வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்

You are currently viewing வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்

2024ஆம் ஆண்டின் கடைசி நாள் புத்தகக் கண்காட்சியில் வாசகர் சந்திப்பு, கையொப்பம் இடுதல் எனக் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழிந்தது. மறக்க முடியாத சில சந்திப்புகள். சில மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவர் வினோத் ராஜ். பிறகுதான் அவரைப் பற்றிய விவரங்களை அறிந்தேன். சென்னை, கிறித்தவக் கல்லூரியில் படித்த அவர் மாணவப் பருவத்திலிருந்தே என் எழுத்துக்களை வாசித்து வருகிறார். கிட்டத்தட்ட அனைத்து நூல்களையும் வாசித்திருப்பார் போல. ‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ நூலைத் துறை சார்ந்த வல்லுநர்கள், தமிழ்த்துறை மாணவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் என்று கருதியிருந்தேன். அதையும் வினோத் ராஜ் வாசித்திருக்கிறார்.

1988 முதல் 2015 வரை நான் எழுதிய மொத்தச் சிறுகதைகளின் தொகுப்பு 2016இல் முதல் பதிப்பு வெளியாயிற்று. அதில் ‘திருச்செங்கோடு’ கதையைச் சேர்க்கவில்லை. நூல் வெளியாகி எட்டு ஆண்டுகள் ஆகியும் ‘ஏன் சேர்க்கவில்லை?’ என்று எவரும் கேட்டதில்லை. அக்கதையைக் குறிப்பிட்டுப் பேசும் வாசகர்கள்கூட இத்தொகுப்பில் அது இல்லை என்பதைக் கண்டுபிடிக்கவில்லை. வினோத் ராஜ் அதைக் கண்டுபிடித்து முகநூலில் எழுதியிருந்தார். இப்போது நூலின் ஒன்பதாம் பதிப்பு வந்திருக்கிறது. அதில் ‘திருச்செங்கோட்டைச்’ சேர்த்துவிட்டேன்.

புத்தகக் கண்காட்சிக்கு வினோத் ராஜ் வந்தால் அவருக்கு ஒருபிரதி கொடுக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசுவதில் கூச்ச சுபாவம் கொண்ட அவர் வருவாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் வந்தார். அன்பாகப் பேசினார். மிகச் சிறந்த வாசகராகிய அவர் இப்போது சிறுகதைகளும் எழுதுகிறார். வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ். அவருக்குப் ‘பெருமாள்முருகன் சிறுகதைகள்’ நூலில் கையொப்பம் இட்டுக் கொடுத்தேன். ஒருகதையை நினைவில் கொண்டிருந்து கவனப்படுத்திய அவருக்கு என் நன்றியறிதலை அப்படித்தானே சொல்ல முடியும்?

‘சேத்துமான்’ திரைப்படத்திற்கு இந்நூலில் உள்ள ‘வறுகறி’, ‘மாப்புக் கொடுக்கோணுஞ் சாமீ…’ ஆகிய கதைகளே ஆதாரம். இப்போது திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுக் கவனம் பெற்றுவரும் ‘அங்கம்மாள்’ படத்திற்கு இதில் உள்ள ‘கோடித்துணி’ சிறுகதையே மூலம். பல வாசகர்கள் மீண்டும் மீண்டும் கேட்கும் ‘பீக்கதைகள்’ நூலின் கதைகள் அனைத்தும் இத்தொகுப்பில் உள்ளன. வினோத் ராஜின் பதிவையும் சேர்த்து புதிய பதிப்புக்கு நான் எழுதியிருக்கும் சிறுமுன்னுரை இது:

வினோத் ராஜ் என்னும் வினோத ராஜ்

பெருமாள்முருகன் சிறுகதைகள்: ஒன்பதாம் பதிப்பு முன்னுரை

இப்பதிப்பில் ‘திருச்செங்கோடு’ சிறுகதையைச் சேர்த்துள்ளேன். ‘மாதொருபாகன்’ பிரச்சினைக்குப் பிறகு 2016இல் வெளியான இந்நூலில் அக்கதையைத் தவிர்த்திருந்தேன். அது என் முன்னோர்கள் வாழ்ந்த ஊர்ப்பெயர். நான் பிறந்து வளர்ந்து நெடுங்காலம் வாழ்ந்த சொந்த ஊர். 1994இல்  எனது முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிடக் கதைகளைத் தொகுத்த போது அனைத்தும்  சொந்த ஊர்க் களத்தைக் கொண்டிருப்பவையாகத் தோன்றின. ஆசை ஆசையாகச் சொந்த ஊர்ப் பெயரில் ஒரு கதை எழுதிச் சேர்த்து அதையே நூல் தலைப்பாகவும் வைத்தேன். எதிலும் பிரசுரமாகாத, தொகுப்புக்கு என்றே எழுதிய சிறப்புக் கதை இது. இதைத் தவிர்க்கும் நிலை வரும் என்று ஒருபோதும் கருதியதில்லை. மனிதர்கள் மேலான கோபம் ஊர்ப் பெயருக்கு ஆகி வந்து உதறித் தள்ளத் துணிந்தேன் போல.

ஆனால் இக்கதை என்னை விடவில்லை. முன்னரே  செக் மொழிக்குச் சென்றிருந்தது. பிறகு மலையாள மொழிபெயர்ப்பாளர் விரும்பியதால் தலைப்பை மாற்றிக் கொடுத்தேன். மாதொருபாகன் நாவலோடு இதை இணைத்துப் பேசுவோரை அவ்வப்போது சந்திப்பதுண்டு. வாசகர் சிலரது நினைவில் தங்கியிருந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தது.

சமீபத்தில் வினோத் ராஜ் என்னும் நண்பர் தம் முகநூல் பதிவில் கீழ் வருமாறு எழுதியிருந்தார்:

பெருமாள்முருகன் சிறுகதைகள் (1988-2015)

சமீபத்தில் பெருமாள்முருகனின் சிறுகதைகள் தொகுப்பை வாங்கியிருந்தேன். எட்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2024. இத்தொகுப்பின் முதல் பதிப்பு டிசம்பர் 2016இல் வெளியாகியுள்ளது. 8 ஆண்டுகளில் எட்டாவது பதிப்பைக் கண்டுள்ளது. இத்தொகுப்பில், 1988ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான 82 கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

கதைத் தலைப்புகளைப் பார்த்துகொண்டிருந்தேன். அவரது முதல் சிறுகதைத் தொகுதியின் தலைப்புக் கதையான ‘திருச்செங்கோடு’ சிறுகதையைக் காணவில்லை. சரி, இதுகுறித்து முன்னுரையில் ஏதேனும் குறிப்பிட்டுள்ளாரா எனப் பார்த்தேன். நான்கு தொகுப்புகளாக தனது கதைகள் வெளியாகியிருக்கின்றன என்ற செய்தியுடன்  ‘திருச்செங்கோடு(1994)’ என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறதேயன்றி அக்கதையைத் தொகுப்பில் சேர்க்காதது குறித்து ஒரு சொல் இடம்பெறவில்லை. ‘பின்னோக்கிய பயணம்’ எனும் தலைப்பில் அவர் எழுதியிருக்கும் முன்னுரையை 24.12.2016 அன்று எழுதியதாக அச்சிடப்பட்டிருக்கிறது. ஆக, இது முதல் பதிப்புக்கு எழுதிய முன்னுரை என்பது தெளிவாகிறது. முதல் பதிப்பிலும் அந்தக் கதை இடம்பெறவில்லையா என்ன என்று எனக்குத் தெரியவில்லை. முதல் பதிப்பை வைத்திருப்போர்தான் சொல்ல வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு, நற்றிணை பதிப்பகம் பதிப்பித்த  ‘திருச்செங்கோடு’ சிறுகதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன். அத்தொகுப்பில் அக்கதை கடைசிக் கதையாக இடம்பெற்றிருந்தது. மாதொருபாகன் நாவலின் களத்துடன் பொருந்தக்கூடிய கதை அது. அதனால் நீக்கினாரோ என்னவோ தெரியவில்லை. இருந்தாலும் அதுகுறித்து எழுதியிருக்கலாம். முன்னுரையில் சேர்த்திருக்கலாம்.

‘பதிப்புகள் மறுபதிப்புகள்’ எனக் கட்டுரைத் தொகுப்பு தந்தவர் இப்படிச் செய்ததை என்னால் ஏற்க முடியவில்லை. அத்தொகுப்பை வாசித்தவர்களுக்குப் புரியும். மேலும், அவரொரு பதிப்பாசிரியரும்கூட. அதனால் அச்சிறுகதை நீக்கம் குறித்து வாசகர்களுக்குத் தெளிவுபடுத்தி இருக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு, காலச்சுவடு இதழில், (தி.ஜா. கதையா கு.ப.ரா. கதையா என நினைவில் இல்லை) இதுவரை எந்தத் தொகுப்பிலும் வெளியாகாத கதை என்று கண்டெடுத்துப் பிரசுரம் செய்திருந்தார்கள். அப்போது அதை வாசித்த எனக்கு இதைப் பிரசுரம் செய்யாமலே இருந்திருக்கலாம் அல்லது கண்டெடுக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது. (இந்த எண்ணம் சரியா தவறா என்பது வேறு.) ஒரு வேளை அந்தக் கதையை எழுதிய எழுத்தாளரேகூட இது தொகுப்பில் சேர்க்கத் தகுந்தது அல்ல என்று நீக்கியிருக்கவும் வாய்ப்புண்டுதான். அல்லது வேறேதேனும் காரணங்கள் இருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் கண்டெடுத்து சேர்த்தார்கள்.

‘திருச்செங்கோடு’ என்ற கதை பெருமாள்முருகனின் 82+ சிறுகதைகளில் ஒன்று என்று கடக்க கூடிய ஒன்று அல்ல. அது அவரது முதல் தொகுப்பின் தலைப்புக் கதை. ஒரு வகையில், சிறுகதை ஆசிரியராக அவருக்கான முதல் அடையாளமும்கூட.

வரும் காலங்களில், எவரேனும் பெருமாள்முருகனின் விடுபட்ட கதைகள் மற்றும் அச்சிலேறாத கதைகளைக் கண்டெடுக்கிறேன் என்று பதிப்பாசிரியராக அவரது கதைகளைத் தொகுத்தால் ‘திருச்செங்கோடு’ கதையைச் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை இப்போதே அவர் சொல்லிவிடுவது நல்லது என்று தோன்றுகிறது. ஏனெனில், அக்கதையை நீக்க அவருக்கு ஏதேனும் ஒரு நியாயம் தோன்றியிருக்க வேண்டும். அதற்கு நாம் மதிப்பளித்தே ஆக வேண்டும் இல்லையா?

(vinoth raj முகநூல் பதிவு, அக்டோபர் 19, 2024.)

இப்பதிவே மீண்டும் அக்கதையைத் தொகுப்பில் சேர்க்கத் தூண்டியது. வாசகர் கருத்துக்கு என் மனதில் எப்போதும் மதிப்புண்டு. வினோத் ராஜ்க்கு நன்றி.

25-12-24

பெங்களூரு                                                                                                பெருமாள்முருகன்.

நூல் விவரம்: பெருமாள்முருகன் சிறுகதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், ஒன்பதாம் பதிப்பு, டிசம்பர் 2024, விலை ரூ. 920/-

புகைப்படம்: தாமோதரன்.

—–  09-01-25

Latest comments (4)

அங்கமுத்துகுப்புசாமி

இவரைப் போன்ற வாசகர்களே எழுத்தாளரை ஊக்கப்படுத்தும் அருமருந்து.

சி வடிவேல்

ஐயா வணக்கம்.
06.08.2010 அன்று ஈரோடு புத்தகத் திருவிழாவில் நான் நூல்கள் வாங்க தேடியபோது ‘திருச்செங்கோடு’ தொகுப்புதான் தங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.

அத்தொகுப்பில் உள்ள கதைகள் தங்களின் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெறாதது குறித்த வாசகரின் முகநூல் பதிவைக் கவனமாகப் படித்து அவரது கருத்துக்கு மதிப்பளித்து தற்போது வந்துள்ள ஒன்பதாம் பதிப்பில் அவற்றை இடம்பெறச் செய்ததில் மகிழ்ச்சி.

ஒரு படைப்பைக் காலம் கடந்தும் வாழச் செய்யும் வாசகரின் உணவுர்வுக்குத் தங்களின் எதிர்வினை எப்போதும் நினைவு கூரப்படும்.

நன்றி.