கலைஞர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அவர்கள் வாழ்வைப் பதிவு செய்த எழுத்துக்கள் மிகவும் குறைவு. குறிப்பாக இசைக்கலைஞர்கள் பலரைப் பற்றிய செவிவழிக் கதைகள் வழங்குகின்றன. ஆதாரப்பூர்வமான வரலாறுகள் அரிது. கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார், மகா வைத்தியநாதையர் உள்ளிட்ட பல கலைஞர்களைப் பற்றி உ.வே.சா. எழுதிய கட்டுரைகள் முன்னோடியானவை. இசையில் மிகுந்த ஆர்வம் இருந்ததாலும் கலைஞர்களை நேரில் சந்தித்துப் பழகியதாலும் கிடைத்த தகவல்களைக் கொண்டு தம் பாணியில் உ.வே.சா. எழுதினார். காலத்தால் மறைந்து போகவிருந்த பல கீர்த்தனைகளை மீட்டெடுத்துக் கொடுத்தார். இசைக் கலைஞர்களைப் பற்றி அவர் எழுதிய கட்டுரைகளைத் தனியாகத் தொகுத்து ‘தலைமுறைக்கும் போதும்’ என்னும் தலைப்பில் காலச்சுவடு வெளியிட்டுள்ளது. பதிப்பாசிரியர் ப.சரவணன்.
உ.வே.சா. வழி தொடரவில்லை. இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இவ்வகை நூல்கள் ஓரளவு வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. நாகசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை இராஜரத்தினம் பிள்ளை வரலாறு, கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு முதலிய சில நூல்களை ப.சோழநாடன் எழுதினார். எனினும் இசைக் கலைஞர்களைப் பற்றிய எழுத்துத் துறை எப்போதாவது ஓரிருவர் உலவும் ஆளரவமற்றதாகவே நீடித்து வருகிறது. இசைக் கலைஞர்களில் பெரும்பாலோர் முறைசார் கல்வி பெற்றவர்கள் அல்ல. தம் துறையில் மூழ்குவார்களே தவிரப் பதிவுகளைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இசை ஆர்வமும் எழுத்துத் திறனும் கொண்டோர் எழுதினால் தான் உண்டு.
இருபதாம் நூற்றாண்டில் பத்திரிகைப் பெருக்கம் இருந்ததால் பல கலைஞர்களைப் பற்றிய செய்திகள் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. அவற்றைத் திரட்டினாலே சான்றாதாரம் கொண்ட நல்ல நூல்களை உருவாக்க முடியும். அதற்குத் தீவிர உழைப்பு வேண்டும். அவ்வகையில் காருகுறிச்சி அருணாசலம் பற்றிய இருநூல்கள் சமீபத்தில் வந்திருக்கின்றன. காருகுறிச்சியாருக்கு 2021இல் நூற்றாண்டு வந்தது. அதையொட்டி இந்நூல்கள் உருவாகியுள்ளன. காருகுறிச்சியின் வாசிப்பைக் கேட்காத தமிழர் இருக்க முடியாது. ‘சிங்கார வேலனே தேவா’ பாட்டுக்கு வாசித்தவர் எனச் சொன்னால் எல்லோருக்கும் தெரியும். அவருடைய ஆளுமைக்கு அது சிறுசான்றுதான். அவர் வாசிப்பின் பதிவுகள் கணிசமாகக் கிடைக்கின்றன. இசை ரசிகர்கள் பலர் நினைவில் அவர் இப்போதும் நீங்காமல் வாழ்கிறார். அத்தகைய பெரும் ஆளுமையைப் பற்றி இருநூல்கள்.
என்.ஏ.எஸ்.சிவகுமார் தொகுத்த ‘நின்றொளிரும் மின்னல் காருகுறிச்சி ப.அருணாசலம்’ என்னும் நூல் 2022இல் வெளியாயிற்று. இந்நூலில் ஆலாபனை, நிரவல், கல்பானாஸ்வரம், துக்கடா என நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கட்டுரைகளைத் தந்துள்ளார். ஆலாபனைப் பகுதி முந்தைய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் காருகுறிச்சியைப் பற்றி அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. தமிழ் இலக்கிய உலகுக்குக் காருகுறிச்சியைத் தம் எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் கி.ராஜநாராயணன். அவர் எழுதிய கட்டுரைப் பகுதிகள் முதலில் இடம்பெற்றுள்ளன. பா.மீ.சுந்தரம், ஈ.கிருஷ்ணய்யர், ஏ.கே.சி.நடராஜன் முதலியோர் கட்டுரைகள் தொடர்கின்றன.
நிரவல் பகுதியில் இன்றைய எழுத்தாளர்களின் பதிவுகள். சுகுமாரன், நாஞ்சில் நாடன், யுவன் சந்திரசேர்கர் உள்ளிட்ட பலரது கட்டுரைகள். கல்பனாஸ்வரம் பகுதியில் காருகுறிச்சியைப் பாத்திரமாகக் கொண்டு அ.முத்துலிங்கம், லலிதாராம், நரன் ஆகியோர் எழுதிய சிறுகதைகள். இறுதியாக உள்ள துக்கடாப் பகுதி பலரது நினைவுகளைக் கொண்ட சிறுசிறு பத்திகள்.
இதில் உணர்ச்சி மிகுந்த கட்டுரைகளும் உள்ளன. தகவல்களைத் தருபவையும் உள்ளன. சம்பவங்களை விவரிப்பவையும் உள்ளன. பெரும்பாலும் பத்திரிகைகளில் இருந்து திரட்டியவை. ஏற்கனவே எழுதி நூல்களில் இடம்பெற்றவை. கள ஆய்வு மூலம் பெற்ற தகவல்கள். இத்தனை உழைப்பை நல்கி உருவாக்கியுள்ள இந்நூலுக்கு விரிவான முன்னுரை இல்லை. நூலைத் தொகுத்த அனுபவம், கட்டுரைகளை நிரல்படுத்திய முறை பற்றித் தெளிவுகள் இல்லை. கல்கி, அண்ணா, கு.அழகிரிசாமி ஆகியோர் கட்டுரை ஆலாபனைப் பகுதியில் இடம்பெற்றிருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதே போலக் கால வரிசை இல்லை. எங்கிருந்து கட்டுரைகள் எடுக்கப்பட்டன என்னும் குறிப்புகளும் இல்லை. கட்டுரையாசிரியர் பற்றிக் கட்டுரைத் தொடக்கப் பக்கத்தில் சிறுகுறிப்பு மட்டும் உள்ளது.
நூலாக்கம் பற்றி இப்படிப்பட்ட ஆதங்கம் இருந்தாலும் கட்டுரைகளை வாசிக்கும்போது அதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை என்னும் உணர்வு தோன்றிவிடுகிறது. அரிதான படங்களும் நூலை நிறைக்கின்றன. அவர் எழுதிய கடிதங்கள் சிலவும் இடம்பெற்றுள்ளன. இதுநாள் வரை காருகுறிச்சி பற்றிப் பதிவானவை அனைத்தும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன என்றுதான் தோன்றுகிறது. அந்தளவு விரிவான தொகுப்பு.
காருகுறிச்சியின் நூற்றாண்டை ஒட்டிப் பல செயல்பாடுகளை முன்னெடுத்தவர் இசை ஆர்வலரும் எழுத்தாளருமான லலிதாராம். பரிவாதினி அறக்கட்டளை மூலமாக நிகழ்ச்சிகள் நடத்துதல், இசைப் பதிவுகளைத் தொகுத்து வெளியிடுதல், கற்கும் நூறு மாணவர்களுக்கு நாதஸ்வரக் கருவியை வாங்கித் தருதல், பல இடங்களில் உரையாற்றுதல் என அவர் செய்தவை பல. அவரது முகநூல் பதிவுகளைப் பின்பற்றி வருவதால் அவற்றை எல்லாம் அறிந்துகொள்ள முடிந்தது. அச்சமயத்தில் அவர் எழுதியவற்றின் தொகுப்பாகக் ‘காருகுறிச்சியைத் தேடி’ நூல் இப்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘இசை இளவரசர் ஜி.என்.பி.’, ‘துருவ நட்சத்திரம் பழனி சுப்ரமணிய பிள்ளை’ முதலிய நூல்களை எழுதிய அனுபவம் கொண்டவர் லலிதாராம்.
‘காருகுறிச்சியாரைத் தேடி’ என்னும் முதற்கட்டுரை அவரது கள ஆய்வு அனுபவங்களைச் சுவையுடனும் பல தகவல்களுடனும் தருகிறது. மக்கள் பலரது நினைவுகளில் காருகுறிச்சியின் இசை ஆழப் பதிந்திருப்பதை இக்கட்டுரை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளது. அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் பயணம் செய்யும் எண்ணம் தோன்றும் வகையிலான கட்டுரை.
இதில் இரண்டு சிறுகதைகள் உள்ளன. அவை காருகுறிச்சி வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் வலுவைப் பற்றிக் கொண்டவை. ‘நேனெந்து வெதுகுரா’ கதை இசை ரசிகர் ஒருவரைப் பற்றியது. மனம் கலங்க வைக்கும் சம்பவம். ‘சால கல்லலாடு’ கதை காருகுறிச்சி வாழ்க்கைச் சம்பவம். இதில் அவர் தந்தை பாத்திரத்தின் உளவியலைப் பிடிக்க முயன்றிருக்கிறார். அதற்குப் புனைவு கைகொடுத்திருக்கிறது.
‘காருகுறிச்சியின் திரையிசை’ என்றொரு கட்டுரை. ‘கொஞ்சும் சலங்கை’ படத்தில் ‘சிங்கார வேலனே தேவா’ பாட்டுக்கு அவர் வாசித்ததை அனைவரும் அறிவர். அப்படத்தில் வேறு காட்சிகளில் வரும் வாசிப்பைத் தேடிக் கேட்டு அவற்றைப் பற்றி எழுதிய கட்டுரை இது. முகநூலில் அவர் வெளியிட்ட போது வாசித்துவிட்டு அத்திரைப்படத்தை நானும் பார்த்தேன். நுட்பமான தேடல் மூலம் நல்ல இசையை அறிமுகப்படுத்திய கட்டுரை.
இன்னும் சில கட்டுரைகளும் நல்ல படங்களும் நூலில் உள்ளன. ‘ஜில்லா’ போன்ற வழக்கொழிந்த சொற்கள் ஒன்றிரண்டு வந்துள்ளன. பழமையைக் காட்ட அப்படிப் பயன்படுத்தியுள்ளார். இசையைப் பற்றிப் பேசுகையில் பெரும்பரவசத்திற்கு லலிதாராம் ஆளாகிவிடுகிறார். தரையிலிருந்து எம்பி மிதந்து கொண்டே எழுதுகிறார் எனத் தோன்றும்படியான மிகைத்தன்மையின் அளவைச் சற்றே குறைத்திருக்கலாம். மற்றபடி எளிய மொழியில் எழுதிய நூல் இது. இதற்கு ஒரு பொருளடக்கம் இருந்திருந்தால் நன்று.
நூல் விவரம்:
- என்.ஏ.எஸ்.சிவகுமார் (தொ.ஆ.), நின்றொளிரும் மின்னல் காருக்குறிச்சி ப.அருணாசலம், அட்சரம் பதிப்பகம், கோவில்பட்டி, விலை ரூ.300/-
- லலிதாராம், காருகுறிச்சியைத் தேடி, எழுத்து பிரசுரம், சென்னை, விலை ரூ.200/-
—– 08-01-24
Add your first comment to this post