பூரண விழா

 

பூரண விழா பூரண விழா பூரண விழா

‘இலக்கிய நகரம்’ என்று போற்றப்படும் (யுனஸ்கோ அத்தகுதியை வழங்கியிருக்கிறது) கோழிக்கோட்டில் 04-10-24 வெள்ளி அன்று ‘பூர்ணா பண்பாட்டுத் திருவிழா’ நிகழ்வு.  ‘பூர்ணா பதிப்பகம்’ கேரளத்தில் முக்கியமான பதிப்பகங்களில் ஒன்று. சிறுவயதில் செய்தித்தாள் விநியோகித்துப் பின் மிதிவண்டியில் புத்தகங்களை எடுத்துச் சென்று விற்றுப் படிப்படியாகப் புத்தகக் கடை, பதிப்பகம் என முன்னேறிய ஒரு பதிப்பாளரின் வெற்றிக் கதை இந்தப் பதிப்பகத்தின் பின்னணியில் உள்ளது. அவர் என்.இ.பாலகிருஷ்ண மாரார் (1932 – 2022).

மாரார் எழுதிய தன்வரலாற்று நூல் ‘கண்ணீரின் இனிமை – ஒரு பதிப்பாளரின் கதை’ (கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010) எனத் தமிழில் வெளியாகியுள்ளது.  நிர்மால்யா மொழிபெயர்த்திருக்கிறார். ‘இப்புத்தகம் அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கேரளத்தின் புத்தகப் பதிப்பு மற்றும் புத்தக விற்பனைத் துறையில் தொடர் சாதனைகளை ஈட்டி வரும் ஒரு பதிப்பாளர் ஜாம்பவானின் வெற்றிக் கதை மட்டுமல்ல. உணர்வின் சுடரையும் தன்னம்பிக்கையின் பிழம்பையும் குழைத்துத் தீட்டப்பட்ட வாழ்க்கைச் சித்திரம்’ என்று தம் முன்னுரையில் நிர்மால்யா கூறுகிறார். மலையாளத்தில் தன்வரலாற்று நூல்களுக்கும் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கும் மிகுந்த வரவேற்பு உண்டு. பேராளுமைகள் முதற்கொண்டு சாதாரணவர் வரை பலரது வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. தமிழிலும் பல நூல்கள் மொழிபெயர்ப்பாகியிருக்கின்றன. அவ்வகையில் இந்நூலும் முக்கியமானது.

மாராரின் இளம்பருவம் மிகுந்த துயர் கொண்டது. தொடக்கக் கல்விக்கு மேல் பள்ளி செல்ல வாய்ப்பில்லை. பலவிதக் கஷ்டங்கள்; இடைவிடாத உழைப்பு. இன்று கேரளத்தில் டிபிஎஸ் (TPS – Touring Book Stall)  என்னும் பல கிளைகளைக் கொண்ட பெரிய புத்தகக் கடையும் பூர்ணா பதிப்பகமும் அவர் உருவாக்கியவை. அவர் மகன் மனோகர் இன்று அதன் மேலாண் இயக்குநராக இருக்கிறார். 1966ஆம் ஆண்டு தொடங்கிய இப்பதிப்பகத்தின் முதன்மை முக்கியத்துவம் இன்று புகழ்பெற்றிருக்கும் எழுத்தாளர்கள் பலரது முதல் நூலை வெளியிட்டமை.

எம்.டி.வாசுதேவன் நாயரின் தொடக்க கால நூல்கள் பலவற்றைப் பூர்ணா வெளியிட்டுள்ளது. பால் சக்காரியாவின் முதல் நூலை வெளியிட்டது பூர்ணாதான். இப்பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர்களின் பட்டியல் பெரிது. பல முதல் பதிப்பு நூல்களை அரங்கில் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்நூலில் அவ்வெழுத்தாளர்களைப் பற்றி ஒரு அத்தியாயமே உள்ளது. மாரார் தம் தொண்ணூறாம் வயதில் 2022ஆம் ஆண்டு இறந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில் 2023ஆம் ஆண்டு  ‘பூர்ணா பண்பாட்டுத் திருவிழா’வைத் தொடங்கினர். இப்போது இரண்டாம் ஆண்டு விழா.

இந்நிகழ்வுக்கு வர வேண்டும் எனச் சில மாதங்களுக்கு முன்னரே மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.வெங்கடாசலம் என்னிடம் ஒப்புதல் கேட்டார். அதன் பின் மனோகர் பேசினார். பெங்களூருவில் நடைபெற்ற ‘புக் பிரம்மா’ இலக்கிய விழாவில் சந்தித்தபோது நேரில் கடிதம் கொடுத்து என்னை அழைத்தார். கேரளத்தின் முக்கியப் பதிப்பகமான பூர்ணா விழாவைப் பற்றிக் கடந்த ஆண்டே அறிந்திருந்ததால் பங்கேற்க விருப்பத்தோடு ஒப்புதல் கொடுத்தேன். இன்னொரு முக்கியமான காரணம் ‘பூக்குழி’ நாவலைச் ‘சிதாக்னி’ என்னும் தலைப்பில் 2017ஆம் ஆண்டே பூர்ணா வெளியிட்டமை. ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு மொழிபெயர்த்தவர் ஷைலஜா ரவீந்திரன். இப்போது கே.எஸ்.வெங்கடாசலம் மொழிபெயர்ப்பில் ‘வேல்!’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட உள்ளனர்.

கோழிக்கோட்டில் உள்ள  ‘மலபார் பேலஸ்’ ஹோட்டலில் நிகழ்வு நடைபெற்றது. ஒரே அரங்கு; ஒரே அமர்வு. ஆரவாரம் இல்லாமல் அரங்கு நிறைந்த கூட்டத்தோடு நிகழ்வுகள் நடைபெற்றன. எழுத்தாளர்களோடும் வாசகர்களோடும் உரையாட அவகாசம் இருந்தது.  விழாவின் தொடக்க உரையை நானும் மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப்பும் நிகழ்த்தினோம். அச்சுப் பண்பாடு குறித்தும் புத்தக விற்பனை சந்தையாக உருப்பெற்ற வரலாறு பற்றியும் சில செய்திகளைக் குறிப்பிட்டுப் பேசினேன்.

மாராரை நினைவுகூரும் பலரும் மிதிவண்டியையும் அவரையும் இணைத்துத்தான் குறிப்பிடுகிறார்கள். புத்தகக் கட்டுக்களை வைத்துக்கொண்டு தினமும் பலகல் தூரம் பயணம் செய்து விற்றவர் அவர். தம் எழுத்துப் பிரசுர வெளியீடுகளைத் தலையில் சுமந்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களும் கொண்டு சென்று விற்பனை செய்த சி.சு.செல்லப்பா நினைவுக்கு வந்தார். அவர் முயற்சிகளையும் சொன்னேன். சிறந்த பதிப்பாளராக விளங்கிய சக்தி வை.கோவிந்தன் செய்த முயற்சிகளையும் சொல்லிப் பேசினேன். புத்தகம் என்பது அறிவுசார் சொத்து; புத்தகப் பதிப்பு என்பது பண்பாட்டு நிகழ்வு. ஆகவே ‘பண்பாட்டுத் திருவிழா’ என்பது பொருத்தம் என்றும் குறிப்பிட்டேன். அரைமணி நேர உரை. அரங்கில் அமர இடமின்றி நின்றபடி பலரும் கேட்டனர்.

பூரண விழா

மலையாள ஊடகங்கள் எப்போதுமே எழுத்தாளர்களைச் சுற்றிச் சுற்றி வருவன. தொடக்க விழாவிற்குப் பிறகு நேர்காணல், கையொப்பம், புகைப்படம் என்று நேரம் கரைந்தது. ஊடகத் துறையில் பயிலும் மாணவர்கள் இத்தகைய விழாக்களில் குழுவாக வந்து எழுத்தாளர்களைச் சுற்றி வளைத்துக் கேள்விகள் கேட்பார்கள். அவர்களைச் சமாளித்து மீள்வது கொஞ்சம் கடினம். நல்ல தயாரிப்போடு வருவோரும் இருப்பர். ஏடாகூடமாகக் கேட்போரும் இருப்பர். ஊடகத்திடம் இருந்து மீண்டு சற்றே ஓய்வெடுத்து வர அறைக்குச் சென்றேன்.

மதிய உணவுக்குப் பிறகு 2 மணிக்கு ஒரு அமர்வு. என்னோடு உரையாடியவர் கபனி. ‘கூளமாதாரி’ நாவலை ஆங்கிலம் வழி மலையாளத்தில்  ‘கீழாளன்’ என்னும் தலைப்பில் 2017ஆம் ஆண்டு மொழிபெயர்த்தவர். டிசி புக்ஸ் வெளியீடு. சில தடவை செல்பேசியில் பேசியிருக்கிறார். ஆங்கில இதழ் ஒன்றுக்காக மின்னஞ்சல் வழியாக ஒரு நேர்காணல் செய்திருக்கிறார். சில இலக்கிய விழாக்களில் சந்தித்திருக்கிறோம். அதிகம் பேசியதில்லை. இந்த நிகழ்வுக்காகப் புலனம் வழியாகச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம். நேரில் விரிவாகப் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. நக்ஸலைட் இயக்கச் செயல்பாட்டாளரும் நாடக ஆசிரியரும் கவிஞருமான சிவிக் சந்திரனின் மகள் அவர். இப்போது அரசுப் பணியில் துணை ஆட்சியர் நிலையில் உள்ளார். மலையாளம், ஆங்கிலம் இரண்டிலும் மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார்.

பூரண விழா

ஒருமணி நேர அமர்வுக்காக என் படைப்புகளை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வாசித்துப் பல கேள்விகளைத் தயார் செய்திருந்தார். ஆங்கிலத்தில் கேட்கட்டுமா என்றார். மலையாளத்திலேயே கேளுங்கள், எனக்கு மனசிலாவும் என்று சொன்னேன். அவர் மலையாளத்தில் கேட்க நான் தமிழில் பதிலளித்தேன். உணவுக்குப் பிறகான அமர்வுக்குக் கூட்டம் இருக்குமா என்று நினைத்திருந்தேன். கூட்டத்தில் பேசுவதில் மலையாளிகளுக்கு ஆர்வம் இருப்பது போலவே கூட்டத்திற்குச் செல்லவும் கேட்கவும் ஆர்வம் அதிகம். தொடக்க விழாவைப் போலவே அரங்கு நிறைந்த கூட்டம்.

மீண்டும் புகைப்படங்கள், கையொப்பம் என்று சென்றது. பூர்ணா குடும்பத்துடன் புகைப்படங்கள். இப்போது பூர்ணா பதிப்பகம் சிறுவர் நூல்களை வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறது. மாராரின் மருமகள் பிரியா மனோகர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். காலையில் தொடக்க விழாவில் அவர்தான் நன்றியுரை ஆற்றினார். குழந்தைகளுக்கான ஆங்கில நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். முக்கியமான விருதுகளையும் பெற்றுள்ளார். தம் நூல்கள் சிலவற்றை எனக்குக் கொடுத்தார். ஐந்தாறு வயது வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கான நூல்கள். முழுக்க ஓவியங்களுடன் குறைந்த தொடர்களைக் கொண்டவை. மாராரின் பேரனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு பேசினார். பதிப்புத்துறை சார்ந்து படிப்பதாகச் சொன்னார். பூர்ணாவின் மூன்றாம் தலைமுறை. பூர்ணாவின் விழா பூரணம்.

மீண்டும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு ஏழு மணிக்குக் கிளம்பினேன். மொழிபெயர்ப்பாளர் கே.எஸ்.வெங்கடாசலம் எப்போதும் அன்பாக உபசரிப்பவர். ரயில் நிலையம் வந்து வழியனுப்பினார். கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் கோழிக்கோட்டுக்கு நான் சென்ற பயணங்கள் கணக்கற்றவை. எத்தனையோ இலக்கிய அமைப்புகள்; நூலகங்கள்; பதிப்பகங்கள்; கல்வி நிறுவனங்கள். இலக்கிய நகருக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் போகலாம்.

—–   25-10-24

Add your first comment to this post