இந்திய ஆங்கில இலக்கியத்தை முன்வைத்துப் பல இலக்கிய விழாக்கள் நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இந்திய மொழி இலக்கிய விழாக்களும் கணிசமாக நடக்கின்றன. குறிப்பாகக் கேரளத்தில் அதிகம்; கர்நாடகத்திலும் கணிசம். புகழ்பெற்ற மாத்ருபூமி, மலையாள மனோரமா முதலிய ஊடகங்கள்; டிசி புக்ஸ், பூர்ணா உள்ளிட்ட பதிப்பகங்கள்; கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்கள்; வெவ்வேறு இலக்கிய அமைப்புகள் எனப் பல தரப்பு சார்ந்தும் பெருவிழாக்களும் சிறுவிழாக்களும் விமரிசையாகக் கேரளத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் தம் வருமானத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டு தொகையைக் கலை இலக்கியப் பண்பாட்டு நடவடிக்கைகளுக்குச் செலவழிக்க வேண்டும் என்று விதி இருப்பதால் அவை இத்தகைய இலக்கிய விழாக்களுக்கு நிதி வழங்குகின்றன.
எனினும் தமிழ்நாட்டில் இலக்கிய விழாக்கள் இல்லை. இத்தகைய செயல்களை முன்னின்று செய்யத் தமிழில் ஆட்கள் இல்லை. ஆற்றல் கொண்டோருக்கும் தயக்கம். ஒருவிழா நடக்கிறது என்னும் மகிழ்ச்சி இங்கே உருவாவதில்லை. அதில் யார் யார் பங்கேற்கிறார்கள், யாரெல்லாம் விடுபட்டிருக்கிறார்கள் எனப் பட்டியல் போட்டு முத்திரை குத்தி உடனடியாக வன்மையான தாக்குதலில் இறங்கப் பலர் தயாராக இருக்கின்றனர். ஒரே ஆண்டில் எல்லோரையும் அழைக்க முடியாது. சிலருக்கு உடனே வாய்ப்பு வரும். சிலர் காத்திருக்க நேரும். நடத்துவோரின் இலக்கியப் பார்வையும் எழுத்தாளர் தேர்வில் செயல்படும். ஒரு நிகழ்வின் போக்கை அறியச் சில ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டும். நம் சூழலில் அது அறவே இல்லை. தாக்குதலுக்கு அஞ்சியே ஆற்றல் கொண்டோர் செயலில் இறங்குவதில்லை.
தமிழ் இலக்கியத்திற்கு என்று எந்த விழாவும் இல்லை. தமிழ்நாட்டில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. முறைப்படி அணுகினால் அவை நிதி வழங்கும். எனினும் ஒருவிழாவும் நடத்த வாய்ப்பு இல்லாத சூழலில் இருக்கிறோம். இந்திய ஆங்கில இலக்கியத்தை முன்வைத்துத் தமிழ்நாட்டில் இரண்டு விழாக்கள் நடைபெறுகின்றன. இந்து இதழ்க் குழுமம் ஒரு விழா நடத்துகிறது. அதில் தமிழ் இலக்கியத்திற்குச் சில அமர்வுகள் ஒதுக்கப்படுகின்றன. அதைப் பற்றிக் கூடுதல் விளம்பரம் இருப்பதால் பலரும் அறிவர். சென்னையில் நடப்பதால் நல்ல அறிமுகமும் இருக்கிறது.
ஊட்டி இலக்கிய விழா ஒன்றும் ஆண்டுதோறும் நடக்கிறது. தமிழ்நாட்டின் குறிஞ்சி நிலம் சார்ந்த பண்பாடு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அவ்விழாவும் பெரிதும் ஆங்கில இலக்கியம் சார்ந்தது தான். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ் நவீன இலக்கியத்திலும் கவனம் செலுத்துகிறது. அதன் ஏழாம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது ஒன்றையும் வழங்குகின்றனர். 2023இல் நடந்த விழாவில் எனக்கு அவ்விருது வழங்கினர். நீலகிரி நூலகக் கட்டிடத்தில் நடைபெற்ற விழாவுக்குப் பெருங்கூட்டம் திரண்டிருந்தது.
பூனாச்சி நாவல் வெளியான போது ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் அதற்கென ஓர் அமர்வு நடைபெற்றது. அது முடிந்ததும் நீண்ட வரிசையில் வாசகர் நின்று என் நூல்களில் கையொப்பம் பெற்றனர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம். அதையடுத்து ஊட்டி இலக்கிய விழாவில் அப்படி நீண்ட வரிசையை எதிர்கொண்டேன். மலைப்பகுதி ஒன்றில் அவ்வளவாக விளம்பரம் இல்லாமல் நடைபெறும் விழாவில் பெருங்கூட்டம் கூடுவதும் எழுத்தாளரிடம் கையொப்பம் பெற வரிசையில் நிற்பதும் அதிசயம் போல இருந்தது.
ஆங்கிலம் வழியாக இலக்கியம் வாசிப்போர் எண்ணிக்கை தமிழ்நாட்டிலும் கணிசமாக இருப்பதை இந்து, ஊட்டி ஆகிய இலக்கிய விழாக்களுக்குக் கூடும் கூட்டம் மூலம் அறிந்தேன். ஆங்கில வழிக் கல்வியும் மேல்நடுத்தர வர்க்கப் பெருக்கமும் அதற்குக் காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவோர், மொழிபெயர்ப்போர் பலர் உள்ளனர். அவர்களைத் தமிழ்நாட்டு இலக்கிய நிகழ்ச்சிகள் எதிலும் காண முடியாது.
2024 நவம்பரில் எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘திருச்சி இலக்கிய விழா’ 8 பிப்ரவரி 2025இல் நடைபெற உள்ளதாகவும் அதில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு. Aura என்னும் அமைப்பு 2005 முதல் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. ஏழு பெண்கள் சேர்ந்து தொடங்கிய இவ்வமைப்பு பெண்கள் சார்ந்து பல நிகழ்வுகளை முன்னெடுத்திருக்கிறது. அவற்றின் தொடர்ச்சியாக இலக்கிய விழா. உரிய கால அவகாசம் கொடுத்து நிகழ்வை ஏற்பாடு செய்தனர். 2025 தொடங்கியது முதல் எனக்கு வேலைப்பளு மிகுதி. எனினும் முன்னரே ஒத்துக்கொண்டதால் விழாவுக்குச் சென்றேன். என் படைப்புகள் தொடர்பாக முற்பகலில் ஓர் அமர்வு. பிற்பகல் அமர்வு ஒன்றின் கலந்துரையாடலிலும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டனர். அன்று இரவு சென்னைப் பயணம் இருந்ததால் பிற்பகல் அமர்வு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
நண்பர் துளசிதாசனும் நண்பர்களும் இணைந்து திருச்சியில் நடத்தும் களம் இலக்கிய அமைப்பின் நிகழ்வுகளுக்கு நல்ல கூட்டம் வரும். அதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகள் பல. ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் இலக்கிய விழாவுக்கு கூட்டம் வருமா என்னும் ஐயம் எனக்கு இருந்தது. அது மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்குப் பதிவுக் கட்டணமாக இரண்டாயிரம் ரூபாய் வைத்திருந்தனர். மதிய உணவு, தேநீர் உள்ளிட்டவையும் சேர்த்து அக்கட்டணம். கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் பதிவு செய்திருப்பதாகத் தகவல் சொன்னார்கள். சிலருக்குச் சலுகை கொடுத்திருப்பதாக வைத்துக்கொண்டு நூறு பேர் எனக் கணக்கிட்டாலும் பெரிய எண்ணிக்கைதான். திருச்சி போன்ற நகரத்தில் இத்தனை பேர் இலக்கிய விழாவிற்குப் பதிவு செய்தது ஆரோக்கியமான செய்தியே. அரங்கில் இருநூறு பேருக்கு மேல் குழுமியிருந்தனர்.
என் அமர்வுக்கு ‘SCENT OF THE EARTH – Exploring the life and works lf Perumal Murugan’ எனத் தலைப்பு. ஏறுவெயில், ஆளண்டாப் பட்சி ஆகிய நாவல்களின் மொழிபெயர்ப்பாளர் ஜனனி கண்ணனும் என்னுடன் பங்கேற்றார். ஒருங்கிணைத்தவர் ஹோலிகிராஸ் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஜெயந்தி மனோஜ். அவர் மிகுந்த முன்தயாரிப்புடன் வினாக்களைத் தயார் செய்திருந்தார். முக்கால் மணி நேர அமர்வு. என்னிடம் சில கேள்விகள். ஜனனி கண்ணனிடம் இரண்டே இரண்டு கேள்விகள். என் நாவல்களின் களத்தை முல்லை நிலப் பின்னணியோடு பொருத்திச் சில விஷயங்களைச் சொன்னேன். தமிழ்நாட்டின் நில அமைப்பு, தட்பவெப்ப நிலை ஆகியவற்றின் சிறப்புகளையும் கொஞ்சம் சொன்னேன். முக்கால் மணி நேரத்தில் அவ்வளவுதான் முடியும். பார்வையாளர்கள் கேட்க நேரம் கிடைக்கவில்லை.
ஆங்கிலத் துறை மாணவியரும் ஆசிரியர்களும் கணிசமாக வந்திருந்தனர். புத்தக விற்பனையும் இருந்தது. கையொப்பம், புகைப்படம், சிற்றுரையாடல் எல்லாம் முடிந்து மதிய உணவும் உண்டு புறப்பட்டேன். தொடக்க விழாவில் முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசியதை மட்டுமே கேட்டேன். சூடாமணி சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அவர். ‘நான்காம் ஆசிரமம்’ சிறுகதையைப் பற்றித் தம் உரையில் விரிவாகப் பேசினார். நல்ல அமர்வுகள் பல இருந்தன. இருந்து கேட்க முடியவில்லை. திருச்சியில் அருமையான தொடக்கம். பெண்கள் முன்னெடுத்திருக்கும் விழா. ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என வாழ்த்தி விடைபெற்றேன். வாழ்க!
—– 12-02-25
ஊட்டி இலக்கியத் திருவிழாவில் ஐயாவிடம் கையொப்பம் பெற ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசைகட்டி நின்ற கூட்டத்தை குறித்து கேள்விப்பட்டேன் . ஆங்கிலம் வழி ஐயாவின் படைப்புகளை. வாசிப்பவர்களும் தமிழ்நாட்டில் அதிகம் என்பது புரிந்தது.
நம் திருச்சியில் இப்படி ஒரு இலக்கியத் திருவிழா என்பது கேட்கவே, மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஐயாவின் உரையினை தளங்களில் கிடைத்தால் தேடிக் கேட்கணும்.
Beautiful.May this continue.Congrats, Aura , Jayanthi mam and the writer, Perumal Murugan.