அம்பைக்கு எண்பது வயது பிறந்ததைக் கொண்டாடும் வகையில் ‘அம்பை 80’ என்னும் தலைப்பில் கடந்த 28-11-2024 அன்று ஒருநாள் கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. காலச்சுவடு அறக்கட்டளை, மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வு மையம், கடவு ஆகியவை இணைந்து நடத்தினர். இந்நிகழ்வுக்கு ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ் நிதியுதவி வழங்கினர்.
இன்று நவீன இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவது கடினம். பொதுஅரங்குகளில் நடைபெற்றுக் கொண்டிருந்த நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள் எல்லாம் இன்று புத்தகக் கடைகளின் சிற்றரங்குகளில் நடைபெறுகின்றன. இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்குப் பொதுஅரங்குகளில் இடம் கொடுக்க மறுக்கின்றனர். கொடுத்தாலும் கட்டணத் தொகை அதிகமாக இருக்கிறது. அதையும் செலுத்தி நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் கூட்டம் வருவதில்லை. இருபது முப்பது பேர் வந்துவிட்டால் அது பெருங்கூட்டம் என்றாகிறது.
இலக்கிய நிகழ்வுக்கான கூட்டத்தைக் குறைத்ததில் சுருதி டிவி கபிலன் அவர்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. பதிவுக் காணொலிகளை உடனடியாக வெளியிட்டுப் பலரும் கேட்டுச் சுவைக்க அவர் வழிவகுத்துவிட்டார். அதைப் பின்பற்றி இப்போது பலர் பதிவு செய்கின்றனர். பதிவுக்கான தொழில்நுட்பம் ஜனநாயகமாகி இருக்கிறது. நல்ல செல்பேசியில் பதிவு செய்தாலே தரமாக இருக்கிறது. செல்பேசி மூலமாகவே சமூக ஊடகங்களில் நேரலையாகவும் ஒளிபரப்ப முடிகிறது. எத்தனை பேர் நேரலையில் பார்த்தார்கள் என்பதையும் சேர்த்துக் கூட்டத்திற்கு வந்தோர் எண்ணிக்கையைக் கணக்கிடும் காலம்.
குறைந்த பார்வையாளர்களைக் கொண்டு புத்தகக் கடை அரங்குகளில் நிகழ்ச்சியை நடத்திவிடலாம். மாபெரும் எழுத்தாளுமை ஒருவரைக் கொண்டாடும் கருத்தரங்கிற்குப் பார்வையாளர்கள் இல்லையென்றால் எப்படி? அந்த வகையில் கல்வி நிறுவனங்கள் பெரிதும் உதவுகின்றன. இலக்கியம் பயிலும் மாணவர்கள், இலக்கிய ஆர்வம் கொண்ட மாணவர்களை எளிதாகத் திரட்டி அரங்கில் அமர வைத்துவிடலாம். அம்பை எண்பதுக்கு அமெரிக்கன் கல்லூரி நல்ல தேர்வு.
பேராசிரியப் பதவிகள் எல்லாம் ஏலம் விடப்படுவதால் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகள் எல்லாம் பெரும்பாலும் காலாவதியாகிவிட்ட சூழலில் சில கல்லூரிகளே இலக்கிய உணர்வுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றாகிய அமெரிக்கன் கல்லூரித் தமிழ் உயராய்வுத் துறை நவீன இலக்கியம் சார்ந்து தீவிரக் கவனம் செலுத்துகிறது. வாசிப்பும் எழுத்தாற்றலும் கொண்ட பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். ஏற்கனவே சிலமுறை அக்கல்லூரி நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். அருமையாக உரையாடும் திறன் கொண்ட மாணவர்கள். நல்ல தலைப்புக்களில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள். இயல்பாக வழிநடத்தும் ஆசிரியர்கள்.
கருத்தரங்க நிகழ்வை ஒருங்கிணைத்தவர் அக்கல்லூரிப் பேராசிரியரும் எழுத்தாளருமான ஸ்டாலின் ராஜாங்கம். தமிழ்த்துறை ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். அமர்வுகள் வடிவமைப்பும் நேர ஒழுங்கும் மிகச் சிறப்பாக இருந்தன. டாடா இலக்கியத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதை அம்பை பெற்ற போது வெளியிட்ட சிறிய ஆவணப்படத்தை நிகழ்வின் தொடக்கத்திலும் அம்பை உருவாக்கி நடத்திவரும் பெண் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் ஸ்பாரோ அமைப்பின் பணிகளைப் பற்றிய ஆவணப்படத்தைப் பிற்பகலிலும் திரையிட்டனர். அழகுநிலா, கவிதா லட்சுமி ஆகியோர் இணைய வழி உரையாற்றினர். இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்கிய நிகழ்ச்சியைக் காட்சி சார்ந்து மாற்றியது நன்றாக இருந்தது.
கருத்தரங்கின் தொடக்கவுரையைக் கண்ணன் ஆற்றினார். அதைச் சுருக்கவுரை என்றுதான் சொல்ல வேண்டும். அம்பையின் ஆளுமையைப் பற்றிச் சுவாரசியமாக எடுத்துச் சொன்ன உரை அது. கடவு அமைப்பாளர் தேவேந்திர பூபதியின் வரவேற்புரையும் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபரின் வாழ்த்துரையும் அளவாக அமைந்தன. ஆகவே முதல் அமர்வு திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கியது. அவ்வமர்வுக்குத் தலைமைப் பேறு எனக்குக் கிடைத்தது. கவிஞர் சேரன் அமர்வின் முதல் உரையை ஆற்றினார். அவரது மாணவப் பருவத்தில் அம்பையின் ‘சிறகுகள் முறியும்’ சிறுகதைத் தொகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த தகவலைச் சொன்னார். அத்தொகுப்புக் கதைகள் ஈழத்துச் சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துரைத்தார். ஈழத்திலிருந்து ‘சொல்லாத சேதிகள்’ போன்ற கவிதைத் தொகுப்புகள் வெளியாவதற்கு அம்பையே முன்னோடியாக இருந்தார் என்பது வியப்பூட்டிய செய்தி.
கர்நாடகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் பிரதீபா நந்தகுமாரின் உரை கன்னடத்தில் அம்பைக்கு உள்ள இடத்தைப் பற்றியதாக அமைந்தது. அம்பையை கன்னட எழுத்தாளராகவே அங்குள்ளோர் கருதுகின்றனர் என்று அவர் சொன்னார். அவர் கதைகள் கன்னடத்தில் வெளியாகி ஏற்படுத்திய தாக்கத்தையும் அம்பைக்கும் கர்நாடகத்திற்கும் உள்ள உறவையும் விரிவாக எடுத்துப் பேசினார். சல்மாவின் உரை நெகிழ்வூட்டும் வகையில் அம்பையைப் பற்றியும் அவர் எழுத்தைக் குறித்தும் அமைந்தது. பின்னர் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. கேள்வி எழுப்புவோருக்கு காலச்சுவடு பதிப்பக வெளியீடாகிய மூன்று நூல்கள் அடங்கிய புத்தகக்கட்டு பரிசாக வழங்கப்பட்டது. பொது அரங்கில் மாணவர்கள் உற்சாகத்துடன் எழுந்து பேச அது உதவியது.
இரண்டாம் அமர்வுக்கு அரவிந்தன் தலைமை வகித்தார். மயிலன் ஜி சின்னப்பன், லாவண்யா சுந்தரராஜன், ரம்யா ஆகியோர் பங்கேற்ற அவ்வமர்வு உரையாடல் நிகழ்வாக அமைந்தது. அம்பை கதைகள் பற்றிய தம் பார்வைகளை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டனர். ஒரு கருத்தைக் கலையாக்கும் சூட்சுமம் அம்பைக்குக் கை வந்திருக்கும் விதத்தை மயிலன் எடுத்துப் பேசியது நன்றாக இருந்தது. அம்பையின் கதைகளில் நிலவியல் பற்றி லாவண்யா விரிவாகப் பேசினார்.
மூன்றாம் அமர்வுத் தலைமை சுகுமாரன். அம்பையின் ஆங்கில ஆக்கங்கள் குறித்து அமெரிக்கன் கல்லூரியில் உள்ள SCILET அமைப்பின் இயக்குநர் பிரமிளா பால் உரையாற்றினார். தொடர்ந்து அம்பையைப் பற்றிய நினைவுகளை இமையம் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். மதிய உணவுக்குப் பிறகு நான்காம் அமர்வு தேவேந்திர பூபதி தலைமையில் நடைபெற்றது. சுடர்விழி, லறீனா அப்துல் ஹக் (இலங்கை), கமலதேவி ஆகியோர் பேசினர். அவ்வமர்வுக்கு என்னால் செல்ல இயலவில்லை.
மாலையில் நூல் வெளியீடு. அம்பை சிறுகதைகள் இருதொகுதிகளாக வந்திருக்கின்றன. 1970 முதல் 2007 வரைக்கும் முதல் தொகுதி. 2007 முதல் 2022 வரைக்கும் இரண்டாம் தொகுதி. 2022க்குப் பிறகு அவர் எழுதிய பதினைந்து கதைகளைக் கொண்ட தொகுப்பு ‘இரு பைகளில் ஒரு வாழ்க்கை’ என்னும் தலைப்பில் இப்போது வெளியாகியிருக்கிறது. வி.எஸ்.விசாலாட்சி அம்மாள் எழுதிய தன்வரலாற்று நூலாகிய ‘ஓர் ஐக்கியக் குடும்பச் சரித்திரம்’ நூலை அம்பை பதிப்பித்திருக்கிறார். இவ்விரண்டும் நிகழ்வில் வெளியிடப்பட்டன. சுகுமாரன் வெளியிட முறையே மைதிலியும் லறீனா அப்துல் ஹக்கும் பெற்றுக் கொண்டனர். நூல்களைக் குறித்துச் சுகுமாரன் உரையாற்றினார்.
நிறைவு அமர்வில் நான் சிறப்புரை. தொடர்ந்து அம்பையின் ஏற்புரை. தன் இளமைக் கால அனுபவங்களைச் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். என் உரையும் அவர் உரையும் சற்றே கூடிவிட்டதால் மாணவர்களுடன் அவர் உரையாட நேரம் கிடைக்கவில்லை. அமெரிக்கன் கல்லூரி இளங்கலைத் தமிழ்த்துறைத் தலைவர் ஹென்றி ஜூலியஸ் நன்றியுரை ஆற்றினார். அம்பை போன்ற எழுத்தாளர்கள் தம் கல்லூரிக்கு வந்து இத்தகைய நிகழ்ச்சி நடைபெறுவது பற்றிய நெகிழ்வுரை இது.
அதன் பின் மாணவர்களின் களம். அம்பையின் வாழ்வையும் படைப்புகளையும் இணைத்து ‘ஒரு பென்சிலின் மௌனப் புரட்சி’ என்னும் தலைப்பிலான நாடகம். அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் அ.இராஜன் இயக்கம். அன்னலட்சுமி இணை இயக்கம். முதுகலைத் துறைத்தலைவர் செங்கோல் மேரி அறிமுகவுரை. ஏறத்தாழ இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து அந்நாடகத்தை அரங்கேற்றினர். B1 அரங்கின் வெளிப்பகுதி மேடை நாடகத்திற்குத் தோதான அமைப்பைக் கொண்டிருந்தது. இருபுறமும் இருந்த மரங்கள், மாடி முற்றங்கள் அனைத்தையும் நாடகத்திற்கு ஏற்பப் பயன்படுத்தினர். ஒளியமைப்பு மிகப் பொருத்தம். எளிமையாகவும் அம்பையின் எண்ணங்களை வெளிப்படுத்துவதாகவும் நாடகத்தைச் சிறப்பாக உருவாக்கியிருந்தனர். பதிவு செய்யப்பட்ட குரலொலி என்று தெரியாத வகையில் மாணவர்களின் நடிப்பு இருந்தது.
எல்லா நடிகர்களுக்கும் பொன்னாடை போர்த்திப் புத்தகம் பரிசளித்து மைதிலி மரியாதை செய்தார். கிட்டத்தட்ட எட்டு மணி வரைக்கும் மாணவர்கள் இருந்ததும் மதுரையைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள் பலர் வந்திருந்ததும் கருத்தரங்கிற்குப் பெருமை சேர்த்தன. ‘அம்பை 80’ ஒருநாளில் மாபெரும் கொண்டாட்டமாகவே அமைந்தது.
—– 07-12-2024
வணக்கம் ஐயா!
நிகழ்வை நேரில் பார்த்த அனுபவம் உங்கள் கட்டுரை வாசித்ததால்.