புதுமைப்பித்தன் எழுதிய ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ என்னும் சிறுகதையில் இடம்பெறும் கம்பராமாயணத் தொடர் ‘காசில் கொற்றத்து’ என்பதற்குக் ‘காசில்லாத அரசாட்சி’ என்று புதுமைப்பித்தன் அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார். ‘புதுமைப்பித்தன் சிறுகதைகள்’ பதிப்பாசிரியராகிய ஆ.இரா.வேங்கடாசலபதியே அக்குறிப்பைக் கொடுத்தவர் என நினைத்துச் சாருநிவேதிதாவும் (http://charuonline.com/blog/?p=9502 ) ஜெயமோகனும் (https://www.jeyamohan.in/140066/ ) தம் வலைத்தளத்தில் எழுதியுள்ள பதிவுகள் மிகுந்த மனவருத்தம் தருகின்றன. நெடிய இலக்கியப் பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழியில் பேரெழுத்தாளர்களுக்குக்கூடப் பதிப்பு தொடர்பான அடிப்படை அறிவு இல்லை. கிட்டத்தட்ட இருநூறு ஆண்டு பதிப்பு வரலாறு நமக்கு உண்டு. பதிப்புகளை மேலோட்டமாகப் பயன்படுத்துபவர்கள்கூட பதிப்பு நுட்பங்கள் சிலவற்றை அறிந்து வைத்திருப்பர்.
நூலின் மூலத்திற்கு எவ்விதத்திலும் இடைஞ்சல் இல்லாமல் பதிப்பாசிரியர் தம் கருத்துக்களைத் தெரிவிப்பதே மரபு. பதிப்பாசிரியர் தம் கருத்துக்களை வெளிப்படுத்தப் பல்வேறு வழிகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் அடிக்குறிப்பு. அது ஒரு பதிப்புக்கூறு. அடிக்குறிப்புக்காகப் பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்திச் சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப் பிள்ளை முதலிய பதிப்பாசிரியர்கள் தம் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். பாட வேறுபாடு, பொருள், விளக்கம், ஒப்புமை, பிற குறிப்புகள் எனப் பலவிதமாக அடிக்குறிப்பு அமையும். அவை மூலத்தை அணுகும் வாசகருக்குத் தடையாக இருக்கக் கூடாது; அதேசமயம் வாசகருக்கு ஐயம் தோன்றுமானால் அதைத் தெளிவுபடுத்த வேண்டும். மூலத்தின் செய்தியுடன் இயைந்து கூடுதலாகத் தெரிந்துகொள்ள வாசகர் விரும்பினால் அதற்கு அடிக்குறிப்பு உதவ வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் பதிப்பாசிரியர்கள் அடிக்குறிப்பை அமைத்தார்கள்.
புறநானூறு 41ஆம் பாடலில் ‘களிறுமேல் கொள்ளவும்’ என வருகிறது. களிறு என்பதை உடனடியாக ‘ஆண் யானை’ என்றே யாரும் பொருள் கொள்வர். ஆனால் இப்பாடலில் ‘பன்றி’ என்னும் பொருளில் ‘களிறு’ வருகிறது. பழைய உரையாசிரியர் ‘பன்றி’ என்றே பொருள் எழுதுகிறார். இது பொதுப்பொருளில் இருந்து வேறுபட்டிருப்பதால் பதிப்பாசிரியராகிய உ.வே.சாமிநாதையர் விளக்கம் கொடுக்க வேண்டும் எனக் கருதுகிறார். எவ்விடத்தில் இவ்விளக்கத்தைத் தருவது? பாடலில் ‘களிறு’ என வருமிடத்தில் குறியிட்டு விளக்கம் கொடுக்கலாம். பொதுவாக மூலத்தில் குறியிடுவது பாட வேறுபாட்டைக் காட்டுவதற்காக மட்டுமே. பிற காரணங்களுக்காக மூலத்திற்குள் பதிப்பாசிரியர் மூக்கை நுழைப்பதில்லை. ஆகவே உரைப்பகுதியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் உ.வே.சாமிநாதையர். உரையில் ‘பன்றி’ என வருமிடத்தில் உடுக்குறியிட்டு அடிக்குறிப்பில் ‘களிறு – பன்றி; தொல். மரபு. சூ. 34’ எனத் தருகிறார். களிறு என்பதற்குப் பன்றி எனப் பொருள் மட்டும் தராமல் அதற்கு ஆதாரமான தொல்காப்பிய நூற்பாவையும் சுட்டிக்காட்டுகிறார். ‘வேழக்கு உரித்தே விதந்து களிறு என்றல்; கேழற் கண்ணும் கடிவரை இன்றே’ என்பது நூற்பா. ‘களிறு’ என்பது பன்றியேற்றைக் குறிக்கவும் வரும் என்பது தொல்காப்பியம்.
இவ்விதம் குறியீடுகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எண்களைப் பயன்படுத்தும் முறை பின்னர் வந்தது. பழந்தமிழ் இலக்கியப் பதிப்புகளின் அடிக்குறிப்புகள் இவ்விதம் அமைந்தன. நவீன இலக்கியப் பதிப்புகளில் அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் உண்டு. மூல நூலாசிரியரே அடிக்குறிப்பைப் பயன்படுத்திச் சிலவற்றை எழுதுவது வழக்கம். உ.வே.சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’ நூலில் அப்படிப் பல அடிக்குறிப்புகளைப் பார்க்கலாம். பாரதியார் எழுத்துக்களிலும் அவரே கொடுத்த அடிக்குறிப்புகள் உண்டு. மூலநூலாசிரியர் அடிக்குறிப்பு கொடுத்திருக்க அதன் பதிப்பாசிரியரும் அடிக்குறிப்பு கொடுக்க விரும்பினால் இரண்டையும் வேறுபடுத்துவது எப்படி? மூல நூலாசிரியர் குறிப்பை அப்படியே கொடுத்துவிட்டுப் பதிப்பாசிரியர் குறிப்புக்கு அடைப்புக்குறிக்குள் (ப-ர்) அல்லது (ப.ஆ.) எனக் கொடுக்கும் வழக்கம் வந்தது.
‘என் சரித்திரம்’ பதிப்பில் இவ்விரு வகை அடிக்குறிப்பையும் காணலாம். ‘குழந்தைப் பருவம்’ என்னும் ஒன்பதாம் அத்தியாயத்தில் கோபாலகிருஷ்ண பாரதியாரைப் பற்றி எழுதும்போது ஒரு அடிக்குறிப்பு தருகிறார். ‘இவற்றை நான் எழுதிப் பதிப்பித்துள்ள கோபாலகிருஷ்ண பாரதியார் சரித்திரத்தில் காணலாம்’ என்று அக்குறிப்பு கூறுகிறது. உடுக்குறியிட்ட இவ்வடிக்குறிப்பு மூலத்தைச் சார்ந்தது என்பதால் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. ஐம்பத்தைந்தாம் அத்தியாயத்தில் ஒரு அடிக்குறிப்பு வருகிறது. அதைப் பதிப்பாசிரியராகிய ப.சரவணன் தருகிறார். அக்குறிப்பு ‘மற்ற இருவர்: எஸ்.வெங்கடராம சாஸ்திரி, பி.ஏ., எஸ்.இராகவ ஐயங்கார் (ப.ஆ.)’ என்று அமைந்துள்ளது.
வாழ்க்கை வரலாற்று நூலில், கட்டுரை நூலில் இவ்விதம் இருவகை அடிக்குறிப்பையும் வேறுபடுத்திக் காட்டலாம். சிறுகதை, நாவல் உள்ளிட்ட நவீனப் புனைவிலக்கியத்தில் அடிக்குறிப்பை அமைக்கலாமா, எப்படி அமைக்கலாம் என்பன முக்கியமான கேள்விகள். கு.ப.ரா. சிறுகதைகளைப் பதிப்பித்த போது எனக்கு இந்தக் கேள்விகள் எழுந்தன. அவர் எழுதிய ‘பண்ணைச் செங்கான்’ கதை ‘மணிக்கொடி’ இதழில் வெளியான தருணத்தில் ‘சேலம் ஜில்லா குடியானவர்கள் ‘ழ’வுக்குப் பதிலாக ‘ய’தான் உபயோகிப்பார்கள். ‘வாயப்பயம்’, ‘கயுவி’ இம்மாதிரி. தடம் என்பது பாதை’ என்று ஓர் அடிக்குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இது போலச் சில கதைகளுக்கு அடிக்குறிப்புகள் உள்ளன. அவற்றை அப்படியே கொடுப்பதா, தவிர்ப்பதா என யோசித்தேன். கு.ப.ரா. கொடுத்திருக்கும் அடிக்குறிப்புகள் இதுபோல வழக்குச் சொற்கள் தொடர்பானவை; அல்லது சிறுவிளக்கம். அவை கதையை வாசிப்போருக்குத் தேவையில்லை என்று கருதினேன். ஆனால் அந்தக் குறிப்புகள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஏதேனும் வகையில் பயன்படலாம் என்றும் எண்ணமிருந்ததால் விட்டுவிடவும் மனமில்லை. இது தேவை, தேவையில்லை என்று தீர்மானிப்பது பதிப்பாசிரியர் வேலை அல்ல. எதுவாக இருப்பினும் தவிர்க்காமல் கொடுத்துவிடுவதுதான் பதிப்பாசிரியர் கடமை. அதை எவ்விடத்தில் கொடுக்கலாம் என்று தீர்மானிக்கும் உரிமை வேண்டுமானால் பதிப்பாசிரியருக்கு உண்டு.
சரி, ‘புதுமைப்பித்தன் கதைகள்’ பதிப்பித்த ஆ.இரா.வேங்கடாசலபதி என்ன செய்திருக்கிறார் எனப் பார்க்கலாம் என்று தோன்றியது. 2000இல் புதுமைப்பித்தன் கதைகளைப் பதிப்பித்ததன் மூலமாக நவீன இலக்கியத்திற்கு முன்னோடிப் பதிப்பை வழங்கியவர் சலபதி. அதற்குப் பிறகு பதிப்பிக்கப்பட்ட பல எழுத்தாளர்களின் தொகுப்புகளுக்குச் சலபதியின் பதிப்பே மாதிரியாக விளங்கியது; விளங்குகிறது. நானும் அவரது பதிப்பை மாதிரியாகக் கொண்டே என் பதிப்பை உருவாக்கினேன். அவரது ஆலோசனைகளையும் கேட்டுக்கொண்டேன். மேலும் எனக்கெனவும் சில பதிப்புக்கூறுகளை அமைத்துக் கொண்டேன். ஒரு சிறுகதைக்கு அடிக்குறிப்பு கொடுப்பதில் எனக்கு ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்த்ததும் சலபதியின் பதிப்புத்தான்.
புதுமைப்பித்தன் தம் கதைகளில் ஏழுக்கு அடிக்குறிப்புக் கொடுத்திருக்கிறார். அக்குறிப்புகள் அனைத்தையும் அந்தந்தக் கதைகளின் கீழேயே சலபதி கொடுத்திருந்ததைக் கண்டேன். ‘சங்குத்தேவனின் தர்மம்’ கதையில் ‘பாம்படம் என்பது திருநெல்வேலி ஜில்லாவில் பெண்கள் காதில் அணியும் ஓர் ஆபரணம்’ என்றொரு குறிப்பு. ‘சிற்பியின் நரகம்’ கதையில் ‘ஜுபிட்டர் : யவன இதிகாசங்களில் குறிப்பிடப்படும் தேவர்களுக்கு அரசன்; கிரகங்களில் வியாழம்’ என்னும் குறிப்பு. ‘விநாயக சதுர்த்தி’ கதையில் இரண்டு குறிப்புகள். ஒன்று ‘உடை மரம் – கருவேல மரம்’ என்பது. மற்றொன்று ‘அடுக்களைத் தாலி’ என்பதற்கு விளக்கமாக ‘அந்தரங்கமாகச் சென்று தாலி கட்டுவது; கந்தர்வ விவாகத்திற்குச் சமமான பழக்கம்’ என்னும் குறிப்பு. ‘ஒருநாள் கழிந்தது’ கதையிலும் மூன்று குறிப்புகள். ‘விடியன்னை’ என்னும் வழக்குச் சொல்லுக்கு ‘விடியுமுன் என்பதன் மரூஉ’ எனக் குறிப்பு. ‘மிளவொட்டி (மிளகுப் பெட்டி) – ஐந்தரைப் பெட்டி என்பது சகஜமான பெயர்’ எனவும் ‘மூணு துட்டு – ஓர் அணா; ஒரு துட்டு என்பது பாண்டி நாட்டில் நான்கு தம்பிடி’ எனவும் இரு குறிப்புகள். ‘மனித யந்திரம்’ கதையிலும் மூன்று குறிப்புகள். அவையும் சொற்களைப் பற்றியவையே. ‘பின்னைக்கி எண்ணை: புன்னைக்காய் எண்ணெய்’, ‘தேரம் : நேரம்’, ‘செல்லும் : நேரம் செல்லும்’ என்பவை அவை.
இந்தக் குறிப்புகள் அனைத்தும் வட்டார வழக்கு, பேச்சு மொழித் திரிபு பற்றியவைதான். ஜுபிட்டர் என்பதற்கு மட்டும் தகவல். இவை இன்றைய வாசகருக்குத் தேவையற்றவை என்றே எண்ணினேன். வாசகருக்கு இந்தக் குறிப்புகள் இப்போது எந்தவிதத்திலும் பயன்படப் போவதில்லை. சிறுகதையில் அடிக்குறிப்பு கொடுப்பது வாசகருக்கு இடைஞ்சல் என்பதே என் அபிப்ராயம். ஆகவே சலபதி இக்குறிப்புகளைத் தவிர்த்திருக்கலாமே என எண்ணினேன். இக்குறிப்புகளைப் பின்னிணைப்பில் கொடுத்திருந்தால் தேவைப்படுவோர் பார்த்துக்கொள்ளலாம். கதைக்குள் இதைக் கொடுப்பது வாசிப்புத்தடங்கல் என்றே நினைத்தேன். நவீனப் புனைவிலக்கியத்தைப் பதிப்பிக்கிறோம் என்னும் உணர்வுடனேயே சலபதி இயங்கியிருக்கிறார் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. நூலின் முன்பகுதியையிம் பின்பகுதியையும் பயன்படுத்திப் பதிப்பாசிரியர் செய்ய வேண்டியவை அனைத்தையும் செய்திருக்கும் அவர் மூலத்தில் எந்த இடைஞ்சலும் செய்யாமல் வாசகர் உறவாடக் கொடுத்திருக்கிறார். இந்த அடிக்குறிப்புகளையும் அப்படிப் பின்னிணைப்பில் கதைகளைப் பற்றிய விவரங்கள் கொடுக்குமிடத்தில் வைத்திருக்கலாமே என்று எண்ணிக் கொண்டே புதுமைப்பித்தன் கதைகளை மேலும் பார்த்தேன்.
‘கட்டிலை விட்டிறங்காக் கதை’ என்னும் கதையில் இரண்டு குறிப்புகள் அமைந்திருந்தன. கதையின் தொடக்கப் பகுதியிலேயே மூன்று உடுக்குறியிட்டு அதற்கு அடிக்குறிப்பாக ‘ஏடு சிதிலமானதால் எழுத்துத் தெளிவாகத் தெரியவில்லை’ என்னும் வாசகம். ‘ராசம் என்ற சொல், ராச்சியபார முறையைக் குறித்த வழக்கொழிந்த பிரயோகம் போலும்’ என்றொரு குறிப்பு. இவை முந்தைய கதைகளில் அமைந்ததைப் போலக் கதைக்கு வெளியே ஒரு சொல்லைப் பற்றிய குறிப்பாக இல்லை. பகடிக்காகப் பழைய சொல்முறை ஒன்றை எடுத்து எழுதும்போது நம்பகத்தன்மையை உருவாக்க இந்தக் குறிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் புதுமைப்பித்தன். மற்ற அடிக்குறிப்புகளைப் போல இவற்றை நீக்கிவிட முடியாது.
அதே போல ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ கதையிலும் இருகுறிப்புகள். தம் கால எழுத்தாளர் ஒருவரைப் பகடி செய்யும் இக்கதையும் பழைய சொல்முறை ஒன்றைப் பயன்படுத்தி எழுதப்பட்டதுதான். அவ்வெழுத்தாளரின் புனைபெயர்களை அடுக்கிச் சொல்லும் கதையின் தொடக்கத்தில் ஒரு உடுக்குறி. அதற்கு அடிக்குறிப்பு.
‘மெய் பதினெட்டுடன் மேலேறிய உயிர் அத்தனையும் சேர்ந்து எத்தனை எழுத்துக்கள் தமிழில் உண்டோ அத்தனையும் ஒன்றேனும் தன்னை விட்டுவிட்டாரே என மனக்குறைபடாமல் சந்தோஷிக்கச் செய்யும் புனைபெயர் சாகரமாய் விளங்கும் நமது இலக்கிய மம்மாவின் புனைபெயர் பட்டியல் அனைத்தும் அறிய விரும்புகிறவர்கள் அரையணா ஸ்டாம்பு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். சொற்பப் பிரதிகளே கைவசம் என்பதை வாசகர்கள் உய்த்துணர்க.’
இந்தக் குறிப்பை வாசிக்கும்போது இதழ்க்கடைச் சிரிப்பேனும் வருவதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. இதை நீக்குவது கதையிலிருந்து சதையைப் பிய்த்து எடுப்பது போல. இன்னொரு குறிப்பும் அப்படித்தான். இலக்கிய மம்ம நாயனாரின் திருமண மகோற்சவத்தை விவரிக்கப் புகும்போது ‘ஆசையுற்று அறைய லுற்றேன் காசில் கொற்றத்து’ என எழுதுகிறார். இது கம்பராமாயண அவையடைக்கப் பாடலின் சிறுதிரிபு கொண்ட வடிவம். இராமனைக் குறிக்கும் போது ‘குற்றமில்லாத வெற்றியை உடைய’ என்னும் பொருள் தரும் ‘காசில் கொற்றத்து’ என்னும் தொடர் இப்பகடிக் கதையிலும் அதே அர்த்தம் தந்துவிடக் கூடாது என்பதற்காக ‘காசில்லாத அரசாட்சி’ என அடிக்குறிப்பில் பொருள் தருகிறார். திருமணத்திற்கு வந்திருக்கும் பலரும் காசில்லாத அரசர்கள் என்பது பகடிப் பொருள். அடிக்குறிப்பு இல்லாமல் இப்பொருளை உணர்ந்துகொள்வது கடினம். இதுவும் கதை உத்தியோடு இயைந்த ஒன்று.
இவ்விரண்டு கதைகளிலும் அடிக்குறிப்புகளை நீக்கவே முடியாது. பின்னிணைப்பில் கொடுத்தாலும் பயனில்லை. கதையின் வடிவத்திற்குள் அடங்கிய குறிப்புகள் இவை. அந்த அடிப்படையில்தான் புதுமைப்பித்தன் கொடுத்த அடிக்குறிப்புகள் அனைத்தையும் அப்படியே கதையோடே கொடுக்கும் முடிவை எடுத்திருக்கிறார் சலபதி என அறிந்துகொண்டேன். சலபதியாகக் கொடுத்த அடிக்குறிப்பு எதுவும் மூலத்திற்குள் இடம்பெறவில்லை. கு.ப.ரா.வின் கதைகளில் அப்படிக் கதையை விட்டு அகற்ற முடியாத குறிப்பு ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. வழக்குச் சொல் விளக்கம் முதலிய வாசகருக்குத் தேவையில்லாத எளிய குறிப்புகளையே கு.ப.ரா. கொடுத்திருந்தார். ஆகவே மூலப்பகுதிக்குள் அக்குறிப்புகளைக் கொடுக்க வேண்டாம் என முடிவெடுத்துப் பின்னிணைப்புப் பகுதியில் கதைகளைப் பற்றிய விவரப் பகுதியில் அடிக்குறிப்புத் தகவல்களையும் இணைத்துக் கொடுப்பது என்று முடிவெடுத்தேன்.
ஆ.இரா.வேங்கடாசலபதி நவீனப் புனைவிலக்கியத்தைப் பதிப்பிப்பதற்கு முறையியலை உருவாக்கிக் கொடுத்தவர். ஒவ்வொரு பதிப்புக்கூறையும் காரணம் கருதிப் பயன்படுத்தியவர். அவரது பதிப்புகளைப் பயன்கொள்ளும் எவரும் இதை மிக எளிதாக உணர இயலும். சாருநிவேதிதா ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம்’ கதையை வாசித்திருந்தால் அதன் முதல் அடிக்குறிப்புப் பகடியை அறிந்திருப்பார். இரண்டாம் குறிப்பையும் கதையுடன் இணைத்துப் புதுமைப்பித்தன் கொடுத்தது என்பதைப் புரிந்திருப்பார். கதையை அவர் வாசிக்காமல் குறிப்பை மட்டும் கண்டு சலபதி செய்த பிழை என முடிவு செய்துவிட்டார். பெரும்பிழையைக் கண்டறிந்த மாதிரி சாருநிவேதிதா இப்படி எழுதுகிறார்:
‘பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்திருக்கும் புதுமைப்பித்தன் வரிக்கு வரி சிலம்பம் விளையாடும் கதையான இலக்கிய மம்ம நாயனார் புராணம் என்ற கதையில்தான் இந்த ஆட்டத்தையும் ஆடுகிறார். இதற்கு அர்த்தம் சொல்லவில்லை என்று யார் அழுதார்? அடிக்குறிப்பில் அர்த்தம் சொல்லும் பதிப்பாசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி காசில் கொற்றத்து என்பதற்கு காசில்லாத அரசாட்சி என்று எழுதியிருக்கிறார். நான் தமிழ்ப் புலவர் அல்ல. காசில் கொற்றத்து என்றால் காசில்லாத அரசாட்சி என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் பித்தன் தன் கதையில் மம்ம நாயனாரின் திருமணத்தை விவரிக்கும்போதுதானே இந்த வரியைப் பயன்படுத்துகிறார்? அப்படியானால் கம்பன் சொன்ன அர்த்தம்தானே வருகிறது? இத்தனைக்கும் சலபதி தமிழ்ப் பேராசிரியர் என்று நினைக்கிறேன். எப்படி நேர்கிறது இது போன்ற பிழைகள்? ஒரு புத்தகத்தில் அச்சுப் பிழைகள் இருக்கக் கூடியதுதான். இப்போதெல்லாம் அதுதான் வழமையாகி விட்டது. ஆனால் தப்பான அர்த்தம் கொடுக்கக் கூடாது இல்லையா?’
கதையைப் படிக்காமலே ‘புதுமைப்பித்தன் வரிக்கு வரி சிலம்பம் விளையாடும் கதை’ என்று பாராட்டு வேறு. ஒருவேளை கதையை அவர் படித்தும் அடிக்குறிப்பைப் படிக்காமல் விட்டுவிட்டாரா? அடிக்குறிப்பைப் படித்தும் அவருக்குப் புரியவில்லையா? இந்த லட்சணத்தில் ‘இத்தனைக்கும் சலபதி தமிழ்ப் பேராசிரியர் என்று நினைக்கிறேன்’ என்னும் தகவல் பிழை வேறு. சலபதியைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாதாம். அதைத்தான் இப்படித் தம் வாசகருக்குச் சொல்கிறார்.
இந்த நேர்மையாளரை விதந்தோதும் ஜெயமோகன் ‘சாரு எப்போதுமே இவ்வகை பிழைகளை சரியாகவே சுட்டிக்காட்டுகிறார்’ எனப் பாராட்டுச் சான்று கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, ‘ஆ.இரா.வேங்கடாசலபதி காசு என்றால் பணம் என்று பொருள் அளிக்கையில் கம்பன் எழுதியதையே கையில் பணமில்லாத ஆட்சி என்று [மோடியின் ஆட்சிபோல] பொருள்கொள்கிறார். அதைவிட புதுமைப்பித்தனின் பகடியை புரிந்துகொள்ளாமல் நாசம் செய்கிறார். பகடியைப் புரிந்துகொள்பவனும் ரசிக்கமுடியாமலாக்குகிறார்’ என்றும் எழுதுகிறார். ஜெயமோகனும் இப்போது கதையை வாசிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் தம் வழக்கம் போல் ‘நினைவிலிருந்து’ எழுதியிருக்கிறார் போலும். ஆ.இரா.வேங்கடாசலபதி போன்ற நவீன இலக்கியப் பதிப்பாசிரியர்கள் மீது மதிப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; அவரது பதிப்பு நுட்பங்களைப் புரிந்துகொள்ளவாவது கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம்.
கதையின் வடிவத்தோடு இணைந்திருக்கும் அடிக்குறிப்புகளின் பகடியைப் புரிந்து கொள்ளாமலும் பதிப்பு நுட்பங்களைப் பற்றிய அறிதல் இல்லாமலும் எழுதியிருக்கும் சாருநிவேதிதாவும் ஜெயமோகனும் தம் எழுத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும். மேலும் தம் பதிவுகளை நீக்குவதோ உரிய திருத்தம் செய்வதோதான் அறிவு நாணயம்.
—–
பயன்பட்ட நூல்கள்:
- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), புறநானூறு மூலமும் உரையும், 1950, சென்னை, ஜோதி அச்சுக்கூடம், நான்காம் பதிப்பு.
- ப.சரவணன் (ப.ஆ.), என் சரித்திரம், 2017, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
- பெருமாள்முருகன் (ப.ஆ.), கு.ப.ரா. சிறுகதைகள், 2013, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.
- ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), புதுமைப்பித்தன் கதைகள், 2018, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம், பதினொன்றாம் பதிப்பு.
—–
Comments are closed.