செம்மையர் நஞ்சுண்டன்

You are currently viewing செம்மையர் நஞ்சுண்டன்

 

‘எடிட்டிங்கும் தமிழ் இலக்கியமும்’ என்னும்  தலைப்பில் ஷோபாசக்தி தம் முகநூலில் பதிவு எழுதியிருக்கிறார். எடிட்டிங் தொடர்பான அவர் கருத்துக்கள் அனைத்தும் எனக்கும் உடன்பானவை. அப்பதிவு எனக்குச் சில நினைவுகளைத் தூண்டியது.

அதில் எடிட்டிங் என்பதற்கு நிகரான சொல் பற்றி அவர் எழுதியிருக்கும் பகுதி இது:

‘…‘பதிப்பாசிரியர்’ என்பது ‘எடிட்டர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல்லாக இப்போது எனக்குப் படவில்லை. ‘தொகுப்பாளர்’ என்பதும் சரியானதல்ல. ‘செம்மையாக்கம்’ எனச் சொல்லலாமா என்றும் ஒரு யோசனை ஓடிக்கொண்டிருக்கிறது. இலக்கியப் பிரதி எடிட்டர் என்பதற்கு என்னதான் பொருத்தமான தமிழ்ச் சொல் என்று இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறேன்.’

‘செம்மையாக்கம்’ எனச் சொல்லலாமா என்று யோசனை ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார். மகிழ்ச்சி. அதையே பயன்படுத்தலாம் என்பதுதான் என் எண்ணம். நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் ‘துயரமும் துயர நிமித்தமும்’ 2004ஆம் ஆண்டு ‘காலச்சுவடு’ பதிப்பக வெளியீடாக வந்தது. காலச்சுவடு வெளியிட்ட என் முதல் நூல் அது. என் முதல் கட்டுரைத் தொகுப்பும் அதுதான். 2003, 2004ஆம் ஆகியவை என்னைப் பெருந்துயர் சூழ்ந்த ஆண்டுகள். அவற்றை எதிர்கொண்ட மனநிலையில் நூலுக்கு அப்படித் தலைப்பு வைத்தேன். பாவண்ணன் படைப்புகள் பற்றி எழுதிய கட்டுரைக்கு வைத்திருந்த தலைப்பு என் மனநிலைக்குப் பொருந்தி நூலுக்கும் தலைப்பாயிற்று. நூல் வந்த பிறகு ‘மங்கல வழக்கு நிலவும் தமிழ் மரபில் துயரமும் துயர நிமித்தமும் என்று தலைப்பு வைக்கத் துணிச்சல் வேண்டும்’ என்று நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி சொன்னார். துணிச்சலோ இல்லையோ அப்போது என் வாழ்வைச் சூழ்ந்த துயர்களை எல்லாம் சுருட்டி எடுத்துப் பொதிந்து கொண்ட தலைப்பாக அது அமைந்தது.

எழுத்தாளர் நஞ்சுண்டன் முதன்முதலாகச் செம்மையாக்கிய நூலும் அதுதான். அவர் புள்ளியியல் பேராசிரியர். நான் தமிழ்ப் பேராசிரியர். அவர் சுயமாக இலக்கணம் கற்றுக் கொண்டார். செம்மையாக்கம் தொடர்பாக ஆங்கிலம் வழியாகவும் பலவற்றைக் கற்றார். அவர் கற்றவற்றைப் பரீட்சித்துப் பார்க்கும் களமாக என் நூல் அமைந்தது. அது இருவருக்குமே பேரனுபவம். என் தமிழாசிரிய மனோபாவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத்தாளர் பார்வையிலிருந்து அவரை அணுகினேன். அவரோ எழுத்தாளர் மட்டுமல்ல, இலக்கணம் ஓரளவு அறிந்த தமிழாசிரியரின் நூலைப் பார்க்கிறோம் என்னும் எச்சரிக்கை உணர்வோடு  என்னை அணுகினார். ஏற்கனவே இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால் சிக்கல்களை எல்லாம் முரணின்றித் தீர்த்துக் கொண்டோம்.

அந்நூல் வேலை முடிந்ததும் கட்டுரைகள் தொடர்பாக அவருக்குத் தோன்றிய சுவையான குறிப்புகளைக் கொண்டு சிறுகட்டுரை எழுதி என்னிடம் கொடுத்தார். அரிய தகவல்கள், விமர்சனம், செம்மையாக்கக் குறிப்புகள் எல்லாம் கொண்ட நல்ல கட்டுரை அது. பின்னொரு சமயத்தில் அதை மேம்படுத்தி வெளியிடலாம் என்று இருவரும் பேசிக் கொண்டோம். அப்போதே கணியச்சு செய்யும் வழக்கம் அவரிடம் வந்திருந்தது. அவர் கொடுத்த ஒருபிரதி என்னிடம் இருந்தது. அது எங்கோ என் புதையலுக்குள் கிடக்கிறது என்று நினைக்கிறேன். எப்போதாவது அகப்படும் என்று நம்புகிறேன். அந்நூலுக்கு ‘நிராகரிப்பின் உந்துதல்’ என முன்னுரை எழுதினேன். எனக்குப் பிடித்த முன்னுரை அது. நஞ்சுண்டன் கட்டுரையிலிருந்து இருகுறிப்புகளையும் அம்முன்னுரையில் மேற்கோள் காட்டியிருந்தேன்.

செம்மையர் நஞ்சுண்டன்

அது ஒருபுறம் இருக்கட்டும். எடிட்டிங்கிற்கு நிகரான தமிழ்ச் சொல்லாகச் ‘செம்மையாக்கம்’ என்பதை அம்முன்னுரையில் தான் கையாண்டேன்.  ‘இக்கட்டுரைகளை நுட்பமாக வாசித்துச் செம்மையாக்கம் (எடிட்டிங்) செய்து கொடுத்த நஞ்சுண்டன்’ என்று அவருக்கு நன்றி தெரிவிக்கும் தொடரை எழுதியிருந்தேன். திரைப்படத்தில் ‘படத்தொகுப்பு’ எனப் பயன்படுத்தும் வழக்கம் உண்டு. காட்சிகளை வெட்டி ஒட்டித் தொகுப்பதால் அச்சொல் பொருந்தியது. புத்தக எடிட்டிங்கிற்கு அது பொருத்தம் எனப் படவில்லை. மொழிப்பிழை களைதல், தகவல்களைச் சரிபார்த்தல், கூறியது கூறல் முதலிய குற்றங்களை நீக்குதல், பொருட்பொருத்தம் காணுதல், செறிவாக்குதல் முதலிய பல செயல்பாடுகளைக் கொண்ட எடிட்டிங்கைக் குறிக்கச்  ‘செம்மையாக்கம்’ எனக்குப் பொருத்தமாகப் பட்டது. செம்மைப்படுத்துதல், செம்மை செய்தல் என்றெல்லாம் யோசித்துச் ‘செம்மையாக்கம்’ என்பதற்கு வந்து சேர்ந்தேன்.

அச்சொல்லாக்கம் நஞ்சுண்டனுக்குப் பெரிதும் பிடித்தது. தொலைபேசியில் பாராட்டினார். நஞ்சுண்டன் உணர்ச்சிவயமானவர். பாராட்டைக் கொண்டாட்டமாக மாற்றுவார். அடுத்த முறை நாமக்கல் வரும்போது பெங்களூருவில் இருந்து நல்ல விஸ்கி ஒன்றைக் கொண்டு வந்தார். பெங்களூருப் பலகாரங்களும் இருந்தன. விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கிச் செம்மையாக்கத்தையும் நூல் வெளியீட்டையும் முழுமையாகக் கொண்டாடினோம்.

அதன் பிறகு செம்மையாக்கத்தைத் தம் தீவிரப் பணியாக அவர் மேற்கொண்டார். அச்சொல்லைத் தம் எழுத்துக்களில் தொடர்ந்து பயன்படுத்தினார். எடிட்டர் என்பதைச் ‘செம்மையாக்குநர்’ என்று ஒரு கட்டுரையிலோ முன்னுரையிலோ பயன்படுத்தினேன். அதுவும் அவருக்குப் பிடித்திருந்தது. தாம் எடிட்டிங் செய்த சிறுகதைகளை வெளியிடுவதற்காக இதழ் ஒன்றைத் தொடங்கி அதற்குச் ‘செம்மை’ என்று பெயர் சூட்டினார். ஓரிதழ்தான் வெளியாயிற்று என நினைக்கிறேன். நானும் நஞ்சுண்டனும் மட்டுமல்ல, காலச்சுவடு நூல்களிலும் இதழிலும் பரவலாகச்  ‘செம்மையாக்கம்’ பயன்பட்டது; பயன்படுகிறது.

ஷோபாசக்தியின் பதிவைப் பகிர்ந்திருக்கும் பேராசிரியர் மதிவாணன்  ‘செவ்விதாக்கம் என்பதையே பரவலாக்கலாம்’ என்று கூறியிருக்கிறார். அதைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி உருவாக்கியத்தையும் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் வீ.அரசு உள்ளிடச் சிலர் இதைப் பயன்படுத்துவதையும் கண்டிருக்கிறேன். இருவரும் கா.சிவத்தம்பி மீது பெரும்பற்றுக் கொண்டவர்கள். எனக்கும் பற்றுண்டு. எனினும் அவரது சொல்லாக்கங்கள் எனக்குப் பிடித்தமானவை அல்ல. தமிழல்லாத வேறொரு மொழியைப் படிக்கும் உணர்வைத் தருபவை. ஆகவே  ‘செவ்விதாக்கம்’ எனக்கு இயல்பாகப் படவில்லை.

இது மூன்று சொற்களால் ஆகி தெளிவான இடைநிறுத்தமும் கொண்டுள்ளது. ஒலிப்பிற்கு வாகாக இல்லாமல் சற்றே விலகல் தன்மையும் கொண்டிருப்பதாகப் படுகிறது. ‘செம்மையாக்கம்’ ஒருசொல் நீர்மையைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. செம்மை சமகாலச் சொல்லாக எல்லோர் மனதிலும் இருக்கிறது. அப்படித் தோன்றினாலும் மிகப் பழைய சொல் இது. பழமைக்கு நாம் முதலில் நாடிச் செல்லும் தொல்காப்பியத்திலேயே ஆட்சி பெற்ற சொல். பெண்பாலர் பண்புகளைப் பட்டியலிடும் தொல்காப்பியர் ‘செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பா லான’ (பொருளியல், 206) என்கிறார். மிகப் பழைய சொல் எனினும் ‘செம்மை’ இன்றும் இயல்பாக மொழியில் புழங்கும் சமகாலத் தன்மை இச்சொல்லின் சிறப்பு. அதனால் அனைவருக்கும் புரியும் எளிமையும் கொண்டிருக்கிறது.

‘ஆக்கம் கூட வேண்டாம். செம்மை மட்டும் போதும்’ என்று நஞ்சுண்டன் கருதினார். அதனால்தான் தம் இதழுக்குச் ‘செம்மை’ எனப் பெயரிட்டார்.  ‘செம்மையாக்கம் செய்த நஞ்சுண்டன்’ என்பதை விடச் ‘செம்மை செய்த நஞ்சுண்டன்’ என்றால் பொருத்தமாகவே இருக்கிறது. செம்மையாக்குநர் என்பதைச் ‘செம்மையர்’ என்று சொல்லலாமா என்றும் பேசினோம். க்ரியா ராமகிருஷ்ணன், தமிழினி வசந்தகுமார், சி.மோகன்  ஆகியோர் செம்மை முன்னோடிகள் எனக் கருதுகிறேன். எனினும் அதைப் பரவலாக்கி ஓர் இயக்கமாகக் கட்டமைக்க முயன்றவர் நஞ்சுண்டன். ஐம்பது நூல்களுக்கு மேல் அவர் செம்மை செய்திருக்கக் கூடும். ‘செம்மையர் நஞ்சுண்டன்’ என்று குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றியவர் அவர். முதலில் நான் பயன்படுத்தினாலும் ஏற்றுப் பெருவழக்காக்கிய நஞ்சுண்டன் நினைவையும் உட்கொண்டிருப்பதால் இருபதாண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருந்துவரும் ‘செம்மை’தான் என் பரிந்துரை.

—–   22-11-25

Add your first comment to this post