உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து

You are currently viewing உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து

சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு இருநாட்கள் சென்றேன். 2023ஆம் ஆண்டின் இறுதிநாள் நடைபெற்ற துயரச் சம்பவம் மனதை விட்டு அகலவில்லை. ஆண்டு இறுதி நாளில் மனதைத் திசை திருப்பிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆகவே 2024 டிசம்பர் 31 அன்று காலச்சுவடு அரங்கில் ‘எழுத்தாளர் சந்திப்பு’ நிகழ்வில் பங்கேற்றேன். அன்றைய நாள் மகிழ்ச்சியாகக் கழிந்தது. விதவிதமான வாசகர்கள். ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சிக்கு வந்து புதிய நூல்களில் என்னிடம் கையொப்பம் பெறுவதால் மட்டும் அறிமுகமான வாசகர்கள் சிலரை இவ்வாண்டும் சந்திக்க முடிந்தது.

கேள்விகளோடு வந்த வாசகர்களிடம் சுருக்கமாகப் பேசவே நேரம் வாய்த்தது. எதுவும் கேட்காமல் கையொப்பம் மட்டும் பெற்றுக்கொண்டு புன்சிரிப்போடு நகர்ந்த வாசகர்கள் அனேகம். புகைப்படத்தில் முகத்தைக் காட்டத் தயங்கியோரும் இருந்தனர். நான்கைந்து புத்தகங்கள் வாங்கியிருந்தாலும் என்னைச் சிரமப்படுத்தக் கூடாது என்று ஒரே ஒருநூலை நீட்டிக் கையொப்பம் பெற்றுச் சென்ற நாகரிகவான்களும் உண்டு.

தம் வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆவல் மீதூர உணர்ச்சிவசத்தோடும் உற்சாகத்தோடும் பேசியோர் பலர். இலக்கியச் சர்ச்சைகள் பற்றி எல்லாம் எந்த அக்கறையும் கவலையும் இன்றி நூல்களை வாசிப்பதோடு நிறுத்திக் கொள்ளும் வாசகர் எண்ணிக்கை மிகுதி. அவர்கள் தம் எண்ணங்களை இத்தகைய சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்துவர். காது கொடுத்துக் கேட்டால் அப்படி மகிழ்வர். இயன்றவரைக்கும் செவிசாய்த்தேன். புகைப்படம் எடுக்கவும் உதவினேன். அருகில் அமரச் சொல்கையில் தயங்கியோரைச் சற்றே வற்புறுத்த வேண்டியிருந்தது.

அருகிலிருந்த ஆங்கிலப் பதிப்பகக் கடைகளில் நூல்களை வாங்கிக் கொண்டு இங்கே வந்து கையொப்பம் பெற்றவர்களும் இருந்தனர். எழுதி நானே மறந்துவிட்ட ஏதாவது ஒருகதையை நினைவூட்டிப் பேசினோர் உண்டு. இவ்வாண்டு ‘பீக்கதைகள்’ தொகுப்பைக் கேட்டோர் பலர். ‘பெருமாள்முருகன்’ சிறுகதைகள் தொகுப்பில் அக்கதைகளும் சேர்ந்துவிட்டதால் தனியாக வெளியிடுவதில்லை. வாசகர் விருப்பத்திற்கு இணங்க  அதைத் தனியாகவும் வெளியிடும் எண்ணம் இப்போது வலுப்பட்டிருக்கிறது.

என் நாவல்களில் ஒன்றோ இரண்டோ  வாசித்திருப்போர் எனக் கணக்கெடுத்தால் மாதொருபாகன், பூனாச்சி, பூக்குழி என மூன்றும் வரிசையில் இருக்கின்றன. கங்கணம், நிழல்முற்றம், ஆளண்டாப் பட்சி அடுத்து வருகின்றன. கழிமுகம், நெடுநேரம் ஆகியவை பற்றிச் சிலரே பேசினர். கழிமுகம் இன்னும் விரிவாக வாசகர்களிடம் செல்ல வேண்டிய நாவல். கல்விச்சூழல் சார்ந்தது என்றாலும் பல தளங்களில் விரியும் நாவல் அது.

எல்லாத் தரப்பையும் பேசும் நாவலில் கையாண்டிருக்கும் பகடி சரிவர வாசகருக்குச் சேரவில்லையோ என்னும் ஐயம் எனக்குண்டு. பகடியை ஏற்கும் மனநிலை வாய்க்காத சமூகம் நமது. பகடி கண்டு பதறுவதே வாடிக்கை. மகிழ்ச்சியோடு வாசித்துப் பின் அசை போடும்போது வருந்த வேண்டிய பகடி கொண்டது கழிமுகம். தமிழில் இத்தகைய பகடி நாவல் இல்லை என்றே சொல்லலாம்.  கழிமுகத்தை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்குப் பயிற்சி தேவையோ?

கிளாசிக் நாவல் வரிசையில் வெளியாகியிருக்கும் நிழல்முற்றம், கூளமாதாரி ஆகியவை கணிசமாக வாசகர் கையில் தவழ்ந்தன. ‘போண்டு’ சிறுகதைத் தொகுப்பையும் ‘காதல் சரி என்றால் சாதி தப்பு’ கட்டுரை நூலையும் வாசகர் விரும்பி வாங்கியதைப் பார்க்க முடிந்தது. ‘வேல்!’, ‘போண்டு’ ஆகியவற்றை ஒருசேர வாசிக்கும்படி சில வாசகர்களிடம் சொன்னேன். ‘பூனாச்சி’யை ஆங்கிலத்தில் வாசித்த உந்துதலில் அதன் தமிழ் வடிவத்தை வாசிக்க விரும்பி வாங்குபவர் உண்டு. தமிழ்ப் பேசத் தெரிந்தாலும் வாசிக்க முடியாத இப்படிப்பட்டவர்கள் பூனாச்சி காரணமாக எழுத்துக்கூட்டி வாசிக்கக் கற்றுக்கொண்ட சுவாரசியத்தை என்னிடம் பகிர்ந்துள்ளனர். இப்போதும் அப்படிச் சிலரைச் சந்திக்க முடிந்தது.

புத்தகக் கண்காட்சி வாசகச் சந்திப்பு எனது எழுத்தார்வத்தை அடுத்தாண்டு வரைக்கும் நீட்டித்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து. எப்போதேனும் சோர்வு தோன்றும்போது இந்த வாசகர்களை நினைத்துக் கொள்வேன்.  நண்பர்கள் பலரைச் சந்திக்கவும் வாய்த்தது. என் ஊரான திருச்செங்கோட்டைச் சேர்ந்த அருண் பாண்டியன், ரோகித்குமார் ஆகியோர் சமீபத்தில் எழுத வந்திருப்போர். அவர்களோடும் என் மீது மதிப்பு கொண்ட இளைஞர் கூட்டத்தோடும் மகிழ்ச்சியான அளவளாவல். புத்தாண்டுக் கொண்டாட்டம்.

எனினும் அன்று காலச்சுவடு அரங்கு தவிர வேறெங்கும் செல்ல வாய்க்கவில்லை.

உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து

வாடிவாசல் சித்திரக் கதை நாவல் வெளியீட்டு நிகழ்வு 06-01-25 அன்று நடைபெற்றது. அதையொட்டிப் புத்தகக் காட்சிக்கு இரண்டாம் முறை சென்றேன். தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுப் பேசினார். நல்ல தயாரிப்போடு வந்து பத்துநிமிடம் சிற்றுரை ஆற்றினார். அவசரமில்லாமல் இருந்து ஊடகங்களிடம் பேசினார். அது முடிந்து கருப்புப் பிரதிகள் அரங்கில் தோழர் மதிவண்ணன் மொழிபெயர்த்த மராத்தி எழுத்தாளர் சரண்குமார் லிம்பாலேயின் ‘கும்பல்’ நாவல் வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்று அதை வெளியிட்டுப் பேசினேன். ஷோபாசக்தி, காளிங்கராயன் உள்ளிட்ட நண்பர்கள் பலரையும் சந்தித்துச் சிறிது நேரம் பேச முடிந்தது.

கருப்பிப் பிரதிகள் நிகழ்வின் போதே உயிர்மை அரங்கிலிருந்து விஜயகுமார் வந்து அழைத்தார். மனோஜ் எழுதிய சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு வெளியீடு. அங்கே உரை இல்லை. நான் வெளியிட ஷோபா சக்தி பெற்றுக்கொண்டார். மனுஷ்யபுத்திரனிடம் சில நிமிடப் பேச்சு. அங்கே வந்திருந்த என்.ஸ்ரீராம் பரிசல் புத்தக நிலையத்திற்கு அழைத்தார். அவருடன் சென்று ‘இரவோடி’ நாவலைப் பெற்றுக் கொண்டேன். பரிசல் செந்தில்நாதனையும் பார்த்துப் பேசினேன்.

அதற்குள் கடையடைக்கும் நேரம் ஆகிவிட்டது. வாடிவாசல் வெளியீட்டு நிகழ்வுக்கு முன் கொஞ்ச நேரம் இருந்ததால் உ.வே.சா. நூலகம் உள்ளிட்ட சில கடைகளுக்குச் சென்று நூல்கள் வாங்கினேன். றாம் சந்தோஷ், கால சுப்பிரமணியன், அழகிய சிங்கர், பெ.அய்யனார் முதலிய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது. நான்கைந்து நாட்கள் தங்க முடிந்திருந்தால் வாசகர்களோடு இன்னும் கூடுதலாக உரையாடியிருக்கலாம். நண்பர்கள் பலரைச் சந்தித்திருக்கலாம். குடும்பக் கடமைகளும் வேறு சில நிகழ்வுகளும் காரணமாக இயலவில்லை. அடுத்த ஆண்டுக்கு இப்போதிருந்தே திட்டமிட வேண்டும்.

உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஊக்க மருந்து

—–   14-01-24

Add your first comment to this post