தம் பிறப்பிற்கு (1855) முன்னிருந்து 1900ஆம் ஆண்டு வரைக்குமான தன் வரலாற்றை எழுதியுள்ள உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூல் மூன்று தீபாவளிகளைக் குறிப்பிடுகின்றது.
முதலாவது, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேரும் முன் நடந்த அவரது தலைதீபாவளி. 1868 ஆனி மாதம் 4ஆம் நாள் அவர் திருமணம் நடைபெற்றது. அம்மாத ஐப்பசியில் அவருக்குத் தலைதீபாவளி. அதற்கு மாமனார் அழைப்பின் பேரில் மாளாபுரத்திற்கு அவர் தம் பெற்றோருடன் சென்றார். தீபாவளியுடன் சேர்ந்து ‘ஆறாம் மாதமும்’ நடந்தது என்கிறார். திருமணமாகி ஆறாம் மாதத்தில் சில சடங்குகள் நடைபெறுவது வழக்கம் போல. அவை எத்தகையவை என அவர் விரிவாக எழுதவில்லை.
ஆனி மாதத்தில் திருமணம். ஐந்தாம் மாதமாகிய ஐப்பசியில் தலைதீபாவளி. கார்த்திகைதான் ஆறாம் மாதம். தீபாவளிக்குச் சென்றவர்கள் கார்த்திகை மாதம் பிறக்கும் வரை மாமனார் வீட்டிலேயே சில நாட்கள் தங்கியிருக்கக் கூடும். ஆகவே தலைதீபாவளியும் ஆறாம் மாதமும் சேர்ந்து நடந்திருக்கின்றன. தீபாவளிக்காக ஏழு ரூபாய்க்கு ஜரிகை வஸ்திரம் வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆறாம் மாதச் சடங்கை ஒட்டி பதினான்கு ரூபாய் பணம் கிடைத்ததாம். அத்தொகைக்கு அவரின் தாயார் விருப்பப்படி வெள்ளிச்சங்கிலி செய்து அணிவித்துள்ளனர்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்த பிறகான ஆண்டுகளில் வந்த இரு தீபாவளிகளைப் பதிவு செய்துள்ளார். 1871ஆம் ஆண்டுத் தீபாவளிக்குத் தம் பெற்றோரையும் குழந்தையாக இருந்த தம்பியையும் பார்த்துவர வேண்டும் என்று விரும்பி மகாவித்துவானிடம் அனுமதி கேட்டார். மகாவித்துவானும் அனுமதி கொடுத்தார். பட்டுக்கரை அங்கவஸ்திரங்கள் இரண்டை வரவைத்து உ.வே.சாவுக்குக் கொடுத்தார் மகாவித்துவான். அவருடைய அன்பின் வெளிப்பாடாக அது அமைந்தது. ‘தீபாவளி ஸ்நானம்’ செய்தார். ஆசிரியர் அன்புடன் அளித்த அங்கவஸ்திரங்களையே அந்தத் தீபாவளிக்கு அணிந்துகொண்டார். அப்போது அவருக்குத் ‘தனி மகிழ்ச்சி’ உண்டாயிற்று.
அடுத்தது 1874ஆம் ஆண்டுத் தீபாவளி. அப்போது மகாவித்துவானும் மாணவர்களும் திருவாவடுதுறையில் தங்கியிருந்தனர். மகாவித்துவான் தம் மகன் அழைப்பிற்கிணங்கித் தீபாவளி கொண்டாட மாயூரம் சென்றார். அவருடன் சில மாணவர்களும் சென்றனர். அனைவரும் தீபாவளிக்கு அணிந்து கொள்ளப் புத்தாடைகளைத் திருவாவடுதுறை மடத்துத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர் வழங்கினார். மகாவித்துவானுடன் உ.வே.சா. செல்லவில்லை. உ.வே.சா.வின் சித்தப்பா குடும்பம் திருவாவடுதுறையில் இருந்ததால் அவர்களுடன் தங்கிவிட்டார்.
மகாவித்துவானுடன் செல்லாததால் புத்தாடை அவருக்குக் கிடைக்கவில்லை. அவர் திருவாவடுதுறையிலேயே இருப்பதால் தீபாவளியின் போது மடத்திலிருந்து புத்தாடை கிடைக்கும் என்று மகாவித்துவான் நினத்திருந்தார். மடத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் தீபாவளிப் புத்தாடை கிடைத்தது. என்ன காரணத்தாலோ உ.வே.சாவுக்குப் புத்தாடை கிடைக்கவில்லை. புத்தாடை கிடைக்கவில்லை என்பது பெரிய குறையாக அவருக்கிருந்தது. அதைப் பற்றி எழுதியுள்ள பகுதிக்குத் ‘தீபாவளிக் குறை’ என்றே தலைப்பு.
சில நாட்களுக்குப் பிறகு ஆதீனகர்த்தர் ஆணைப்படி தம் ஆசிரியரை அழைத்து வர உ.வே.சா. மாயூரம் சென்றார். அவரைப் பார்த்ததும் ‘தீபாவளிக்கு உமக்கு மடத்திலிருந்து வேஷ்டி கிடைக்கவில்லையாமே?’ என்னும் கேள்வியைத்தான் மகாவித்துவான் கேட்டார். அதனால் உ.வே.சாவுக்கு வருத்தம் இல்லை என்றாலும் மனதில் உறுத்தல் இருந்தது. எல்லோருக்கும் கொடுத்தபோது தாம் புறக்கணிக்கப்பட்டதாக அவர் உணர்ந்தார். மகாவித்துவானுக்குப் பெருவருத்தம். எல்லோருக்கும் வழங்குகிறார்கள், ஆதீனகர்த்தருக்கு உ.வே.சா. மீது பிரியமும் இருக்கிறது. ஆனால் ஏன் புத்தாடை வழங்கவில்லை? ஆதீனகர்த்தர் அதைக் கவனித்திருக்க வேண்டும் என்று மகாவித்துவான் கருதினார். ‘பெருங்கூட்டத்தில் மறந்து போயிருக்கலாம்; கொடுத்ததாக எண்ணி இருக்கலாம்’ என்று உ.வே.சா. சொன்ன சமாதானம் மகாவித்துவானுக்கு ஏற்புடையதாக இல்லை.
அந்தச் சமயத்தில் மகாவித்துவான் சொன்ன சொற்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. ’அன்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு அடிக்கடி நேர்வதில்லை. அப்படி நேரிடும்போது அதை வெளியிடாவிட்டால் அன்பு இருப்பதாகச் சொல்லிக் கொள்வதில் பயன் ஒன்றும் இல்லை’ என்பது அவர் சொன்ன வாசகம். ஆறுதல் வார்த்தைகளோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒருவரை அழைத்துப் பணம் கொடுத்துப் புதிய ‘பத்தாறு வஸ்திரம்’ வாங்கி வரச் செய்தார். அதற்குத் தம் கையாலேயே மஞ்சள் தடவி ‘இதைக் கட்டிக் கொள்ளும்’ என்று கொடுத்தார். ஆசிரியரின் அன்புக்கிணங்கி அதை உ.வே.சா. உடுத்திக் கொண்டார். அவ்வாண்டு தமக்கு ‘இரட்டைத் தீபாவளி’ என்று உ.வே.சா. மகிழ்ந்தார்.
உ.வே.சா.வின் மூன்று தீபாவளிகள் பற்றிய பதிவுகள் மூலம் பல செய்திகள் தெரிய வருகின்றன. மகாவித்துவானுக்குத் தம் மாணவர் மீது எத்தகைய பரிவும் பாசமும் இருந்தன என்பதை உணர முடிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் பெருவாரியாக இருந்தது; சைவ மடங்கள் உட்படத் தீபாவளியை முக்கியமான பண்டிகையாகக் கருதினர். தீபாவளிக்குப் புத்தாடை உடுத்தலும் ‘ஸ்நானம்’ செய்தலும் முக்கியமானவை எனவும் தெரிகிறது. புத்தாடை தரித்தலே தீபாவளிக்கு அர்த்தத்தை வழங்கியிருக்கிறது. பண்டிகைகளுக்கு மட்டுமே ஆடைகள் வாங்கும் வழக்கம் இருந்த காலம் அது. தீபாவளி முடிந்த பிறகு தம் ஆசிரியர் மூலம் புத்தாடை கிடைத்து உடுத்திக் கொண்டதும் அதை ‘இன்னொரு தீபாவளி’ என்று சொல்கிறார். புத்தாடை உடுத்தலும் பண்டிகைகளும் இயைந்திருந்ததை இது காட்டுகிறது.
’தீபாவளி ஸ்நானம்’ என்றே உ.வே.சா. குறிப்பிடுகிறார். எண்ணெய் தேய்த்தல் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும் ‘தீபாவளி ஸ்நானம்’ என்பதன் பொருள் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்றே கருதலாம். பட்டாசு பற்றி உ.வே.சா. எதுவும் குறிப்பிடவில்லை. பட்டாசு வெடிக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்ததா, எப்போதிருந்து வழக்கிற்கு வந்தது எனத் தெரியவில்லை. பட்டாசுத் தயாரிப்பு தொழிலாக உருப்பெற்ற காலத்தில் இவ்வழக்கம் உருவாக்கப்பட்டிருக்கலாம்.
தீபாவளிப் பலகாரங்கள் பற்றியும் உ.வே.சா. எதுவும் சொல்லவில்லை. உணவு வகைகள் பற்றித் தவறாது பதிவு செய்பவர் ஏன் தீபாவளிப் பலகாரத்தை விட்டுவிட்டார் எனத் தெரியவில்லை. தீபாவளி அன்று இறைச்சி சமைத்து உண்பது பார்ப்பனரல்லாத சாதிகளின் வழக்கம். பார்ப்பனர்களின் உணவு முறை பற்றியோ சைவ மடத்தின் உணவு வகைகள் பற்றியோ உ.வே.சா. எதுவும் எழுதவில்லை.
தலைதீபாவளி கொண்டாடுதலும் அப்போது மருமகனுக்குச் சீர் தருதலும் வழக்கில் இருந்துள்ளது. அக்காலத்திலேயே ஏழு ரூபாய் மதிப்புள்ள புத்தாடையை உ.வே.சா.வுக்கு அவர் மாமனார் வீட்டார் வழங்கியுள்ளனர். பார்ப்பனக் குடும்பங்களில் மட்டும்தான் தலைதீபாவளி கொண்டாடும் வழக்கம் இருந்ததா, எல்லாச் சாதியினரிடமும் இருந்ததா என்பதும் தெரியவில்லை. கொங்குப் பகுதியில் தலைதீபாவளி என்னும் வழக்கம் 1990களில் அரும்ப ஆரம்பித்து இப்போது பெருவழக்குப் பெற்றிருக்கிறது. அதே போல இப்போது எல்லாச் சாதிகளிடமும் தலைதீபாவளி பிரபலம் அடைந்திருப்பதைக் காண முடிகிறது. எப்போது தொடங்கியது, எவ்வாறு பரவியது என்பது விளங்கவில்லை.
தீபாவளியின் மூல காரணம் பற்றிப் பலவிதமான கதைகள், ஊகங்கள், ஆய்வுகள் வருகின்றன. தீபாவளிச் சடங்குகள், நடைமுறைகள் பற்றியும் விரிவாக ஆராயலாம். அதற்கு உ.வே.சா.வின் பதிவுகளும் முக்கியமான சான்றுகள் ஆகும்.
—–
பயன்பட்ட நூல்:
உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, சென்னை, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், பதினொன்றாம் பதிப்பு.
—– 25-10-22
Comments are closed.