அடங்கும் காலம் வரும்

You are currently viewing அடங்கும் காலம் வரும்

கருத்துரிமை தொடர்பான கட்டுரை. இந்து தமிழ் நாளிதழில் வெளியாயிற்று.

அடங்கும் காலம் வரும்

மலையாள எழுத்தாளர் எஸ்.ஹரீஷ் அவர்கள் ‘மாத்ருபூமி’ இதழில் தாம் எழுதி வந்த ‘மீசை’ என்னும் நாவல் தொடரை மூன்றாம் அத்தியாயத்தோடு நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். அது தொடர்பாக அவ்விதழுக்கு எழுதிய கடிதத்தில் (தமிழில்: முகநூல் பதிவு, டி.வி.பாலசுப்பிரமணியம்) சில விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ‘நாவலின் ஒரு பாகத்தை மட்டும் பிரித்தெடுத்துச் சிலர் மோசமான பிரச்சாரத்திற்கு உபயோகிக்கிறார்கள்’ என்பதுதான் அதில் முக்கியமான விஷயம். அதாவது நாவலில் இரண்டு பாத்திரங்களின் உரையாடலாக வரும் ஒரு பகுதியை மட்டும் தனித்துக் காட்டிப் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

உரையாடலை நாவலாசிரியர்கள் பல நோக்கங்களுக்குப் பயன்படுத்துவர். அதில் ஒன்று பொதுப்புத்தி சார்ந்து நிலவும் அபிப்ராயங்களை வெளிப்படுத்துவதாகும். சமூகப் பொதுமனத்தை விமர்சிக்கக் கையாளும் உத்தி இது. அலங்காரம் செய்துகொண்டு கோயிலுக்குச் செல்லும் பெண்களைக் குறித்து இரண்டு ஆண்கள் பேசிக்கொள்வதாக ‘மீசை’ நாவலில் வரும் உரையாடலும் இத்தகைய விமர்சன உத்தியாகவே இருக்கும் எனக் கருதுகிறேன். பிரச்சாரத்திற்கு உபயோகிப்பவர்களுக்கு நாவலில் வரும் பகுதி ஓர் உரையாடல் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் தெரிந்தே இருக்கும். ‘இது தமது செல்வாக்கைப் பரவலாக்கிக் கொள்ளும் பிரச்சாரத்திற்குப் பயன்படும்’ என்பதை அறிந்தேதான் செய்திருப்பார்கள்.

பொதுத்தளத்தில் நிலவும் மிகை உணர்ச்சிகளைச் சுரண்ட ஏதுவான பிரச்சினை ஒன்றை உருவாக்குவதன் மூலம் தம் இருப்பைக் காட்டிக் கொள்ளும் தந்திரம் இது. சாதாரணமாகக் கடந்து செல்ல வேண்டிய ஒன்றை ஊதிப் பெருக்கிப் பெருக்கிப் பூதாகரமாக்கி அதன் மூலம் தம்மை நிலைப்படுத்திக் கொள்ளும் மலினமான வித்தை இது. ஆகவே இதை எதுவரைக்கும் கொண்டு செல்ல முடியுமோ அதுவரைக்கும் கொண்டு சென்று பலனடைய முயல்வதே நோக்கமாக இருக்கும். இழிவான நோக்கத்திற்குத் தோதாக நாவலில் இருந்து பிய்க்கப்பட்டப் பகுதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இச்சூழலில் ஹரீஷ் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் கடுமையானவை. சமூக ஊடகங்களில் அவரைக் கேவலப்படுத்தியும் சின்னக் குழந்தைகள் உட்பட அவரது குடும்பத்தாரை இழிவுபடுத்தியும் தொடர் பதிவுகள் வந்திருக்கின்றன. எல்லா வகைத் தொடர்புச் சாதனங்கள் மூலமும் புற்றீசல்கள் போல எங்கெங்கிருந்தோ விதவிதமான வடிவங்களில் வந்து விழும் அவை எப்பேர்ப்பட்ட மனிதரையும் மனம் குலையச் செய்துவிடுபவை. அதிகாரத்தில் திளைப்பதைத் தவிர எத்தகைய அறநெறிகளுக்கும் தார்மீக உணர்வுகளுக்கும் மதிப்பளிக்காத மூட இதயங்களிலிருந்து உருவாகும் கொடுங்கூற்றுகள் அவை. அவற்றை எதிர்கொள்வதற்குக் கல்மனம் வேண்டும். எழுத்தாளருக்கு அது சாத்தியமில்லை.

அத்துடன் பெண்கள் ஆணையத்திலும் வெவ்வேறு காவல் நிலையங்களிலும் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. புகார்கள் தொடர்பாகப் பெரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்றாலும் அவற்றிற்கு வெறும் விளக்கம் மட்டுமாவது எழுதிக் கொடுக்கத்தான் நேரும். அது அவரது வாழ்வின் அன்றாடத்தைப் பெரிதும் பாதித்து மன உளைச்சலைக் கொடுக்கவே செய்யும். பல்வேறு இடங்களுக்கு அலைவதும் அலைய வைப்பதையே தண்டனையாக்கி இருக்கும் காவல்துறையின் சாதாரண நடைமுறைகளுக்கு நாட்களையும் நேரத்தையும் செலவழிப்பதும் எழுத்தாளரால் இயல்கிற காரியமல்ல.

இந்நிலையில் நாவலைப் பிரசுரிப்பதிலிருந்து பின்வாங்குவதாகவும் உடனே நூலாகப் பிரசுரிக்கும் எண்ணமில்லை என்றும் அவர் தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவைத் தவிர விவேகமானது ஏதுமில்லை. பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள எடுத்த முடிவு போல இது தோன்றலாம். ஆனால் அது மட்டுமல்ல. தம் நாவலின் சில வாக்கியங்களை வைத்துப் பெரும்பலன் அடைய முயலும் சக்திகளுக்கு அத்தகைய வாய்ப்பைக் கொடுக்காமல் தவிர்க்கும் சமயோசிதமான முடிவும் இது. அச்சத்தால் எடுத்த முடிவாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. அநியாயத்தை வளர்ப்பதற்குத் தம் நாவல் துணையாவதைத் தடுக்கும் அறிவார்த்தமான முடிவும் இது.

மேலும் தொந்தரவு செய்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு முயலவில்லை என்றும் இங்குள்ள நீதி நியாயச் சட்டத்தில் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை இழக்கத் தயாரில்லை என்றும் அவர் கூறுகிறார். இது நம் நீதி அமைப்பின் மீதான கடும் விமர்சனம். நீதிமன்ற நடைமுறைகள் சாதாரணக் குடிமகனை அலைக்கழிக்கும் தன்மை கொண்டவை. ஒருமுறை நீதிமன்றப் படியேறியவர் இன்னொரு முறை அந்தப் பக்கம் செல்லவே அஞ்சும் நிலைதான் இருக்கிறது. எழுத்தாள மனோபாவத்திற்கு இந்த நடைமுறைகள் மிகவும் எதிரானவை; அந்நியமானவை. பொறிக்குள் சிக்கிய எலியாக யார்தான் விரும்புவார்கள்?

அவரது கடிதத்தில் ‘நாட்டை ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் போராடுவதற்கான பலம் என்னிடமில்லை’ என்று தெரிவிக்கிறார். இது கையாலாகாத்தனமோ கோழைத்தனமோ அல்ல. இதுதான் நிதர்சனம். அமைப்பு பலமோ கட்சிப் பின்னணியோ இல்லாத தனிமனிதராகவே பெரும்பாலான எழுத்தாளர்கள் உள்ளனர். நிறுவனக் கட்டுக்குள் நின்று செயல்படுவதை அவர்களின் சுதந்திர மனம் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆகவே ஆளும் வர்க்கத்திற்கு எதிராகப் போராடும் பலமோ எழுத்தைத் தவிர்த்த வேறு வழிகளோ எழுத்தாளருக்குக் கிடையாது என்பதே உண்மை.

அவரது சிறுவயது முதல் மனதில் கிடந்து கடந்த ஐந்து ஆண்டு கால உழைப்பில் உருவான ‘மீசை’ நாவலை நூலாக்குவது பற்றி அவர் ‘சமூகத்தின் வெறுப்பு அடங்கி அது ஏற்றுக்கொள்ளும் என்று தோன்றும்போது வெளியிடுவேன்’ என்று கூறியுள்ளார். வாழ்க்கை பற்றிய பரிசீலனையே இலக்கியம் என்று உணராத சமூகம் இது. அவ்விதம் உணர்ந்தால் எழுத்தாளர் எழுதியது தமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மனதுக்குள் வைத்துப் பரிசீலிக்கும் எண்ணம் உருவாகும். மனித மனத்தில் எல்லா வகைக் குணங்களும் கொஞ்சம் கொஞ்சம் இருக்கின்றன. அவற்றில் வெறுப்பையும் கசப்பையும் பிரித்தெடுத்து வளர்க்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். வெறுப்பும் கசப்பும் எதையும் பரிசீலிக்கவோ விவாதிக்கவோ அனுமதிப்பதில்லை. பரிசீலனையற்ற சமூகத்திற்கு எழுதத்தான் வேண்டுமா என்னும் எண்ணம் தோன்றுவது இயல்பானதுதான்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் ஆகியோரை ஹரீஷுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவை அல்லாமல் மாநில ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்திருப்பது நல்ல சமிக்ஞை ஆகும். நாடெங்கும் இருந்து கிடைத்துள்ள இந்த ஆதரவு அவரது தனிமை உணர்வைப் போக்கி மன பலத்தைக் கொடுக்கக் கூடும். இந்த நாவலைக் கிடப்பில் போட்டாலும் வேறு படைப்புகளை எழுத அவருக்கு நம்பிக்கை ஏற்படும். தம் பாத்திரங்களின் உரையாடல்களை அவற்றின் போக்கில் அனுமதிக்கவும் கண்காணிக்கத் தோன்றும் அளவுகோல்களைத் தூக்கி எறியவும் இன்னும் சில காலம் அவருக்குத் தேவைப்படலாம். காயத்தை ஆற்றக் காலத்தை எடுத்துக் கொள்ளட்டும். காத்திருப்போம்.

மற்றபடி ஹரீஷ் அவர்களின் சூழலையும் மனநிலையையும் யாரையும்விட என்னால் மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. வலியும் உளைச்சலும் பொதிந்த நாட்களைக் கடக்க அவர் பட்டிருக்கும் கஷ்டங்களை முழுமையாக உணர்கிறேன். அவர் முடிவு கடினசித்தம் கொண்டு எடுத்திருக்கக் கூடியதே என்பதையும் அறிகிறேன். அவர் மனத்தில் என் மனத்தைக் காண்கிறேன். அவரது கையைப் பற்றி ‘வெறுப்பு அடங்கும் காலம் வரும்; பொறுத்திருப்போம்’ என்று மட்டும் இப்போதைக்குச் சொல்ல விரும்புகிறேன்.