நாமக்கல் கவிஞர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று பிறந்தார். இன்று 136ஆம் பிறந்த நாள். பொதுவாகக் கவிஞர் என்று அடையாளப்படுகிறார். ‘தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா’, ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ முதலிய தொடர்கள் அவர் உருவாக்கியவை. இன்று வரைக்கும் பயன்பாட்டில் உள்ளன. எனினும் கவிதைகளை விட அவரது உரைநடை நூல்கள் முக்கியமானவை. மலைக்கள்ளன், காணாமல் போன கல்யாணப் பெண் என நாவல்கள் எழுதியிருக்கிறார். திருக்குறள் பற்றியும் கம்பராமாயணம் பற்றியும் ஆய்வு நோக்கிலும் நயம் பாராட்டும் வகையிலும் சில நல்ல நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். உரை எழுதும் காலத்தில் அவர் செய்த ஆய்வுகளே திருக்குறள் பற்றிய நூல்களாக உருவாயின.
எல்லாவற்றையும் விட அவரது தன்வரலாற்று நூலாகிய ‘என் கதை’க்கு இலக்கிய வரலாற்றிலும் தமிழ்நாட்டு வரலாற்றிலும் பெரும் முக்கியத்துவம் உண்டு. உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலைப் போல ‘என் கதை’யும் புகழ்பெற்று விளங்குகிறது. 1944இல் வெளியான இந்நூலுக்கு இது எண்பதாம் ஆண்டு. தம் வாழ்க்கை நிகழ்வுகளை வரிசைக் கிரமத்தில் எழுதவில்லை. முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து ஒளிவு மறைவின்றி எழுதியுள்ளார். மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’யை முன்மாதிரியாகக் கொண்டிருக்கக் கூடும்.
கதைத் தன்மை கொண்ட சம்பவங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாலும் அவற்றை விவரிக்கும் முறையாலும் எழுதி எண்பது ஆண்டுகள் ஆகியும் வாசிக்கச் சுவையான நூலாக விளங்குகின்றது. இதன் முதற்பதிப்பைச் சின்ன அண்ணாமலையின் ‘தமிழ்ப் பண்ணை’ வெளியிட்டுள்ளது. ‘என் கதை: நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுப்பு’ என முதற்பக்கத்தில் விரிவான தலைப்பு கொடுத்துள்ளனர். ‘இது வாழ்க்கையின் வரலாறுகள் வரிசைக்கிரமமாக எழுதப்பட்ட சரித்திரம் அல்ல. நினைவில் இருந்த நிகழ்ச்சிகளைப் படிப்பவர்களுக்குப் பாரமாகத் தோன்றாமலிருக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுதப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் தொகுதி’ என்று தம் முன்னுரையில் நாமக்கல் கவிஞரே கூறியுள்ளார். முதற்பதிப்பில் நூலின் முன்பகுதியில் அவரது அழகிய புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர் கவிஞர், எழுத்தாளர் மட்டுமல்ல, ஓவியரும்கூட. அவர் வரைந்த பல ஓவியங்கள் நூலுக்குள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.
நூலின் இரண்டாம் பதிப்பை 1948இல் அதே பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆனால் படங்கள், ஓவியங்கள் ஆகியவற்றை நீக்கிவிட்டனர். பின்னர் பழனியப்பா பிரதர்ஸ் பலமுறை வெளியிட்டுள்ளது. இப்போது பல பதிப்பகங்கள் வெளியிட்டு வருகின்றன. எதிலுமே படங்களோ ஓவியங்களோ இல்லை. இவற்றைக் காணும்போது முதல் பதிப்பின் முக்கியத்துவம் புரிகிறது. முதல் பதிப்பை ஆதாரமாகக் கொண்டு படங்களும் ஓவியங்களும் விளங்க இப்போது செம்பதிப்பு ஒன்றைக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது. மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார், பா.வெ.மாணிக்கம் நாய்க்கர், வ.உ.சி., எஸ்.ஜி.கிட்டப்பா, மகாகவி பாரதியார் உள்ளிட்ட எத்தனையோ ஆளுமைகளைப் பற்றிய செய்திகளும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ள இந்நூலுக்கு விரிவான பொருளடைவு ஒன்று அவசியத் தேவை. எழுதி எண்பதாண்டுகள் ஆனதால் இன்றைய வாசகருக்கு ஏற்ற வகையில் சில சொற்களை விளக்கியும் சம்பவங்களைத் தெளிவுபடுத்தியும் குறிப்புகள் எழுத வேண்டும். எல்லாவற்றையும் உட்கொண்ட செம்பதிப்பு யாரால் சாத்தியமாகுமோ?
‘என் கதை’ நூலைப் பற்றிய தகவல் ஒன்றைச் சமீபத்தில் அறிந்துகொண்டேன். மணிக்கொடி இதழின் முதல் ஆசிரியராகிய விளங்கிய வ.ரா.வுக்கு நாமக்கல் கவிஞர் எழுதிய கடிதம் ஒன்று ‘கவிதாசரண்’ ஏப்ரல், மே 1996ஆம் ஆண்டு இதழில் (ப.38, 39) வெளியாகியுள்ளது. 13-02-1945இல் எழுதிய கடிதம் அது. நாமக்கல் கவிஞரின் ஏதோ ஒரு படைப்பைப் பாராட்டி வ.ரா. எழுதிய கடிதத்திற்கு நாமக்கல் கவிஞர் பதில் எழுதியுள்ளார். அதில் ‘என்னுடைய புலமையும் இலக்கியத் திறமையும் எல்லாம் நீங்கள் கொடுத்த பிச்சை’ என்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் (1920வாக்கில்) நாமக்கல் கவிஞர் வீட்டுக்குச் சென்ற வ.ரா. அவரது திறமையைப் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். அந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதும் கவிஞர் அடைப்புக்குறிக்குள் ஒரு தகவலையும் கொடுத்துள்ளார். அப்பகுதி இது:
‘சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னாலேயே என் வீட்டிற்கு வலிய வந்து என் திறமைகளைப் பாராட்டி என்னுடைய பிற்கால வாழ்வு மிகவும் சிறப்புடையதாகவும் பயனுடையதாகவும் புகழத்தக்கதாகவும் இருக்கும் என்று நீங்கள் வாழ்த்தினதை இப்போது தாங்கள் மறந்து போயிருக்கலாம். ஆனால் நான் அதை ஒருநாளும் மறந்ததில்லை. (அந்த சம்பவத்தை ‘என் கதை’யில் எழுதியிருக்கிறேன். இப்போது வெளியாகியிருக்கிற ‘என் கதை’ நான் எழுதியிருக்கிற ‘என் கதை’யின் ஒரு சிறுபகுதிதான். காகிதப் பஞ்சத்தை எண்ணி மிகவும் ரஸமான பகுதிகள் என்றும் மிகவும் அவசியமான பகுதிகள் என்றும் கருதப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் இப்போதைக்கு வெளியிட்டிருக்கிறேன். இன்னும் இதைப் போல் இரண்டு புத்தகங்கள் அச்சானால் தான் ‘என் கதை’ ஒருவாறு பூர்த்தியாகும்.)’
இப்போது வெளியாகியிருப்பதைப் போல இன்னும் இருமடங்கு எழுதியிருப்பதாக இக்கடிதத்தில் தெரிவிக்கிறார். வ.ரா.வைச் சந்தித்த சம்பவமும் அதில் இருப்பதாகச் சொல்கிறார். இரண்டாம் உலகப்போர் காரணமாக 1940களில் அச்சிடப் போதுமான தாள் கிடைக்காத நிலை இருந்தது. அதைத்தான் ‘காகிதப் பஞ்சம்’ என்று சொல்கிறார். இன்னும் இரண்டு புத்தகம் அளவுக்கு அவர் எழுதிய ‘என் கதை’ப் பகுதிகள் என்னவாயின என்று தெரியவில்லை. 1944இல் நூல் வெளியான பிறகு 1972 வரை இருபத்தெட்டு ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் இருந்தபோதே மறுபதிப்புகள் வெளியாகியுள்ளன. 1944இல் வெளியான நூலில் ஒருபுள்ளிகூடக் கூடுதலாகச் சேர்க்காமல் இருந்தபடியே மறுபதிப்புகள் வந்திருக்கின்றன. ஏன் அவர் எதையும் சேர்க்கவில்லை? பிற பகுதிகளை வெளியிடுவதற்கு நிறைய வாய்ப்புகளும் அவகாசமும் இருந்திருக்கும். நாமக்கல் கவிஞர் நூல்களுக்கு நல்ல வரவேற்பும் அக்காலத்தில் இருந்தது. ஆனால் ஏன் தாம் எழுதியிருந்த பிற பகுதிகளை வெளியிடவில்லை?
வ.ரா.வைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அவரைச் சந்தித்த சம்பவத்தை எழுதியிருப்பதாகச் சொன்னாரா? பிறகு எழுதிச் சேர்க்கலாம் என எண்ணியிருந்தாரா? காந்தியத்தைத் தம் வாழ்வியல் நெறியாகப் பின்பற்றியவர் பொய் சொல்ல வாய்ப்பில்லை. ‘இப்போது வெளியாகியிருக்கிற ‘என் கதை’ நான் எழுதியிருக்கிற ‘என் கதை’யின் ஒரு சிறுபகுதிதான்’ என்பதில் பொய்யிருக்காது என்று நம்பலாம். சில ஆண்டுகளில் காகிதப் பஞ்சம் தீர்ந்து இயல்பு நிலை திரும்பிவிட்டது. ஆனால் ஏன் வெளியிடவில்லை? வெளியிடுவதில் ஏதேனும் சங்கடம் இருந்ததா? அவர் இறப்புக்குப் பிறகு குடும்பத்தினரும் வெளியிட முனையவில்லையா? அவர் கையெழுத்துப் பிரதி இருந்ததா? இப்போது எங்கேனும் இருக்கிறதா? பதில் தெரியாத கேள்விகள்.
அவரது மருமகனும் வரலாற்றுப் பேராசிரியருமாகிய கி.ர.அனுமந்தன் எழுதி ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் ‘நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை’ நூல் வெளியாகியிருக்கிறது. அதன் பின்பகுதியில் நாமக்கல் கவிஞர் எழுதிய நூல்களின் பட்டியல் உள்ளது. அதில் ‘சரிதைகளும் சுயசரிதையும்’ என்னும் தலைப்பில் ‘என் கதை (சுருக்கம்), தமிழ்ப் பண்ணை, 1941’ என்றும் ‘என் கதை, தமிழ்ப் பண்ணை, 1944’ என்றும் இருநூல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சுருக்கப் பதிப்பை நான் பார்த்ததில்லை. பார்த்தவர் யாரேனும் உள்ளனரா என்பதும் தெரியவில்லை. 1941இல் வெளியான சுருக்கத்தைத்தான் வ.ரா.வுக்கு எழுதிய கடிதத்தில் நாமக்கல் கவிஞர் குறிப்பிடுகிறாரா? 1944ஆம் ஆண்டுப் பதிப்பு வெளியான பிறகே 1945இல் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ஏன் 1941ஆம் ஆண்டுச் சுருக்கப் பதிப்பைக் குறிப்பிட வேண்டும்? ஆனால் எந்தப் பதிப்பிலும் வ.ரா.வைச் சந்தித்த சம்பவம் பற்றிய குறிப்புக்கூட இல்லை. என்னால் இயன்ற அளவு என் கதைக்குள் தேடிப் பார்த்துவிட்டேன். கண்ணுக்கு வ.ரா. படவில்லை. கடிதச் செய்தி குழப்பத்தையே தருகிறது.
எழுதினாரோ எழுதத் திட்டமிட்டிருந்தாரோ தெரியவில்லை. எப்படியாயினும் இப்போது வெளியாகியிருப்பதைப் போல இன்னும் இரண்டு நூல்கள் வெளியாகியிருந்தால் இருபதாம் நூற்றாண்டு அரசியல் வரலாற்றிலும் அவை முக்கியத்துவம் பெற்றிருக்கும். இத்தனை சுவையாக எழுதும் ஆற்றல் பெற்ற கவிஞரின் தன்வரலாற்றை முழுமையாக வாசிக்கத் தமிழ்ச் சமூகத்திற்குக் கொடுத்து வைக்கவில்லை.
—– 19-10-24
மிகச் சிறப்பு. நிறைய அரிய தகவல்கள் ஐயா. குறிப்பாக, என் சரிதம் போல் ‘என் கதை’ . அது எழுதப்பட்டு எண்பது ஆண்டுகள் ஆகின்றன என்ற தகவலும். செம்பதிப்பாக வர வேண்டும் என்ற அவாவும் சரியே. அதுவும் அவர் ஓவியர் என்ற தகவலும் எனக்குப் புதிது.