மறைந்த நிறுவனத் தலைவர்

 

மறைந்த நிறுவனத் தலைவர்

தமிழ் மொழியின் இணையப் பயன்பாடு மிகுந்துள்ள காலம் இது. ‘தமிழ் வாழும்’ என்னும் நம்பிக்கையைத் திரைப்படங்களும் இணையமும் தருகின்றன. அதேசமயம் மொழிச் செம்மை குறித்து அக்கறையின்மை மிகுந்திருக்கிறது. ஒருமுறை வாசித்துப் பார்த்தால் தானே சரிசெய்துவிடத் தக்கவை பல. அதற்கான பொறுமை இருப்பதில்லை. அல்லது காலம்தான் அதற்கு இடம் தரவில்லையோ?

விஜயகாந்த் இறப்பு குறித்து எத்தனையோ செய்திகள் வந்தன. சமூக வலைத்தளப் பதிவுகள் ஏராளம், ஏராளம். எனக்கும் எழுத ஒருவிஷயம் கிடைத்தது. அவர் மரணம் பற்றிய செய்திகளில் தென்பட்ட பிழைகள்.  இணையச் செய்தி இதழ் ஒன்றில் கீழே வரும் தொடர் உள்ளது.

‘சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மறைந்த நிறுவன தலைவர்  விஜயகாந்த் உடல் இன்று (டிசம்பர் 29 ) இரவு 7.02 மணியளவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.  (மின்னம்பலம், 29-12-23).’

சென்னை, கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகம் உள்ளது. அங்கே விஜயகாந்த் மறைந்தார் என்னும் பொருளை இத்தொடர் தருகிறது. ‘சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மறைந்த’ என்று நிறுத்திப் பார்த்தால் இக்குழப்பம் விளங்கும்.  ‘அலுவலகத்தில்’ என்பதற்குப் பின் காற்புள்ளி போட்டிருக்கலாம். அதுவும் இல்லை. ‘அலுவலகத்தில்’ என நிறுத்தி ‘மறைந்த நிறுவன தலைவர்’ என வாசித்தால் அந்த நிறுவனம் மறைந்துவிட்டது எனவும் பொருள் கொள்ளலாம். மறைந்தது நிறுவனமா? தலைவரா?  ‘பழைய மாணவர் விடுதி’ தரும் குழப்பம் நினைவு வருகிறது.  ‘நிறுவனத் தலைவர்’ என ஒற்று மிகுத்திருந்தால் தெளிவு கூடியிருக்கும்.

மறைந்த நிறுவனத் தலைவர்

நல்லடக்கம் செய்த நேரத்தைத் துல்லியமாக 7.02 எனச் செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் ‘மணியளவில்’ என்கிறது. 7 மணியளவில் என்று எழுதியிருக்கலாம். ஐந்து நிமிடம் முன்பின் இருக்கலாம் என்பதையே ‘அளவில்’ குறிக்கும். சிலர் ‘சுமார் 7 மணியளவில்’ என்று எழுதுவார்கள். சுமார், அளவில் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்று வந்தால் போதும்.

இந்தத் தொடர் இப்படி அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே:

‘தேமுதிகவின் நிறுவனத் தலைவர், மறைந்த விஜயகாந்த் அவர்களின் உடல் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று இரவு 7.02 மணிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.’

—–   09-01-24

Add your first comment to this post

Comments are closed.