தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2

You are currently viewing தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2

ஒவ்வொரு துறை பாடநூல்கள் சார்ந்தும் ‘குறிப்பு நூல்கள்’ பலவும் புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. அவை குறிப்பிட்ட ஆசிரியர் பெயரில் அமைந்தவை அல்ல. ஒரு பதிப்பகம் பாடத்திட்ட அலகுகளைச் சிலரிடம் பிரித்துக் கொடுத்துப் பாடம் எழுதித் தரச் சொல்லி வாங்குகிறது. ஓரலகுக்கு இவ்வளவு எனப் பேசி ஒரே முறையில் மொத்தத்தொகை வழங்கிவிடுகிறது. அதன் பின் அவருக்கும் அவ்வெழுத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அவர் பெயரும் வராது. முழு உரிமை பதிப்பகத்திற்கே. இவ்வாறு எல்லாத் துறைகளுக்கும் குறிப்பு நூல்கள் வருகின்றன. அவற்றின் விற்பனையை ஊக்குவிக்க ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று குறிப்பிட்ட துறையில் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரதிகளை இலவசமாகக் கொடுத்து விடுவர்.

கல்லூரியில் மாணவர் கூட்டுறவுச் சங்கம் இருந்து, அது செயல்படுமானால் அதன் வழியாகத் தம் குறிப்பு நூல்களை வாங்கப் பரிந்துரைக்குமாறு துறைத்தலைவர்களைக் கேட்பர். கூட்டுறவுச் சங்க விதிப்படி வாங்கும் புத்தகத்தின் விலையில் குறைந்தபட்சம் பதினைந்து விழுக்காடு கழிவு கிடைக்க வேண்டும். இப்பதிப்பகம் நாற்பது விழுக்காடு கழிவு கொடுப்பர். பதினைந்து விழுக்காடு மட்டும் கணக்கில் வரும். மீதமுள்ள இருபத்தைந்து விழுக்காட்டுத் தொகை சங்கப் பொறுப்பாசிரியர், துறைத்தலைவர் எனப் பலருக்கும் பங்காகச் செல்லும். நற்பண்பு கொண்ட துறைத்தலைவர்கள் சிலர் அத்தொகையை மாணவர்களுக்கோ துறைசார் நடவடிக்கைகளுக்கோ வழங்கிவிடுவதையும் கண்டிருக்கிறேன்.

சுயநிதிக் கல்லூரிகளில் கழிவுத்தொகை நாற்பது விழுக்காட்டையும் நிர்வாகமே எடுத்துக் கொள்ளும். சுயநிதிக் கல்லூரி நடத்துவது லாபகரமான தொழில்தானே. எந்தெந்த வழிகளில் எல்லாம் வருமானம் இருக்கிறதோ அவ்வழிகள் எல்லாம் நிர்வாகம் என்னும் ஒரே இடத்தையே சென்று சேரும்.  ஒவ்வொரு பருவம் தொடங்கியதும் கல்லூரிக்குள் நுழையும் முதல் ஆள் குறிப்புநூல் வெளியிடும் பதிப்பக விற்பனை முகவர்தான். நகரத்திலும் பாடநூல் விற்பனைக்கென்று கடைகள் இருக்கின்றன. அவற்றில் நேரடியாகவும் மாணவர்கள் வாங்கிக் கொள்ளலாம். அங்கே கழிவு எதுவும் தருவதில்லை. புத்தக விலையில் பதிப்பகம் தரும் நாற்பது விழுக்காட்டுத் தொகையும் கடைக்கு லாபமாகக் கிடைக்கும்.

சில புத்திசாலி முகவர்களையும் கண்டிருக்கிறேன். கூட்டுறவுச் சங்கம் செயல்படாத கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடியாக அவரே விற்பனை செய்வார். துறைத்தலைவர் அனுமதி பெற்று நேரடியாக வகுப்புக்குச் சென்று விற்பார். அனுமதி தரத் துறைத்தலைவர் தயங்கினால் வகுப்பறைக்கு வெளியில் அல்லது கல்லூரிக்கு வெளியில் நின்று மாணவர்களுக்கு அவர் விற்பனை செய்வார்.  மாணவர்களுக்கு இருபது அல்லது இருபத்தைந்து விழுக்காடு கழிவு தருவார். கடையில் கழிவே கிடைக்காது என்பதால் மாணவர்கள் விரும்பி வாங்குவர்.

இதையெல்லாம்  எழுதுவதற்குக் காரணம் பாடநூல் புத்தகச் சந்தை எத்தனை வலுவாக இயங்குகிறது, என்னவெல்லாம் நடக்கிறது, எப்படிப் பணப்புழக்கம் இருக்கிறது என்பதைத் தெரியப்படுத்துவதற்காகத்தான். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வெளியிடும் பாடநூல்கள் இல்லை எனினும் பேராசிரியர்களும் பதிப்பகங்களும் வெளியிடும் நூல்களும் குறிப்புநூல்களும் பல தாராளமாகச் சந்தையில் கிடைக்கின்றன என்பதை உணர்த்தத்தான்.

இதைப் பற்றி ஏதும் அறியாதவர்கள் தமிழில் உயர்கல்வியைக் கற்பித்தால் பாடநூலுக்கு என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய நூல்களின் தரம் எப்படி இருக்கிறது, கலைச்சொற்கள் உருவாக்கத்தில் எத்தகைய பிரச்சினைகள் உள்ளன என்பதைப் பற்றி வெறுமனே சிலர் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் கள எதார்த்தம் வேறாக இருக்கிறது. யாரோ சொற்களை உருவாக்குகிறார்கள், யாரோ எழுதுகிறார்கள், யாரோ விற்கிறார்கள். பாடநூல் புத்தகச் சந்தை ஜோராக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இப்போதும் கலை அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகள் தமிழ் வழியில் இல்லை. இளநிலையில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் முதுநிலையிலும் தமிழ் வழியில் படிக்க ஏற்பாடு செய்வதுதான் நியாயம். நடைமுறை அப்படியில்லை. தமிழ் வழியில் பயின்றுவிட்டு முதுநிலைப் படிப்பில் ஆங்கில வழியில் பயில்வதற்குச் சிரமப்படுவோர் பலர். இளநிலைப் படிப்பில் ஆங்கில வழியில் பயில்வோரும் தமிழில் தேர்வு எழுதுவதை அனுமதிப்பது போல முதுநிலைப் படிப்பில் அனுமதிப்பதில்லை.

தமிழில் பொறியியல், மருத்துவக் கல்வி 2

தொழிற்கல்வியிலும் ஐடிஐ, பாலிடெக்னிக் ஆகியவற்றில் பயில்வோர் ஆங்கில வழி என்றாலும் தமிழில் தேர்வு எழுத அனுமதி உண்டு. கலைக்கல்லூரிகளைப் போலவே தமிழ் வழி, ஆங்கில வழி ஆகிய இருவகைப் படிப்புகளும் இருக்கின்றன. அனைவருமே தமிழில் தேர்வெழுதலாம். தமிழ் மொழிப் பாடமும் ஒருதாள் இருக்கிறது. ஆகவே பாடநூல்களும் குறிப்பு நூல்களும் தமிழில் தாராளமாகக் கிடைக்கின்றன.

பொறியியல் கல்வியில் 2006 – 2011 திமுக ஆட்சியில் சில பாடப்பிரிவுகள் மட்டும் தமிழில் தொடங்கப்பட்டன. பொதுவியல், இயந்திரவியல் (சிவில், மெக்கானிக்கல்) ஆகிய இருதுறைப் படிப்புகள் இருப்பதாக நினைவு.  சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட அண்ணா பல்கலைக்கழக நிறுவனங்களில் இப்படிப்புகள் இருக்கின்றன. இவற்றுக்குரிய பாடநூல்களும் மொழிபெயர்த்தும் எழுதியும் வெளியிடப்பட்டன. தமிழ் வழியில் பயின்று பட்டம் பெற்றவர்களில் பலர் பெரிய போட்டியில்லாததால் எளிதாக அரசுப் பணி பெற்றதை அறிவேன். தமிழ்நாட்டு அரசுப்பணியில் தமிழ் வழியில் கற்றவர்களுக்கு இருபது விழுக்காடு இடஒதுக்கீடு இருப்பதால் இம்மாணவர்கள் பலருக்கு உடனடியான வேலைவாய்ப்பு அமைந்தது.

எனினும் தமிழ் வழிப் படிப்புகள் பிற கல்லூரிகளுக்கும் பிற பொறியியல் பாடப்பிரிவுகளுக்கும் விரிவாகவில்லை. அதில் அரசுகள் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் காரணம். தமிழ் வழியில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் சிக்கல்களை அறிந்து அவற்றைக் களைந்து மேம்படுத்துவது தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக ஆட்சியில் தொடங்கியதால் அதில் அதிமுகவின் பத்தாண்டு ஆட்சி சிறிதும் கவனம் கொள்ளவில்லை. அப்படிப்பை நிறுத்தவில்லை என்பதே பெரிய விஷயம்.

(தொடர்ச்சி நாளை)

—–  13-04-25

Latest comments (1)

குணசேகரன் பெ

முதுகலைப் படிப்புகளும் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் ஐயா. அதுவே நம் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பிற்கும் அடித்தளம் இடும். புதிய கண்டுபிடிப்புகள் இங்கிருந்து வரும்.