கடந்த நவம்பர் 27, 2022 அன்று மணப்பாறை, இளங்கோ மன்றம் ‘பெருமாள்முருகன் படைப்புலகக் கொண்டாட்டம்’ என்னும் தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கை நடத்தியது. 2021ஆம் ஆண்டு ‘சௌமா இலக்கிய விருது’ வழங்கும் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக மணப்பாறைக்குச் சென்றேன். ஓர் இலக்கிய நிகழ்வுக்கென மணப்பாறை சென்றது அதுதான் முதல்முறை. என் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கும் நல்ல வாசகர் கூட்டம் ஒன்று அங்கிருப்பதை அப்போதுதான் அறிந்தேன். ‘நாங்கள் அழைத்தால் வருவீர்களா?’ என்று கேட்டார்கள். நாமக்கல்லில் இருந்து அதிகபட்சம் மூன்று மணி நேரப் பயணம். ‘வருகிறேன். வாசிப்பவர்களோடு பேச வருவதில் மகிழ்ச்சிதான்’ என்றேன். ப.சிங்காரம் குறுநாவல் போட்டிப் பரிசளிப்பு நிகழ்வுக்கு அழைத்தார்கள். அதற்கும் சென்று வந்தேன். இப்போது மூன்றாவதாக என் படைப்புலகு.
நவம்பர் முதல் வாரத்தில் பாரதி கனகராஜ் பேசினார். டிசம்பர் மாதத்தில் ஓர் ஞாயிற்றுக்கிழமையில் நிகழ்ச்சி வைத்துக் கொள்ளலாம் என்றார். டிசம்பர் எனக்கு இயலாது என்றதும் நவம்பர் 27 முடிவானது. ஒருமாதம்கூட இல்லை. அதற்குள் முழுநாள் பேசுவதற்கு ஆட்களைத் தயார் செய்து நிகழ்ச்சியை நடத்திவிட முடியுமா என்று எனக்கு யோசனையாக இருந்தது. ‘அதெல்லாம் நடத்தீரலாங்கய்யா’ என்றார் பாரதி. சரி, அது அவர்கள் பாடு, எப்படியோ ஏற்பாடு செய்யட்டும் என்றிருந்தேன். என் கவலையைப் பொருளற்றதாக்கி மிகச் சிறப்பாக நிகழ்வை நடத்தினார்கள்.
இலக்கிய நிகழ்வில் பெருந்தலைகள், பிரபலங்கள்தான் பேச வேண்டும் என்னும் வரையறையை முழுதாக உடைத்து ‘விரும்புவோர் பேசலாம்’ எனத் திறந்த அழைப்பு விடுத்தார்கள். சமூக ஊடகங்கள் மூலமாக விடுத்த அழைப்புக்குப் பெருத்த வரவேற்பு. பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தது. மணப்பாறையில் உள்ள வாசிப்பாளர்கள் பலர் இயல்பாகவே பேச முன்வந்தனர். வெளியூர்களில் இருந்து பேச விருப்பம் தெரிவித்தவர்கள் பலர். ஒருவழியாக இருபது பேரைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நூலைக் கொடுத்துத் தயார் செய்து வரச் சொல்லியிருந்தனர். ஏதோ பேசிச் சமாளித்துவிடலாம் என்று நம்பிக்கையோடு வராமல் நூல்களை ஊன்றியும் ஆழ்ந்தும் வாசித்துப் பல பக்கக் குறிப்புகளுடனும் கட்டுரைகளுடனும் பேச்சாளர்கள் வந்திருந்தனர். ‘இருபது நாட்களாக இந்த நூலோடுதான் வாழ்ந்தேன்’ என்று சிலர் சொன்னார்கள். இப்படி வாசகக் கருத்துக்கள் அரங்கேற வாய்ப்பு அமைந்ததுதான் இக்கருத்தரங்கின் முக்கியத்துவம்.
மணப்பாறையிலும் திருச்சியிலும் யார் யாருக்கெல்லாம் அழைப்பு கொடுத்தார்களோ அவற்றை எல்லாம் படமெடுத்துச் சமூக ஊடகத்தில் இளங்கோ மன்றமும் பாரதி கனகராஜும் வெளியிட்டுக் கொண்டேயிருந்தனர். மணப்பாறையில் ஒரு நிறுவனம், ஓர் அமைப்பு பாக்கியில்லாத அளவுக்கு அழைப்பு. ‘மணப்பாறையில் அழைப்புப் பெறாதவர் யாரேனும் உள்ளாரா?’ என்று கேலி செய்தேன். ஓர் இலக்கிய அமைப்பு ஊரோடு இத்தனை இணக்கமாகவும் தொடர்புடனும் இருப்பது வியப்பு. ஏதோ ரகசியக் கூட்டம் நடப்பது போலத்தான் இலக்கியக் கூட்டமும் நடைபெறுவது வழக்கம். ஊராருக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இருக்காது. இப்படி ஒன்று நடப்பது சம்பந்தப்பட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் ‘இளங்கோ மன்றம்’ ஊரைத் தழுவிச் செல்லும் அமைப்பாக இருக்கிறது.
மணப்பாறையில் ‘Naturals’ புதிதாகத் திறக்கப்பட்டதையும் கருத்தரங்க அழைப்போடு கொண்டாடினார்கள். நான் மணப்பாறை சென்றதும் அக்கடையின் ஒருபகுதியில் தான் சற்றே ஓய்வெடுத்தேன். வரவேற்று அழைத்துச் சென்ற தோழர்கள் ஜீவிதன், ராஜீவ் பாஸ்கரன் ஆகியோரோடான உரையாடல் இனிமையாக இருந்தது. எழுத்தாளர் ஜெயந்தனும் மணவை முஸ்தபாவும் மணப்பாறையின் இலக்கிய, மொழி அடையாளங்கள். ஜெயந்தன் தம் பணி ஓய்வுக்குப் பிறகு மணப்பாறையில்தான் வாழ்ந்துள்ளார். இப்போது செயல்படும் பல இலக்கிய அமைப்புகளுக்கு அவர்தான் முன்னோடியாக இருந்துள்ளார். ‘சிந்தனைக் கூடல்’ என்னும் பெயரில் மாதாமாதம் இலக்கிய வாசகர்களை இணைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவற்றில் பங்கேற்ற பலர்தான் இன்று இயங்குகிறார்கள். ஏராளமான வாசகர்களை உருவாக்கியதிலும் ஜெயந்தனின் பங்கு பெரிது என்றும் தோழர்கள் சொன்னார்கள்.
ஜெயந்தன் பல நல்ல சிறுகதைகளை எழுதியவர். அவர் ஏனோ போதுமான கவனத்திற்கு உள்ளாகவில்லை. திரும்ப வாசிப்பதற்கும் பேசுவதற்கும் ஏற்றவர். அசோகமித்திரன் தொகுத்துச் சாகித்திய அகாதமி வெளியீடாக வந்த ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ நூலில் ஜெயந்தனின் ‘பகல் உறவுகள்’ சிறுகதையும் இடம்பெற்றிருந்தது. அதுதான் நான் முதலில் வாசித்த ஜெயந்தனின் கதை. ஆய்வு மாணவனாகச் சென்னையில் நான் இருந்த 1990களின் தொடக்கத்தில் பா.செயப்பிரகாசம்தான் ஜெயந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெரிய மீசையோடு இருந்த அவரைக் கண்டு காவல்துறை அதிகாரியோ என எண்ணினேன். பார்த்தால், கால்நடைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ‘கோடு’ என்னும் இலக்கிய இதழ் ஒன்றையும் நடத்தினார்.
சிறுகதைகளில் மட்டுமல்லாமல் நாடகத்திலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. சென்னையில் பல இலக்கிய நிகழ்வுகளில் சந்தித்திருக்கிறேன். ‘கோடு’ இதழில்கூட அப்போது எழுதியதாகவும் நினைவு. அவர் மணப்பாறை வந்த பின்னால் எனக்குத் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. ‘ஜெயந்தனால் இலக்கிய உயிர் பெற்ற மணப்பாறை இது’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். ஓர் எழுத்தாளர் சில ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவ்வூரில் எத்தகைய மாற்றத்திற்கு வித்திட முடிகிறது என்பதை மகிழ்வோடு பேசிக் கொண்டிருந்தோம். ஜெயந்தன் படைப்புகள் மறுவாசிப்புக்கு உள்ளாக வேண்டும் என்றும் தோன்றியது.
‘Naturals’ஐப் பார்வையிடும்படி ஊழியர்கள் அழைத்தனர். புதுமெருகுடன் அமைந்திருந்த அக்கடையில் ‘மசாஜ் நாற்காலி’ சிறப்பம்சம். அதில் ஏறிச் சாய்ந்தவாக்கில் படுத்துக்கொள்ளலாம். முதுகை வருடித் தானியங்கி மசாஜ் நடந்துகொண்டேயிருக்கும். நல்லுறக்கத்தையும் இன்பக் கனவுகளையும் வழங்கும் நாற்காலி அது. சில நிமிடங்கள் அதில் அமர்ந்து அவ்வின்பத்தைப் பெற்றேன். தமிழ்நாட்டிலேயே இங்கேதான் முதன்முதலாக இந்த நாற்காலி வசதி செய்யப்பட்டிருக்கிறது என்னும் தகவலையும் ஊழியர்கள் தெரிவித்தனர். மணப்பாறை போன்ற சிறுநகரத்தில் இந்த வசதி என்பது பெருமைக்குரிய விஷயமே.
2018இல் ப்ராங்பர்ட் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கே பார்த்த அதிசயத்தில் இந்த மசாஜ் நாற்காலியும் ஒன்று. நாற்காலி தயாரிப்பு நிறுவனம் அரங்கை அமைத்திருந்தது. ஐந்தாறு வகையிலான நாற்காலிகள். ஒவ்வொரு நாற்காலியிலும் சிறிது நேரம் அமர்ந்து அதன் சுகத்தை அனுபவிக்க அனுமதித்தனர். ஊழியர்கள் அதன் வசதிகளை விளக்கிச் சொல்லியபடி உதவினர். புத்தகக் கண்காட்சியில் மசாஜ் நாற்காலி அரங்கிற்குத் தேவையென்ன? ப்ராங்பர்ட் புத்தகக் காட்சி அரங்கிற்கு பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் எனத் திரளாக வருகின்றனர். எல்லோரும் எழுத்தோடும் நூலாக்கத்தோடும் தொடர்புடையவர்கள். நாற்காலியில் அமர்ந்து நீண்ட நேரம் எழுதுதல், புத்தகத் தயாரிப்பு, வாசித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுவார்கள். அவர்களுக்கு இந்த மசாஜ் நாற்காலி பெரிய உதவியாக இருக்கும் என்று சொன்னார்கள். ஒன்றை எங்கும் சந்தைப்படுத்தலாம் என்பதற்கு அந்த விளக்கம் பொருத்தமாக இருந்தது. மணப்பாறை ‘மசாஜ் நாற்காலி’ எனக்கு ப்ராங்பர்ட் நினைவைக் கொண்டு வந்தது. மசாஜ் நாற்காலியில் அமர்ந்ததைப் படம் எடுத்தனர். ‘எல்லாம் ஒரு விளம்பரத்திற்குத்தான்’ என்றனர். எழுத்தாளர்கள் விளம்பர மாடலாகப் பயன்படும் காலமும் வருகிறதோ? ‘Naturals’ கடைக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டுக் கருத்தரங்க இடத்திற்குச் சென்றோம்.
மணப்பாறை நகரத்தை ஒட்டிய மஞ்சம்பட்டி என்னும் ஊர்ப்பகுதியில் புதிதாக அமைந்திருந்த ‘அன்பகம்’ என்னும் திருமண மண்டபத்தில் கருத்தரங்கு. வெளியூர் நண்பர்கள் எல்லாம் வந்துசேரச் சற்றே காத்திருந்து முற்பகல் 11 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். ஒருமணி நேரத் தாமதம். நேரத்திற்குத் தொடங்கிய இலக்கிய நிகழ்ச்சி என்று தமிழ்நாட்டில் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. ஊரில் பல பெரிய மனிதர்களுக்கும் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள், நிகழ்வுக்கு நன்கொடையாளர்களும் இருப்பார்கள். அவர்களை எல்லாம் மேடையேற்ற வேண்டுமே. எத்தனை பேர் வாழ்த்துரை, முன்னிலையுரை, தலைமையுரை, பாராட்டுரை, சீராட்டுரை என்றெல்லாம் பேசிப்பேசி நேரத்தைத் தின்னப் போகிறார்களோ என்று அலமந்திருந்தேன்.
நிகழ்வுக்கு மேடையே இல்லை. திருமணம் நடைபெறும் உயர்ந்த மேடை அங்கிருந்தும் பயன்படுத்தவில்லை. மேலிருந்து உரையாற்றினால் எடுப்பாக இருக்கும், கேட்போர் கீழிருக்கட்டும் என்னும் மனப்பாங்குக்கு எதிர்நிலை இங்கே. தரைப்பகுதியில் நிகழ்வு. ஒலிவாங்கிக்கு முன்னால் பாரதி கனகராஜ் வந்து நின்றார். கருத்தரங்கு பற்றிச் சிறுஅறிமுகம், வரவேற்பு எல்லாம் மூன்றே நிமிடங்களில் முடிந்தது. அடுத்து நேரடியாக உரையாளர் அழைக்கப்பட்டார். நிகழ்வுக்குப் பின்னிருந்து உந்துதல் கொடுப்பதோடு தம் கடமை முடிந்தது என்பதை ஏற்றுக்கொண்ட ஊர்ப் பெருந்தலைகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அத்தகைய உணர்வு கொண்ட இளங்கோ மன்றத்தின் செயல்திறனும் உறுதியும் மகிழ்வோடு பின்பற்றத்தக்கவை.
உரையாளர்கள் ஒவ்வொருவருக்கும் பப்பத்து நிமிடங்கள். பெரும்பாலானோர் நேர வரையறையைப் பின்பற்றிப் பிறருக்கு வழிவிட்டனர். சிலர் ஏற்கனவே பேசிப் பழக்கப்பட்டவர்கள். சிலருக்கு இதுதான் முதல் மேடை. பதினேழு உரைகள் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் அமர்ந்திருந்து முழுமையாகக் கேட்டேன். எழுத்தாளர் எதிரில் இருக்கிறாரே என்று யாரும் முகஸ்துதி செய்து நேரத்தைக் கடத்தவில்லை. வாய்ப்புக் கொடுத்த இளங்கோ மன்றத்தைப் புகழ்ந்துரைத்து நன்றிக்கடன் செலுத்தவில்லை. தாம் எடுத்துக்கொண்ட நூலைப் பற்றி நேரடியாகத் தொடங்கி தம் வாசிப்பனுவத்தைச் செறிவாக முன்வைத்தனர்.
‘நிழல்முற்றம்’ நாவலைத் தமிழ்ச்செல்வன் எடுத்துப் பேசினார். சிறுநாவல் என்பதால் வாசிக்க எளிதாக இருக்கும் என்று கருதி எடுத்ததாகச் சொல்லித் தொடங்கிய அவர், நூலின் நுட்பங்களை எல்லாம் உணர்ந்து பேசினார். செறிவான மொழியில் இறுக்கமான கட்டமைப்புடன் எழுதிய நாவல் அது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக வார்ப்பு திரைப்படங்களால் ஆனது. அதற்கு அடிப்படைக் களமாகிய திரையரங்க வாழ்வைப் பேசிய நாவல் இது. இத்தகைய அதன் தனித்துவங்களை வெளிப்படுத்தி அவர் பேசினார். என் விரல்களைத் தாராளமாக விரித்து இன்னும் விரிவாக நிழல்முற்றத்தை எழுதியிருக்க வேண்டும் என்று எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. ஆனால் இத்தகைய விமர்சனங்கள் அந்த எண்ணம் சரியல்ல என்பதை எனக்கு அவ்வப்போது உணர்த்துகின்றன.
‘பூக்குழி’ நாவலைப் பேச வேண்டியவர் வரவில்லை. ‘நான் பேசுகிறேன்’ என்று உள்ளே நுழைந்தார் இளங்கோ. இத்தகைய ஆர்வம் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகத்தானே அமையும் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஆர்வம் முழுவதும் நூலில் இருந்தது. பூக்குழி நாவலை அதன் மையப் பிரச்சினையை விட்டுவிட்டு எழுத்து நுணுக்கங்களை எடுத்துப் பேசுவது கஷ்டம்; ஆபத்தானது. அதை எளிதாகக் கடந்த அவர் நவீன இலக்கிய ரசிகராக நின்று நாவலைப் பற்றிப் பேசினார்.
‘மாதொருபாகன்’ நாவலைப் பற்றிச் சக்திச்செல்வன் உரை. இந்நூல் பலபட வாசிக்கப்பட்டாலும் பொதுவெளியில் பேசுவதற்குப் பலருக்கும் தயக்கம் இருப்பதை உணர்கிறேன். இவர் எப்படிப் பேசப் போகிறார் என்னும் ஆவல் எனக்கிருந்தது. அதை உளவியல் ரீதியாக அணுக வேண்டும் என்று சொல்லி அணுகும் விதம், அதனால் பெறுபவை என்று அவர் சிறப்பாக உரையாற்றினார். நாவலை வாசித்த பிறகு யாரிடமும் குழந்தை பற்றிக் கேட்பதில்லை என்று நாவல் அவரைப் பாதித்த விதம் பற்றியும் கூறினார். அணுகலும் எடுத்துரைத்த விதமும் கவர்ந்தன.
‘பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை’ நாவல் குறித்துப் ‘பிறகு சந்தோஷ்’ பேசினார். ஆடுகள் பற்றி அறிமுகம் இருப்பினும் ஆட்டின் கோணத்தில் யோசிப்பதைப் பற்றிய வியப்பைத் தெரிவித்தார். நாவலின் குறியீட்டுத்தன்மை குறித்தும் விளக்கினார். ஆட்டுக்கிடாய்க்கு ஒடை அடிக்கும் காட்சியைத் துயரத்தோடு விவரித்தார். ஆண்கள் துயருற வேண்டிய காட்சிதான் அது. இனி ஆட்டுக்கறி உண்பதையே கைவிட்டு விடுவாரோ என்று தோன்றும் அளவுக்கு அவர் பேசியதை ரசிக்க முடிந்தது.
‘கங்கணம்’ நாவலை வேங்கை குணா பேசினார். ‘வேங்கை’ என்றதும் ‘பாய்ந்துவிடுமோ’ எனக் கொஞ்சம் அச்சமாக இருந்தது. ஆனால் மெல்லிய தொனியில்தான் பேசினார். அவர் பேச்சுக்கு அரங்கம் அதிர்ந்தது. அவர் வேங்கை அல்ல; அவர் ஊர்ப்பெயர் ‘வேங்கைக்குறிச்சி’ என்பதறிந்தேன். கூடியிருந்த இளைஞர்களில் பலருக்கும் திருமணப் பிரச்சினை இருப்பதை அவர் பேச்சு வெளிக்கொண்டு வந்தது. சிலர் வெட்கமுகம் காட்டினர். சிலருக்கோ துயர முகம். பாரதி கனகராஜ் திரை மறைவுக்கு ஓடிப் போனார். ‘கங்கணம்’ உரையால் பார்வையாளர்கள் பங்கேற்கும் நவீன நாடக அரங்கு அங்கு உருவாயிற்று. மதிய உணவுக்குப் பின் எல்லோரையும் சுறுசுறுப்பாக்கவும் ‘வேங்கை’ உதவினார்.
‘கூளமாதாரி’யை மாணிக்கம் பேசினார். என் நாவல்களில் கதை அவ்வளவு இருக்காது என்பதைப் புரிந்து அவர் பேச்சு அமைந்தது. காட்சிகளும் மன உணர்வுகளும் பிணைந்து செல்லும் கூளமாதாரியை நன்றாக விவரித்தார். நாவலின் நிலமும் பொழுதும் முழுமுதற்பொருளாக இடம்பெறுவதை எடுத்துரைத்தார். ‘கூளையன் யார்?’ என்னும் கேள்வியை முன்வைத்தார். ‘ஊரில் எனக்குரிய பட்டப்பெயர் அது. ஆனால் நாவலில் வரும் கூளையன் நானல்ல. அது ஒரு வகைமாதிரிப் பாத்திரம்’ என்று பின்னர் அவருக்குப் பதில் சொன்னேன். யாரோ ஒருவர் ‘கூளையா’ என்று பின்னிருந்து அழைத்ததைப் போலிருந்தது. அப்புறம் அது பிரமை என்றுணர்ந்தேன்.
‘துயரமும் துயர நிமித்தமும்’ நூல் குறித்துப் பேச இருந்தவர் வரவில்லை. அப்பொறுப்பை ஏற்றார் முனைவர் பட்ட ஆய்வு மாணவர் மோகன்ராஜ். விமர்சனக் கட்டுரைகளைக் கொண்ட நூல் அது. அதில் முன்வைத்திருந்த இலக்கியப் பார்வைகளை நன்றாக உள்வாங்கி அவர் எடுத்துரைத்தார். ஆற்றுநீர்ப் பொருள்கோள் வகையில் இயல்பாக ஓடிச் சென்ற உரை அது.
‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ நூலை யாரேனும் எடுத்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நான் பேசச் செல்லும் நிகழ்வுகளில் என்னை அறிமுகப்படுத்துபவர்கள் ‘பீக்கதைகள்’, ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ ஆகிய இரண்டு நூல்களையும் சொல்லத் தயங்கி விட்டுவிடுவார்கள். நூலின் தலைப்பே அந்த அளவுக்குத் தயக்கத்தைக் கொடுக்கும் நிலையில்தான் தமிழ்ச் சமூகம் இருக்கிறது. ஆனால் மிக இயல்பாக நூலைப் பற்றி ராஜீவ் பாஸ்கரன் பேசினார். தம் அனுபவங்களையும் இயல்பாக இணைத்தும் தம் உரைக்குத் தேவையான கெட்ட வார்த்தைகளை மேடையில் சாதாரணமாகச் சொல்லியும் அவர் பேசியது எல்லோரையும் ஈர்த்தது. பக்தி சார்ந்த கல்லூரியில் படித்த தனக்குப் பல கெட்ட வார்த்தைகள் அங்கேதான் அறிமுகமாயின என்று சிரிக்காமல் சொன்னார். ‘கொடியேற்றுதல்’ என்பதுகூடக் கெட்ட வார்த்தையாகப் புழங்கியதையும் அதைப் புரிந்துகொள்ளாமல் தாம் குழம்பியதையும் பகிர்ந்துகொண்டார். ‘கொடி என்பது ஆடுகளின் ஆணுறுப்புப் பெயர்’ என அவருக்கு விளக்கம் சொன்னேன். புனைவல்லாத என் நூல்களில் அதிகம் வாசிக்கப்பட்ட நூல் இது. எனினும் பொதுவெளியில் இப்படி ஒருவர் பேசுவது இதுதான் முதல்முறை.
‘சாதியும் நானும்’ தொகுப்பு நூல் குறித்துத் திருச்சி கேசவன் பேசினார். மிகுதியாகக் கவனம் பெற்ற இந்நூலைக் குறித்துப் பல கோணங்களில் பேச வேண்டியிருக்கிறது. இந்நூலைப் பேசுவது தமிழகச் சாதியமைப்பைப் பற்றிப் பேசுவதாகும். அதை நன்குணர்ந்து அவர் பேச்சு அமைந்தது. அனுபவக் கட்டுரைகளில் பெண்களுக்கும் சாதிக்கும் உள்ள உறவு பற்றிய பகுதிகளை எடுத்திணைத்துக் காட்டினார். அம்பேத்கார் கருத்துக்களையும் பயன்படுத்தி நூலை ஆராய்ந்தார். நூலின் தகவல்களை வெறுமனே விவரிக்காமல் கோட்பாட்டு நோக்கில் அவர் விவரித்தது மிகச் சிறப்பாக அமைந்தது. பேசுவது மட்டுமல்லாமல் எழுதினால் குறிப்பிடத்தக்க நவீன இலக்கிய விமர்சகராக அவர் வளர்வார். ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ நூல் பற்றி என்னிடம் தனிப்படப் பேசிய போது அவர் குறிப்பிட்டவையும் இந்த எண்ணத்தை உறுதிப்படுத்தின.
‘கோழையின் பாடல்கள்’ கவிதை நூலை அஷ்ரப் அலி பேசினார். பழைய நினைவுகளைக் கிளறும் வகையிலும் என்னை நெகிழ்த்தும் விதத்திலும் அவர் விவரிப்பு இருந்தது. சில கவிதைகளை அவர் வாசித்துக் காட்டினார்; சிலவற்றை ரசனை நோக்கில் விளக்கி உரைத்தார். நவீன கவிதையை வாசிக்கும் முறையை அவர் உரை அறிமுகப்படுத்தியது என்றே சொல்வேன். ‘என் மொழியில் சாபத்திற்குச் சொற்களில்லை’ என்பதை அவர் குரலில் கேட்டது ஆழத்திற்குள் புதையும் எண்ணத்தைத் தோற்றுவித்தது. ஆம், சாபம் என்பதே தமிழ்ச் சொல் இல்லையே. அவரே கவிஞர் என்பதால் ஒவ்வொரு சொல்லும் கவிதைக்குள் சேரும் போது பெறுமதி அடையும் விதத்தை உணர்ந்து விவரித்தார். கேட்டுக் கொண்டேயிருக்கலாம் போலவமைந்த அவ்வுரை ‘பத்தாத பத்து’ நிமிடத்திற்குள் முடிந்ததுதான் குறை.
சிறுகதைகள் பற்றி ஜீவிதன் உரை. சூழலைக் கணக்கில் கொண்டு இருகதைகளை மட்டும் அவர் எடுத்துக் கூறினார். ‘எருமைச் சீமாட்டி’யை அவர் சொன்ன விதம் நல்ல கதைசொல்லி மணப்பாறையில் இருக்கிறார் என்பதைக் காட்டியது. கதைசொல்லல் இன்று சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகின்றது. ஜீவிதன் அவ்வகையில் எதிர்காலப் பிரபலம் என்று நினைத்தேன். எழுத்தில் உள்ள கதையை எடுத்துச் சொல்வது சாதாரணமல்ல. அதன் ஒரே ஒரு தொடரில் கதையின் ஜீவன் அடங்கியிருக்க கூடும். அதைப் பிடிக்கும் வாசிப்புத்திறன் இருந்தால் மட்டுமே சிறப்பாகச் சொல்ல இயலும். அதை ஜீவிதனிடம் கண்டேன்.
‘அர்த்தநாரி’ குறித்து முனைவர் முருகேசனும் ‘ஆலவாயன்’ பற்றி முனைவர் முத்தையனும் பேசினர். என் படைப்புகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற தமிழ்ச்செல்வி ‘கழிமுகம்’ பற்றிப் பேசினார். ‘தோன்றாத்துணை’யை முதுநிலை ஆசிரியராகிய கரிகாலி கருணாநிதி பேசினார். ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ நூல் குறித்து முதுநிலைத் தமிழாசிரியர் தனபால் சிற்றுரை வழங்கினார். ‘நிலமும் நிழலும்’ கட்டுரைத் தொகுப்பை ஜெயகீர்த்தி அறிமுகப்படுத்தினார். நவீன இலக்கிய வாசகர்களோடு முனைவர்களும் ஆசிரியர்களும் வந்து இணைந்தது மகிழ்ச்சிக்குரியது.
‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ நூலை நிலாமகன் எடுத்துப் பேசினார். இறுதிப் பேச்சாக ‘எங்கள் ஐயா’ நூலைப் பற்றி ஷோபனா ஆனந்த் பேசினார். இவை இரண்டும் என் ஆசிரியப் பணியோடு தொடர்புடையவை. இந்நூல்களைப் பேசுவது ஆசிரியர் மாணவர் உறவைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. அதை இருவரது உரைகளும் நிறைவேற்றின.
வழக்கம் போலத் தமிழாசிரியர்கள் சிலருக்கு மட்டும் நேரம் போதவில்லை. பாரதி கனகராஜ் நயமாகச் சொல்லியும் பின்னால் போய் நின்று உணர்த்தியும் ஒலிவாங்கியை விடாமல் பிடிவாதம் பிடித்தனர். பாரதி கனகராஜின் ஒருங்கிணைப்பு பொருத்தம். ஒருவரைப் பேச அழைக்கும் முன் நல்ல அறிமுகம் செய்வார். பேசி முடித்த பிறகு கேலியா உண்மையா என்று தெரியாத வகையில் சில கருத்துக்களை வெளிப்படுத்துவார். தம் விமர்சனத்தைச் சிரிப்பால் மறைக்கத் தெரிந்த வித்தையாக ஒருங்கிணைப்பு இருந்தது.
எல்லோரும் உரையாற்றி முடித்து ஒலிவாங்கி என் கைக்கு வர மாலை 5.30 மணியானது. ஏற்புரையாக அரைமணி நேரம் பேசினேன். ‘வாசகர் அரங்கு’ என்னும் அமைப்பைக் கொண்ட இக்கருத்தரங்கின் இயல்பைப் பற்றியும் என் படைப்புகள் குறித்தும் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டேன். ஒருநாள் கருத்தரங்கு போதாத அளவுக்கு நூல்கள் எழுதிவிட்டேன் போல என வியப்பையும் தெரிவித்தேன். உரைக்குப் பிறகு உரையாடல் நேரம். பல வினாக்கள் வந்தன. அவற்றுக்கு இயன்ற வகையில் பதிலளித்தேன். எழுத்தாளரோடு உரையாட வாசகர்களுக்குப் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. சுவாரசியமான அனுமானங்களும் சுவையான கேள்விகளும் வந்தன. இன்னும் ஒருமணி நேரம் உரையாடல் வைத்திருக்கலாம் என்று தோன்றியது. கடைசியாக ஒரு மினுமினுப்புச் சால்வையைப் போர்த்தினார்கள். அதானே, பொன்னாடை இல்லாமல் நம் நிகழ்வுகள் நிறைவடையுமா? ச. பாலமுருகனின் ‘டைகரிஸ்’ நாவலையும் கொடுத்ததால் மகிழ்ச்சி.
உரைகளைப் பதிவு செய்யவில்லை. இன்றிருக்கும் ஊடக வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். பதிவு செய்து வெளியிட்டிருந்தால் உரையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். பலர் கட்டுரைகளையே எழுதிக் கொண்டு வந்திருந்தனர். அவற்றையும் எழுதாதவர்களிடம் எழுதி வாங்கியும் தொகுத்து நூலாக்கலாம். நூலுக்குத் தகுதியான உரைகள்தான். இதற்கு முன் சென்னை, இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்குக் கட்டுரைகளைச் ‘சுப்பிரமணி ரமேஷ்’ தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார். இப்போது பாரதி கனகராஜுக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பயன்படுத்திக் கொள்வாரா, பார்ப்போம்.
நிகழ்வு முடியக் கிட்டத்தட்ட இரவு ஏழு மணியாயிற்று. அந்நேரம் வரைக்கும் நாற்பதுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். மதியம் நல்ல உணவு. இருவேளை தேநீர். வந்துபோய்க் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட நூறு பேர் பார்வையாளர்கள். இறுதிவரை ஐம்பது பேர் இருந்ததும் அவசரமில்லாமல் பேசிக் கொண்டிருந்துவிட்டு எல்லோரும் நிதானமாகக் கிளம்பியதும் மனதுக்கு நிறைவாக இருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலோர் ’இளங்கோ’க்கள்; ஆம், மன்றத்தின் பெயருக்கு ஏற்ப இளைஞர்கள். இறுக்கமின்றி ஒருவருக்கொருவர் உரையாடல். மகிழ்ச்சியான புகைப்படங்கள். அவசரமற்ற பரிமாறல்கள். ‘நாளென ஒன்றுபோல் காட்டி’ என்பார் வள்ளுவர். அந்த நாள் பிற நாட்களைப் போல இல்லை. என் மனதில் தனித்த நாளாக விளங்குகிறது. மணப்பாறையும் இளங்கோ மன்றமும் பாரதி கனகராஜ், ஜீவிதன், ராஜீவ் பாஸ்கரன் உள்ளிட்ட தோழர்களும் என் மனதில் நிலைத்த இடம் கொண்டனர்.
—– 13-12-22