செபக கருத்தரங்கு 4

You are currently viewing செபக கருத்தரங்கு 4

(தொடர்ச்சி)

இருள் பரவிய கடற்கரை

டி.எம்.கிருஷ்ணாவின் உரையைத் அடுத்து ஓர் அமர்வும் நிறைவு விழாவும் இருந்தன. கருத்தரங்க நிறைவுரை கோபாலகிருஷ்ண காந்தி அவர்கள். அணுகுவதற்கும் பழகுவதற்கும் எளியரும் இனியருமாகிய அவர் என் மேல் கொண்ட அன்பின் காரணமாக நிகழ்வுக்கு வர ஒத்துக் கொண்டார். முற்பகல் அமர்வுக்கே வந்து அனைத்தையும் கூர்ந்து நோக்கியிருந்த அவரின் வயதைக் கருதி மேலும் காக்க வைக்க வேண்டாம் என்று பழ.அதியமான் சொன்னதன் அடிப்படையில் நிறைவுரை முதலிலும் அமர்வு அடுத்தும் என முறை மாறியது. தமக்கு வழங்கிய இருபது நிமிடங்களில் ஆங்கிலத்தின் இடையிடையே தமிழும் கலந்து நெகிழ்வானதோர் உரையை வழங்கினார். எழுத்து வடிவில் வந்திருந்த ஆறு கட்டுரைகளின் தொகுப்பை அவர் வெளியிட ஜனனி கண்ணன் பெற்றுக்கொண்டார். அவர் கையால் கதராடை அணிவித்த சிறப்பையும் பெற்றேன். அவரை உரிய முறையில் கவனித்துச் சிறப்புச் செய்து ய.மணிகண்டன் மகிழ்ந்தார்.

பேராசிரியர் ஆர்.சிவகுமார் அவர்கள் தலைமையில் கடைசி அமர்வு. பல நூல்களை மொழிபெயர்த்தவர் அவர். சமீபத்தில் அடுத்தடுத்து இருநாவல்களை எழுதியிருக்கிறார். ஏற்றுக்கொண்ட பணியை முழுக்கவனத்துடன் செய்து முடிப்பவர். மொழிபெயர்ப்பாளர்கள் அவர் அமர்வில் பங்கேற்பதால் ஆளண்டாப் பட்சி, தோன்றாத்துணை ஆகிய நூல்களைத் தமிழில் வாசித்ததோடு அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கேட்டு வாங்கி வாசித்து நல்ல தயாரிப்புடன் வந்திருந்தார். மொழிபெயர்ப்பில் தமக்கிருந்த கருத்துக்களை மிகவும் நயமான மொழியில் வெளிப்படுத்தினார்.

சென்னைப் பல்கலைக்கழக மலையாளத் துறைத்தலைவர் பேராசிரியர் பி.எம்.கிரிஷ் இவ்வமர்வில் முதல் கட்டுரையாளர். அவரால் வர இயலவில்லை. மலையாளத் துறை மாணவியும் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருப்பவருமான புண்யா,சி.ஆர். அக்கட்டுரையை மலையாளத்தில் வாசித்தார்.  ‘பூவரசும் புளியமரமும்’ என்னும் தலைப்பிலான அக்கட்டுரை மாதொருபாகன் நாவலை ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலோடு ஒப்பிட்டுப் பார்த்த ஆய்வு. அடுத்துப் ‘பெருமாள்முருகனை வாசித்தல்: மொழிபெயர்ப்பாளர் நோக்கு’ என ஜனனி கண்ணன் கட்டுரை வழங்கினார். ஏறுவெயில், ஆளண்டாப் பட்சி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். அமெரிக்காவில் வாழ்கிறார். கட்டிடக் கலைப் பொறியாளர். இச்சமயம் அவர் சென்னைக்கு வந்திருந்ததால் கருத்தரங்கில் பங்கேற்க வாய்ப்பு அமைந்தது. இருநாவல்களை மொழிபெயர்க்கும் போது அவை தமக்குத் தந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். ஆர்.சிவகுமார் தெரிவித்த சில கருத்துக்கள் தொடர்பாகவும் மொழிபெயர்ப்பாளராகத் தம் பார்வையையும் முன்வைத்துப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து ‘பெருமாள்முருகனை மொழிபெயர்த்தல்: நெருக்கடிகள், பரவசங்கள்’ என்னும் தலைப்பில் கவிதா முரளிதரன் உரையாற்றினார். அவர் பத்திரிகையாளர்; ஒருகாலத்தில் கவிஞர். தோன்றாத்துணை நூலின் இணை மொழிபெயர்ப்பாளர். தேர்ந்தெடுத்த கதைகளைக் கொண்ட  ‘Sandalwood soap and other stories’ தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர். இப்போது இன்னொரு சிறுகதைத் தொகுப்பையும் மொழிபெயர்த்துக் கொண்டுள்ளார். நான் எழுதிய கட்டுரைகள், கதைகள் ஆகியவற்றை ஆங்கில இதழ்களுக்காகப் பல முறை மொழிபெயர்ப்பு செய்தவர். நிகழ்ச்சிகளிலும் நேர்காணல்களிலும் எனக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவியவர். இக்கருத்தரங்கிற்கென அவர் எழுதிய கட்டுரையை ஏற்கனவே அரவிந்தனும் நானும் வாசித்துப் பரவசமாகப் பேசினோம். என் கதைகளை நுணுகி வாசித்திருந்த அனுபவத்தின் மூலம் தமக்குக் கிடைத்த பார்வைகளை அழகிய மொழியில் எழுதியிருந்தார். அவரோடு பேசும்போது வெளிப்படாத கருத்துக்கள் கட்டுரையில் செறிவாக வந்திருந்தன.

இத்தகைய கருத்தரங்குகள் தாமதமாகத் தொடங்கும் நேரம், சிலர் கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளுதல், மதிய உணவு இடைவேளை மிகுதல் ஆகிய பிரச்சினைகளால் சிலருக்கு நேரம் போதாமல் ஆகிவிடும். நல்ல தயாரிப்போடு வருபவர்களை அவசரமாக முடிக்கச் சொல்வது நியாயமாகாது. ஒரு கட்டுரைக்கு ஒருமணி நேரம் கொடுத்தால்தான் நிதானமான உரை வழங்கல், பார்வையாளர் கேள்விகள் என எல்லாவற்றையும் திருப்தி தரும் வகையில் நிறைவேற்ற முடியும் என்று தோன்றியது. இனி இப்படி ஒரு கருத்தரங்கை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் அதைத்தான் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம் என மும்மொழிகளில் கருத்தரங்கு நடைபெற்றது. பன்னாட்டுக் கருத்தரங்கு மட்டுமல்ல, பன்மொழிக் கருத்தரங்காகவும் அமைந்தது. அரபு, மலையாளம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றதும் பத்திரிகையாளர், கட்டிடக் கலை நிபுணர் என வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் கட்டுரை வழங்கியதும் முக்கியமானவை. எந்தத் தமிழ்த்துறையும் இப்படி ஒரு நிகழ்வைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. என் படைப்புகள் பிற மொழிகளுக்குச் சென்றதால் கருத்தரங்கும் இவ்விதம் இயல்பாகவே உருப்பெற்றது.

செபக கருத்தரங்கு 4

அமர்வு முடிய ஐந்தரை மணியாகிவிட்டது. அதன் பிறகு எனது ஏற்புரை. நேரமின்மையால் மிகச் சுருக்கமாகப் பேசினேன். பத்தாண்டு காலம் நான் உலாவிய வளாகம், பயின்ற துறை செய்த சிறப்பினால் உள்ளம் நெகிழ்ந்திருந்தது. அதைச் சில சொற்களில் சொல்லி பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிறைவு செய்தேன். நன்றியுரை நல்கியவர் பேராசிரியர் வாணி அறிவாளன். பேராசிரியர்கள் அறவாணன், தாயம்மாள் அறவாணன் ஆகியோரின் மருமகள். ஆய்வில் ஆர்வம் கொண்டவர். ‘சங்க இலக்கியம்: ஐயங்களும் தெளிவுகளும்’ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். செம்மொழி நிறுவனம் வழங்கும் ‘இளம் தமிழ் ஆய்வறிஞருக்கான குடியரசுத் தலைவர் விருது’ (2010) அவர் பெற்றபோது என் மாணவர் அ.ஜெயக்குமாரும் அதைப் பெற்றார். விருதாளர்கள் தம்முடன் இருவரை அழைத்து வரலாம் என்று தெரிவித்திருந்தனர். என்னையும் தற்போது திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி முதல்வராகப் பணியாற்றும் நண்பர் வ.கிருஷ்ணன் அவர்களையும் அழைத்துச் சென்றார். அந்நிகழ்வை எடுத்துச் சொல்லித் தம் நன்றியுரையை முடித்தார்.

அதன் பிறகு மாணவர்களுக்கு அன்பளிப்பு நூல்கள் வழங்கும் நிகழ்ச்சி. என் கையால் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று மணிகண்டன் பெரிதும் விரும்பினார். அவ்வளவு நேரம் பொறுமையுடன் கேட்டிருந்த கிட்டத்தட்ட நூறு மாணவர்களுக்கும் வழங்கிப் புகைப்படமும் எடுத்துக்கொண்டு நிறைவுடன் வளாகத்திலிருந்து கிளம்பினோம். பத்தாண்டுகள் அவ்வளாகத்தில் உலவிய போதும் கடற்கரையை ஒட்டியிருந்த விடுதியில் தங்கியிருந்த சந்தர்ப்பத்திலும் கடற்கரை என்னும் பரந்த வெளி கொள்ளும் பல்வேறு உருக்களை இரவிலும் பகலிலும் கண்டு மகிழ்ந்திருக்கிறேன். வெகுநாளுக்குப் பிறகு இப்போது அப்படி ஒருகாட்சி. இருள் பரவிய கடற்கரையில் மின்விளக்குகள் ஒளிர்ந்ததை புதிதாகக் கண்டேன்.

(முற்றும்)

—–   05-04-25

Latest comments (2)

அருமை ஐயா… நிகழ்வில் பங்கேற்கவில்லையே என்கிற ஏக்கம் ஏற்படுகிறது…

Arunachalam Ramasami

அருமையான பதிவு. வாழ்த்துக்கள். நாம் பணியாற்றிய, பயின்ற நிறுவனங்களுக்கு செல்லும் பொழுது உண்டாகும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. அதை அருமையாக வெளியேற்றுள்ளீர்கள்.