‘சோடா’ பற்றி நான் எழுதிய கட்டுரையில் ‘2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் பேரை ஒரே அரசாணையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பணிநீக்கம் செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தேன். முதலில் 2003 என்பதற்குப் பதிலாக 2023 என்று எழுதிவிட்டேன். ஆண்டு, தேதி ஆகியவற்றை எழுதுகையில் மனம் இறந்த காலத்தை அவாவினாலும் விரல்கள் நிகழ்காலத்தில் பதிந்துவிடுகின்றன. அப்போராட்டம் பற்றி அறிந்த பலர் ஆண்டுக் குழப்பத்தைக் கவனப்படுத்தினர். உடனே திருத்திவிட்டேன்.
இன்னொரு பக்கம் ‘அப்படி நடந்ததா?’ என்றும் பலர் கேட்டார்கள். குறிப்பாக இருபதிலிருந்து முப்பது, முப்பத்தைந்து வயதுக்குள் இருக்கும் இளைய தலைமுறையினர். அப்போராட்டம் நடந்தபோது அவர்கள் பத்து, பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அதைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. தமிழ்நாட்டு அரசு ஊழியர் போராட்டத்திற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. இன்று பெற்றிருக்கும் உரிமைகள் பலவும் சாதாரணமாக வந்து சேர்ந்தவை அல்ல. தொடர் போராட்டத்தால், எத்தனையோ பேரின் தியாகத்தால் விளைந்த பலன்கள். பெற்றவற்றை இழந்ததற்கும் வரலாறு உண்டு. புதியவற்றைப் பெற முடியாவிட்டாலும் பரவாயில்லை. பெற்றவற்றை இழந்துவிடாமல் இருக்க வேண்டும். அப்படி அரசு ஊழியர்கள் இழந்ததற்குச் சான்று பழைய ஓய்வூதியத் திட்டம்.
அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் ஆகியவற்றில் பொறுப்பு வகித்துப் பெரும் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்திய அனுபவம் கொண்ட பேராசிரியர் அ.சங்கரசுப்பிரமணியன் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு இதழுக்காக நேர்காணல் செய்தேன். அவரிடம் பேசிய போதுதான் அரசு ஊழியர் போராட்டத்தில் பதிவு செய்யாத வரலாற்றுத் தருணங்கள் ஏராளமாக இருப்பதை அறிந்தேன். எழுத்தாளர் கந்தர்வன் அரசு ஊழியர் சங்கத்தில் பல பொறுப்புகளை வகித்தவர். அவர் நாமக்கல்லில் இருந்த காலத்தில் தம் போராட்ட அனுபவங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவற்றில் பலவற்றிற்கு எந்தப் பதிவும் இல்லை. தாம் பெற்றிருக்கும் ஓர் உரிமை எப்படிக் கிடைத்தது என்பது இன்றைய ஊழியர்களுக்குத் தெரிவதில்லை.
2003இல் நடைபெற்ற போராட்டமும் ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய அதிமுக அரசு எதிர்கொண்ட விதமும் பற்றி விரிவான அளவில் நூல் எழுதலாம். பெரும்பாலான அரசு கல்லூரிகளில் வரலாற்றுத் துறைகள் உள்ளன. வரலாறு பயின்ற பேராசிரியர்கள் உள்ளனர். அவர்களில் பலரும் அதில் பாதிக்கப்பட்டிருப்பர். ஒருவருக்கும் அந்த வரலாற்றை எழுதும் எண்ணம் ஏற்படவில்லை. அரசு ஊழியர் சங்கங்கள் அந்த வரலாற்றைப் பேச விரும்புவதில்லை. அதைப் போலத் தோல்வி கண்ட ஒரு போராட்டம் வேறில்லை. தோல்வியை ஒத்துக்கொள்வது, பரிசீலிப்பது, பின்னணிக் காரணங்களை விவாதிப்பது, பிந்தைய விளைவுகளைத் தொகுப்பது, சுயவிமர்சனம் செய்துகொள்வது ஆகியவை சங்கத் தலைமைகளிடம் இல்லை. அப்போராட்டத்தைத் துர்க்கனவு ஒன்றாக மறந்துவிடவே விரும்புகின்றனர்.
அப்போராட்டம் தொடங்கிய ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் செய்திகள், அறிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் முதலிய ஆதாரங்களைக் கொண்டு இப்போதேனும் யாராவது எழுதலாம். அரசு ஊழியர் போராட்டத்தை அத்தனை வன்மத்தோடு அரசு எதிர்கொண்டது. எஸ்மா என்னும் சட்டத்தால் இரண்டு லட்சம் ஊழியர்களை ஒரே ஒரு ஆணையில் பணிநீக்கம் செய்தது. போராட்டத் தலைவர்களை எல்லாம் நள்ளிரவில் கதவு தட்டிக் கைது செய்தது. குடும்பத்தினர் மிரட்டப்பட்டனர். அரசின் அங்கமான ஊழியர்கள் மீதே காவல்துறையின் அத்துமீறல் நிகழ்ந்தது. மிரட்டலுக்கு அஞ்சியும் பணிநீக்கத்தாலும் மனம் பாதிக்கப்பட்ட பலர் இறந்து போயினர். என் நினைவுப்படி 2003 ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் ஏறத்தாழ ஐம்பத்தைந்து ஊழியர்கள் இறந்தனர்.
அரசின் கடும் நடவடிக்கையை எதிர்பார்க்காத சங்கங்களால் தம் போராட்டத்தைத் தொடர முடியவில்லை. போராடக் கூடாது என வழக்கமாக அரசு எச்சரிக்கும். அப்போது வெறும் எச்சரிக்கையாக இல்லை. நடவடிக்கைகள் பாய்ந்து வந்தன. ஜெயலலிதா அம்மையாரின் அகந்தையை வளர்க்கும் விதமாகச் சங்கத் தலைமைகள் பேசின. அது ஆபத்தாக முடிந்தது. பேச்சு வார்த்தையே இல்லாமல் போயிற்று. அஞ்சிய ஊழியர்கள் பலர் சங்கத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாகப் போராட்டத்தில் இருந்து விலகிப் போய் வேலையில் சேர்ந்தனர். தூக்கம் வராமல் தவித்து, சக ஊழியர்களின் பார்வைக்கு அஞ்சி நள்ளிரவில் சென்று பணியில் சேர்ந்தோர் உண்டு. போராட்டக் களத்திலிருந்து மனம் திரும்பி வருவோரை எல்லாம் ஏற்றுக்கொள்ளும்படி அரசின் எழுத்துப்பூர்வ உத்தரவும் வாய்மொழி உத்தரவும் இருந்தன. முதல்நாள் மாலை போராட்டம் பற்றி ஆவேசமாகப் பேசி எங்களுடன் இருந்தோர் அடுத்த நாள் காலை வருகைப் பதிவில் கையொப்பம் இட்டுத் ‘துரோகிகள்’ ஆனார்கள்.
போராட்டத்தைத் தொடர இயலாமல் நீதிமன்றத்தை நம்பி இருக்கும்படி நிலை மாறியது. ஊழியர்கள் மனம் கொள்ளும்படி சமாதானம் கூறத் தலைமைகளிடம் எதுவுமே இருக்கவில்லை. நான் பணியாற்றிய கல்லூரியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் நுழைவாயில் அருகில் இருந்த மரத்தடியில் கூட்டமாக நின்று கொண்டிருப்போம். ஒருநாள் தற்காலிகப் பணியாளர்களில் ஒருவர் எங்களைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போனார். அவர் பணியாற்றும் துறையைச் சேர்ந்த ஆசிரியர் ‘இவனெல்லாம் என்னயப் பாத்துச் சிரிக்கற மாதிரி ஆயிருச்சே’ என்றார். அன்று மதியமே ஒருவருக்கும் சொல்லாமல் அவர் போய்ப் பணியில் சேர்ந்துவிட்டார்.
எப்போதும் போராட்டத்தில் முன்னிற்கும், ஆவேசமாக முழக்கமிடும் மார்க்சியச் சிந்தனை கொண்ட பேராசிரியர் ஒருவர் தனிப்பட்ட காரணத்தால் திடுமெனப் பணியில் சேர்ந்துவிட்டார். சங்கப் பதவிகளில் சாதி ஆதிக்கம் இருந்தது. நாமக்கல் என்றால் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவரே கிளைச் செயலராகவும் மண்டலச் செயலராகவும் வர முடியும். பிற சாதியினருக்குத் தலைவர், துணைத்தலைவர் முதலிய பதவிகளை வேண்டுமானால் தருவர். சிறந்த செயல்பாட்டாளராக இருந்த அப்பேராசிரியர் இந்தச் சாதி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர். அவர் தம் குமுறலை வெளிப்படுத்த அப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டார். எனினும் அவர் போராட்ட மனம் உறுத்தியது. XL வண்டியில் எங்களைக் கடந்து கல்லூரிக்குள் செல்லுகையில் தலையைக் குனிந்துகொள்வார். அதன் பிறகு தம் வாழ்நாளில் எந்தப் போராட்டத்திற்கும் அவர் வரவேயில்லை. புரட்சிப் பேச்சு, முழக்கம் எல்லாம் இல்லாமல் போயிற்று. இப்படி எத்தனையோ அனுபவங்களைக் கொடுத்த போராட்டக் களம் அது.
(தொடர்ச்சி நாளை)
—– 16-05-25
உண்மை.தொடரட்டும்
இப்போது மாத சம்பளம், EMI , விடுமுறை நாட்களின் வெளியூர், சொகுசுப் பயணம், எல்லாவற்றிக்குமேல், நேர்மையானர்வர்களின் நிழலில் கூட இப்போது உள்ளவர்கள் நின்றிருக்க வாய்ப்பு இல்லை. புதிய தீண்டாமையின் உச்சம், என சொல்லிக் கொண்டே போகலாம். போராடாமலும் வாழ்க்கை சுகமெனத நினைத்து தினம், தினம், போராடும் மனிதர்கள் அதிகம். நன்றி ஐயா
அருமை , தொடருங்கள் ஐயா