போராட்டத்திற்கு எதிரான மனநிலை அரசு ஊழியர்களிடையே உருவானதில் 2003ஆம் ஆண்டுப் போராட்டத்திற்குப் பெரிய பங்கிருக்கிறது. அதற்குப் பின் வலுவான போராட்டம் ஏதுமில்லை. அறிவித்து நடந்தவையும் பிசுபிசுத்துப் போயின. ஏற்கனவே பெற்றிருந்த உரிமைகளைக் காப்பாற்றுவதுகூட இயலவில்லை. மிகச் சாதாரணமாக நடக்க வேண்டிய அன்றாட அலுவல் சார்ந்த விஷயங்களை உறுப்பினர்களுக்குச் செய்து கொடுப்பதன் மூலமே சங்கங்கள் தம்மைத் தக்க வைக்க முயன்றன. சிறிய ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களைச் சேர்ப்பதற்கே கஷ்டப்பட வேண்டிய நிலை. ஊழியர்கள் என்ன தவறு செய்தாலும் காப்பாற்றி விடுவதன் மூலமாக அவர்களை உறுப்பினர்களாகத் தக்க வைப்பதை நடைமுறையாகக் கொண்டனர். 2003 போராட்டத்திற்கு முன் அரசு ஊழியர் சங்கங்கள், 2003 போராட்டத்திற்குப் பின் அரசு ஊழியர் சங்கங்கள் என்று பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
2003 போராட்டத்தின் போது சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அவர்களில் பலரது பணிநீக்கத்தை அத்தனை எளிதாக அரசு திரும்பப் பெறவில்லை. போராட்டம் முடிந்து வெளியே வந்த பிறகும் பல்லாண்டுகள் அவர்கள் பணி சார்ந்த பிரச்சினை தொடர்ந்தது. இனிமேல் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று அனைவரும் உறுதிமொழி எழுதிக் கொடுத்து ஒருவழியாய்ப் பணியில் சேர்ந்தனர். இனி ஒருபோதும் போராட்டத்திற்குப் போகக் கூடாது என்றுதான் அப்போது எல்லோரும் கருதினர். அந்த அளவு அடக்குமுறைக்கு உட்பட்டனர்.
2003க்குப் பிறகு அரசு ஊழியர்கள் பெரும்போராட்டம் எதையும் நடத்த முடியவில்லை. அரசு ஒதுக்கும் உள்ளடங்கிய இடமொன்றில் விடுமுறை நாளிலோ வாரநாளில் மாலை நேரத்திலோ போய் முழக்கமிடுவதுதான் போராட்டம் என்றாயிற்று. பணிக்குச் செல்லும் முன் அரசு அலுவலகங்களின் நுழைவாயிலில் நின்று ‘வாயில் முழக்கப் போராட்டம்’ நடத்துவது எளிதானதாக இருக்கிறது. ஊதிய இழப்பைத் தரும் போராட்டம் எதற்கும் ஆள் சேர்க்க முடியாத நிலை உருவாயிற்று. ஒட்டுமொத்தத் தற்செயல் விடுப்புப் போராட்டம் போன்றவற்றில் பலர் பங்கு பெறவில்லை. அதற்கு இன்று பெறும் ஊதிய விகிதமும் காரணம். அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து ஏழாயிரம், எட்டாயிரம் வரை இருக்கிறது. இப்பேர்ப்பட்ட ஊதியத்தை இழந்து போராட்டத்திற்கு வர யார் விரும்புவர்? அரசு ஊழியர்கள் ‘சலுகை பெற்ற வர்க்க’ மதிப்பை அடைந்துவிட்டனர் அல்லவா?
2003இல் நடந்த போராட்டத்திற்குப் பொதுமக்கள் ஆதரவு சிறிதும் இல்லை. நிர்வாகப் பணிகளுக்குத் தற்காலிக ஊழியர்களை நியமிக்க அரசு முயன்றபோது பல்லாயிரம் இளைஞர்கள் அவ்வேலைக்குப் படை எடுத்துச் சென்றனர். போராட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்குப் பதிலாக அரசு நியமிக்கும் இவ்வேலைக்கு வரமாட்டோம் என்று ஒருவரும் சொல்லவில்லை. ‘குறைவான ஊதியம் கொடுத்தாலே போதும். தற்காலிகமாக வேலை இருந்தாலும் சரி’ என்று சேரக் குவிந்தார்கள். அரசு விதிக்கும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுக் கொண்டனர். ‘அரசு ஊழியர்களுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்’ என்று சொன்னவர்களே அதிகம்.
பொதுமக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இருந்த இடைவெளி அதில் அப்பட்டமாக வெளிப்பட்டது. மக்களை நடத்தும் முறை, அலைக்கழித்தல், அதிகாரம் செய்தல், லஞ்சம் வாங்குதல் ஆகியவற்றால் தங்களுக்கு உரியவர்களாக அரசு ஊழியர்களை மக்கள் கருதவில்லை. ஆகவே எவ்வகையிலும் ஆதரவாகக் குரல் கொடுத்தோர் இல்லை. ஆனால் இன்று வரைக்கும் மக்களை அணுகும் முறையில் அரசு ஊழியர்களிடமும் சங்கங்களிடமும் மாற்றம் இல்லை. மக்களுக்குத்தான் நாம் ஊழியம் செய்கிறோம் என்னும் உணர்வை மேம்படுத்துவதற்கு அந்தப் போராட்டப் படிப்பினை உதவியிருக்க வேண்டும். அதைச் சங்கங்கள் முன்னெடுக்கவே இல்லை. அரசு அலுவலகத்தை நாடி வரும் ஒருவரை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்னும் அறிவுரையைக்கூடத் தம் உறுப்பினர்களுக்குச் சங்கங்கள் சொல்லவில்லை. ‘எப்போதும் ஊதிய உயர்வு கேட்டுப் போராடுவதுதான் இவர்களுக்கு வேலை. கொடுக்கும் சம்பளம் போதாதா?’ என்பதே பொதுமனப் பதிவு. அதை மாற்றுவதற்கு அரசு ஊழியர் தரப்பிலிருந்து எந்த முயற்சியும் இல்லை. அந்தப் போராட்டத்தின் விளைவுகள் பற்றி எந்தப் பரிசீலனையும் இல்லாமல் ‘ஜெயலலிதாவின் கர்வத்தை உடைத்தோம்; அவரை ஆட்சியிலிருந்து அகற்றினோம்’ என்றெல்லாம் வீராவேசமாக அறிக்கை வெளியிடுகின்றனர்.
இப்போது அரசு ஊழியர் சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்துகின்றன. பேச்சு வார்த்தையும் நடக்கிறது. பலன் ஏதுமில்லை. ஈட்டிய விடுப்பைப் பணமாக்கும் தடையை நீக்குதல், பண்டிகை முன்பணத்தை அதிகரித்தல் எனச் சாதாரண அறிவிப்புகள்தான் அரசிடமிருந்து வருகின்றன. அதை ஊடகங்கள் ‘அரசு ஊழியர்களுக்கு முத்தான அறிவிப்புகள்’ எனச் செய்தி வெளியிடுகின்றன. மிக முக்கியமான கோரிக்கை ‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்’ என்பது. 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இதைத் திமுக கொடுத்திருந்தது. வெற்றி பெற்று அரசமைத்த பிறகு அக்கோரிக்கையை இதுவரை நிறைவேற்ற முடியவில்லை. ஆட்சிக்காலம் முடிவதற்குள் நிறைவேற்றவும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு நிதிச்சூழல் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம். ‘மனமிருந்தும் மார்க்கமில்லை’ என்னும் நிலைதான். ஆகவே வரும் தேர்தலில் ‘நிதிநிலைமையை மேம்படுத்திப் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம்’ என்று மீண்டும் வாக்குறுதியைத் திமுக புதுப்பிக்கும் என்றே நினைக்கிறேன். எதிர்க்கட்சிகள் ‘நாங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவோம்’ என்று நிச்சயம் வாக்குறுதி தருவார்கள்.
(தொடர்ச்சி நாளை)
—– 17-05-25
இப்படி நிறைய பேர் முதலாளித்துவ அரசுகளுக்கு ஆதரவாகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவும் பதிவுகளை போடறாங்க.2003 ல் ஜெயாவுக்கு எதிரான அரசுஊழியர் ஆசிரியர் போராட்த்தில் மக்களும் சேர்ந்ததனால் ஆட்சியை 2006 ல் இழந்தார்.இப்படியான ஆட்சி தொடர்ந்தால் ஆட்சியிலிருப்பவர் யாரானாலும் தூக்கியடிக்கப் படுவார்கள்.
Extractly correct