கொங்குப் பகுதியில் (குறிப்பாக நாமக்கல், கரூர் மாவட்டங்களில்) வீட்டு மொழியாகத் தெலுங்கு பேசும் அருந்ததியர், எர்ர கொல்ல என்னும் தொட்டிய நாயக்கர் ஆகிய இருசாதியினர் பெரும்பான்மையாகக் கிராமங்களில் வசிக்கின்றனர். இவ்விரு சாதியாரும் பொங்கலை நடுகல் வழிபாட்டுப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர். தமிழர் வீரத்தின் அடையாளம் என்று நடுகல் வழிபாட்டைப் போற்றுகின்றோம். தெலுங்கு பேசும் சாதியாரிடம் தான் அவ்வழிபாடு இன்றும் நின்று நிலவுகிறது. இறந்தவருக்குக் கல் நடும் வழக்கம் கொங்குப் பகுதியில் இவ்விரு சாதியாரிடம் மட்டுமே இருக்கிறது.
ஒன்னாத் தெவ்வர் முன்நின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே. (புறம் 335)
என்னும் புறநானூற்றுப் பாடலை எடுத்துக்காட்டி இதுவே தமிழர் கடவுள் வழிபாடு என்போர் உண்டு. சரிதான். ஆனால் தமிழ்ப் பேசும் எந்தச் சாதியாரிடம் நடுகல் நடும் வழக்கமோ அதை வழிபாடு செய்யும் மரபோ நிலவுகிறது? கொங்குப் பகுதியில் நானறியத் தமிழ்ச் சாதியாரிடம் இவ்வழக்கம் இல்லை.
நடுகல் நடும் முறையையும் வழிபாட்டையும் தொல்காப்பியம் ‘காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல்’ என்று ஆறாக வரிசைப்படுத்திக் கூறுகிறது. பின்னர் வந்த புறப்பொருள் மாலையும் இதை வழிமொழிகிறது. சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்குக் கல் நடுவதையும் இம்முறையிலேயே இளங்கோவடிகள் அமைத்திருக்கிறார். இவ்வாறெல்லாம் தமிழ்ப் பண்பாட்டு மரபாக இருந்த நடுகல் வழிபாடு என்னவாயிற்று? தமிழ்ச் சாதியார் எப்போது இதைக் கைவிட்டனர் என்று தெரியவில்லை. ஆனால் தெலுங்கு பேசும் சாதியாரிடம் இதே நடைமுறை சிறிதும் மாறாமல் இன்றும் அப்படியே விளங்குகிறது.
இடுகாட்டை ஒட்டியே கல் நடும் வழக்கம் அருந்ததியர்களிடம் இருக்கிறது. இடுகாடு ஓரிடத்திலும் கல் நடுதல் ஓரிடத்திலும் என்பது நாயக்கர் சாதியினர் வழக்கம். இப்படிச் சிற்சில வேறுபாடுகள் உண்டு. இறந்த ஒவ்வொருவருக்கும் கல் நடுவர். பட்டையான கல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நடும் வழக்கம் முன்னர் இருந்தது. பிறகு கல்வெட்டுப் போலப் பெயர் பொறித்து வைக்கும் வழக்கம் வந்தது. பிறகு புகைப்படத்தை ஒட்டினர். இப்போது இறந்தவர் படத்தையே கல்லில் பதித்துக் கொடுக்கும் வகையில் தொழில்நுட்பம் வந்துவிட்டது. சமீபத்தில் இறந்தவர் நடுகல் தெளிவான படப்பொறிப்புடன் திகழ்கிறது. ஆகவே அடையாளம் காண்பது எளிது. கல்லில் படம் பொறித்துத் தரும் கடைகள் உள்ளன.
நடுகற்கள் நிறைந்த அப்பகுதிக்கு ‘மாலா கோயில்’ என்றே பெயர். நடுகல்லை ‘மாலை’ என்கின்றனர். அதற்கு வழிபாடு செய்தலை ‘மாலை கும்பிடுதல்’ என்பர். மாலையிட்டு வழிபடுவதால் ஆகுபெயராக ‘மாலை’ என்பது கல்லைக் குறித்திருக்கலாம். மாலை தெலுங்கில் ‘மால’ என்று ஒலிக்கும். ‘மாளா கோயில்’ என்றும் சொல்வர். மாளுதல் என்பது இறத்தல் எனப் பொருள்படும். மாண்டவர் – இறந்தவர். மாளாதவர் என்றால் இறக்காதவர். இறப்பில்லாமல் நினைவில் வாழ்பவர் என்பதால் ‘மாளா கோயில்’ என வந்திருக்கலாம் என்கின்றனர். தமிழ்ச் சொல்லாகத்தான் விளக்குகின்றனர். தெலுங்கில் வேறு பொருள் இருக்கிறதா என மக்களுக்குத் தெரியவில்லை. நான் ‘மாலா கோயில்’ என்றே கொள்கிறேன்.
தை முதல் நாள் தொடங்கி இம்மாதம் முழுவதும் மாலா கோயில் வழிபாடு நடக்கிறது. புதுத்துணி வாங்கிச் சென்று (பெரும்பாலும் துண்டு) கல்லைக் கழுவி அணிவிக்கின்றனர். இறந்தவர்களுக்குப் பிடித்த பொருள்களை வாங்கிச் சென்று படைக்கின்றனர். இப்போது சமைத்து எடுத்துச் செல்வதில்லை. வீட்டில் (இறைச்சி உள்ளிட) சமைத்து எச்சில் படாமல் எடுத்துக் கூரையில் காக்கைக்கு வைத்த பிறகே மாலா கோயிலுக்குச் செல்கின்றனர். இறந்தவருக்குப் பிடித்த புகையிலை, வெற்றிலை பாக்கு, மது வகைகள் உள்ளிட்டவற்றை வைத்து அருந்ததியர் வழிபடுகின்றனர். அண்மைக் காலத்தில் கடையில் புரோட்டா வாங்கிச் செல்வது அதிகரித்துள்ளது. புரோட்டா அவ்வளவு இயல்பான உணவாகியிருக்கிறது.
கழுவிப் புதுத்துணி அணிவித்துத் தேங்காய், பழம் வைத்து நாயக்கர் கும்பிடுகின்றனர். பிடித்த பொருட்களைப் படைப்பதில்லை. நடுகல் வைத்திருக்கும் இடத்தில் எல்லாவற்றுக்கும் தலைமையாக ‘வீரகாரன்’ என்றழைக்கும் கல் ஒன்றிருக்கிறது. அதற்குப் பூசாரி முதலில் பூசை செய்கிறார். பிறகு அவரவர் முன்னோர் கற்களுக்குப் பூசை செய்கின்றனர். அருந்ததியர் இடுகாடும் நடுகல்லும் ஒரே பகுதியில் அருகருகே அமைந்திருக்கின்றன. நாயக்கரது இடுகாடு தனியாகவும் நடுகல் நடும் பகுதி தனியாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு குலத்திற்கும் ஓரிடம் என்று வைத்திருக்கின்றனர். வழிபாட்டு நாளில் வேறு ஊர்களில் இருந்தும் அவ்விடத்திற்கு வந்து சேர்கின்றனர்.
இருசாதியினர் வழிபாட்டிலும் நிலவும் ஒவ்வொரு தனித்தன்மை முக்கியமானது. மாலா கோயில் வழிபாட்டின்போது தெருக்கூத்து நடத்துவது அருந்ததியர் மரபு. மாலா கோயில் இருக்கும் இடுகாட்டுப் பகுதியிலேயே மேடை அமைத்துக் கூத்து நடக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு கதை கொண்ட கூத்து. என் இளம்பருவத்தில் பாட்டியுடன் கூத்துப் பார்க்கச் சென்றதுண்டு. அப்போது இந்த விவரங்கள் எல்லாம் தெளிவாகத் தெரியாது. பின்னர் என் மாணவர்களுடன் சில இடங்களுக்குச் சென்றபோது கவனித்திருக்கிறேன். ஒரு பொங்கல் நாளில் எலிமேடு வடிவேலு குழுவினர் ‘மதுரை வீரன்’ கூத்துப் போடுவதாக அறிந்து திரைப்பட இயக்குநர் தமிழுடன் சென்றேன். ஊரார் விருப்பத்தின்படி அன்று வேறு கதைதான் நடந்தது. அச்சூழலைக் காண்பதற்கு வாய்த்தது.
இடுகாட்டின் ஒருபுறம் மாலா கோயில். அதன் முன்பகுதியில் கூத்து அரங்கம். வழிபாட்டைக் காட்டும் விதமாக நடுகற்கள் மாலைகளால் சூழ்ந்திருந்தன. பலவகைப் பொருட்களும் படைத்திருந்தனர். பார்வையாளர்கள் போர்வை, பாய் சகிதமாகக் கூத்து மேடையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். பிணக்குழிகளின் அருகிலேயே பலர் அமர்ந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. கூத்து நடத்துவது ஒரு சடங்காக நிலவுகிறது. கொங்குப் பகுதிக் கூத்தாடிகளுக்குத் தை மாதம் என்றால் பெருங்கொண்டாட்டம். எல்லா நாட்களும் கூத்தாட முடியும். தமிழர் நாட்டுப்புற நிகழ்த்துகலை வடிவமாகிய கூத்துக்கலையைக் காப்பாற்றுவோர் அருந்ததியர்தான்.
நாயக்கர் சாதியினர் வழிபாடு சற்றே வேறுபட்டது. மாலை நேரத்தில் மாலா கோயில் வழிபாடு செய்வர். அது ஒருமணி நேரத்திற்குள் முடிந்துவிடும். அதன்பின் ‘செலிகெத்து’ நடைபெறும். அது ஆண்டுதோறும் தவறாமல் நடைபெறும் சடங்கு. ஜல்லிக்கட்டு என்பதன் திரிபுதான் ‘செலிகெத்து.’ மாட்டுக்கும் மனிதருக்கும் நடக்கும் விளையாட்டல்ல இது. ‘மஞ்சுவிரட்டு’ என்று சொல்லலாம். ஒவ்வொரு ஊரிலும் வளர்க்கும் ஊர்மாடுகளைக் கொண்டு வந்து ஓட விடுவதுதான் செலிகெத்து. மாடுகளுக்கான ஓட்டப் பந்தயம். அதில் வெல்லும் மாட்டுக்குப் பரிசுகள் உண்டு. ஜல்லிக்கட்டின் ஒருவடிவத்தை நாயக்கர் சாதியினர் இவ்வாறு பாதுகாத்து வருகின்றனர்.
தமிழர் திருநாள் என்று போற்றிக் கொண்டாடும் பண்டிகையின் போது தெருக்கூத்து, ஜல்லிக்கட்டு ஆகியவை தெலுங்கு பேசும் சாதியாரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பழமையானவற்றைப் பாதுகாக்கும் அவர்களை ‘வந்தேறிகள்’ என்று சொல்வோரை என்ன செய்வது?
தகவல்களும் படங்கள் உதவியும் : மு.நடராஜன், மா.கிருஷ்ணன், வெண்ணிலா ஆகியோர்.
—– 18-01-25
Nice
சேவாகவுண்டம் பாளையத்தில் ஒரு மாலா கோயில் உண்டு. அது நாயக்களுக்குரியது. இடுகாட்டை ஒட்டியே அமைந்துள்ளது. அவர்களது ஊர் 2 கி.மீ தள்ளி ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். ஆனால் தாங்கள் குறிப்பிட்டது போல மாட்டுப்பொங்கல் அல்லது கரிநாளில் வழிபடுகின்றனர். நான் சிறுவனாக இருந்த போது இவர்களும் கூத்து நடத்தி வந்தனர்.
எங்கள் ஊர் கொக்கராயன்பேட்டை. எங்கள் ஊரிலிருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மூன்று கல் தொலைவில் மாலா கோவில் பேருந்து நிறுத்தம் உள்ளது. அது தெலுங்கு பேசும் நாயக்கர்கள் இடுகாடுதான். அங்கு ஆண்டுதோறும் தைப் பொங்கலன்று நடுகல் வழிபாடு நடைபெற்று வருகிறது. அருந்ததியர்கள் இறந்தவர்களுக்குக் கல் நடுவார்கள் என்பது தெரியும். ஆனால் அச்சமூகத்தாரிடமும் இவ்வழிபாடு உண்டென்பது எனக்குப் புதிய செய்தி. 13.01.2025 அன்று நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த நண்பரிடம் அவர் தாயார் இறப்பு குறித்துப் பேசும்போது தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்ட நடுகல் வழிபாடு குறித்து விரிவாகக் கூறினார். நடுகல்லுக்கு அவரவர் விருப்பப்படி வேட்டியோ, புடவையோ, துண்டோ ஏன் பெட்ஷீட்கூட சாற்றுவர் என்றார். இடுகாட்டில் வழிபாடு மட்டும் செய்வர். பின்னர் வீட்டில் எச்சில்படாமல் உணவு சமைத்து இறந்தவருக்குப் படைத்துக் காக்கைக்கு வைத்துவிட்டு உண்பர் என்றும் கூறினார். தமிழரின் தொன்மையான நடுகல் வழிபாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதையறிந்து வியந்தேன்!