காக அருந்ததியர்களையும் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்களுக்காகச் சிறுதுரும்பையும் கிள்ளித் தருவதில்லை. தெலுங்கு ஆதிக்க சாதியினர் சிலர் காட்டும் தீண்டாமையும் ஒதுக்கலும் அருந்ததியர் மீது அதிகம். தங்கள் நிலத்தில் வேலை செய்வதற்குக்கூட அவர்களை அழைக்க மாட்டார்கள். தங்கள் வசிப்பிடத்திற்குள் காலெடுத்து வைக்கவும் விடமாட்டார்கள். ஆனால்  ‘தெலுங்கு’ என்று வரும் போது அவர்களையும் சேர்த்து எண்ணிக்கை காட்டுவார்கள்.

உள் ஒதுக்கீடுப் பிரச்சினையில் பிற தலித் சாதியினரின் எதிர்ப்பும் கடுமையாக இருக்கிறது. உள் ஒதுக்கீடு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல்.திருமாவளவன் நிலைப்பாடு எனக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. தலித் அறிவாளிகள் பலரும் இதில் ஏமாற்றம் தந்தனர். இப்பிரச்சினையில் அருந்ததியருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்தனர். சிலர் மௌனம் காத்துத் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வேலைவாய்ப்பு அறிவிப்பு தொடர்பான தகவல்களைச் சமூக ஊடகங்களில் திரித்துக் காட்டுவதில் சங்கிகளை விடவும் கைதேர்ந்தவர்களாகத் தெரிந்தனர்.

அவற்றை எல்லாம் எதிர்த்துக் களமாட அருந்ததியரில் மிகச் சிலரே இருந்தனர். முக்கியமானவர் கவிஞர் மதிவண்ணன். இடதுசாரி இயக்கப் பின்புலத்தில் வந்து கவிஞராக அறிமுகமானவர். 2000ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘நெரிந்து.’ அதற்கு நான்தான் முன்னுரை எழுதினேன். செயல்திறமும் துடிப்பும் மிக்கவரான மதிவண்ணனைச் சூழல்தான் அரசியல் செயற்பாட்டாளர் ஆக்கியது. சமீபத்தில் தமிழ் இந்து இதழில் வெளியான நேர்காணலில் (04-01-25) ‘அவசியம் செய்து முடிக்க வேண்டிய ஒருமுக்கியமான வேலையை யாரும் செய்யாத போது நான் செய்கிறேன்’ என்று சொல்லியிருந்தார். அது முற்றிலும் உண்மை.

இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

மதிவண்ணனின் இலக்கியச் செயல்பாடும் தொடர்ந்து வருகிறது. இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகளையும் (நெரிந்து, நமக்கிடையிலான தொலைவு, ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா, நவகண்டம்) ஆறு கட்டுரை நூல்களையும்  வெளியிட்டுள்ளார். மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலே எழுதிய ‘தலித் பார்ப்பனன்’ என்னும் சிறுகதை நூலையும் ‘ஓலம்’  நாவலையும் மொழிபெயர்த்துள்ளார். இப்போது லிம்பாலேவின் ‘கும்பல்’  நாவலை மொழிபெயர்த்திருக்கிறார்.

இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நேற்று (06-01-2025)  நடைபெற்றது. கிட்டத்தட்ட முப்பதாண்டு கால நண்பராக அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்தும் செயல்பாடுகளை அறிந்தும் இருப்பவனாகிய எனக்கு இந்நூலை வெளியிட்டுப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இச்சந்தர்ப்பத்தில் மதிவண்ணனின் முக்கியமான நூல் ஒன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

அவரது அரசியல் பணிகளில் இரண்டு மிகவும் முக்கியமானவை. அருந்ததியர் உள் ஒதுக்கீட்டுக் கோரிக்கை மேலெழுந்து வந்தபோது அவர் எழுதிய ‘உள் ஒதுக்கீடு: சில பார்வைகள்’ நூலும் அதைத் தொடர்ந்து அவர் எடுத்த முயற்சிகளும் முதல் பணி. அருந்ததியர் உள் ஒதுக்கீடு கிடைத்ததில் மதியின் பங்கு கணிசமானது. 2010ஆம் ஆண்டு தொடங்கிப் பதின்மூன்று ஆண்டுகளாகக் கல்வெட்டு, செப்பேடு முதலிய ஆவணங்களை எல்லாம் தேடிப் படித்து ஆய்ந்து  அவர் எழுதிய ‘சக்கிலியர் வரலாறு’ என்னும் நூல் இரண்டாம் பணி.

‘சக்கிலியர் வரலாறு’ நூல் 2023ஆம் ஆண்டு வெளியாயிற்று. பெருமை பேசுபவையாக எழுதப்படும் சாதி வரலாறுகளின் பொதுப்போக்கிலிருந்து வேறுபட்டது இந்நூல். தெலுங்கு மொழி பேசுவதால் ‘நாயக்கர் காலத்தில் தூய்மைப் பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள்’  என்னும் கருத்தை  நா.வானமாமலை உள்ளிட்ட பெரும் ஆய்வாளர்களே எழுதியுள்ளனர். ஒரு கல்வெட்டில் ‘செக்கிலியர்’ என்று வருவதை நீக்கிவிட்டுக் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும் நூல் எழுதியவர்) மேற்கோள் காட்டுகிறார். இத்தகைய அறிஞர்களின் கருத்துக்களைச் சான்றுகளோடு மறுக்க வேண்டியது நூலாசிரியரின் முதல் பணியாக இருக்கிறது.

முதல் மூன்று இயல்கள் அதைச் செய்கின்றன. அதன் ஓரியலில் நா.வானமாமலையை மறுத்து எழுதுகிறார். தமிழர் நாட்டுப் பாடல்கள், கதைப்பாடல் பதிப்புகள் என நாட்டுப்புறவியலில் பல பணிகளைச் செய்தவர் நா.வானமாமலை. அவற்றில் அருந்ததியர் தொடர்பான பகுதிகள் வருகின்றன. பாத்திரங்கள் வருகின்றன. அவ்விடங்களைப் பற்றி நா.வா. எழுதும் குறிப்புகள், கருத்துக்கள் ஆகியவை அருந்ததியரைப் பற்றிய கருத்துருவாக்கம் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவை. நாயக்கர் காலத்தில் செருப்புத் தைப்பதற்காக வந்தவர்கள், தூய்மைப் பணி செய்ய வந்தவர்கள் என்பதான அவர் கருத்துக்களே வலிமையாகப் பொதுவெளியில் நிலவுவதால் கடுமையுடன் அக்கட்டுரையை எழுதியிருக்கிறார். ‘நா.வா.வின் புரட்டு’ என்றும் அருந்ததியர் மீது அவருக்கு இருக்கும் ஒவ்வாமையையும் சுட்டுகிறார். நா.வா. மீது அபிமானம் கொண்ட இடதுசாரிகள் பலருக்கும் அது வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மறுப்பைச் சரியான முறையில் மதி முன்வைத்திருக்கிறார்.

அதன் பிந்தைய இயல்கள் அருந்ததியர் தமிழ்நாட்டில் காலங்காலமாக இருந்து வருபவர்கள் என்பதை நிறுவும் நோக்கில் எழுதப்பட்டவை. களப்பிரர் என்றும் வாணர் என்றும் வரலாற்றில் கூறப்படும் மன்னர்கள் சக்கிலியரே என்பது மதியின் வாதம். சங்க இலக்கியம் முதலான இலக்கியச் சான்றுகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் முதலிய பல ஆவணங்களையும் தம் வாதத்துக்கு ஆதரவாக முன்வைக்கிறார். இந்தக் கருத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் வேறுபடலாம். ஆனால் மதி காட்டும் ஆதாரங்களையும் தர்க்கத்தையும் பொருட்படுத்தியே ஆக வேண்டும்.

சக்கிலியர் தமிழர்களே என்று நூலின் இறுதிப் பகுதியில் வாதிட்டு நிறுவுகிறார். அவர்கள் வீட்டு மொழியாகத் தெலுங்கு எப்படி வந்திருக்கும் என்பதற்கும் தர்க்க ரீதியான காரணத்தைக் கூறுகிறார். இன்றைய மரபணு ஆய்வுகளையும் தம் வாதத்துக்குத் துணையாகக் கொள்கிறார். அவர்கள் காலகாலமாகத் தூய்மைப் பணியாளர்களே என்பதைப் போல நிலவும் கருத்தையும் மறுக்கிறார். எப்படித் தூய்மைப் பணியாளர் ஆக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றியும் ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருகிறார்.

இந்த நூல் ‘ஆண்ட பரம்பரைப்’ பெருமை பேசும் வழக்கமான சாதி நூல் அல்ல. ஆதாரமற்ற வரலாற்றுப் புனைவுகளை உடைத்து வேறு ஆதாரங்களை முன்வைத்து வாதிடும் நூல் இது. ஒருசாதி மீது சுமத்தப்பட்ட இழிவைப் போக்குவதை நோக்கமாகக் கொண்ட நூல். வாழ்வுரிமையை நிலைநாட்ட எழுந்த நூல். ஆகவே இதை அருந்ததியர் மட்டும் வாசித்தால் போதாது. உழைப்பைச் சுரண்டி வரும் ஆதிக்க சாதியினர், ‘வந்தேறிகள்’ என இழிவுபடுத்தும் தமிழ்த் தேசியத்தினர், உள் ஒதுக்கீட்டை எதிர்க்கும் தலித் அறிவாளிகள் முதலிய அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.

மதிவண்ணனின்  ‘இந்து தமிழ் திசை’ நேர்காணல்:

இழிவை நீக்க எழுந்த  ‘சக்கிலியர் வரலாறு’

நூல் விவரம்:

  1. ம.மதிவண்ணன், சக்கிலியர் வரலாறு, கருப்புப் பிரதிகள், சென்னை, 2023, விலை ரூ. 350/-
  2. ம.மதிவண்ணன் (மொ.ஆ.), சரண்குமார் லிம்பாலே, கும்பல், சென்னை, கருப்புப் பிரதிகள், 2024, விலை ரூ.500/-

—–  07-01-25

Latest comments (9)

உழைப்பின் அளவில் சிறிதுகூடப் பலன் பெறவில்லை// Do you have any data for this? I can show the proof in my own village.. Don’t throw some nonsense hollow opinions without any data.. Your novel koolamaadhaari itself gave a tough competition to Tamil Cinema like poor are good, rich are bad type stereotypes..

காசிம்னி

அந்த விவரத்த சரியாமல் மனம் பிறழ்ந்து போல பேச கூடாது. அந்த தீர்ப்பை சரியாக வாசிக்க முடியாத முட்டாள்கள் பலவாறு பேசி வருகின்றனர்.

அந்த கேஸ் ஆந்திரா, பஞ்சாப் மாநில வழக்குகள். தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடு வேறு, மேற்சொன்ன மாநிலங்களில் நடப்பது வேறு.

தமிழ்நாட்டில் உள் ஒதுக்கீடு ஆனால்
ஆந்திரா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஒரு மாநில தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவிலிருந்து சில சாதிகளை பிரித்து தனி சாதியாக கேட்பது இப்படி நடந்தால் தாழ்த்தப்பட்ட சாதியின் ஒட்டு மொத்த மக்கக்ள் தொகையில் குறையும். இந்தியா முழுவதும் 34% முள்ள SC/ST மக்களை உடைத்து சிறுமை படுத்த வேண்டும் என்று பார்க்கிறார்கள்.

தமிழ்நாடு அப்படியள்ள 3% கொடுத்ததை கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த நீதிமன்ற ஆணையில் தமிழ்நாடு உள் ஒதுக்கீடு என்று இப்பிலவே இல்லை. படிக்காத முட்டாள்கள் தான் குறை சொல்வார்கள்.

இவ்வளவு நீங்க பேசியப்பிற்கு கேட்கிறேன். உள் ஒதுக்கீடு 1999 ல் கொடுக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை வரும் அரசு பணிக்கு வரும் விளம்பரங்கில் 70% பணிகள் sca க்கு கொடுக்கப்படுகிறது. மற்ற sc என்ன செய்வது? உள் ஒதுக்கீடும் 3% கொடுத்த பிறகு sc பொதுவில் வரும் பணியிலும் sca கொடுக்கப்பட்டால் மீதமுள்ள sc பிரிவினர் கள் என்னசெய்வது?

இதில் இன்னொரு கொடுமை ஒரு பணிக்கு sca வில் தகுதியான நபர் இல்லை என்றால் அது sc ஜெனரல் கொடுக்க வேண்டும், ஆனால் இங்கே நேரா பொது பிரிவுக்கு சென்றுவிடும். இதனால் SC யில் உள்ள சாதிகளுக்கு யாருக்கும் புரியோஜனம் இல்லை. SCA என்று ஒதுக்கிய பணி யாரோ பயன்பெறுகிறார்கள். இதெல்லாம் இந்த முட்டாள் களுக்கு தெரியாது.

கருண

ஒதுக்கீடாக 18+3=21%வழங்க வேண்டிய இடத்தில் 18-3=15 % இதுவே ஏமாற்று வேலை நண்பர்களா

அருந்ததியர் உள் ஒதுக்கீடு வெல்லும். அருந்ததியர் தெலுங்கு மட்டுமே பேசும் மக்கள் இல்லை. கன்னடம் பேசுவோர் மற்றும் தமிழ் மட்டுமே பேசுவோரும் தமிழ் நாட்டில் உள்ளனர். ஆதி திராவிடர் என்ற பெயரில் அடைக்கப்பட்ட அருந்ததியர் சாதியினரும் உள்ளனர். தமிழ் நாடு இதுதான்…

V.M.Vadivelu

அண்ணன் மதிவண்ணன் எழுதிய இந்தப் புத்தகத்தை விரைவில் வாசிக்க விரும்புகிறேன் ஐயா.

Bharath Thamizh

அண்ணன் மதிவண்ணன் எழுதிய இந்தப் புத்தகத்தை விரைவில் வாசிக்க விரும்புகிறேன் ஐயா.