நான் முட்டாள்தான்

 

நான் முட்டாள்தான்

 

‘இந்தி என்னும் கொலைக்கருவி’ கட்டுரைக்கு முகநூலிலும் ட்விட்டரிலும் சில எதிர்வினைகள். அவற்றில்  பத்ரி சேஷாத்ரி இப்படி எழுதுகிறார்,  ‘இதுதான் இன்றைய தமிழ் இலக்கிய உலகம். சாருநிவேதிதா ‘மூன்று மாதம் எதற்கு, ஒருமாதமே போதும்’ என்கிறார். இம்மாதிரியானவர்களை உருவாக்கிய அண்ணா பெரும் சாதனையாளர்தான்.’

‘இம்மாதிரியானவர்கள்’ என்று அவர் குறிப்பிடுவது எம்மாதிரி?  ‘முட்டாள்கள்’ என்கிறார். சாருநிவேதிதா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை. நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆம், நான் முட்டாள்தான். என் தந்தை தீவிரமான அண்ணா பற்றாளர். அவரது பதின்பருவத்தில் அண்ணாவின் பேச்சைக் கேட்க ஊர் ஊராகச் சென்றவர். எனக்கு ஊரில் ‘கூளையன்’ என்பதுதான் பட்டப்பெயர். என் வயதுப் பிள்ளைகள் ‘டேய் கூளையா’ என்பார்கள். வயது கூடியவர்கள் ‘கூளப்பையா’ என்பார்கள். உறவினர்கள் செல்லமாகக் ‘கூளக்கன்னு’ என்பார்கள். பங்காளிச் சண்டை ஒன்றில் என்னைக் ‘கூளநாய்’ என்று திட்டிவிட்டார்கள். அதற்காக நான் அழுதேன். அப்பா சொன்னார், ‘அண்ணா குள்ளந்தான்; ஆனா எண்ணம் ஒசரம் பாத்துக்க.’

என் அப்பாவுக்கு ஏட்டுக் கல்வியில்லை. ஓர் எழுத்தும் தெரியாது. நாட்காட்டி பார்த்து எண்களை மட்டும் தெரிந்து வைத்திருந்தார். நான் ஏழாம் வகுப்பு படித்தபோது அவர் பெயரை எழுதக் கற்பித்தேன். ஒவ்வொரு நாள் இரவும் பத்துமுறை அவர் பெயரை எழுதிப் பழக வேண்டும் என்பது என் நிபந்தனை. அன்றாடம் தவறாமல் எழுதினார். எழுத உட்காரும்போது சொல்வார், ‘அண்ணா ரொம்பப் படிச்சவரு. நாமெல்லாம் படிக்கணும்னு எப்பவும் சொல்வாரு. நீ எப்படியாச்சும் படிச்சுரு.’ தன் பெயரை எழுதப் பழகிய பிறகு இன்னும் இரண்டு பெயர்களை எழுதிப் பழக  விரும்பினார். ஒன்று, அண்ணா. இன்னொன்று, எம்ஜிஆர். அண்ணாவின் பெயரை எழுதிப் பழக்கினேன். மூன்று சுழியில் ‘ண்’ போடுவது அவருக்கு வரவில்லை. என்ன முயன்றும் இயலவில்லை.  ‘அவரு பேரத் தப்பா எழுத வேண்டாம்’ என்று சொல்லி முயற்சியைக் கைவிட்டார்.

அப்பாவின் கையொப்பம் என் பத்தாம் வகுப்பு விவரப் பதிவேட்டில் இருந்தது. 2016ஆம் ஆண்டு ‘கோழையின் பாடல்கள்’ நூலுக்கு அட்டை உருவாக்கிய ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜனிடன் அதைச் சொன்னேன். அதைக் கொண்டு வரச் சொல்லி அப்பாவின் பெயரை அப்படியே பயன்படுத்தினார். அப்பாவின் கிறுக்கலிலிருந்து என் பெயரை உருவாக்கினார். அற்புதமாக அமைந்த அட்டை அது. தன் பெயரின் ஒவ்வொரு எழுத்தையும் ஓவியனின் நிதானத்தோடு அப்பா எழுதுவார். அது ஓவியமாகவே நிலைபெற்றுவிட்டது. கல்வி தரும் மகிழ்ச்சியான தருணம் ஒவ்வொன்றிலும் அப்பாவை நினைவுகூராமல் இருந்ததில்லை. முதல் தலைமுறையில் கல்வி கற்க வரும் ஒருவருத்தான் பெற்றோரின் அருமை தெரியும்.

நான் முட்டாள்தான்

என் அண்ணன் ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. தன் வேலைக்கு ஒத்தாசையாக இருக்கும் என்று பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டார். அதில் அவருக்கு வருத்தம்தான். தன் நம்பிக்கை முழுவதையும் என் மேல் வைத்தார்.  ‘எவ்வளவு வேண்ணாலும் படிச்சிரு. செலவ நான் பாத்துக்கறன்’ என்பார். நான் இளங்கலை படித்து முடிக்கும் தருணத்தில் அப்பா இறந்து போனார். முனைவர் பட்டம் வரை நான் கற்றதை அவர் காணவில்லையே என்னும் ஏக்கம் எனக்குண்டு. என் ஆய்வேட்டை நூலாக்கிய போது அப்பாவுக்குத்தான் காணிக்கை ஆக்கினேன்.  ‘எத்தன கஷ்டம் வந்தாலும் தெகிரியத்த உட்றக் கூடாதுடா’ என்று சொல்லிப் படிப்பில் ஆர்வம் ஊட்டிய என் அப்பாவின் நினைவுக்கு’ என்று காணிக்கை வாசகத்தை எழுதியிருந்தேன். எழுத்துக்கு என் பெயரோடு அப்பாவின் பெயரையும் இணைத்துக் கொண்டேன். அப்பாவின் பெயர் முதலாவதாக வருவதால் என்னைப் ‘பெருமாள்’ என்று அழைப்பவர்கள் பலர். பெருமகிழ்ச்சி தரும் விளி அது.

 

நான் முட்டாள்தான்

எங்கள் ஊரின் இடங்களை எல்லாம் அண்ணாவை வைத்தே அப்பா அடையாளப்படுத்துவார். இந்த வருசம் அண்ணா வந்தபோது சந்தைப் பேட்டைத் திடலில் பேசினார், அந்த வருசம் அண்ணா வந்து நாற்பதுகால் மண்டபத் திடலில் பேசினார் என்றெல்லாம் சொல்வார். அண்ணாவின் உரைகளிலிருந்து பல தொடர்களை ஒப்பிப்பார். அவற்றைத் தம் கொள்கையாகவும் வரித்திருந்தார். என் அப்பாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. கிருத்திகை தவறாமல் பழனிக்குச் சென்று முருகனைக் கும்பிட்டு வருவார். அங்கு வைத்த வேண்டுதலில் பிறந்தவன் என்பதால் எனக்கு ‘முருகன்’ என்று பெயரிட்டார்.

திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்து அதிமுக உருவான போது அதில் சேர்ந்துவிட்டார். அண்ணா இருந்த காலத்திலேயே எம்ஜிஆர் ரசிகர் என் அப்பா.  அப்போது நடுத்தர வயதிலிருந்தவர்களிடையே அடிக்கடி ‘கருணாநிதியா எம்ஜிஆரா’ என்று விவாதம் நடக்கும். ‘எம்ஜிஆர்தான்’ என்று பலவிதமாக வாதிடுவார் அப்பா.  ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்னு அண்ணா சொன்னாரு. அதுதான் எம்ஜிஆரு கொள்க. நான் சாமி கும்பிடறவன். அதான் எம்ஜிஆரு பக்கம் நிக்கறன்’ என்பார்.

எம்ஜிஆரின் படங்கள் அனைத்தையும் பார்த்தவர் அப்பா. அவற்றைப் பற்றிய தகவல்களை எல்லாம் நன்றாக நினைவு வைத்திருப்பார். எம்ஜிஆரின் ஒவ்வொரு படத்தைப் பற்றியும் புதுப்புதுத் தகவல்கள் சொல்வார். எம்ஜிஆர் படங்கள் ஒவ்வொன்றையும் எத்தனை முறை பார்த்திருப்பாரோ? பழைய படங்களை மீண்டும் திரையிடும்போது எங்களை எல்லாம் அழைத்துப் போவார்.  ‘இதயக்கனி’ படம் பார்க்க அழைத்துச் சென்ற போது ‘எம்ஜிஆரப் பத்தி அண்ணா சொன்னது இது’ என்றார்.  ‘நேற்று இன்று நாளை’  படத்தில் எம்ஜிஆர் கையில் நீண்ட துடைப்பத்தோடு வீதி பெருக்கிக்கொண்டே ‘நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று, அதை நான் உனக்குச் சொல்லட்டுமா இன்று’ என்று பாடுவார். அதில்  ‘காஞ்சி’ என்பது ‘காஞ்சிபுரம்’ என்பதும் அண்ணா பிறந்த ஊர் என்பதும் அப்பா சொல்லித்தான் அறிந்தேன்.

நான் முட்டாள்தான்

அண்ணா கதை வசனம் எழுதிய படங்களைப் பற்றியும் தகவல்கள் சொல்வார்.  சிலசமயம்  ‘அண்ணாவோட பேர வெச்சதுக்காகத்தான் எம்ஜிஆர் கட்சியில சேந்தன்’ என்று சொல்வார். அண்ணா நூற்றாண்டின் போது அவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பை உருவாக்கித் தருமாறு காலச்சுவடு கண்ணன் கேட்டபோது உவகையோடு ஏற்றுக்கொண்டேன். அண்ணாவின் சிறுகதைகள் அனைத்தையும் வாசித்துத் தேர்ந்தெடுத்தேன். என் நூலாக்கச் செயல்பாடுகளில் அதை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

அண்ணா படிக்கச் சொன்னார்; அதைக் கேட்டு அப்பா என்னைப் படிக்க வைத்தார். படித்தும் என்ன? நான் முட்டாள்தான். அதில் என்ன பெருமை? பெருமை இருக்கிறது. அண்ணா உருவாக்கிய முட்டாள் நான்.

—–