இனிய முகம்
(தொடர்ச்சி)
பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கான வேதியியல் ஆசிரியர் துணைத் தலைமையாசிரியராகவும் இருந்தார். அதனால் அவருக்கு நிர்வாக வேலைகள் ஏராளம். மேலும் அவர் பட்டதாரி ஆசிரியராக இருந்து முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர். +2 பாடங்களை அவரால் சரியாக நடத்த முடியாது என்றும் பேச்சு இருந்தது. எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, வகுப்புக்கு அவர் வரவே மாட்டார். வந்தாலும் பாடம் நடத்த மாட்டார். யாரையாவது எழ வைத்து எதையாவது வாசிக்கச் சொல்வார். பன்னிரண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதை எல்லோரும் அறிவர். முக்கியமான பாடம் ஒன்றை நடத்தும் ஆசிரியர் இப்படி இருந்தால் என்ன செய்வது? ஏமாற்றும் ஆசிரியர்களை எனக்குச் சிறிதும் பிடிக்காது. அவர் பெயரைக்கூட என் நினைவிலிருந்து அழித்துவிட்டேன்.
அப்போது கணிதத்திற்கும் அறிவியல் பாடங்களுக்கும் ஆசிரியர்கள் தனிவகுப்பு (ட்யூசன்) நடத்தும் வழக்கம் பரவலாக இருந்தது. தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் பலர் காரத்திடம் தனிவகுப்புக்குச் சென்றோம். வேதியியலைப் படிக்க வேறு வழியில்லை என்பது ஒருகாரணம். அவரது கற்பிக்கும் முறையும் அணுகுமுறையும் இன்னொரு காரணம். திருச்செங்கோடு மலையடிவாரம் பகுதியில் இருந்த அவர் வீட்டு மாடியில் ஓர் அறையில் தனிவகுப்பு நடக்கும். வணிகப் பின்புலம் கொண்ட அவர் குடும்பத்தில் அனேகமாக முதல் பட்டதாரி அவர்தான் என நினைக்கிறேன். முதலில் அரசுப்பணிக்குச் சென்றவரும் அவராகத்தான் இருப்பார். குடும்பத்தார் அவரை மிகுந்த மதிப்புடன் கவனித்துக் கொள்வார்கள்.
அவருடைய அக்கா மகன் சுந்தரராஜன் என் வகுப்புத் தோழன். அவன் சில செய்திகளை எங்களுக்குச் சொல்வான். எல்லாவற்றிலும் வேறுபட்டிருக்கும் ஆசிரியர் அல்லவா அவர்? கற்றதை நடைமுறையிலும் பின்பற்ற முயல்வார். அவர் உணவு உண்ண வெகுநேரம் எடுத்துக் கொள்வார். எல்லோரும் சுவையை உணர்ந்து உணவு உண்பர். அவரோ வாய் அரைக்கும் உணவில் உமிழ்நீர் நன்றாகக் கலந்து வேதியியல் விளைவு ஏற்பட்ட பின்னரே விழுங்க வேண்டும் என்பார். அவருக்கு உணவு பரிமாறி உண்டு முடிப்பதற்குள் ‘எங்க பாட்டி குட்டித் தூக்கமே போட்டிரும்’ என்பான் சுந்தரராஜன்.
ஒவ்வொன்றையும் இப்படி முறையாகச் செய்வதைப் பற்றி எந்த உணர்வும் இல்லாத எங்களுக்கு அதிசயமாக இருக்கும். நானும்கூடச் சோற்றை வெகுநேரம் வாயில் வைத்து மென்று விழுங்கப் பார்த்தேன். விவசாய வேலை செய்வோர் ஆற அமர உட்கார்ந்து உண்ண மாட்டார்கள். வேகமாக உண்டு முடித்து அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவார்கள். அதனால் ‘சோத்து மேல ரொம்ப நேரம் உக்காந்திருந்தா பீட பிடிச்சுக்கும்’ என்னும் நம்பிக்கை இருந்தது. வாயில் சோற்றை அதக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என் அம்மாவுக்குக் கோபம் வந்துவிடும். ‘பீட புடிச்ச நாயி. சோத்த மொத முழுங்கு’ என்று திட்டத் தொடங்கிவிட்டார். ஆசிரியரின் பழக்கம் ஒருபக்கம், அம்மாவின் ஏச்சு ஒருபக்கம். ஏச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் எதிர்காலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று சோற்றின் மேல் வெகுநேரம் உட்கார்ந்திருக்கும் பழக்கத்தைக் கைகழுவிவிட்டேன்.
இப்படியெல்லாம் என்னையும் என் நண்பர்களையும் பெரிதும் பாதித்தவர் வேதியியல் ஆசிரியர் காரம். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பாரதியார் நூற்றாண்டு வந்தது. அதையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் எங்கள் கல்வி மாவட்டத்தில் இரண்டாம் பரிசு பெற்றேன். அன்பளிப்பாகக் கிடைத்த ‘பாரதியார் கவிதைகள்’ நூலை வரிவரியாகப் படித்தேன். அக்கவிதைகளின் தாக்கத்தில் நானும் ஏதேதோ உளறலாக எழுதிக் குவித்தேன். யாப்பிலக்கணம் தெரியாமலே கண்டதை வைத்து மரபுக்கவிதை எழுதும் திறன் கொண்டிருந்தேன். எனக்கிருந்த கவிதை ஆர்வத்தை அறிந்த காரம் எழுதியவற்றைத் தரும்படி ஒருமுறை கேட்டார். நான் எழுதியவற்றைப் பிறரிடம் காட்டுவதில் கூச்சம் உண்டு. அவர் கேட்டதால் என் கவிதை நோட்டு ஒன்றைக் கொடுத்தேன்.
அதில் இருந்தவற்றை வாசித்துவிட்டு அவர் சொன்ன சொற்கள் தான் என் பாதையை மாற்றின. ‘உன் எழுத்தில் பாரதியாரின் தாக்கம் அதிகம் இருக்கிறது. இருக்கலாம். விரைவில் அதைக் கடந்துவிட வேண்டும். உனக்கெனச் சுயமான பார்வை வரும்படி எழுது’ என்று சொன்னார். ஒன்றின் பாதிப்பில் இருந்து விடுபடுவது எப்படி என்று அப்போதுதான் சிந்திக்கத் தொடங்கினேன். பாதிக்கும் ஒன்றைப் போலவே நம்மையும் அறியாமல் ஏதாவது எழுதிவிடுவோம். பாதிப்பினால் விளைந்தது என்று தெரிந்து அதிலிருந்து விடுபட வேண்டும். எழுதுவதும் ஒருவகை விடுபடல்தானே?
வேதியியல் ஆசிரியருடனான தொடர்பு பன்னிரண்டாம் வகுப்பில் எண்பது விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் வாங்கியதோடு முடிந்துவிடவில்லை. பின்னரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்தது. ஓராண்டு வகுப்பில் பயின்றவன், இன்னோராண்டு தனிவகுப்புக்குச் சென்றவன், யார் பேச்சையும் கேட்காமல் தமிழ் இலக்கியம் எடுத்துப் பயின்றவன் என்பதால் என்னை அவர் நன்கு நினைவில் வைத்திருந்தார்.
1990களில் அரசுப் பள்ளிகளில் வெற்றிகரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் பலர் சில முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து சுயநிதிப் பள்ளிகளைத் தொடங்கினர். நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளி வரலாறு இப்படியானதுதான். என் வேதியியல் ஆசிரியரும் ஒருபள்ளியில் பங்குதாரராகி முதலாளியாகிவிட்டார். சொத்து சேர்ந்தது; அதிகாரம் கிடைத்தது. சமூகத்தில் முக்கியஸ்தர் ஆனார். அவர் தேர்ந்து கொண்ட பாதை. அதைப் பற்றி நானென்ன சொல்ல? இனிய ஆசிரியர் முகம் மாறி முதலாளியின் முகம் படிந்துவிட்ட நிலையையும் கண்டேன். நான் தமிழ் இலக்கியம் பயில்வது அவருக்கு உவப்பாக இல்லை. முனைவர் பட்டம் முடித்து அரசு கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்ததில் திருப்தி தெரிவித்தார்.
(தொடர்ச்சி நாளை)
—— 24-05-25
இப்படி ஓர் ஆசிரியர் கிடைக்க வேண்டுமே! ஒருசில தூங்கும் ஆசிரியர்களால்தான் சிலருக்கு வாழ்வில் ஏங்கும் நிலை.