சங்க இலக்கிய நூல்களை வாசிக்க நல்ல உரைநூல்களைச் சொல்லுங்கள் என்று நண்பர்கள் யாராவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். தேடி வாசிக்கிறார்களோ இல்லையோ கேட்பார்கள். அவரவர் ஆர்வம், கல்வி, வாசிப்புத் திறன் ஆகியவற்றை உத்தேசித்துச் சில உரைகளைப் பரிந்துரைப்பேன். அவற்றில் சில புத்தகச் சந்தையில் கிடைக்கும்; கிடைக்காமலும் இருக்கும். நூலகத்தில் பார்க்கச் சொல்ல வேண்டும். பிடிஎப் வடிவத்தையும் பரிந்துரைக்க நேரும்.
பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில்வது ஒருதுறை சார்ந்த கல்வி. அதற்கென்று உழைப்பையும் நேரத்தையும் செலவிட வேண்டும். முறைசார் கல்வியில் பல்லாண்டுகள் பயின்று பெறும் அறிவை ஒரே ஒரு உரை நூல் மூலமாகப் பெற்றுவிடலாம் என்று நினைக்கக் கூடாது. உரைநூல் உதவும். வாழைப்பழத்தை உரித்து ஊட்டி விடுவது போல அத்தனை இலகுவாக இருக்காது. இந்தப் புரிதல் உள்ளவர்கள் உரைநூல்களைத் துணைக் கொள்ளலாம்.
தமிழைச் செம்மொழியாக்கிய சங்க இலக்கியத்திற்குக் காலத்திற்கு ஏற்பப் புதிய புதிய உரைகள் வர வேண்டும் என்பதே என் எண்ணம். அப்போதுதான் அவை அடுத்தடுத்த தலைமுறைகளின் கைகளுக்குச் சென்று கொண்டேயிருக்கும். நான் கல்லூரியில் படித்த காலத்தில் ‘புலியூர்க் கேசிகன்’ உரை எழுதிய நூல்கள் மிகவும் எளிமையானவை என்பார்கள். ஆனால் அதை வாசிக்கக் கூடாது என்றும் ஆசிரியர்கள் சொல்வார்கள். சங்க இலக்கியத்தை எளிமைப்படுத்துவதில் அவர்களுக்கு விருப்பமில்லை. சித்த மருத்துவ நூல்கள் போல அவற்றைத் தங்களுக்குள் பொத்தி வைத்துக் கொள்ளும் குறுகிய மனோபாவம். இன்று புலியூர்க் கேசிகன் உரையே ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவருக்கும் கடினமானதாக இருக்கிறது. காலத்திற்கு ஏற்ப மொழியும் சொல்முறையும் மாறுவதுதான் காரணம்.
சங்க இலக்கியத்தை எளிதில் அணுகுவதற்கான நல்ல உரைநூல்கள் குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைப்பதற்கான வழி தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் மூலமாகப் பிறந்திருக்கிறது. ‘அருட்பா x மருட்பா’ என்னும் பெரும் ஆவணத் திரட்டு நூலையும் உ.வே.சா.வின் பல நூல்களையும் பதிப்பித்த ப.சரவணனைப் பொதுப்பதிப்பாசிரியராகக் கொண்டு சங்க இலக்கிய உரைகளைப் பதிப்பிக்கும் செயலை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றும் உரையுடன் தனித்தனியாக வெளிவந்திருக்கின்றன.
மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம், பொருநர் ஆற்றுப்படை ஆகிய மூன்று நூல்களுக்குப் ப.சரவணனே உரை எழுதியிருக்கிறார். அவரது உரையாற்றல் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட நூல்களுக்கு ஏற்கனவே உரை எழுதியுள்ளார். அவரது உரை எப்போதும் முழுமையானதாக இருக்கும். அதாவது நூல் முழுமைக்கும் உரை எழுதுவது என்னும் பொருளில் சொல்லவில்லை. எந்தச் சொல்லையும் விடாமல் நுணுகிக் கவனித்து அனைத்தையும் உள்ளடக்கி வாசக நோக்கில் அவரது உரை அமையும். தேவையான விளக்கங்களும் பின்னிணைப்புகளும் தருவார்.
பத்துப்பாட்டில் அவர் எடுத்துக்கொண்ட மூன்று நூல்களும் சாதாரணமானவை அல்ல. மிகுந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கோருபவை. மலைபடுகடாம் நூலுக்குப் பதிப்புரை, நூல் அறிமுகம், நூலாசிரியர் அறிமுகம், பாட்டுடைத் தலைவன் அறிமுகம் ஆகியவை முறைப்படி அமைந்துள்ளன. அதன் பின் நூல் முழுவதும் உரைநடையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குத் தலைப்பு ‘காட்சியும் மாட்சியும்.’ அடுத்து 583 அடி கொண்ட நூலின் மூல வடிவாகிய செய்யுள். அது ‘மூலப் பனுவல்.’
பிறகு செய்யுளின் சந்தி பிரித்த வடிவம் பொருள் அடிப்படையில் பகுதி பகுதியாகப் பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரையுடன் தரப்பட்டுள்ளன. அப்பகுதி ‘உரைப்பனுவல்.’ நீள்தொடர்கள் குறைந்து குழப்பம் வராத வகையில் உரைப்பகுதி அமைந்துள்ளது. பின்னிணைப்பில் அகராதிகளும் சில செய்தித் தொகுப்புகளும் காணப்படுகின்றன. இதே முறை பிற நூல்களுக்கும் பின்பற்றப்பட்டுள்ளன.
நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இருநூல்களுக்கு க.பலராமன் உரை எழுதியுள்ளார். பழைய உரைகளை ஒப்பு நோக்கி நூலை ஆராய்ந்தும் ஆழ்ந்து கற்றும் எழுதிய உரை. பட்டினப்பாலைக்கு உரை எழுதியவர் நா.அருள்முருகன். பட்டினப்பாலை காட்சி வருணனைகளால் ஆன நூல். அக்காட்சிகளை வாசிப்போர் மனதில் உருவாக்கும் வகையில் அடர்த்தியான சொற்களால் இதற்கு அவர் உரை எழுதியிருக்கிறார். திருமுருகாற்றுப்படைக்கு அ.செந்தில்குமரன், சிறுபாணாற்றுப்படைக்கு இரா.முருகன், பெரும்பாணாற்றுப்படைக்குச் சொ.மகாதேவன், குறிஞ்சிப்பாட்டுக்கு நா.ஹரிகுமார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். அவையும் நல்ல உரைகள்.
பத்து நூல்களின் உரைகளுக்கும் ஒரே அமைப்பு. உரையாசிரியர்களின் இயல்புக்கேற்ப மொழிநடையில் மட்டும் மாறுபாடு. அதே போல அனைத்துக்கும் ஒரே பதிப்புரை. அப்பதிப்புரை இவ்வுரை நூல்கள் குறித்துச் சொல்வதாவது: ‘பத்துப்பாட்டின் முதல் பதிப்புத் தொடங்கி அண்மைப் பதிப்பு ஈறாக அனைத்துப் பதிப்புகளையும் ஒப்பு நோக்கி இப்புதிய உரைகள் எழுதப்பட்டுள்ளன. பழைய உரைகளின் செம்மைகளை எடுத்துக்கொண்டு அவற்றுள் விடுபட்ட செய்திகளையும் விளக்கங்களையும் அளித்திருப்பதோடு இதுவரை சொல்லாத சில நுட்பங்களையும் இவ்வுரைகள் அளிக்க முயல்கின்றன. மேலும் அகம், புறம் சார்ந்த அனைத்துச் செய்திகளும் விடுபடலின்றி ‘இவ்வுரைகளே போதும்’ என்னும் அளவுக்குத் தன்னளவில் முழுமை பெற்ற உரைகளாக இவ்வுரை நூல்கள் வெளிவருகின்றன.’
இவ்வுரை யாருக்கானது? தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம். ஆசிரியர்களுக்குத் தேவைப்படும் அனைத்தும் இருப்பதால் பயிற்றுவிக்கப் பெரிதும் உதவும். கல்வி நிறுவன வளாகத்துக்கு மட்டும் இவை உரியனவல்ல. சங்க இலக்கியத்தை அறிமுகம் கொள்ள விரும்பும் நவீன எழுத்தாளர்கள் இவற்றை உவப்போடு வாசிக்கலாம். உரைப்பனுவல் பகுதியை வாசித்துவிட்டு மூலப்பனுவலை வாசித்தால் நன்கு அனுபவிக்க இயலும். பயின்று வந்திருக்கும் சொற்களையும் அவற்றின் கவித்துவச் சேர்க்கைகளையும் உணர்ந்து இன்புற முடியும்.
நவீன இலக்கிய வாசகர்கள் இவற்றின் மூலம் பழந்தமிழ் இலக்கிய வாசனைக்குப் பழக முடியும். நம் மரபின் ஆழ்ந்த தொடர்ச்சியை ஒப்பிட்டுக் காணவும் இயலும். ஆகவே இவ்வுரைகள் அனைவருக்குமானவை என்று தாராளமாகச் சொல்லலாம். ஐந்து நூல்கள் ஒவ்வொன்றும் ஐம்பது ரூபாய் விலையில் கிடைக்கின்றன. மூன்று நூல்கள் ஒவ்வொன்றும் எண்பது ரூபாய். ஒருநூல் எழுபது. இன்னொன்று நாற்பது. பத்துப்பாட்டு மொத்தமும் அறுநூறு ரூபாய். அரசு மானியம் தருவதால் குறைவான விலைக்கு இந்நூல்களைப் பெற முடிகிறது.
கடந்த ஆண்டு வெளியான இவை இப்போது இன்னும் அழகான வடிவமைப்பில் மறுபதிப்பாகியுள்ளன. சிறுசிறு பிழைகளையும் திருத்தி அழகிய ஓவியங்கள் சேர்த்துத் தரமாக வெளியிட்டிருக்கும் பதிப்பு இது. தனித்தனியாக மட்டுமே கிடைக்கும் இவை பத்தையும் இணைத்து ஒரே நூலாகவும் வெளியிடுவது வாசகருக்குப் பயன்படும். பாடநூல் தேவைக்காகப் பிரித்து வெளியிட்ட சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பிறரது பயன்பாட்டுக்காகச் சேர்த்து முழுநூலாகவும் வெளியிட்ட காலம் உண்டு. தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமும் அப்படிச் செய்யலாம்.
—– 29-12-24
சங்க இலக்கியங்களைத் தேடிப் படிக்கும் ஒவ்வொரு வாசகர்களுக்கும் பயனுள்ள மதிப்புரை நன்றிங்க ஐயா.
நூல்களை முழுவதும் படித்து எழுதப்பட்ட ஆழமான மதிப்புரை. மனமார்ந்த நன்றி
சிறப்பான மதிப்புரை ஐயா. அந்நூலில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் எங்கள் பள்ளி ஓவிய ஆசிரியர் திரு. க.பிரகாசன் அவர்களும் நானும் இணைந்து வரைந்தவை ஐயா.