வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

 

வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

 

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம் மாணவராகிய உ.வே.சாமிநாதையரின் பெயரை மாற்றினார் என்பது பலருக்கும் தெரிந்த செய்தி. வேங்கடாசலபதி குலதெய்வம் ஆதலால் அப்பெயரையே தம் குடும்பத்தவர்க்கு வைக்கும் பரம்பரை வழக்கப்படி ‘வேங்கடராமன்’ என்னும் இயற்பெயரைச் சாமிநாதையர் பெற்றிருந்தார். சைவத்தைப் பின்பற்றி வந்த மகாவித்துவான் ‘வேங்கடராமன்’ என்னும் பெயரைச் சொல்லி அழைக்க விரும்பவில்லை. ஆகவே வீட்டில் ‘சாமா’ என்று அழைக்கும் பெயரின் விரிவாகிய ‘சாமிநாதன்’ என்னும் பெயரை வைத்துக்கொள்ளும்படி கூறினார். ஆசிரியரின் விருப்பத்தை ஏற்றுத் தம் பெயரைச் சாமிநாதன் என்றாக்கிக் கொண்டார். அதைப் பற்றி ‘என் சரித்திரத்தில்’ எழுதியுள்ள பகுதிக்குப் ‘பெயர் மாற்றம்’ என்று உள்தலைப்பு கொடுத்துள்ளார்.

தமது இன்னொரு சீடரும் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவருமாகிய சவேரிநாத பிள்ளையின் பெயரையும் மகாவித்துவான் மாற்றியுள்ளார். சைவர்களுக்கு மத்தியில் எப்போதும் நடமாட வேண்டியிருப்பதால் தம் பெயரும் அதற்கேற்ற வகையில் இருந்தால் நல்லது எனச் சவேரிநாத பிள்ளை கருதினார். அவ்வெண்ணத்தை ஆசிரியரிடம் சொல்லித் தம் பெயரை மாற்றும்படி வேண்டினார். ‘சிவகுருநாதன்’ என நாமகரணம் செய்தார் மகாவித்துவான். வைணவப் பெயரைக் கொண்ட சீடர் ஒருவருக்கும் கிறித்தவராகிய சீடர் ஒருவருக்கும் சைவப் பெயரைச் சூட்டிய மகாவித்துவான் மூன்றாவதாக இன்னொருவருக்கும் பெயர் மாற்றம் செய்துள்ளார். அவர் மகாவித்துவானின் சீடரல்லர்.

திருப்பெருந்துறைப் புராணம் எழுதிய மகாவித்துவான் அதை அரங்கேற்றம் செய்வதற்காக அவ்வூருக்குச் சென்றார். அங்கிருந்த கட்டளை மடத்தில் தங்கினார். அவருக்கு உதவுவதற்காகத் திருவாவடுதுறை மடத்திலிருந்து வேலைக்காரர் ஒருவரை அனுப்பியிருந்தனர். வேலைக்காரர் பெயர்  ’சின்னச்சாமி படையாச்சி.’ மகாவித்துவானின் உடனிருந்த தவசிப்பிள்ளைகள் (சமையல்காரர்கள்) ‘அடே சின்னச்சாமி’ என்று அழைத்தார்கள். ‘அங்கே போடா’, ‘இங்கே வாடா’ என்று ‘டா’ போட்டு வேலைக்கு ஏவினர். இதை மகாவித்துவான் கவனித்துக் கொண்டிருந்தார். கட்டளை மடத்துத் தலைவரைப் ‘பெரியசாமி’ என்றும் அவருக்கு உதவியாக அடுத்திருந்தவரைச் ‘சின்னச்சாமி’ என்றும் எல்லோரும் மரியாதையாக அழைப்பது வழக்கம். சாமிகளின் பெயரைச் சொல்வதில்லை. இதை மகாவித்துவான் கவனித்தார்.

கட்டளைச்சாமியின் அடுத்த நிலையில் இருப்பவருக்கு உரியதான ‘சின்னச்சாமி’ என்னும் பெயர் வேலைக்காரருக்கு இருக்கிறது. அவரை எல்லோரும் ‘டா’ போட்டு மரியாதை இல்லாமல் அழைக்கிறார்கள். மடத்துச் சின்னச்சாமியின் காதில் இது விழுந்தால் அவர் என்ன நினைப்பார்? தம்மைத்தான் யாரோ மரியாதை இல்லாமல் அழைக்கிறார்கள் என்று நினைத்துவிட்டால்? இப்பிரச்சினைக்கு என்ன தீர்வு?  வேலைக்காரரை மரியாதையோடு ‘ஐயா, சின்னச்சாமி’ என்று அழைக்கும்படி சொல்லியிருக்கலாம். அது சாத்தியமில்லை. அந்தச் சம்பவம் நடந்து அறுபது எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு எழுதும் உ.வே.சா. ‘வேலைக்காரன்’ என்றுதான் குறிப்பிட்டுள்ளார். வேலைக்காரருக்கு மரியாதை தேவையில்லை என்று கருதும் மனோபாவம் இன்றும் சமூகத்தில் நிலவுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மரியாதை பற்றிய சிந்தனையே தோன்றியிருக்காது. அப்படியே மரியாதையாக அழைக்கும்படி சொன்னாலும் அதிலும் பிரச்சினை இருக்கிறது. கட்டளை மடத்துச் சின்னச்சாமிக்கும் வேலைக்காரச் சின்னச்சாமிக்கும் ஒரே மரியாதை என்பதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொருவரிடமும் இந்தப் பிரச்சினையைக் கூறி மரியாதையோடு அழையுங்கள் என்று சொல்லியபடியே இருப்பது சாத்தியமில்லை.

இப்படியெல்லாம் மகாவித்துவான் யோசித்தாரா என்று தெரியவில்லை. யோசித்திருக்கலாம்; அன்றைய சூழலில் அப்படியான யோசனை வராமலும் போயிருக்கலாம். ஆனால் பிரச்சினையைப் பெயர் மாற்றத்தின் வழியாக மகாவித்துவான் எளிதில் தீர்த்துவிட்டார். சின்னச்சாமி படையாச்சியின் பெயரை ‘வீரப்பன்’ என்று மாற்றினார்.  ‘உன்னை இன்று முதல் சின்னச்சாமியென்று யாரும் அழைக்க மாட்டார்கள்; வீரப்பனென்றே அழைப்பார்கள்; அழைக்கும் போது நீ ஏனென்று கேட்டு, சொன்ன வேலைகளைச் செய்துவா’ என்று வேலைக்காரருக்குக் கட்டளையிட்டார். அவர் கட்டளை நிறைவேறியது. இந்தச் சம்பவத்தை விவரிக்கும் உ.வே.சா. ‘இதனால் இவருடைய கவனம் ஒரு சிறு விஷயத்திலும் செலுத்தப்பட்டமை விளங்குகிறது’ என்று (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் இரண்டாம் பாகம், ப.175) கூறுகிறார்.

வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

 

மகாவித்துவான் ஒவ்வொரு சிறுவிஷயத்திலும் கவனமாக இருந்தார் என்பதை விளக்குவதற்காக இந்தச் சம்பவத்தை உ.வே.சா. எழுதியிருந்தாலும் சீடர்கள் இருவருக்கு மாற்றி வைத்த பெயர்களுக்கும் வேலைக்காரர் ஒருவருக்கு மாற்றி வைத்த பெயருக்கும் உள்ள வேறுபாடு துலக்கமாகத் தெரிகிறது. சீடர்களுக்கு வைத்த பெயர்கள் இரண்டும் முருகனுக்குரிய திருநாமங்கள். வீரப்பன் எந்தக் கடவுளுக்கு உரிய பெயர்? வேலைக்காரர் சின்னச்சாமியின் குலதெய்வம் வீரப்பனாக இருக்குமோ? அதைக் கேட்டறிந்து மகாவித்துவான் இப்பெயரைச் சூட்டியிருப்பாரோ? தெரியவில்லை. உ.வே.சாமிநாதையருக்குத் தம் குலதெய்வப் பெயர் வேண்டாம் என்று மாற்றிய மகாவித்துவான் இன்னொருவருக்குக் குலதெய்வப் பெயரைச் சூட்டியிருக்கக் கூடுமோ? தெரியவில்லை.

வீரப்பன் என்னும் பெயர் கொங்குப் பகுதியிலும் வழக்கில் இருப்பதுதான். மதுரை வீரன் வழிபாட்டின் காரணமாகத் தலித் மக்களிடம் ‘வீரன்’ என்னும் பெயர்ப் புழக்கம் மிகுதி. வீரப்பன், வீராசாமி ஆகிய பெயர்கள் நிலவுடைமைச் சாதிப் பிரிவினரிடம் காணப்படும். ஒருபெயரோடு அப்பன், சாமி, ஈசன், ஐயன் ஆகிய பெயர்களைப் பின்னொட்டாகச் சேர்த்தால் அவை பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பெயர்களாகும். பின்னொட்டு ஏதுமில்லை என்றால் அவை தலித்துகளின் பெயர்களாகும். மாரன் – மாரப்பன்; முருகன் – முருகேசன், முருகையன்; செங்கோடன் – செங்கோட்டையன்; ராமன் – ராமசாமி என எத்தனையோ பெயர்களைச் சான்றாகச் சொல்லலாம்.

அத்தகைய வழக்கத்தை அனுசரித்த மகாவித்துவான் பிற்படுத்தப்பட்ட, படையாச்சி (வன்னியர்) சாதியைச் சேர்ந்த வேலைக்காரருக்கு ‘வீரப்பன்’ என்று பெயர் சூட்டியுள்ளார் போலும்.

—–

வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

வீரப்பன் ஆனார் சின்னச்சாமி

பயன்பட்ட நூல்கள்:

  1. உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு.
  2. உ.வே.சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் இரண்டாம் பாகம், 1986, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு.

(ஏப்ரல் 6 : மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் பிறந்த நாள்.)

—–   06-04-24