திருப்பதில் லட்டுக்குப் பயன்படும் நெய் பற்றிய பிரச்சினை ஓய்ந்துவிட்டது. தீபாவளிக்கு லட்டு சாப்பிட்டு மக்கள் மகிழ்ச்சியோடு இருக்கும் நாள் இது. இனிப்புக் கடைகளில் எல்லாம் எத்தகைய நெய்யால் லட்டு செய்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் கேள்வியில்லை. ‘சுத்தமான நெய்யில் செய்தது’ என்றுதானே சொல்வார்கள். அதை அப்படியே நம்பினால் பிரச்சினையில்லை.
மக்கள் உணர்ச்சிகளைத் தூண்டுபவையும் வதந்திகளுமே இன்றைய அரசியல் களத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவை ஓரிரு நாட்களில் அடங்கியும் போகின்றன. ஒருவாரத்திற்கு இழுக்க ஊடகங்கள் முயல்கின்றன. பிறகு வேறொரு பிரச்சினை வந்துவிட்டால் முந்தையது மறந்து போகிறது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் குறைந்த ஆயுள்தான் என்பது எத்தனை பெரிய ஆசுவாசம்! இதற்கெல்லாம் பழகிப் போகும் மனநிலையும் வந்துவிட்டது. ஆகவே திருப்பதி லட்டுக்கன நெய் பற்றியோ தீபாவளி லட்டுக்கான நெய் பற்றியோ பேசப் போவதில்லை.
ஒரு நெய் விளம்பரம் பற்றியது இது. GRB நெய் விளம்பரம். பிரபல திரைக்கலைஞர் திரிஷா நடித்திருக்கிறார். ஒருபாடலாக விளம்பரத்தில் வரும் வாசகம் இது:
‘ஊருக்கொரு சுவ உண்டு தமிழ்நாட்டுல. திருநெல்வேலி ஹல்வா, மதுர பன்பரோட்டா, காரக்குடி பணியாரம், கொங்கு நாட்டு அரிசிப் பருப்பு சாதம். எந்த ஊரானாலும் நெய் ஒன்னே ஒன்னுதான். மணல் மணலாய் ஜிஆர்பி.’
இதில் ‘கொங்கு நாட்டு அரிசிப்பருப்பு சாதம்’ வருகிறது. ‘அரிசியும் பருப்பும் சோறு’ என்று நிதானமாகச் சொல்வோம். வேகமாகச் சொன்னால் ‘அரிசீம் பருப்பு’ என்போம். அதை ‘அரிசிப்பருப்பு’ என்கிறது விளம்பரம். ‘ப்’ இல்லாமல் ‘அரிசிபருப்பு’ என்று சொன்னால் உம்மைத்தொகையாக அமைந்து பொருள் பொருந்தும் என்கிறது என் இலக்கண மூளை.
ஒருவாணலியில் மஞ்சள் மஞ்சளே என்று அரிசீம்பருப்புச் சோற்றைக் காட்டுகிறார்கள். அதன் மேல் நெய்யை (ஜிஆர்பி நெய்தான்) அப்படியே சுற்றிக் கொட்டுகிறார்கள். வாணலியில் செய்வதற்கு அரீசீம்பருப்பு என்ன உப்புமாவா? சோற்றை வட்டலில் போட்டு உண்ணும் போதுதான் வேண்டுமானால் நெய் ஊற்றிக் கொள்வார்கள். ஒரு குக்கரில் அரிசீம்பருப்பு சோற்றையும் அருகில் வட்டலில் கொஞ்சம் போட்டு வைத்தும் காட்டி வட்டலில் இருக்கும் சோற்றில் நெய் ஊற்றுவதாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். வாணலியில் காட்டினால் நெய்யைக் கொட்ட வசதியாக இருக்கும் என்று நினைத்திருப்பார்கள். விளம்பரத்தில் நெய் ‘மணல் மணலாய்க்’ கொட்ட வேண்டுமே.
கொங்கு நாட்டு உணவுகளில் தமிழ்நாடு முழுதும் பரவலாகச் சென்று புகழ்பெற்றது ஒன்றுதான். தேங்காய்த் துண்டுகளும் வரமிளகாயும் போட்டு வறுத்த ‘பள்ளிபாளையம் சிக்கன்.’ நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஊர் பள்ளிபாளையம். ஈரோட்டுக்கு அருகில் காவிரியாற்றுக்கு இக்கரையில் இருக்கிறது. அது ஊர்ப்பெயர் என்றுகூடப் பெரும்பாலோருக்குத் தெரியாது. அவ்வூர் சாராயக்கடையில் துணையுணவாக ஒருகாலத்தில் யாரோ சமைத்து விற்பனை செய்தது படிப்படியாக இந்தப் பகுதி ஊர்களுக்குப் பரவி இப்போது தமிழ்நாடு முழுவதும் சென்று சேர்ந்துவிட்டது. அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யுடியூபில் பலர் இப்போது வகுப்பெடுக்கிறார்கள்.
சென்னையில் ‘கோழி இட்லி’ என்றொரு உணவகம் இருக்கிறது. சென்னைக்குள்ளேயே ராயப்பேட்டை, அடையார், திருவல்லிக்கேணி என அதற்குச் சில கிளைகளும் உள்ளன. கோழிக்குழம்பும் இட்லியும் தான் அங்கே முக்கிய உணவு. இட்லிக்கு ஏற்ற கோழிக்குழம்பு. ராயப்பேட்டையில் சில முறை உண்டிருக்கிறேன். அற்புதமாகச் செய்து தருகிறார்கள். அக்குழம்பு கொங்கு நாட்டுக்கு உரியது. அதன் உரிமையாளர் கரூரைச் சேர்ந்தவர் என்று சொன்னார்கள். தீபாவளி அன்று காலை இட்லியும் இந்தக் கோழிக்குழம்பும் இல்லாத வீடு கொங்கு நாட்டில் அரிது. நாட்டுக்கோழியாக இருந்தால் தமது அளவைவிட ஒவ்வொருவரும் இரண்டு இட்லியாவது கூடுதலாக உண்பார்கள்.
மூன்றாவதாகப் பிரபலமாகிக் கொண்டிருப்பது ‘அரிசீம்பருப்பு.’ இதைக் ‘கொங்கு நாட்டு பிரியாணி’ என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்லி ஓட்டுபவர்களும் உண்டு. ‘அவசரத்துக்கு ஆசிரியப்பா’ என்று கவிவாணர்கள் சொல்வதுண்டு. கொங்குப் பகுதியிலோ ‘அவசரத்துக்கு அரிசீம்பருப்பு’ என்போம். பல ஊர்களில் உடனே வேண்டும் என்றால் உப்புமா செய்வார்கள். இந்தப் பகுதியிலோ அரிசீம்பருப்புதான்.
நெய் விளம்பரத்திலேயே இப்போது அரிசீம்பருப்பு வந்துவிட்டது. அரிசீம்பருப்புச் சோற்றைச் சமைக்க நெய் தேவையில்லை. உண்ணும்போது நெய் விட்டுக் கொண்டால் வெகுருசியாக இருக்கும். இதை அறிந்த யாரோதான் விளம்பரத்தில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் ‘அரிசிப்பருப்பு சாதம்’ என்று வருகிறது. காதைப் பொத்திக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. சாதம் இப்போது எங்கெல்லாமோ வந்து ஒட்டிக்கொள்கிறது. சிலபேர் நாக்குக்கு வலிக்காமல் ‘ஸாதம்’ என்கிறார்கள். ‘அரிசீம்பருப்புச் சோறு’தான். இதில் சாதத்தைக் கொண்டு வந்து இணைக்கும் போது என்னவோ மாதிரி இருக்கிறது. அதன் தனித்தன்மையைச் ‘சாதம்’ விலக்கிவிடுகிறது.
சோற்றுக்குப் பதிலியாகச் சாதம் வந்து ஆக்கிரமித்துக் கொண்டேயிருக்கிறது. புளிசாதம், தயிர்சாதம், தக்காளிசாதம் என்றெல்லாம் சோற்றை அகற்றிவிட்டுச் சாதத்தைச் சேர்த்தது போல இப்போது அரிசீம்பருப்பிலும் சாதம் வந்து ஒட்டுகிறது. சிறுதானியங்களோடு தான் இன்னும் ஒட்டவில்லை. கம்மஞ்சோற்றைக் ‘கம்மஞ்சாதம்’ என்றால் பொருந்துமா? தினைச்சோற்றைச் ‘தினைச்சாதம்’ என்பார்களா? வரகுச்சோறா வரகுச்சாதமா? சிறுதானிய உணவுகள் இப்போது பொதுவெளியில் பிரபலமாகிக் கொண்டுள்ளன. பிரபலம் இவற்றோடும் சாதத்தைக் கொண்டு வந்து சேர்த்தாலும் சேர்த்துவிடுமோ?
—– 31-10-24.
சாதம் என்பது அயல் மொழி திணிப்பு பின் வாசல் வழியாக…
// தேங்காய்த் துண்டுகளும் வரமிளகாயும் போட்டு வறுத்த ‘பள்ளிபாளையம் சிக்கன்.’ //
வரமிளகாய் is not right. வறமிளகாய் is the right term for dried chili
வரமிளகாய் = வரம் + மிளகாய் = Holly Chili
வறமிளகாய் = வறள் + மிளகாய் = Dried Chili