எங்கள் வீட்டுக்கு அருகில் சிறுவனம் உள்ளது. காலி மனைகள், உழவு நிலம், ஓடைப் பொறம்போக்கு எல்லாம் இணைந்து அப்படி ஒரு வனம். மரங்களும் அவற்றின் மேல் ஏறிப் படர்ந்த கொடிகளுமாய்ச் சேர்ந்து சோலைக்காடுகள் போலக் ‘கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு.’ பூச்சியினங்களும் பறவைகளும் பெருகி வாழ்கின்றன. அதன் அசைவுகள் கண்ணில் படும்படி, மேல்கூரை வேய்ந்த மாடி வெளியின் ஒருபகுதியில் அமர்ந்து எழுதுவதுதோ படிப்பதோ என் வழக்கம். அவ்வப்போது வனத்தைக் காண்பதும் பறவைகளைப் பார்ப்பதுமெனப் பொழுது ஆனந்தமாகச் செல்லும்.
என் அறிதலில் முப்பதுக்கும் மேற்பட்ட பறவை வகைகள் உலவும் பகுதி இது. வீட்டை ஒட்டி இருக்கும் கறிவேப்பிலை, முருங்கை மரங்களுக்கு வந்து தினந்தோறும் வருகைப்பதிவு கொடுத்துச் செல்லும் பறவைகள் உண்டு. கறிவேப்பிலைப் பழங்கள் குயிலுக்கும் வால்காக்கைக்கும் மிகப் பிரியம். தவிட்டுக் குருவிக் கூட்டம் அச்சமற்றுத் திரியும். மழையில் நனைந்த உடலைக் காய வைக்கவும் ஒதுங்கவும் கூரைக்குள் வந்து கிடைக்கும் இடத்தில் கூட்டமாக அமர்ந்து அவை செய்யும் சேட்டைகள் அனேகம். மனிதரிடமிருந்து வெகுதொலைவு விலகியிருக்கும் செம்போத்து தன் குரலால் இருப்பை உணர்த்தும். சில பறவைகளின் குரல்களையும் பிரித்துக் காணுமளவு பரிச்சயம் உண்டு.
ஒருவாரத்திற்கு முன் காலை நேரத்தில் கோலிக்குண்டுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு உருண்டோடுவது போல ஒருகுரல் வந்தது. ஏற்கனவே கேட்ட குரல் போல இருந்தாலும் சட்டென்று அடையாளம் பிடிபடவில்லை. இந்தப் பக்கம் விருந்தாளியாக வந்திருக்கிறதோ? கண்களைச் சுற்றியும் ஓட்டிப் பார்த்தேன். இப்போது இருகுரல்கள் கேட்டன. ஒன்றுக்குப் பதில் சொல்லி இன்னொன்று. ‘குக்குக்…குர்ர்…’ சிறுஇடைவெளி விட்டு மீண்டும் ‘குக்குக் குர்ர்…’ குர் மட்டும் கொஞ்சம் நீளம். மணி அடித்த பின் அதன் அதிர்வொலி கொஞ்ச நேரம் கேட்குமே, அப்படி. ஆகா, இது மணிப்புறா அல்லவா?
சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு மின்கம்பியில் வந்தமர்ந்தது ஒரு மணி. இன்னொரு மணி வேம்புக்குள் இருந்து பதில் குரல் கொடுத்தது. இளஞ்ஜோடி. மணிப்புறாவில் தனிப்புறாவைப் பார்க்க முடியாது. மாடப்புறா போலக் கூட்டமும் போடாது. ஜோடி ஜோடியாக நடமாடும். சிறுகழுத்தும் குட்டித்தலையும் கொண்ட பறவை. அதற்கேற்ப இருகைக்குள் அடங்கும் உடல்வாகு. இது சாம்பல் நிற மணிபுறா. கழுத்தில் மணிகள் போல மினுங்கும் புள்ளிகளை வைத்துத்தான் இதற்கு ‘மணிப்புறா’ எனப் பெயர் வந்திருக்கும் எனச் சிலர் ஊகிக்கிறார்கள். இறக்கையிலும் பொறிகள் உண்டு. கருநிற வால். அடிப்பகுதி வெண்ணிறம். பார்த்துத் தீராத அழகு.
எனக்கென்னவோ அதன் மணிக்குரலைக் கேட்டுத்தான் பெயர் வைத்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. முடிதிருத்தி நேர்த்தியாகச் சீவிவிட்ட சிறுவனின் தலை போல இதன் சாம்பல் நிறத் தலை இருக்கும். மொட்டை அடித்துக் கொண்டிருக்கிறதோ என்றே தோன்றும். அந்தத் தலையில் கருங்குன்றிமணியாய் கண்கள் தெளிவாய் உருளும். மணிக்கல் போலத் தலை இருப்பதாலும் ‘மணிப்புறா’ ஆகியிருக்கலாம். குன்றிமணிக் கண்ணும் காரணமாக இருக்கலாம். எல்லாவகையிலும் பொருந்தும் இப்படியொரு பெயரைச் சூட்டிய அந்த முன்னோடியின் பாதத்திற்கு ஒரு கும்பிடு.
அகநானூறு 167ஆம் பாடலில் ‘மணிப்புறாத் துறந்த மரம்சோர் மாடம்’ என்று வருகிறது. பாழடைந்த ஊரைப் பற்றிய சித்திரம் வரும்போது தங்கியிருந்த மாடத்தை விட்டு நீங்கிய மணிப்புறாவைப் பற்றிப் புலவர் சொல்கிறார். ‘மணிப்புறா அமர்ந்த மரம்சேர் மாடி’ என்று அதை மாற்றிக்கொண்டேன். பல நூற்றாண்டுகளாகப் பெயர் மாறாத பறவை இது. ஜோடியில் ஒன்று இறந்துவிட்டால் இன்னொன்று கூழாங்கற்களை விழுங்கித் தற்கொலை செய்துகொள்ளும் என்று சொல்வோர் உண்டு. ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் கற்புக் கோட்பாட்டை கடைபிடிக்கும் பறவை இது என்போரும் உள்ளனர். இவையெல்லாம் நிரூபணம் இல்லாத கதைகள்.
மிகப் புகழ்பெற்ற ‘காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்பாடலில் ‘பறவைகளில் அவள் மணிப்புறா’ என்று கண்ணதாசன் எழுதியிருப்பார். பார்த்துக் கொண்டேயிருக்கலாம் எனத் தோன்றும் அதன் தோற்ற அழகைப் பெருமைப்படுத்தும் வரி. ‘மணிப்புறாக்களின் குரல் காதுக்கு ஆறுதலாகவிருக்கும்’ என்று மா.கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதன் குரலை அனுபவித்துக் கேட்டிருக்கிறார். காணவும் கேட்கவும் ஈர்க்கும் மணிப்புறா ஜோடி ஒன்று இங்கே வசிக்க வந்திருக்கிறது. தம் குஞ்சுகளோடு நெடுநாள் இங்கே தங்க வேண்டிக் கொள்கிறேன்.
—– 13-11-24
சிலருக்கு மட்டுமே பறவையின் குரல் கேட்கும். பெரும்பாலானவர்களின் செவிகள் அதை கவனிப்பதே இல்லை.
தவிட்டு குருவியை எங்கள் ஊரில் உழுவாத்தி என கூறுவார்கள்…
“தம் குஞ்சுகளோடு நெடுநாள் இங்கே தங்க வேண்டிக் கொள்கிறேன்” மிக அருமை
நல்ல பதிவு ஐயா
அருமை