உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?

You are currently viewing உடுமலை சங்கர் கொலை வழக்கு : களத்தில் வேறு யார் உளர்?

 

 

உடுமலை சங்கர் கொலை வழக்கு தொடர்பான உயர்நீதி மன்றத் தீர்ப்பு பொதுத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இத்தீர்ப்பு பற்றிக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இவ்வழக்கில் ‘அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை’ என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும்  ‘சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தவறிவிட்டது என்ற அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தத்தமது அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். எதிர்தரப்பு வழக்கை நடத்துவதற்குக் குறிப்பிட்ட சாதி அமைப்பு நிதி  உள்ளிட்ட உதவிகளைச் செய்ததோடு முழுப் பொறுப்பையும் ஏற்றது எனத் தெரிய வருகிறது. இத்தீர்ப்பு தொடர்பாகச் சட்ட ரீதியிலான விஷயங்களை விவாதிப்பதோடு இன்றைய சூழலில் சாதி அமைப்புகளின் செயல்பாடுகள் பற்றி விரிவாகப் பேச வேண்டியது அவசியம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல் சாதிச் சங்கங்கள் செயல்பட்டு வந்திருக்கின்றன. எனினும் 1980களுக்குப் பிறகு படிப்படியாக அவை அரசியல் முக்கியத்துவம் பெற்றுக் கட்சிகளாக உருமாறின. கடந்த இருபதாண்டுகளாக அவை கூடுதல் ஆதிக்கம் பெற்றுத் தேர்தலில் இடங்களைப் பெறுவதாகவும் நிலை உருமாறிவிட்டது. அரசியலில் இத்தகைய இடத்தைப் பெறுவதற்கு அவற்றின் சமூகச் செயல்பாடுகளும் காரணமாகின்றன.

வெகுமக்கள் மத்தியில் செயல்படும் ஜனநாயக சக்திகள் என்று இன்று எதுவும் இல்லை அல்லது மிகக் குறைவாகவே இருக்கின்றன. சாதிக் கட்சிகளும் சாதிச் சங்கங்களுமே உள்ளூர் அளவில் செயல்படுகின்றன. சாதிக் கட்சிகளின் பரவலாக்கத்தைத் தேர்தல் அரசியலுக்கு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பதே எல்லாச் சாதிகளுக்கும் பொதுவானதாகக் கருதப்படும் பெருங்கட்சிகளின் உத்திகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதியில் பெருவாரியாக இருக்கும் சாதிக் கட்சிக்கு ஓரிரு தொகுதிகளை ஒதுக்கித் தேர்தல் ஒப்பந்தம் செய்துகொள்ள அக்கட்சிகள் முயல்கின்றன. அதுவே தேர்தலில் வெற்றிச் சூத்திரமாகப் பார்க்கப்படுகிறது. ஆகவே வெகுமக்கள் மத்தியில் சாதிக் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டுத் தம் பலத்தைப் பெருக்கிக் காட்ட விழைகின்றன.

சாதிக் கட்சி அல்லது சங்கத்தின் பெயர்ப்பலகை இல்லாத ஊரே இல்லை. பல கட்சிகளின் கொடிகள் பறந்த இடங்களில் இன்று சாதி அமைப்புக் கொடிகள் பறக்கின்றன. கட்சிக் கொடிக் கம்பங்கள் ஊருக்குப் பொதுவான ஒரே இடத்தில் இருந்தன. சாதிக் கொடிக் கம்பங்கள் அந்தந்தச் சாதியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ளன. ஓர் ஊரில் சாதிப் பிரிவினை எவ்வாறு இருக்கிறது என்பதற்கு இவையே சாட்சி.  உள்ளூர் மட்டத்தில் தலைவர், துணைத்தலைவர், அதுஇது என்று பதவி பெற்றுப் பதாகைகளில் சிரிக்கும் முகங்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்கின்றது.

ரசிகர் மன்றங்களும் சாதி சார்ந்தே அமைகின்றன. திரை நாயகன் ஒருவருக்கு ஓர் ஊரில் ரசிகர் மன்றம் இருந்தால் அப்பகுதியின் சாதியைச் சேர்ந்தவராக அந்நாயகன் இருப்பார் என்பது உறுதி. இப்போதைய நிலையில் விஜய், அஜித் தவிர பிற நடிகர்கள் அனைவருக்கும் தெளிவான சாதி அடையாளத்தோடு ரசிகர் மன்றங்கள் உள்ளன. சாதிச் சின்னங்களைத் தம் வாகனங்களில் பதித்துக் கொள்வது, குடும்ப நிகழ்வுகளில் வாழ்த்துப் பதாகைகள் கட்டுவது, சாதிச் சின்னங்களைக் கொண்ட டிசர்ட்டுகள் அணிவது (மகளிர் அணிக்குச் சேலைகளும் இருக்கின்றன) எனச் செயல்பாடுகளின் பரவலாக்கம் வெளிப்படுகிறது. சாதிக் கட்சிகளின் உள்ளூர்ச் செயல்பாடுகள் இப்படி விரிந்த தளத்தில் இருக்கின்றன.

சாதி என்னும் அடையாளம் பிறப்பிலேயே வருவது என்பதும் அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாக அது இருப்பதும் சாதியச் செயல்பாடுகளுக்கு எளிதாக இருக்கின்றன. சாதி அடிப்படையில் அணி திரட்டுவதற்கு எந்தக் கொள்கை, கோட்பாடும் தேவையில்லை. சாதி அடையாளம் மட்டுமே போதும். சாதியினர் பாதிக்கப்படும்போது அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்து கொடுப்பதுதான் மிக முக்கியமான செயல்பாடு.

உள்ளூரில் இருவருக்கு இடையே தகராறு என்றால் அங்கே பஞ்சாயத்துப் பேச வருவோர் சம்பந்தப்பட்ட இருவரின் சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். சாதி அறக்கட்டளைகள் நடத்தும் திருமண மண்டபங்கள், சமூகக் கூடங்கள் அச்சாதியினருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. காவல்துறை, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குச் சாதி அமைப்புகள் உதவுகின்றன. குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்ட வழக்குகளில் இச்சாதி அமைப்புகளின் உதவி பெரிதாக இருக்கிறது.

காதல் – கலப்புத் திருமணங்களில் மணமக்களைக் கடத்துவதற்கும் அச்சுறுத்திப் பிரிப்பதற்கும் கொலை செய்வதற்கும் சாதி அமைப்புகள் உதவுகின்றன. வெவ்வேறு சாதியைச் சேர்ந்த இருவரின் திருமணத்திற்குச் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் சம்மதித்தாலும் போதாது. சாதி அமைப்புகள் தலையிட்டு அத்திருமணத்தைத் தடுக்கும். மீறித் திருமணம் நடத்த முயன்றால் மண்டபம் கிடைக்காது; எந்த வேலைக்கும் ஆட்கள் வரமாட்டார்கள். ஒருகாலத்துச் ‘சாதி விலக்கம்’ இன்றைக்குச்  ‘சமூக விலக்கமாக’ உருப்பெற்றிருக்கிறது. கலப்புத் திருமணத்திற்கு ஏற்பு வழங்கும் பெற்றோரைக் கொல்லவும் சாதி அமைப்புகள் தயாராக இருக்கின்றன.

இவையெல்லாம் சாதியமைப்புகள் தம் சாதியினருக்கு வழங்கும்  ‘பாதுகாப்பு’ என்னும் கருத்தோட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தம் சாதியினரின் பாதுகாப்புக்கு முதன்மையான அச்சுறுத்தலாக, எதிரியாகத்  தலித் சாதியினரும் அமைப்புகளும் கட்டமைக்கப்படுகின்றன. இன்னொருபுறம் மதவாத அமைப்புகளின் அமைதியான, உள்ளார்ந்த செயல்பாடுகளும் நடக்கின்றன.

பெருங்கட்சிகளும் ஜனநாயக அமைப்புகளும் இத்தகைய நடைமுறை எதார்த்தைக் கருத்தில் கொள்ளவில்லை. அல்லது கருத்தில் கொண்டாலும் இச்சூழலை எதிர்கொள்ள இயலாமல் தடுமாறுகின்றன. சாதி அமைப்புகளோடு இணக்கம் காட்டுவதையே தம்மை நிலைநிறுத்திக்கொள்ளும் உத்தி என்று கருதுகின்றன. சாதி அமைப்புகள் கூர்மை பெறாத காலகட்டத்துச் செயல்பாட்டு நடைமுறைகளையே இப்போதும் அவை பின்பற்றிப் பின்தங்கிப் போகின்றன. ஜனநாயக சக்திகள் பின்தங்குவதால் சாதி அமைப்புகள் இன்னும் செழிக்கின்றன. அவற்றுக்கு நிதிப் பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த தொழிலதிபர்களும் கல்வித் தந்தைகளும் அதைக் கவனித்துக் கொண்டு தமக்கான பாதுகாப்பைப் பெறுகின்றனர்.

திராவிட இயக்கங்கள் திட்டமிட்ட அமைப்புச் செயல்பாடுகளைக் கைவிட்டுப் பல காலமாயிற்று. தமிழ்த் தேசிய அமைப்புகளைப் பொருத்தவரைக்கும்  ‘தமிழ்ச் சாதிகள்’ என்னும் கண்ணோட்டமே நிலவுகிறது. பொதுவுடைமை இயக்கங்களிடமும் உள்ளூர் அளவிலான செயல்பாடுகள் பெரிதாக இல்லை. சாதிய அமைப்புகளை எதிர்கொள்ள எந்தப் புதிய திட்டங்களையும் கைக்கொள்வதாகத் தெரியவில்லை. தலித் அமைப்புகளோ எதிரிகளாகக் கருதப்படுகின்றன. களத்தில் வேறு யார் உளர்? உள்ளூர் அளவிலான செயல்பாடுகள் ஜனநாயக சக்திகளிடம் அறவே இல்லை; இருந்த இடமும் தூர்ந்து வருகிறது என்பதே என் கணிப்பு.

இச்சூழலில் பிராமணரல்லாத சாதியினரிடம் ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள் இன்னும் எத்தகைய பரிமாணங்களை அடையும் என்பதை என்னால் கணிக்க இயலவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு விவாதங்கள் நடைபெற வேண்டியதும் செயல்பட வேண்டியதும் அவசியம் என்று மட்டும் தோன்றுகிறது.

—–     25-06-20

Add your first comment to this post

Comments are closed.