கோயம்புத்தூரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் இருந்து பிரிந்து கருவலூருக்குச் செல்லும் வழியில் ‘மசக்கவுண்டன் செட்டிபாளையம்’ என்றொரு ஊர்ப்பெயரைக் கண்டேன். ஊர்ப்பெயரில் செட்டி, கவுண்டன் என இரண்டு சாதிப் பெயர்கள். இது அபூர்வம். செட்டிபாளையம் என ஊர்ப்பெயர் இருந்து முன்னொட்டாக ‘மசக்கவுண்டன்’ பின்னர் சேர்ந்திருக்கலாம். இரண்டு செட்டிபாளையங்கள் இருந்து வேறுபடுத்துவதற்காக ‘மசக்கவுண்டன்’ சேர்ந்திருக்கலாம். யார் அந்தப் பிரபலமான ‘மசக்கவுண்டன்’ என்று தெரியவில்லை.
அது என்ன மசக்கவுண்டன்? மசை என்பது கொங்கு வட்டார வழக்குச் சொல். இச்சொல்லுக்கு இருபொருள்கள் உள்ளன. மனிதர்களைக் குறிக்கும்போது இச்சொல் தனித்து வருவதில்லை. ‘அவன் ஒரு மசையன்’, ‘அவ ஒரு மசப்புள்ள’ என்பார்கள். இன்று ‘வெகுளி’ என்று சொல்கிறோமே அந்தப் பொருளில்தான் இப்படிச் சொல்வார்கள். விவரமில்லாதவன்/ள் என்று அர்த்தம். அண்ணன்மார் சுவாமி கதையில் பொன்னர் சங்கரின் தந்தை பெயர் குன்னடையான் (குன்றுடையான்). அவரைப் பங்காளிகள் ஏமாற்றிச் சொத்துக்களை எல்லாம் பறித்துக்கொள்வர். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அனைவருக்கும் உதவும், அடிமை வேலை செய்யும், போட்டதை உண்டுவிட்டுச் சொன்னதைச் செய்யும் குணம் உள்ளவர். பங்காளிகள் ஏமாற்றிவிட்டனர் என்னும் உணர்வோ பழிவாங்கும் உணர்வோ அற்றவராக இருப்பார். அவரது இயல்பைக் குறிக்க ‘மசச்சாமி’ என்று கதைப்பாடல் கூறும்.
‘வந்ததுமே உட்கார்ந்தான் மசச்சாமி காராளன்’ (ப.177)
‘மாடுகளைத் தானோட்டி மசைச்சாமி குன்றுடையான்
ஓடுகிற தண்ணீரில் ஓடிவந்துதான் குதித்தான்’ (ப.185)
‘மங்கு மசையா உன்னை வசமாய் அடிப்போம் என்றார்
சவுக்கால் அடித்தார்கள் சாமி மசையனையும்’ (ப.192 – 193)
‘மயங்கிக் கிடந்தான் மசச்சாமி குன்றுடையான்’ (ப.193)
இப்படிப் பல இடங்களில் ‘மசச்சாமி’ என்றும் ‘மசையன்’ என்றும் குன்றுடையானைக் கதைப்பாடல் குறிப்பிடுகிறது. உடுக்கடித்துப் பாடும் நிகழ்த்துகலையிலும் இப்படிப் பலமுறை கூறுவர். அவை குன்றுடையானைக் குறைத்து மதிப்பிடுபவை அல்ல. பிறருக்குத் தீங்கு செய்யும் குணமில்லாத, பிறர் செய்யும் தீங்குகளைப் புரிந்துகொள்ளும் அளவு விவரம் இல்லாதவன் என்பதைப் பாராட்டிச் சொல்வதுதான். பெண்களைக் குறிக்கும்போது பெரும்பான்மையும் ‘மசப்புள்ள’ என்பர். அரிதாக ‘மசச்சி’ என்பதும் உண்டு.
‘மசை எறும்பு’ என்று ஒருவகை உண்டு. கண்ணுக்கு நன்றாகத் தெரியும் அளவில் கருமை நிறத்தில் இருக்கும். மீசை போல உடலில் மயிர்கள் நீட்டிக் கொண்டிருக்கும். அதன் வங்கில் காலையோ கையையோ வைத்துவிட்டால் கூட்டமாக ஏறுமே தவிரக் கடிக்காது. கடிக்கும் விவரமில்லாத எறும்பு என்பதால் அதற்கு ‘மசை எறும்பு’ என்று பெயர் வைத்திருக்கலாம். வேலை செய்யாமல் வெறுமனே நின்று கொண்டிருப்பவரைப் பார்த்து ‘மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்காத. சுறுசுறுப்பா வேலயப் பாரு’ என்று சொல்வதுண்டு. ‘வேலை பற்றிய விவரம் தெரியாதவன் போல நின்று கொண்டிருக்காமல்’ என்று பொருள் சொல்லலாம். ‘மசைமசை என்று’ என அடுக்குத்தொடராகப் பேச்சில் வருகிறது.
தமிழ்ப் பேரகராதி ‘மசை’ என்னும் சொல்லைக் கொடுத்திருக்கிறது. அச்சொல் பொதுப்பொருளில் ‘மசகு’ என வருகிறது. வட்டாரப் பொருளில் வருவதையும் அவ்வகராதி குறிப்பிடுகிறது. ஆனால் எந்த வட்டார வழக்கு என்னும் குறிப்பில்லை. ‘மூடன்’ என்று பொருள் கொடுத்துவிட்டு ‘Local’ எனக் குறிப்புத் தருகிறது. மூடன் என்னும் பொருள் தவறானது. பிற வட்டாரங்களில் இந்தச் சொல் வழங்குவதாகத் தெரியவில்லை. விவரமில்லாதவன்/ள் என்கிற அர்த்தம் தரும் கொங்கு வட்டாரச் சொல் இது.
அண்ணன்மார் சுவாமி கதையில்,
‘மாடுமே வாங்கிவந்து உழவு செய்யக் கொண்டு வந்தான்
விதைச்சோளம் இல்லாமல் விபரமில்லாக் குன்றுடையான்’ (ப.195)
‘விதைச்சோளம் கேட்கிறானே விபரமில்லாக் குன்றுடையான்
சோளம் கொடுப்போ மென்று சொன்னாளே குப்பாயி’ (ப.196)
என இரண்டு இடங்களில் ‘விபரமில்லாக் குன்றுடையான்’ என்றே வருகிறது.
‘மசை’க்கு இன்னொரு பொருள் ‘வெறி.’ இது பெரும்பாலும் நாய்க்கு அடையாக வரும். கொங்குப் பகுதியில் வெறிநாய் என்று சொல்வதில்லை. ‘மசநாய்’ என்றுதான் சொல்வர். ‘மசநாய் பத்துப் பேரக் கடிச்சுப்புட்டு அந்தப் பக்கம் ஓடுதாமா’, ‘மசநாய் கடிச்சாத் தொப்புளச் சுத்தி இருபத்தொரு ஊசி போடோணும்’ என்றெல்லாம் வழக்கில் உண்டு. ‘அந்த நாய்க்கு மச புடிச்சிருச்சு’ என்று தனியாகவும் மசை வரும். கோபம் கொண்டு கத்துபவரை ‘அவனுக்கென்ன மசயா புடிச்சிருச்சு? இப்பிடிக் கத்தறான்’ என்று சொல்வர்.
ஒருசொல் வட்டார வழக்கில் இப்படி ஒன்றுக்கொன்று எதிர்ப்பொருள் தரும் வகையில் அமைவது அரிது. மனிதரில் வெகுளி மசையன்; மசப்புள்ளை. விலங்குகளில் மசநாய். தனியாக இச்சொல் வந்தால் ‘வெறி’ என்பதுதான் பொருள். ஊரில் சிலருக்கு ‘மசையன்’ என்று பட்டப்பெயர் வழங்கும். என் அப்பனுக்கு அதுதான் பெயர். அவரைப் ‘பெருமாள்’ என்றால் யாருக்கும் தெரியாது. வயதானவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளப் ‘பெருமாள் பையன்’ என்றால் ‘எந்தப் பெருமாள்?’ என்பார்கள். ‘மசையமூட்டுப் பையன்’ என்றால் உடனே தெரிந்துகொள்வார்கள். பிறசாதியார் ‘மசக்கவுண்டர்’ என்று மரியாதை சேர்த்துக்கொள்வார்கள். என் அம்மாவுக்கு ‘மசையன் பொண்டாட்டி’ என்றுதான் பெயர். என் மகனைக்கூட ‘மசையன் பேரன்’ என்பார்கள்.
என் தந்தை மசையன்; என் வீடு மசையன் வீடு (மசையமூடு); நான் மசையன் மகன். இப்படி எந்தப் பெயரில் அடையாளப்பட்டோமோ படுகிறோமோ அந்தப் பெயரில் ஓர் ஊர். அப்பெயரைக் கண்டதும் தந்தையின் நினைவு மீதூர வண்டியை நிறுத்திப் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகுதான் நகர்ந்தேன்.
பயன்பட்ட நூல்கள்:
- சக்திக்கனல் (ப.ஆ.), அண்ணன்மார் சுவாமி கதை, நர்மதா பதிப்பகம், சென்னை.
- தமிழ்ப் பேரகராதி, தொகுதி 5.
—– 23-01-24
Nice
அடுத்த புத்தகத்தை இப்படி கொஞ்சம் கொஞ்சமான எழுதி வருகிறீர்கள்… பதிவுகளை தொகுத்து அடுத்த புத்தகம் தயார்.
அருமைங்க சார் மசநாய் மச புடுச்சிருச்சி இப்படி வழக்கு சொல் ஈரோடு பக்கம் அதிகம் புழங்குகிறதுங்க
அற்புதம். தோன்றாத் துணை க்கு நிகராக மசையன் மகன் எழுதினாலும் தந்தையை நினைவுபடுத்தும் விதமாக இருக்கும்.
அருமை ஐயா.