‘பெரிய மாளிகை அது’

 

 ‘பெரிய மாளிகை அது’

சென்னையில் இந்த ஆண்டு மழைக்காலமும் பெருமழை வெள்ளத்தோடு தொடங்கியிருக்கிறது. தண்ணீர் தேங்குவது, வெள்ளம் வடியாமை ஆகியவற்றுக்கான காரணம் பற்றி நிபுணர்கள் பலவிதமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதற்குச் சாலை மட்டம் உயர்ந்தும் வீடுகளின் மட்டம் தாழ்ந்தும் இருப்பது முக்கியமான காரணம் என்கின்றனர். எத்தனை முறை புதுப்பித்தாலும் மட்டம் உயராத வெளிநாட்டுச் சாலைகளைக் காட்டிச் சிலாகிக்கின்றனர்.

நாமக்கல்லில் நாங்கள் இப்போது வசிக்கும் வீடு 1993இல் கட்டியது. அப்போது தெருவிலிருந்து வீட்டுக்குள் நுழைய நான்கு படிகள் ஏற வேண்டும். அத்தனை உயரம் வைத்துத்தான் வீட்டைக் கட்டியிருந்தனர். முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. இப்போது ஒருபடிகூட இல்லை. ஒவ்வொரு முறை சாலைக்குத் தார் ஊற்றும்போதும் மட்டம் உயர்ந்து உயர்ந்து நான்கு படிகளையும் விழுங்கிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் சாலையும் வீட்டு மட்டமும் சமமாக இருந்தன. சாலை நீர் வீட்டுக்குள் நுழையாமல் இருக்க வாசல் இரும்புக்கதவை ஒட்டிச் சிறுதிட்டு அமைத்தோம்.

எங்கள் தெருவில் சாக்கடை வசதி இல்லை. ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வகையில் கழிவுநீரை வெளியேற்ற வழி ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். பக்கத்துக் காலிமனை சிலருக்கு உதவுகிறது. வீட்டை ஒட்டிச் சாலையில் குழி தோண்டிக் கழிவுநீர்த் தொட்டி கட்டியுள்ளனர் சிலர். வீட்டுக்குள் தோட்டம் வைத்திருப்போர் செடிகளுக்கு விடுகின்றனர்.  சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் சாலையைப் புதுப்பிக்கும்படி எங்கள் தெருவைச் சேர்ந்த யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஏற்கனவே போட்டிருந்த தார்ச்சாலையில் சில இடங்கள் பெயர்ந்திருந்தாலும் அது பெரிதாகப் பாதிக்கவில்லை. புதிய சாலை போட்டால் இன்னும் கொஞ்சம் மட்டம் உயர்ந்துவிடும். கழிவுநீர்த் தொட்டிகளைப் பெயர்த்தெடுக்க நேரும். வீடுகளுக்குள் தண்ணீர் நுழையும்.

நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை என்றாலும் புதிய சாலை போடுவதற்கு அரசு முடிவு செய்துவிட்டது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் அவசர அவசரமாகச் சாலைகள் புதுப்பிப்பதற்கும் கட்டிடங்கள் கட்டுவதற்கும் அரசு ஆணை வெளியிட்டு ஒப்பந்தாரரையும் முடிவு செய்தது. தேர்தல் செலவுக்குப் பணம் திரட்டுவதற்காக ஆளுங்கட்சி செய்த ஏற்பாடு இது என்பது வெளிப்படை. அப்படி ஏலம் விட்ட பட்டியலில் எங்கள் தெருச் சாலையும் சேர்ந்துவிட்டது. எத்தனையோ ஊர்களில் சாலை வசதி இல்லை. அங்கெல்லாம் விட்டுவிட்டு வேண்டாம் என்று சொல்லும் எங்களுக்குச் சாலை போட்டுத் தர முடிவு செய்திருந்தார்கள். நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குத்துமதிப்பாக இத்தனை சாலைகள் புதுப்பிப்பு என்று முடிவெடுத்திருப்பார்கள் போல. எங்கெல்லாம் எளிதாகப் போட முடியும் என்று பார்த்ததில் எங்கள் தெருவும் சிக்கிக் கொண்டது.

தேர்தல் முடிந்து ஆட்சி மாறிய பிறகே சாலை புதுப்பிக்கும் வேலை தொடங்கியது. பழைய சாலையை அகற்றிவிட்டு அதே மட்டத்திற்குப் புதிய சாலை அமைக்க வேண்டும்  என்பது விதி. நடைமுறையில் எந்த ஒப்பந்ததாரரும் அதைப் பின்பற்றுவதில்லை. அரசு நிர்வாகமும் பரிசோதிப்பதோ நிர்ப்பந்திப்பதோ இல்லை. ஏற்கனவே இருக்கும் சாலையை ஜேசிபியின் நீள்நகங்களால் லேசாகக் கீறிவிட்டு அதன் மேல் ஜல்லி கொட்டித் தார் ஊற்றிப் புல்டோசரைக் கொண்டு ஒருமுறை அழுத்திவிட்டால் வேலை முடிந்தது. ஒப்பந்ததாரருக்குக் கொள்ளை லாபம். யாருடைய வீடு எவ்வளவு பள்ளத்துக்குள் போனால் அவர்களுக்கென்ன?

எங்கள் தெருவுக்குச் சாலை அமைக்கும் வேலையும் அப்படித்தான் நடந்தது. அதிகாலையில் ஜேசிபி வண்டி வந்து கீறல் போட்டுக் கொண்டிருந்தது. சாலை அமைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று நினைத்துக்கொண்டு நானும் மனைவியும் கல்லூரிக்குக் கிளம்பினோம். மாலையில் வீட்டுக்குத் திரும்பிய போது புதுச்சாலை வரவேற்றது. புதுப்பிக்கும் வேலை ஒரே நாளில் முடிந்துவிட்டது. அதற்குச் சில நாட்களுக்கு முன் சமூக ஊடகங்களில் ஒருபுகைப்படம் வெளியாகியிருந்தது. ஒரு வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை அகற்றாமல் அதன் ஸ்டேண்ட் தாருக்குள் புதைய சாலையைப் புதுப்பித்திருந்த படம். அதைப் பார்த்துச் சிரித்திருந்தோம். செயற்கையாக உருவாக்கிய படம் என்றும் நினைத்திருந்தேன்.

 ‘பெரிய மாளிகை அது’

உண்மையான படம்தான் என்பதை எங்கள் தெருவில் புதுப்பிப்பு நடந்த  பிறகே உணர்ந்தேன். எங்கள் வீட்டு இரும்புக் கதவுக்கு முன்னால் ஒருதிட்டுப் போலச் சாலை உயர்ந்திருந்தது. உள்ளே நிறுத்தியிருந்த காரை வெளியே எடுக்க வேண்டுமானால் இரும்புக் கதவைக் கழற்றி அகற்றியாக வேண்டும். காலையில் நாங்கள் கிளம்பும்போது சொல்லியிருந்தால் கூடக் காரை வெளியே எடுத்து நிறுத்தியிருக்கலாம். சாலை போடுபவர்களுக்கு இதுகூடவா தெரியாது? 2000ஆம் ஆண்டுக்கு முன் கட்டிய பன்னிரண்டு வீடுகள் சாலை மட்டத்திற்குக் கீழிறங்கிவிட்டன. கழிவுநீர்த் தொட்டிகளைப் பெயர்த்தெடுத்து வீசியிருந்தனர். தெருவுக்கும் தங்கள் வீட்டுக்கும் இடையே அமைத்திருந்த சறுக்குமேடையைப் பெயர்த்திருந்தனர். ஒவ்வொரு வீட்டுக்காரருக்கும் சில ஆயிரம் செலவாகும். வீட்டு மட்டத்தைப் பல்லாயிரம் செலவு செய்தால் சில வீடுகளில் உயர்த்த முடியும். என்ன செய்தாலும் சில வீடுகளில் உயர்த்த முடியாது.

எங்கள் வீட்டுக்கு ஆகும் செலவை ஏகதேசமாகக் கணக்கிட்டுப் பார்த்தேன். சுற்றுச்சுவர் மட்டத்தை உயர்த்தியாக வேண்டும். இரும்புக் கதவு இரண்டையும் கழற்றிவிட்டுச் சுவரை உடைத்து மேலேற்றி வைக்க வேண்டும். வீட்டைச் சுற்றிக் காரை போட்டிருக்கும் தரைப்பகுதியை உயர்த்த வேண்டும். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் செலவாகும் எனத் தோன்றியது. செலவைக்கூடச் சமாளித்துவிடலாம். அதற்குப் பொருத்தமான ஆளைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் ஒருமாதம் வேலை செய்வார்கள். அதைக் கண்காணிக்க ஆள் வேண்டும். மேசன் வேலை செய்வதென்றால் சாதாரணமல்ல. மனச்சோர்வு மண்டும் கொடுமை அது.

மிகுந்த சலிப்போடு அன்று இரவு உறங்கப் போனேன். படுத்துக்கொண்டே செய்திகளைக் கொஞ்ச நேரம் வாசித்தேன். சில மாதங்களுக்கு முன்னர் ‘மேற்பரப்பைச் சுரண்டி எடுத்துவிட்டு ஏற்கனவே இருந்த மட்டத்திலேயே சாலையைப் புதுப்பிக்க வேண்டும்’ என்று தலைமைச் செயலர் இறையன்பு ஆணை பிறப்பித்திருந்த செய்தி வந்திருந்தது. அந்த ஆணை இப்படிச் சொன்னது:

‘மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்ந்த சாலைகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது, ஏற்கெனவே உள்ள சாலை மட்டத்தை உயர்த்துவதால், சாலையின் தன்மை பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகள் ஏற்கெனவே இரண்டு அல்லது மூன்று அடுக்குகள் அடர் தார்தளம் போடப்பட்டு இருக்கும். ஆதலால், மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் சாலைகளில் மேலும் ஓர் அடுக்கு அடர் தார்த்தளம் போட்டு சாலை மட்டத்தை உயர்த்த வேண்டியது இல்லை. சாலை போடும்போது மேற்தளக் கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு மேற்தளம் போட வேண்டும். மேற்பரப்பைச் சுரண்டிவிட்டுச் சாலை போடுவது வீடுகளுக்குள் நீர் புகாமல் தடுக்கும். எந்தச் சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளின் மட்டத்தை அதிகரிக்கக் கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி சாலைகள் போதிய கனத்துடன் இருப்பதால் பிபிடி சோதனை தேவையில்லை.’ (இந்து தமிழ் திசை, 14-05-2021)

அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த ஆணை சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வும் செய்தார். எங்கள் தெருச் சாலை புதுப்பித்த நாளுக்கு முதல்நாள் தாம்பரம் பகுதியில் ஒரு தெருவில் போட்ட சாலையை அவர் ஆய்வு செய்திருந்தார். மேற்பரப்பைச் சுரண்டவில்லை என்றறிந்து போட்ட சாலையை அகற்றிவிட்டு மீண்டும் போடச் சொல்லி உத்தரவிட்டார் என்று செய்தி சொன்னது. அதை ஊடகங்கள் பெரிதும் பாராட்டி எழுதியிருந்தன.

இறையன்பு அவர்கள் எழுத்தாளர் என்பதால் அவரோடு எனக்கு நட்புண்டு. அவர் தலைமைச் செயலராகப் பதவியேற்ற பிறகு நேரில் சந்திக்கவில்லை. புலனம் வழியாக வாழ்த்துத் தெரிவித்திருந்தேன்.  ‘நன்றி’ எனச் செய்தி அனுப்பியிருந்தார். அந்த நம்பிக்கையில் தூக்கத்தை உதறிவிட்டு எழுந்தேன். விதியைப் பின்பற்றாமல் போட்ட சாலையை அகற்றி மீண்டும் போட ஆணையிட்டதைப் பாராட்டியதோடு எங்கள் தெருவின் நிலையை எடுத்துச் சொல்லிச் சிறுகடிதம் எழுதிப் புலனம் வழியாக அனுப்பிவிட்டுத் தூங்கப் போனேன். எதுவும் நடக்கிறதோ இல்லையோ எனக்குப் பாரம் குறைந்திருந்தது. நன்றாகவே தூங்கினேன்.

காலையில் தெருவில் எழுந்த சத்தமே என்னை எழுப்பியது. வெளியே போய்ப் பார்த்தால் நகராட்சி ஆணையர், செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சாலையைப் பார்வையிட எங்கள் தெருவுக்கு வந்திருந்தனர். தலைமைச் செயலர் இரவே என் கடிதத்தை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார். அதிகாரிகள் முகத்தில் கோபம் தெரிந்தது. புகார் அனுப்பியவர் யாரென விசாரித்து அறிந்திருந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் பணியில் நான் இருந்ததால் கோபத்தைக் காட்டாமல் மென்மையாகவே பேசினர். எங்கள் வீட்டு நிலைமையைக் காட்டினேன். தெருவில் பலரும் வந்து தங்கள் வீட்டு நிலையைப் பார்க்குமாறு அழைத்தனர்.

அதிகாரிகளோடு வந்திருந்த ஒருவர் என்னிடம் ரகசியம் சொல்வது போல மெல்லிய குரலில்  ‘ஒப்பந்ததாரர் பெரிய ஆளு சார்’ என்று பயமுறுத்தினார். ஒப்பந்ததாரரின் வீடு இருக்கும் இடத்தைச் சுட்டி ‘பெரிய மாளிகை அது. பாத்திருக்கறீங்களா?’ என்றார். பார்த்திருந்தேன். பெரிய மாளிகைதான் அது. அந்த வீட்டில் எத்தனை பேர் வசிப்பார்கள் என்று யோசித்திருக்கிறேன். பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த என் மனைவிக்குப் பயம்.  ‘உங்களுக்கு எதுக்கு இந்த வேல?’ என்று என்னைக் கடிந்தார்.  ‘பார்க்கலாம்’ என்று மட்டும் சொன்னேன். அதிகாரிகளை விடப் பலம் வாய்ந்தவர்கள் ஒப்பந்ததாரர்கள். அவர்களுக்கு அரசியல் பின்புலம் இருக்கும். ஒரு அரசியல்வாதியின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டுமானால் அவருக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் வீடுகளை நோக்கி வருமான வரித்துறை அதிகாரிகள் செல்கிறார்கள். அரசியல்வாதிகளின் உறவினர்கள் தான் ஒப்பந்ததாரர்களாகவும் இருக்கிறார்கள். எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று.

எனக்கும் உள்ளூரப் பயம்தான். அடியாள்கள் எல்லாம் இருப்பார்கள். ‘புகாரா கொடுக்கிறாய்?’ என்று அரிவாளோடு ஒருகூட்டம் என்னைத் துரத்தும் காட்சி மனதில் ஓடியது. இனி என்ன செய்ய முடியும்? மாளிகை வீடும் அதிகார பலமும் அரசியல் பின்புலமும் கொண்ட அத்தனை பெரிய ஒப்பந்ததாரர் நேரில் காட்சி தருவாரா? அவருடைய மேலாளர் என்று ஒருவர் வந்து அதிகாரிகளிடம் பேசினார். போட்ட சாலையைப் பெயர்த்து எடுத்துவிட்டு மீண்டும் போடுமாறு ஆணையர் சொல்லிவிட்டார். தலைமைச் செயலர் சொன்ன பிறகு வேறு வழியில்லை.

போட்ட சாலையைப் பெயர்த்தெடுத்தனர். பழைய மட்டத்திற்குச் சாலை போடும் வேலை நடந்தது. நேராக வரும் தெரு வளையும் இடத்தில் எங்கள் வீடு. எதிர்ப்பக்கம் மேடாக்கி வீட்டுப்பக்கம் தாழ்வாக்கிச் சாலையைப் போட்டனர். மட்டம் பழைய அளவே வந்துவிட்டது. அதாவது வீட்டு மட்டத்திற்கு ஒரு அங்குலம் தாழ்வு. ஆனால் மழைநீர் எங்கள் வீட்டு வாசலில் வந்துதான் தேங்கும் எனத் தெரிந்தது. எந்த அளவு தேங்கும் என்பதை என்னால் அனுமானிக்க முடியவில்லை. எனினும் அதை உணர்ந்து நான் கேட்டபோது அந்த இடம் திருப்பமாக இருப்பதால் அப்படித்தான் போட முடியும் என்றனர். பெரிய மாளிகையில் வாழும் ஒப்பந்ததாரரின் உருவம் கண்முன் தோன்றி அச்சுறுத்தியது. சரி, காரை எடுக்க முடியும், இரும்புக் கதவைக் கழற்ற வேண்டியதில்லை, இது போதும் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

அடுத்த சில நாட்களில் மழை பெய்தது. தெருத் தண்ணீர் முழுவதும் ஓடி வந்து எங்கள் வீட்டு வாசலில் கூடி நின்றது. இரும்புக் கதவையொட்டி மீண்டும் சிறுதிட்டு அமைத்தோம். அப்படியும் சிறுமழை பெய்தாலும் வாசலில் நீர் தேங்கிவிடும். தவளைகள் குதிக்கும். தவளைகளைப் பிடிக்கப் பாம்புகள் வரும். சிறுகுட்டையைத் தாண்டித்தான் உள்ளேயோ வெளியேயோ செல்ல வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டம் வரப்போகிறது என்று சொல்கிறார்கள். அதற்கு எத்தனை ஆண்டு ஆகுமோ தெரியவில்லை.  அதுவரைக்கும் நீளம் தாண்டுதல் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

—–  16-10-24

Add your first comment to this post

Comments are closed.