‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி

You are currently viewing ‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி

புதிதாக எழுதிக் கொண்டிருக்கும் ‘கழிமுகம்’ நாவலில் இருந்து ஒரு பகுதி:

மனம் என்னவோ நிலைகொள்ளவில்லை. இத்தனை விலைக்குச் செல்பேசி வேண்டும் எனக் கேட்க அவனுக்கு எப்படித் தைரியம் வந்தது? அதுவும் நேரடியாகப் பேசிக் கேட்கிறானே. அவன் அம்மாவுக்குத் தெரிந்திருக்குமா? அம்மாவும் அதிர்ந்து போய் ‘நான் கேட்க மாட்டேன். நீயே வேண்டுமானால் கேட்டுக்கொள்’ என்று கை கழுவிய பிறகே துணிந்து நேரடியாகப் பேசியிருப்பானா? அப்பாவின் வேலை, சம்பளம், குடும்ப நிலை எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்கும்தானே. அப்புறம் எப்படி இப்படிக் கேட்க முடிகிறது? இன்னுமா விவரம் இல்லாத சின்னப் பையன்? இன்னும் நான்கே வருடம். ஒவ்வொரு பருவத்திலும் தொண்ணூறு சதவீதம் மதிப்பெண் வாங்க வேண்டும். எப்படியும் எண்பதுக்குக் குறையாது என்பது அவர் முடிவு. படிப்பு முடிந்துவிடும். கடைசி வருச வளாகத் தேர்வில் வேலையும் கிடைத்துவிடும். கை நிறையச் சம்பாத்தியம் கிடைக்கும். உடனே திருமணத்திற்குப் பெண் பார்த்தால் அதிகபட்சம் ஒரு வருசத்தில் முடித்துவிடலாம். வேலையும் சம்பாத்தியமும் வந்த பிறகு தள்ளிப்போடக் கூடாது. மனம் அலைபாய ஆரம்பிக்கும். பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாது. பணத்தைக் கையில் பார்த்தால் பெற்றோரை மதிப்பானா என்பதும் சந்தேகம்தான்.

அவருடைய திட்டத்தில் எந்த இடத்திலும் இந்தச் செல்பேசி கிடையாது. புதிதாக வந்து முளைத்திருக்கிற இந்தச் சனியனை எப்படி விலக்குவது? இந்த ஆசை அவனுக்குள் பாலாடை போல உருவாகியிருக்கிறதா, புற்றுப் போல எழும்பியிருக்கிறதா? பாலாடை என்றால் ஒரே ஊதலில் ஓரம் கட்டிவிடலாம். ஒற்றை விரலால் சுருட்டியெடுத்து வீசிவிடலாம். புற்றென்றால் அழிப்பது சுலபமல்ல. அதன் மூலம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிவது கடினம். மண்ணோடு மண்ணாய் நிரவிய பிறகும் ஓரிருநாள் அவகாசத்தில் ஈரமண் முளைத்திருக்கும். இவனுக்குள் இந்த ஆசை எப்படி வந்து முளைத்திருக்கும்? உடனிருக்கும் பையன்கள் அவன் வைத்திருக்கும் செல்பேசியைக் கேலி பேசுகிறார்களாமே. அவர்கள்தான் இந்தப் புற்றைக் கட்டி எழுப்பியிருப்பார்கள். சில பணக்கார வீட்டுக் கழுதைகள் படிக்கவென்று வந்துவிடுகின்றன. அவற்றுக்குப் படிப்பு மேல் ஒருபோதும் அக்கறை இருப்பதில்லை. அப்பன்கள் சம்பாதித்து வைத்த கோடிகள் கொட்டிக் கிடக்கும். அவற்றில் கொஞ்சத்தை அள்ளிச் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு வந்துவிடுவான்கள். எந்நேரமும் பணத்தைச் செலவு செய்ய வேண்டும். அதற்கு எதையாவது உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள். மகன் மனதில் ஏறிவிட்ட இந்த முள்ளை எப்படிக் களைந்தெடுப்பது?

சுவர் மேல் சாய்ந்து யோசித்துக் கொண்டிருந்தவருக்குக் காலடிச் சத்தம் கேட்கவேயில்லை. ‘என்னைக்கும் போல இன்னைக்கும் தூக்கம் வர்லியா? எந்தக் கோட்டயப் புடிக்க இப்பிடி அண்ணாந்து பாத்துக்கிட்டுக் கெடக்கறீங்க?’ என்று அவர் அருகில் மங்காசுரியின் குரல் கேட்டதும் விடுபட்டார். மனைவியிடம் இந்த விஷயத்தைப் பேசலாமா வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது. மகன் ஏற்கனவே பேசியிருப்பான். இப்போது அவர் என்ன நினைக்கிறார் என நோட்டம் பார்க்கத்தான் இந்தப் பீடிகை. சதித் திட்டத்தில் பங்கு பெற்றுவிட்டு ஒன்றும் தெரியாதது போலப் பாவனை. ‘என்ன பேச்சயே காணாம்? வானத்துல மீன எண்ணிக்கிட்டு இருக்கறீங்களா? எண்ணி முடிக்க உங்க ஆயுசு போதுமா?’ என்றார் மங்காசுரி. தூண்டிலைத் தன் கையில் எடுத்தார் குமராசுரர்.

‘உம்மகன் பேசுனானா?’

‘பேசுனானே, ஒரு ஒம்போது மணியிருக்கும். நல்லாப் பேசுனானே, மெஸ்ஸுல இன்னைக்குக் குழிப் பணியாரம் போட்டாங்களாமா, பத்துப் பதினைஞ்சு தின்னானாமே. ஆனாலும் நான் சுடற மாதிரி வல்லீன்னு சொன்னானே. ஊருக்கு வாடா கண்ணு, நல்லதா நான் சுட்டுத் தர்றன்னு சொன்னனே.’

‘பணியாரக் கததான் பேசுனீங்களா? வேற ஒன்னும் சொல்லுலியா?’

‘சொல்லுலியே.’

‘நெசமே?’

‘நெசந்தாங்க. உங்ககிட்ட எதுனா சொன்னானா? என்னமோ மனசுல வெச்சுக்கிட்டுக் கேக்கற மாதிரி இருக்குது. அப்பிடி எதும் முக்கியமாச் சொல்லியிருந்தானா நான் சொல்ல மாட்டனா? உங்ககிட்டச் சொல்லாத நான் ஆருகிட்டப் போயிச் சொல்லுவன்? ஊடே கதி உருவாரமே சரணமுன்னு கெடக்கறவ நானு.’

‘செரி, செரி. நிறுத்து.’

‘நாலு வார்த்த நான் பேசீட்டா உங்களுக்குப் பொறுக்காதே. என்ன சொன்னான்? ஏன் இப்பிடி மருவறீங்க?’

‘உம்பையன் அதிசயமா இன்னைக்கு எனக்குப் பேசுனான். ஆனா ஏன் பேசுனான்னு ஆயிப்போச்சு. பேசாத கெடந்த கொழந்த மொத மொத வாய் தொறந்து பேசுச்சாமா, எப்பம்மா தாலி அறுப்ப அப்படீன்னு. அந்தக் கதயாச்சு இன்னைக்கு.’

‘எதுனா பணச்செலவு வெச்சிட்டானா? என்னவாமா?’

‘உம் பையனுக்கு புதுச்செல்போனு வேணுமாமா… புதுச்செல்போனு. அதும் அம்பதாயரத்துக்கும் மேல வெலயில.’

‘அப்பிடியா கேட்டான், அப்பிடியா கேட்டான். ஆகா, நல்லா மாட்டிக்கிட்டீங்களா? வாங்கிக் குடுங்க வாங்கிக் குடுங்க.’

இருளில் மனைவியின் முகம் சரியாகத் தெரியவில்லை என்றாலும் நட்சத்திரங்களை மிஞ்சும் பொலிவு தோன்றியதையும் குரலில் குதூகலம் பெருகுவதையும் அறிந்தார். மேற்கொண்டு பேச அவருக்குத் தோன்றவில்லை.

‘நாங் கேட்டா எதுனா வாங்கித் தர்றீங்களா? ஆசயா நல்ல சீல ஒன்னு வாங்கிக் குடுத்திருக்கறீங்களா? எதக் கேட்டாலும் இப்பப் பணமில்ல, அப்பறம் பாக்கலாம் பாக்கலாமின்னு சொல்வீங்க. உங்க அரும மகன் எது கேட்டாலும் வாங்கித் தந்துதான ஆவோனும்.’
மனைவியின் மகிழ்ச்சி அவருக்கு எரிச்சலை ஊட்டியது.

‘உனக்கு என்ன கொற வெச்சிட்டன். இந்த அளப்பு அளக்கற?’

‘இங்க எது நெறை? எல்லாம் கொறதான். கலியாணத்தப்பப் போட்டுக்கிட்டு வந்த ஒத்த நகையோட சரி. அதுக்கப்பறம் ஒன்னு எடுத்துக் குடுத்திருப்பீங்களா? எப்பக் கேட்டாலும் நமக்குப் பொண்ணா இருக்குது, நக சேத்து வெக்கன்னு சொல்லி வாயடச்சிருவீங்க. என்னயப் பாத்தா உங்களுக்குப் பொம்பளையாத் தெரியறதில்ல.’

‘ஆமா நகய மாட்டிக்கிட்டுப் பொம்மையா நிக்கப் போறயா? உம் மவனுக்கு மட்டும் இப்ப அம்பதாயரம் போட்டு வாங்கிக் குடுக்கப் போறனா? எங்கிட்ட ஏது காசு? எல்லாம் அவனச் சேக்கறதுக்கே ஏராளம் செலவாயிப் போச்சு.’

‘இப்ப இப்படித்தான் சொல்வீங்க. ஓசிச்சி ஓசிச்சிக் கடசீல வாங்கிக் குடுத்திருவீங்க. அதுதானா உங்க பழக்கம். வேண்ணாப் பந்தயம் கட்டிக்கலாமா?’

‘உங்கிட்டப் பந்தயம் கட்டித்தான் ஜெயிக்கறன்.’

‘செரி, என்ன போனு வேணுமின்னான்? பேரு சொன்னானா?’

‘அதெல்லாம் ஒன்னும் சொல்லுல. என்னமோ பாத்துக்கிட்டு இருக்கறன்னான். உனக்கு அஞ்சாறு கம்பெனி தெரியுமா?’

‘எல்லாம் எனக்கும் தெரியும். உங்களாட்டமா ஒன்னயும் தெரிஞ்சிக்காத இருப்பாங்க? இப்ப நான் கேக்கறன், அந்தப் போனக் குடுங்க.’

‘நான் எடுத்துக்கிட்டு வர்ல.’

அவர் மனைவி ஒரே ஓட்டமாகக் கீழே இறங்கிப் போனார். மனைவி மனதில் தன்மீது இத்தனை வெறுப்பு தேங்கிக் கிடக்கிறது என்பதை அறிந்து சோர்ந்து போனார். மகன்தான் சிறுவயது. இன்னும் உலக விஷயம் பிடிபடவில்லை. மனைவிக்குமா? அவருடைய வேலை அரசாங்கப் பற்சக்கரத்தின் கடைசிப்பல். கடைவாய்ப் பற்கள் என்னதான் வேலை செய்து கொடுத்தாலும் அவற்றுக்குச் செல்வாக்கு ஏது? எடுப்பாய்த் தெரியும் முன்னம் பற்களுக்கே முக்கியத்துவம். அவற்றுக்குத்தான் சம்பளமும் அதிகம். கடைப்பற்களுக்குக் கிடைப்பதெல்லாம் கொசுறு.

அந்த அலுவலகத்தில் கீழ்நிலை எழுத்தராகப் பணியில் சேர்ந்தார் அவர். கூடுதல் வருமானம் ஏதுமற்ற புள்ளிவிவரத் துறையில் பணி. அரசாங்கம் கேட்கும் புள்ளிவிவரங்களை ஒவ்வொரு துறையிடமும் கேட்டு வாங்கிக் கொடுக்க வேண்டும். தினந்தோறும் பலவிதமான கடிதங்களை எழுதுவதும் அனுப்புவதும்தான் வேலை. மாவட்ட நிர்வாகப் பெருங்கட்டிடத்தின் ஒரு கடைக்கோடியில் யாருக்கும் தெரியாத பொந்து ஒன்றுக்குள் சுருங்கிக் கிடக்கும் பகுதி அவரது அலுவலகம். அங்கே ஈக்களும் கொசுக்களுமே வரும். அவர் துறைக்கென்று ஒருபோதும் நிரந்தர மேலதிகாரி கிடையாது. வேறு ஏதாவது துறைக்கு இயக்குநராக இருக்கும் ஒருவரே இதற்கும் பொறுப்பாக இருப்பார். அவர் எப்போதாவது இந்த அலுவலகத்திற்கு வருவார். பெரும்பாலும் அவர் இருக்கும் இடத்திற்கே கோப்புகள் போய்விடும்.

அதில் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இப்போது கண்காணிப்பாளர் பதவி. பதவிதான் உயர்ந்திருக்கிறதே தவிர வேலை மாறவில்லை. இந்தத் துறைகளுக்கெல்லாம் எதற்கு ஆள் என முடிவு செய்து புதிதாக யாரையும் போடுவதில்லை என அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. கண்காணிப்பாளராக இருந்தாலும் இப்போதும் எழுத்தருக்குரிய வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். சம்பளத்திலும் பெரிய உயர்வு ஒன்றுமில்லை. விலைவாசி ஏறுவதற்கேற்ப ஊதியமும் உயர்ந்திருக்கிறது. அவ்வளவுதான். வங்கிக் கடன் வாங்கிச் சிறு வீட்டைக் கட்டியிருக்கிறார். ஓய்வு பெற்றுச் சில ஆண்டுகள் வரைக்கும்கூட அதற்குத் தவணைத் தொகை செலுத்த வேண்டும். அதைத் தாண்டி மகனைப் படிக்க வைக்க முடிந்திருக்கிறது. இதில் நகை நட்டு பாத்திர பண்டம் எல்லாம் வாங்கிக் குவிக்க முடியுமா? கட்டுப்பாடாக இருந்ததால்தான் இதுவாவது நடந்திருக்கிறது. இந்த விவரத்தை மனைவிகூட அறியவில்லை என்றால் யார்தான் அறிவார்கள்?

இருந்த இடத்திலிருந்து அசையாமல் கல்லாகி அவர் யோசித்துக்கொண்டிருந்தார். அதற்குள் மகனிடம் பேசி முடித்துவிட்டு மேலேறி வந்தார் மங்காசுரி. தன்னிடம் மகன் சொன்ன தகவல்களை எல்லாம் அவரிடம் உற்சாகம் பொங்க ஒப்புவித்தார். எந்த நிறுவனப் பேசி வாங்குவது என மகன் தேர்வு செய்துவிட்டானாம். அந்தப் பேசி இன்னும் சந்தைக்கே வரவில்லையாம். ஆனால் அதன் வடிவமைப்பு, வசதிகள், கொள்ளளவு எல்லாம் இணையத்தில் வந்துவிட்டதாம். மிகவும் ஈர்க்கிற மாதிரியான அழகுடன் பொலிகிறதாம். அடுத்த மாதத்தின் நடுவில்தான் அதற்கான பதிவே தொடங்குகிறதாம். பதினைந்தாம் தேதி இரவு பன்னிரண்டு மணிக்கு இணையத்தில் பதிவுக்கான தளம் திறக்குமாம். ஒரே ஒரு மணி நேரம் மட்டும்தான் அது இருக்குமாம். அதற்குள் பதிவு செய்துவிட வேண்டுமாம். எத்தனை பதிவாகிறதோ அத்தனை மட்டுமே தயாரிப்பார்களாம். அதில்தான் மகன் பதிவு செய்யப் போகிறானாம். தொகை எழுபத்து நான்காயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது ரூபாயாம். தொகையை மகனது கணக்கில் போட்டுவிடச் சொல்கிறானாம்.

அதற்கப்புறமும் மனைவி ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். மங்காசுரிக்குத் தானே இப்படி ஒரு நவீனப் பேசியை வாங்குவது போல அத்தனை மகிழ்ச்சி. பணத்தை யோசிக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்தப் பருவத்தில் மகனுக்கு எதற்கு இப்படி ஒரு பேசி என யோசிக்க வேண்டாமா? செய்தி கேட்டதிலிருந்து இங்கே ஒருவன் பித்துப் பிடித்தது போலக் கிடக்கிறானே என்னும் பரிதாபம்கூட இல்லையே. தம் உற்சாகத்தை வார்த்தைகளில் கொட்டிவிட்டுப் ‘பித்துப் பிடிச்ச மாதிரி கெடக்காதீங்க. போயி நல்லாத் தூங்குங்க. பணத்துக்கு எப்படி ஏற்பாடு பண்றதுன்னு நாளைக்கு யோசிச்சுக்கலாம். போங்க’ என்றார் அவர் மனைவி கடைசியாக. வாங்கிக் கொடுப்பது அல்லது அவர் வாங்கிக் கொடுப்பார் எனத் தெளிவாகவே முடிவெடுத்திருக்கிறார் மங்காசுரி. கட்டாயம் வாங்கிக் கொடுக்கப் போவதில்லை என்பதில் அவர் தெளிவாகவே இருந்தார். ஆனால் எப்படி அதைச் செயல்படுத்துவது என்பதுதான் பிரச்சினை. முதலில் மனைவியின் மனதை மாற்ற வேண்டும். அதன் பிறகே அவனைச் சரிசெய்ய முடியும். ஒரு சிடுக்கல்ல, இப்போது இரண்டு சிடுக்கு.