நெருங்கிச் செல்லும் அனுபவம்

You are currently viewing நெருங்கிச் செல்லும் அனுபவம்

 

கல்லூரிகளுக்கு உரையாற்றச் செல்வதில் எனக்குப் பெரிதாக விருப்பம் இல்லை. அதற்கு ஆசிரியர்கள் தான் காரணம். எழுத்தாளர் என்றால் அவர்களுக்கு இளப்பம். அழைக்கத் தொடங்கியதிலிருந்து கடைசி வரைக்கும் பணம் பற்றிப் புலம்பிக் கொண்டேயிருப்பார்கள். போக்குவரவுச் செலவு கொடுக்கக்கூட மூக்கால் அழுவார்கள். எழுத்தாளருக்கு மேடை அமைத்துத் தருகிறோம், நன்றி விசுவாசத்தோடு வந்து பேசிப் போக வேண்டும் என்பது அவர்கள் எண்ணம்; எதிர்பார்ப்பு.

அரசு கல்வி நிறுவனங்களில் உண்மையில் தொகை இருக்காது. இருந்தாலும் அதைச் செலவழிக்க ஆயிரம் விதிகள் இருக்கும். அவற்றிற்கு உட்பட்டோ மீறியோ தொகையை ஒதுக்க முதல்வருக்குத் தைரியம் வேண்டும். அது கஷ்டம். மாணவர்களிடம் எதுவும் வசூலிக்கக் கூடாது. வசூலிக்கவும் முடியாது. கொடுக்கும் நிலையிலும் மாணவர்கள் இருக்க மாட்டார்கள். சில ஆசிரியர்கள் தம் கைப்பணத்தைச் செலவு செய்வதுண்டு. வாசிப்பு அனுபவமும் எழுத்தாளர் மீதான மதிப்பும் கொண்டிருக்கும் ஆசிரியர் அழைத்தால் அரசு கல்லூரிக்குச் செல்வதில் எனக்கு மனத்தடை ஏதுமில்லை. அங்கே பல்லாண்டுகள் பணியாற்றிய அனுபவம் காரணமாகவும் அந்த மாணவர்கள் மீதுள்ள அன்பாலும் அதைக் கடமையாகக் கருதுவேன்.

சுயநிதிக் கல்லூரிகள் எழுத்தாளர் விஷயத்தில் பெரும் பிசினாறிகள். வந்து பேசுபவர் பிரபலமான நடிகராகவோ பேச்சாளராகவோ இருக்க வேண்டும். அப்போது தான் பத்திரிகைகளில் செய்திகள் வரும்; அவற்றைப் பார்த்து தம் பிள்ளைகளைச் சேர்க்கப் பெற்றோர் படையெடுத்து வருவார்கள் என்று நினைப்பு. லட்சக்கணக்கில் செலவு செய்தும் பிரபலங்களை அழைத்து வருவார்கள். அந்தக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர் யாராவது எழுத்தாளரை அழைத்தால் உண்டு. அதுவும் சிறுநிகழ்ச்சியாக இருக்கும். தேசியத் தர நிர்ணயக் குழு வழங்கும் அங்கீகாரத்திற்குக் கணக்குக் காட்ட இந்த நிகழ்ச்சி பயன்படும். நிர்வாகத்திற்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் எண்ணத்தில் செலவில்லாமல் எழுத்தாளரை அழைக்க ஆசிரியர்கள் முயல்வர். சுயநிதிக் கல்லூரிக்கு அழைத்தாலே எனக்கு ஒருவித ஒவ்வாமை வந்துவிடும். முடிந்தவரை தவிர்க்கவே முயல்வேன்.

என்னுடன் பணியாற்றிய பேராசிரியர் ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு சுயநிதிக் கல்லூரி ஒன்றிற்கு முதல்வராகப் போய்ச் சேர்ந்தார். அரசு கல்லூரியில் ஏமாற்றித் திரிந்த பாவத்திற்குப் பலனாக அங்கே இரண்டு மூன்று மடங்கு வேலை செய்தார். பொதுவாகவே அப்படித்தான். அரசு கல்லூரியில் பணியாற்றும்போது அங்கே கிடைக்கும் சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வர். ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற்றாலும் தனியார் கல்லூரிக்குப் போய்க் குறைந்த ஊதியத்திற்கு மாடு மாதிரி வேலை செய்வர். அரசுக்குக் காட்டாத விசுவாசத்தை எல்லாம் தனியார் முதலாளிக்குக் காட்டுவர். அந்த அரசு கல்லூரிப் பேராசிரியர், தனியார் கல்லூரி முதல்வர் தமிழ் மன்ற நிகழ்வில் பேச வேண்டும் என்று என்னை அழைத்தார். இரண்டு கோரிக்கை என்னிடம் வைத்தார்.

எங்கள் மாணவர் நலன் கருதி நீங்கள் வந்து பேச வேண்டும் என்பது முதல் கோரிக்கை. அதாவது பணம் எதுவும் கேட்காமல் வந்து பேச வேண்டும் என்பதை நயமாகச் சொன்னார். தங்கள் கல்லூரி நூலகத்திற்கு என் நூல்களை எல்லாம் இலவசமாக வழங்க வேண்டும் என்பது இரண்டாம் கோரிக்கை. இதுதான் என்னை எரிச்சல் படுத்தியது. நாமக்கல்லில் உள்ள கல்லூரி என்பதால் போய்ப் பேசிவிட்டு வரலாம். ஆனால் புத்தகங்களைக் கொடுக்க வேண்டுமாம். அக்கல்லூரி நூலகத்தில் என் நூல்கள் இடம்பெறுவது எத்தனை பெரிய கௌரவம்! மாணவர்களிடம் கொள்ளையடித்து இரண்டு ஏக்கர் நிலத்தில் நீச்சல் குளம், வீட்டுத் திரையரங்கம் எல்லாம் கொண்ட வீடு கட்டி வாழும் முதலாளி நடத்தும் கல்லூரிக்கு நான் இலவசமாகக் கொடுக்க வேண்டுமாம். ஓர் எழுத்தாளரிடம் இப்படிக் கேட்கத் துணிச்சல் வருகிறது பாருங்கள்.

இன்னொரு ஆசிரியர் சுயநிதிக் கல்லூரி ஒன்றின் பங்காளி. அதாவது கல்லூரி முதலாளிகளில் ஒருவர். மனைவி பெயரிலோ மாமியார் பெயரிலோ கூட்டுச் சேர்ந்திருந்தார். ‘எங்கள் கல்லூரிக்கு ஒருநாள்  வாருங்கள். உங்களைக் கௌரவித்து விடுவோம்’ என்றார். தமிழ் மன்ற விழாவில் இலவசமாகப் பேச அழைப்பது தான் எனக்குச் செய்யும் கௌரவம் என்பது பிறகுதான் புரிந்தது. ஏதோ சொல்லித் தவிர்த்து விட்டேன். அவர் கொடுத்த கௌரவத்தை ஏற்காததால் என்னைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்வார். முதலாளி சகவாசம் தன்மானத்திற்குக் கேடு.

எழுத்தாளர்களை மதிக்கும் கல்லூரி நிர்வாகம் அரிது. அவற்றுள் ஒன்று சென்னை வண்டலூர் பகுதியில் உள்ள கிரசென்ட் பல்கலைக்கழகம். ஒரு மாதத்திற்கு முன் கிரசென்ட் சட்டக் கல்லூரிப் பேராசிரியர் நசீன் எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். என் வாசகர் என்று தம்மை அறிமுகம் செய்திருந்தார். பூனாச்சி, மாதொருபாகன் முதலிய நாவல்களை வாசித்திருப்பதாகவும் தங்கள் நிறுவன நிகழ்ச்சி ஒன்றிற்குப் பேச வந்தால் மகிழ்வோம் என்றும் செய்தி. ஆசிரியராக அழைத்திருந்தால் யோசித்திருப்பேன். வாசகர் அல்லவா? விவரம் கேட்டேன். நூலகம் சார்பாக நடந்து வரும் ‘வாசிப்போர் மன்றம்’ நிகழ்வில் பேச வேண்டும் என்றார். மதுரையில் ‘ஒரு ஊருல’ நிகழ்வு முடிந்து தொடர் பயணம் எனினும் ஒத்துக் கொண்டேன். என் நிபந்தனைகள் என்னவென்று கேட்டார். எழுத்தாளனுக்கு என்ன பெரிய நிபந்தனைகள். எளியவைதான். சொன்னேன். நிர்வாகம் அப்படியே ஏற்றுக் கொண்டது.

நெருங்கிச் செல்லும் அனுபவம்

வாசிப்போர் மன்றத்தைப் பொறுப்பெடுத்து நடத்தும் நூலகர் பன்னீர்செல்வம் தொடர்புக்கு வந்தார். பயணம் குறித்தானவற்றைப் பார்த்துக் கொண்டார். செல்பேசி உரையாடலில் ‘நிறையப் புத்தகம் படிக்கணும்னு மாணவர்களுக்குச் சொல்லுங்க ஐயா’ என்றார். சில இடங்களில் உரையாற்ற அழைக்கும் பேராசிரியர்களே நான் என்ன பேச வேண்டும் எனக் குறிப்பு தருவார்கள். குறுக்கிடாமல் கேட்டுக்கொள்வேன். குறிப்பை அவர்கள் விரித்துரைக்கும் அளவு மிகும் போது  ‘அதை நீங்களே பேசிவிடலாமே. நான் எதற்கு?’ என்று சொல்லும்படி நேர்ந்துவிடும். அவர்கள் சொல்வதை ஒப்பிக்கும் கிளிப்பிள்ளையா நான்? நூலகர் சொன்னது அப்படியல்ல. ஒரே வாக்கியம்தான். மாணவர்களை வாசிக்க வைக்க வேண்டும் என்னும் ஆதங்கம் அதில் தொனித்தது. என்னைப் போன்றவர்கள் எடுத்துச் சொன்னால் மாணவர்களுக்குப் போய்ச் சேரும் என்னும் நம்பிக்கை.

வாசிப்போர் மன்றத்தில் புத்தகத்தைப் பற்றி வேறென்ன பேச முடியும்? 25-11-24 அன்று முற்பகல் நடைபெற்ற அந்நிகழ்வு மிகச் சிறப்பானது. நான் சென்னைக்கு வரும் போதெல்லாம் தேடி வந்து சந்திப்பவர் எழுத்தாளர் செல்லபெருமாள் (இந்து செல்லா). இப்போது கல்பாக்கத்தில் வசிக்கும் அவர் அதிகாலையில் புறப்பட்டு வந்து தம் மகிழுந்திலேயே என்னை அழைத்துச் சென்றார். என் உறவினர் ஸ்ரீதர் உடன் வந்தார். மூவருக்கும் நல்ல வரவேற்பும் கவனிப்பும்.

பல்கலைக்கழகத் துணைவேந்தர் முருகேசன்  மிக இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தார். தமக்குத் துறை சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காக வாசிப்பதைத் தவிரப் பொதுவான புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லை என்பதை ஒத்துக் கொண்டார். தம் குடும்பத்தில் பலருக்கு வாசிப்புப் பழக்கம் இருப்பதைப் பகிர்ந்து கொண்டார். தமிழ் வழியில் பயின்று முன்னேறி வந்த தம் பின்னணி குறித்தும் கொஞ்சம் சொன்னார். துணைவேந்தர் இப்படி வெளிப்படையாகப் பேசியது பிடித்திருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது. பிரம்மாண்ட அரங்கு. நல்ல ஒலிவாங்கி அமைப்பு.

அது சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனம். ஆகவே வழிபாட்டுப் பாடலும் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடினர். வரவேற்புரை, வாழ்த்துரை, தலைமையுரை எல்லாம் குறிப்பிட்ட கால அளவில் முடிந்தன. என்னை அறிமுகப்படுத்திய தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ராதிகாவும் சுருக்கமாகச் சொல்லிச் சென்றது நிம்மதியாக இருந்தது. என் உரைக்கு இருபது நிமிடம் என்றிருந்தார்கள். ஆனால் இருமடங்கு நேரம் எடுத்துக் கொண்டேன். நானூறு கிலோ மீட்டர் பயணம் செய்து போய் முக்கால் மணி நேரம்கூடப் பேச முடியாவிட்டால் அது என்ன கூட்டம்?

இன்றைய இளைஞர்கள் வாசிப்பதில்லை என்று குறை கூறும் குரல் பொதுவில் வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடில்லை. முந்தைய தலைமுறைக்குக் கிடைக்காத வாசிப்பு வாய்ப்புகள் இன்றைய தலைமுறைக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. யாரும் வாசிக்காமல் ஒருநாளைக் கடக்க முடியாது. புலனத்தில் நாலு வரியாவது தினமும் வாசிக்கிறார்கள். அதே போலச் சிலவரியாவது எழுதுகிறார்கள். சமூக ஊடகங்களில் எதையாவது பதிவிடுகிறார்கள். பிறர் பதிவுகளில் பலவற்றைத் தள்ளினாலும் சிலவற்றை வாசிக்கிறார்கள். அதையெல்லாம் ஆரோக்கியமாகவே பார்க்கிறேன்.

எனினும் அச்சு நூல்களை வாசிப்பது தனியொரு அனுபவம். ஒரு மலரைப் புகைப்படத்திலோ காணொலியிலோ பார்ப்பதைக் காட்டிலும் நேரிலே பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் போன்றது அது. மின்னூல், பிடிஎப் முதலிய வடிவங்களில் நூலை வாசிக்கலாம். ஒலிநூல்கள் வந்துவிட்டன. அவற்றைக் கேட்கலாம். எனினும் அவையெல்லாம் நூல்களை வேறொரு வடிவத்திற்கு மாற்றியவைதான். பதிலிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். புத்தகத்திற்கு என்றே ஒருவடிவத்தைச் சொல்ல வேண்டுமானால் அது அச்சு நூல்தான். அச்சு நூல் கையில் இருந்தாலே தன்னம்பிக்கை கிடைக்கும். அச்சு நூலைப் புரட்டி வாசிக்கும்போது வாழ்வோடு நெருங்கிச் செல்லும் அனுபவம் வாய்க்கும்.

இந்தக் கருத்துக்களை மையமாக வைத்துத்தான் என் உரையை அமைத்துக்கொண்டேன். துணைவேந்தர் தம் பொதுவாசிப்பைத் தொடங்க வேண்டும் என்று கூறிப்  ‘பூனாச்சி’ நாவலை அவருக்குப் பரிசளித்தேன். அக்கல்லூரி ஆங்கிலத் துறைப் பாடத்திட்டத்தில் பூனாச்சி நாவல் இருப்பதை நிகழ்ச்சி முடிவில்தான் அறிந்தேன். ஆங்கிலத் துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவர்கள் எல்லோரும் வந்து பேசினர். ஆங்கில மொழிபெயர்ப்பையும் தமிழ் மூலத்தையும் ஒப்பிட்டு வாசிக்கும் வகையில் மொழிபெயர்ப்புத் தாளில் பூனாச்சி பாடம். மகிழ்ச்சியாக இருந்தது. ஆங்கிலத் துறை மாணவர்களுடன் உரையாட ஒருநிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அழைத்தனர். மாணவரோடான உரையாடல் எனக்குப் பிடித்தமானது என்று கூறி வருகிறேன் என்று சொன்னேன்.

நெருங்கிச் செல்லும் அனுபவம்

குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கியது போலவே குறிப்பிட்ட நேரத்தில் முடிந்தது. கலைக்கல்லூரி, சட்டக் கல்லூரி எனப் பல கல்வி நிறுவனங்களைக் கொண்ட அப்பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்களிடையே போட்டியாம். குறைந்த அளவே இடங்கள் இருப்பதால் மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள். பெருமரங்களும் அழகான கட்டிடங்களும் மட்டுமல்ல, நல்ல வாசிப்பாளர்களையும் கொண்ட அப்பல்கலைக்கழக நிகழ்ச்சி மனதுக்கு நிறைவாக அமைந்தது.

—–  04-12-24

Latest comments (2)

Bharath Thamizh

அருமை ஐயா! எல்லாவற்றையும், எல்லாரையும் அம்பலப்படுத்தும் துணிச்சல் உங்கள் எழுத்துக்கு உண்டு.