நண்பர்களே! இத்தாலிப் பயணம் பற்றி ஏற்கனவே மூன்று கட்டுரைகள் எழுதியிருந்தேன். எதிர்பாரா வகையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுவிட்டது. முந்தைய கட்டுரைகளை வாசித்தோர் முதல் மூன்றையுமோ மூன்றாவதை மட்டுமோ ஒருமுறை பார்வையிட்டுவிட்டு இதைப் படியுங்கள். அவற்றை வாசிக்காதோர் வாசித்துவிட்டு இதற்கு வாருங்கள். தொடர்ச்சி கிடைப்பதற்கு வசதியாக இருக்கும்.
12-12-24 அன்று பிளோரன்ஸ் நகரத்தில் எங்கள் உலாவைத் தீர்மானிக்கும் பொறுப்பை ஒருவரிடம் விட்டுவிட்டோம். அவர் இத்தாலியில் வசிக்கும் சங்கீதா ராகவன்!
காலம் கடந்தும் இடம் கடந்தும் செல்லும் இலக்கியத்தின் ஆற்றல் பற்றி வகுப்பறைகளில் சொல்வதுண்டு. சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இரண்டாயிரம் ஆண்டு கடந்து வந்து நம்முடன் உரையாடுகிறார். அவர் பாடல்கள் மொழிபெயர்ப்பில் செல்கையில் உலகின் வேறுவேறு பிரதேசங்களில் வசிப்பவர்களுடனும் உரையாடுகிறார். படைப்பாளருக்கு இலக்கியம் கொடுக்கும் வாய்ப்பு இது. இடம் கடந்து செல்லுதல் சமகாலத்திலேயே நிகழும். ஒரு படைப்பு எங்கெங்கே செல்கிறது என்பது எழுதியவருக்கே தெரியாது. அதே மொழியிலோ மொழிபெயர்ப்பு மூலமோ நாடுகளைக் கடந்து செல்லும்.
என் முதுகலை ஆசிரியர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் இருந்து அழைத்தார். அங்கே வசிக்கும் தம் மகள் வீட்டுக்குப் போயிருக்கிறார். செய்ய வேலை எதுவும் இல்லை என்னும் நிலை வந்தால் புத்தகத்தை நாடும் இயல்புடையவர். அப்படி அருகில் இருந்த நூலகத்திற்குச் சென்றவர் என் நூல்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறார். தமிழ்நாட்டில் பார்த்தபோது வராத சந்தோசம் மலேசியாவில் பார்த்ததும் வந்திருக்கிறது. ‘எழுதுவதாகச் சொல்லித் திரிகிறான்’ என்று என்னைப் பற்றி நினைத்திருப்பார் போல. பொதுவாக மாணவர்களைப் பற்றி ஆசிரியரின் அபிப்ராயம் அப்படித்தானே இருக்கும்? மலேசியாவில் நூல்களைப் பார்த்ததும் வியப்பு தாள முடியவில்லை. எப்படியோ என் எண்ணைப் பிடித்து அழைத்து மகிழ்ச்சியோடு பேசினார். அவரை நேரில் சந்தித்து இருபதாண்டுகளுக்கு மேலிருக்கும். ஒருநூல் அவரை என்னிடம் பேச வைத்தது. இலக்கியம் அதைப் படைத்த எழுத்தாளனை எங்கெங்கே கொண்டு சேர்க்கும் என்பதை அளவிட முடியாது.
கொரானோ உலகை முடக்கிய காலத்தில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. 2021 பிப்பிரவரி மாதம். பெயர் சங்கீதா ராகவன், மலேசியத் தமிழர், தற்போது இத்தாலியில் வசிக்கிறேன் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர், முதலில் மாதொருபாகன் நாவலை ஆங்கிலத்தில் வாசித்ததாகவும் அது கொடுத்த பரவசத்தில் அடுத்துக் கூளமாதாரி நாவலை வாசித்ததாகவும் எழுதியிருந்தார். கூளமாதாரி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பைச் சங்கீதா வாசித்த அதே சமயத்தில் அதன் தமிழ் மூலத்தை அவரது நண்பர் கிருஷ்ணகுமார் வாசித்திருக்கிறார். வாசிக்க வாசிக்க இருவரும் தம் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் மொழிபெயர்ப்பு பற்றியும் விவாதித்துள்ளனர். பகிரலில் எழுத்தாளரிடம் பேசலாம் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கிறது. வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும் தமக்கு இருக்கும் ஐயங்களைக் கேட்கவும் இணையம் வழியாகப் பேசலாமா, நேரம் ஒதுக்க முடியுமா என்றும் மின்னஞ்சலில் கேட்டிருந்தார்.
வெகுதொலைவில் இருந்து ஒரு வாசகர் இத்தனை ஆவலாகக் கேட்கும்போது எப்படி மறுக்க முடியும்? இதுபோல ஆர்வம் கொண்டு வித்தியாசமாக யோசிக்கும் வாசகர்கள் பலர் உண்டு. அவர்களோடு பேசுவது உற்சாகம் தரும். அவர்கள் பரவசத்துடன் பேசுவதைக் கேட்கவும் பார்க்கவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதனால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். தேதியும் ஒதுக்கினேன். இணைய வழிச் சந்திப்புக்கான இணைப்பை அனுப்பினார். தம்மால் தமிழில் சரளமாகப் பேச முடியாது என்பதால் கிருஷ்ணகுமாரும் உடன் பங்கேற்பார் என்றும் சொன்னார். 2021, பிப்ரவரி 14 அன்று இரவு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினோம். அவர்களைப் பேசவிட்டுக் கேட்டேன். சில கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். வியப்பும் அறிதலுமாக அவ்வுரையாடல் நடந்தது. ஒரு எழுத்தாளரிடம் இவ்வளவு நேரம் பேசியது அவர்களுக்குப் புதிய அனுபவம். இரண்டு வாசகர்களோடு ஒரே ஒரு நூலைக் குறித்து அவ்வளவு நேரம் பேசியது எனக்கும் புதிய அனுபவம்.
நாவலில் அவர்கள் உணர்ந்த நுட்பங்களைப் பகிர்ந்தனர். இருவரும் மலேசியாவில் பிறந்து வளர்ந்த தமிழர்கள். எனினும் தமிழ்நாட்டுச் சாதி வேறுபாடு பற்றி அவர்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. இங்கிருந்து மலேசியா செல்லும் அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள் எல்லோரும் மொழிப் பெருமை, இனப்பெருமை பேசுவார்களே தவிர நடைமுறை வாழ்வைப் பற்றிப் பேசுவதில்லை. நடைமுறையில் இருக்கும் சாதி வேறுபாடுகள், பிரச்சினைகள் பற்றி அவர்கள் கேட்டதேயில்லை. ஆகவே நாவல் அவர்களுக்குப் புதிய நிலப்பரப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றைக் காட்டியிருக்கிறது. கூளையன் மேல் அவர்கள் காட்டிய அன்புக்கு அளவில்லை. நான் பேசியதைவிட அவர்களைப் பேச விட்டுக் கேட்டது ஆனந்தமாக இருந்தது. வெறும் புகழ்ச்சியாக இல்லாமல், வாசிப்பிலிருந்து கண்டடைந்தவற்றைப் பேசுகையில் அப்படித்தானே இருக்கும்?
இந்த உரையாடல் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தாலிப் பயணத்திட்டம் உருவான பிறகும் சங்கீதாவின் நினைவு வரவில்லை. உண்மையில் ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டிலிருந்து பேசினார் என்பது மட்டும் மனதில் இருந்தது. இத்தாலி என்று குறிப்பாக நினைவில் இல்லை. பிளோரன்ஸ் திரைப்பட விழா பற்றி இணையம் வாயிலாக எதேச்சையாக அறிந்த சங்கீதா அவராகவே தொடர்பு கொண்டார். ஏதேனும் ஒருநாள் எங்களுடன் வந்து நகரைச் சுற்றிக் காட்ட உதவ முடியும் என்று சொன்னார். மூன்று இரவுகள் பிளோரன்ஸ் நகரில் தங்கினோம். ஒருநாள் திரைப்பட விழா அமர்வு. அடுத்த இரண்டு நாட்கள் சும்மா ஊர் சுற்றத்தான் நினைத்திருந்தோம். அதில் ஒருநாள் வழிகாட்டி கிடைக்கிறார் என்றால் மகிழ்ச்சிதான். அவருக்கு என்னை நேரில் சந்திக்கும் பரவசம். இத்தாலியின் மரபான இனிப்பு வகைகளோடு வந்து சேர்ந்தார்.
—– 23-02-25
நாவல்கள் வாயிலாக தங்களுக்கு வெளிநிலத்தில் புதிய வாசகர்கள் கிடைத்திருந்ததும் அவர்களோடு உரையாடியதும் நல்ல விஷயம். வெளியூர் அனுபவங்கள் சுந்தர ராமசாமியால் ‘சில பாரிஸ் அனுபவங்கள்’ என்னும் தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை வாசித்த நினைவை இப்பொழுது ‘இத்தாலி’ தொடர் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது என் மனது மீள் பதிவு செய்து பார்த்தது.
சிறப்பு ஐயா. மற்ற கட்டுரைகளையும் வாசித்து விடுகிறேன்