1. நிலத்தை துறந்து மொழியைப் பற்றிக் கொண்ட தலைமுறையின் முதல் பதிவாக ‘ஏறுவெயில்’ நாவலை உருவாக்கினீர்கள். ஆறு நாவல்களுக்கு பிறகு ஆலவாயனையும் அர்த்தநாரியையும் உருவாக்கும்போதும் அதே தவிப்பை உணர்கிறீர்களா? ஒருவிதமான நிறைவை நோக்கி நகர்வதாக நினைக்கிறீர்களா?
ஏறுவெயிலை எழுதியபோது தயக்கமும் பயமும் கொண்டிருந்தேன். நாவல் நமக்கு வருமா, எழுத்துப் பயிற்சி நாவல் எழுதப் போதுமா, மாபெரும் நாவல்கள் இருக்கும் மொழியில் பிரசுரத்துக்குத் தகுதியான அளவிலேனும் எழுத இயலுமா என்றெல்லாம் தயக்கம். திசைவழி தெரியாத பெருங்குகை ஒன்றுக்குள் புகுந்து செல்லும் பயமும் இருந்தது. வாசிப்பு என்னும் விளக்கின் துணை ஒன்றைக்கொண்டே உள்ளே சென்றேன். எதிலாவது மோதும்போது பயணத்தை நிறுத்துவேன். சோர்வும் சலிப்பும் தோன்றிப் பின்வாங்கத் தூண்டும். துணிவைப் பெற்று மேற்செல்லச் சில நாட்கள் ஆகும். எங்கிருந்து வந்தது என்று தெரியாத ஒருவகையான அசட்டுத் துணிச்சலே என்னைச் செலுத்தியது. உண்மையில் அதை எழுதிய காலம் தவிப்பு மிகுந்த காலம்தான். இப்போது அத்தகைய தயக்கமும் பயமும் இல்லை. ஆனால் அசட்டுத் துணிச்சலே இப்போதும் செயல்படுத்துகிறது. இது கொஞ்ச தூரம் நடந்து வந்துவிட்டதால் ஏற்பட்டிருக்கும் அசட்டுத் துணிச்சல் என்று புரிகிறது. நிறைவை நோக்கிய நகர்வு என்று சொல்ல முடியுமா? அப்படி ஒரு நிறைவைக் கண்டடைவது சாத்தியமா? இன்னும் எவ்வளவோ பயணப்படும் பேராசை இருக்கிறது. நிறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்றே நினைக்கிறேன்.
மாதொருபாகனில் காளியின் முடிவு வாசகனின் யூகத்திற்கே விடப்பட்டிருக்கும். இந்த ஆண்டு வெளிவரும் ஆலவாயன், அர்த்தநாரி நாவல்கள், மாதொருபாகனில் காளியின் முடிவு இப்படி இருந்திருந்தால் என்று இரு விதமாக எடுத்துக் கொண்டு விரிகின்றன என்று அறிகிறோம். அது சார்ந்து சில கேள்விகள். –
2. மாதொருபாகனை எழுதும்போதே, அதன் தொடர்ச்சியை பிறகு எழுதிக்கொள்ளலாம் என்று எண்ணி காளியின் முடிவு வெளிப்படையாக தெரியாதது போல் அந்நாவலை முடித்தீர்களா? அல்லது அந்த முடிவு, உங்களை இவ்விரு நாவல்களை எழுதத் தூண்டியதா?
மாதொருபாகனை எழுதியபோது அதன் தொடர்ச்சியை எழுதும் எண்ணம் ஏதுமில்லை. காளி செத்துவிட்டான் என்று என்னால் முடிவு செய்ய இயலாததால் அவனுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றியது என்னும் குறிப்போடு முடித்தேன். பாவம் அவன், வாய்ப்பிருந்தால் பிழைத்திருக்கட்டுமே என்றுதான் அப்படி முடித்தேன். அந்நாவலுக்கு வந்த வாசக எதிர்வினைகளே அம்முடிவைப் பற்றி மேலும் சிந்திக்க வைத்தன. காளி செத்துவிட்டானா இல்லையா என்று தெரிந்தால் நிம்மதி ஏற்படும் எனக் கருதி என்னிடம் தெளிவுபடுத்தச் சொன்ன வாசகர்கள் பலர். காளி செத்துவிட்டதாகவே தீர்மானித்து என்மேல் கோபித்துக் கொண்டவர்களும் உண்டு. காளி வாழ வேண்டும் என்று மனதார வாசகர்களும் இருந்தனர். இந்த நாவலுக்குப் பிறகு இரண்டு நாவல்களை நான் எழுதியிருந்த போதும் இதைப் பற்றிய வாசக உரையாடல் தொடர்ந்த காரணத்தால் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். காளி, பொன்னா ஆகியோரின் வாழ்வைக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இரண்டு வழிகளில் பின்தொடர்ந்தேன். எழுதலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டது. இதைச் சாத்தியப்படுத்தியவர்கள் மாதொருபாகனின் வாசகர்களே.
3. மாதொருபாகன் முடிவின் தொடர்ச்சி எனும்போது, குறிப்பிட்ட ஒரு முடிவை மட்டுமே தேர்ந்தெடுக்காமல், இரண்டு விதமாக இருந்திருக்கக்கூடிய முடிவுகளைப் பற்றியும், அதன் பின்-விளைவுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எண்ணம் எப்படி ஏற்பட்டது? இருவிதமான முடிவுகளின் தொடர்ச்சியாக இந்த இரண்டு நாவல்களும் எப்படி விரிகின்றன, மையப் பாத்திரங்கள் மாறுகின்றனவா என்று சொல்ல முடியுமா?
காளி சாவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. பொன்னாவைத் தண்டிக்க நினைக்கிறான். அவனுடைய சாவுதான் அவளுக்குப் பெரிய தண்டனையாக இருக்கும் என்பது அவன் நம்பிக்கை. பேரன்பு கொண்ட கணவன் இறப்பைவிட அது கொடுக்கும் குற்றவுணர்வுதான் அவளுக்குத் தண்டனை. ஆகவே அந்த முடிவைக் கொண்டு முதலில் எழுதினேன். தற்கொலை எண்ணம் தோன்றும் கணமே முக்கியம். அதைக் கடந்துவிட்டால் பின்னர் வாழும் ஆசை வந்துவிடுகிறது. காளி வாழ வேண்டும் என்று பலரும் விருப்பப்படும்போது நான் கல்நெஞ்சக்காரனாக இருப்பது என்ன நியாயம்? அந்தக் கணத்தை அவன் கடப்பது எளிதுதான் என்று தோன்றியது. அப்படி அவனைக் கடக்க வைத்தேன். அதன் பின் அவனே என்னை அழைத்துச் சென்றான். அவன் இல்லாத வாழ்வு பெண்ணுலகாக விரிகிறது. அங்கே அவனுக்கும் இடமிருக்கிறது. அது பொன்னா இரக்கப்பட்டு வழங்கும் இடம். அவன் இருக்கும் வாழ்வோ உறவுச் சிடுக்கின் தத்தளிப்பாக விரிகிறது. அதிலும் பெண்ணுலகு உண்டு. ஆனால் அவனைச் சார்ந்ததாகவும் அவனை மீட்பதையே நோக்கமாகக் கொண்டதாகவும் அது இருக்கிறது. மையப் பாத்திரங்களில் மாற்றம் ஏதுமில்லை. துணைப் பாத்திரங்கள் கூடியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அனுபவங்களும் வாழ்வை அணுகும் விதங்களும் மலர்ச்சி பெறுகின்றன. அம்மலர்ச்சி எனக்கு ஆச்சரியமானதாக இருந்தது. அதனாலோ என்னவோ என்னைப் புனரமைத்துக் கொண்ட உணர்வு உருவாயிற்று.
4. இந்த இரு நாவல்களைப் படிக்க ‘மாதொருபாகன்’ படித்திருக்க வேண்டுமா? அதைப் படிக்காமல், இவற்றைப் படிக்கும் வாசகன், எதிர்கொள்ளக்கூடிய/தவறவிடக்கூடிய விஷயங்கள் ஏதேனும் உள்ளனவா?
இவற்றை வாசிக்க மாதொருபாகனைப் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை. அந்நாவலின் பிரச்சினையைச் சில பத்திகளுக்குள் சொல்லிவிடுதல் இவற்றைத் தனிமுழுமை கொண்டனவாக உருவாக்கப் போதுமானதாக இருந்தது. இவை இரண்டும் தனித்தனி நாவல்கள். மூன்றையும் தனித்தனியாக வாசிக்கலாம். ஏதாவது ஒன்றை மட்டும் வாசிக்கும் வாசகருக்கு மற்றவற்றை வாசிக்காததால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இழப்பு இல்லை என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொரு நாவலையும் வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவம் தனியானது. ஒரு நாவலை வாசிக்காததால் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ளும் வாய்ப்பை இழக்கிறோம். ஒரு வாழ்வை வாழும் சந்தர்ப்பத்தைத் தவற விடுகிறோம். எந்த நாவலுக்கும் பொருந்தும் இதுவே இம்மூன்று நாவல்களுக்கும் பொருந்தும்.
5. நேர்முகத் தேர்வுக்கு வந்தவன் பொதுக் கழிப்பறையை உபயோகப்படுத்தும் போது அவனுக்குள்ள சங்கடம், சமையலறையோடு வீட்டினுள்ளேயே கழிப்பறையும் இருப்பது ஏற்படுத்தும் அசூயை, அன்னம் கொட்டப்படும் பீவாங்கியால் ஏற்படும் சங்கடம் என பீக்கதைகள் தொகுப்பு, அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக எழுதப்பட்டது போலில்லாமல் யதார்த்தத்திற்கு மிக அருகில் உள்ள, அதே நேரம் தனித்தன்மையுடைய தொகுப்பாக உள்ளது. நாம் பொதுவாக அசூயையுடன் கடந்து செல்லும்/கவனிக்க மறுக்கும் விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்ற கவனத்துடன் எழுதப்பட்ட கதைகளா இவை, அல்லது இயல்பாகவே ஒரு பொதுக் கருப்பொருளைக் கொண்ட கதைகளாக அமைந்து விட்டனவா. இந்தக் கதைகளின் பின்னணி குறித்து சொல்ல முடியுமா?
இவை நிச்சயம் அதிர்ச்சி மதிப்புக்காக எழுதப்பட்ட கதைகள் அல்ல. இயல்பாக நான் எழுதிய கதைகள் சிலவற்றில் இப்படி ஒரு பொதுப்பொருள் வந்து சேர்ந்திருந்தது. அதைக் கண்டுணர்ந்தபோது வேறு சில சிந்தனைகளும் களங்களும் எனக்குள் உருவாயின. அக்காலத்தில் நானறிந்த குழந்தை எதிர்கொண்ட பிரச்சினை ஒன்றும் இந்தப் பொதுப்பொருளை நோக்கி என்னை உந்தியது. பள்ளியில் யாரும் ‘ஆய்’ போகக் கூடாது என்று மிரட்டி வைத்திருந்த பள்ளிக்கூடம் அது. அதற்குப் பயந்து வெளியே சொல்லாமல் உள்ளாடையிலே ஆய் போய்விட்டது அக்குழந்தை. அதற்கும் அடி. மனிதர்களுக்கு உணவைப் போலவே கழிவும் அவசியமான ஒன்று. ஆனால் ஏன் இதைப் பற்றி இத்தனை ஆசூயைகள் நிலவுகின்றன என்னும் கேள்வி எனக்கு வந்தது. அவ்விதம் யோசித்தபோது எனக்கு முன் பல்வேறு சம்பவங்கள் வந்து நின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்டவற்றைக் கதைகள் ஆக்கினேன். இவற்றை எழுதவும் ‘பீக்கதைகள்’ என்னும் தலைப்பிலேயே பிரசுரிக்கவும் நண்பர் யூமா.வாசுகியும் காரணம். கழிப்பறை அடைத்துக்கொண்ட நாளொன்றில் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்ற அவருக்குக் கழிப்பறையைப் பயன்படுத்திக்கொள்ளக் கேட்கக் கூச்சம். நண்பர்களோ மேலும் தேநீர் கொடுத்து அவரது உபத்திரவத்தை அதிகரிக்கவே செய்தார்கள். அதனை அவர் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார். அப்போது அதை அவர் கதையாகவும் எழுதினார் என்று நினைவு. இப்படிப் பல விஷயங்கள் சேர்ந்து இந்தப் பொதுப்பொருளில் கதைகள் எழுதவும் வெளியிடவும் காரணமாயின.
6. ‘வேப்பண்ணைக்கலயம்’ சிறுகதை தொகுப்பைத் தவிர்த்து, கடந்த 4-5 ஆண்டுகளில் உங்களின் நாவல்கள்தான் அதிகம் வெளிவந்துள்ளன. மொத்தமாகப் பார்க்கும்போது நாவல்கள் எண்ணிக்கை சிறுகதை தொகுப்புக்களைவிட அதிகமாக உள்ளது. நீங்கள் சொல்ல விரும்பும் விஷயங்களுக்கு பொருத்தமான களமாக நாவலைப் பார்க்கறீர்களா?
சிறுகதை, கவிதை ஆகியவற்றையும் எனக்குப் பொருத்தமான களமாகவே பார்க்கிறேன். ஒரு சிறுகதை அல்லது கவிதையை ஒரு நாவலுக்கு இணையாகக் கருதுகிறேன். ஆகவே புத்தக எண்ணிக்கையை வைத்தல்லாமல் கதைகளின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்க வேண்டும். சிறுகதைகளும் கவிதைகளும் கணிசமாகவே எழுதியிருக்கிறேன். கிட்டத்தட்ட நூறை நெருங்கும் அளவில் சிறுகதைகள். நூற்றைத் தாண்டிய கவிதைகள். இன்னும் எழுதும் உந்துதலும் இருக்கிறது.
7. இலக்கியங்களில் மிகக் குறைவாகவே பேசப்பட்டுள்ள ‘முதிர்கண்ணன்’ பற்றிய ‘கங்கணம்’ நாவலுக்கான தூண்டுதல் என்ன? கொங்குப் பகுதியின் இன்றைய மணச் சூழலா?
1990களில் பெண் சிசுக்கொலை தொடர்பான பேச்சுக்கள் பெரிதாக உருவாயின. அப்போது வறுமைதான் அதற்குக் காரணம் என்பதாகக் கருத்துக்கள் பேசப்பட்டன. ஆனால் கொங்குப் பகுதியில் ஆதிக்க சாதியினரான நிலவுடைமைச் சாதிகளிடமே பெண் சிசுக்கொலை மிகுதியாக இருப்பதைக் கண்டேன். நிலவுடைமையும் பொருளும் கொண்டவர்கள் அவற்றைத் தக்க வைத்துக்கொள்ளப் பெண் சிசுக்கொலையில் ஈடுபடுகின்றனர். ஏதும் அற்றவர்கள் ஐந்தாறு குழந்தைகள் பெற்றுக்கொண்ட போதும் சந்தோசமாகவே வாழ்கின்றனர். கொலை செய்யும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றுவதே இல்லை. அப்போது வந்த ஸ்கேனிங் முறை பெண் சிசுவைக் கருவிலேயே கொல்லவும் வழிவகுத்தது. என் உறவுப் பெண் ஒருத்திக்கு முதல் குழந்தை பெண். இரண்டாவது குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அடுத்தடுத்து உருவான மூன்று கருவும் பெண். மூன்றையும் ஐந்து மாதத்திற்குப் பிறகு கலைத்தார்கள். நான்காவதாக உருவான கரு பையன். அவனைப் பெற்றாள். இப்படிப் பல சம்பவங்கள். பிறந்த குழந்தையைக் கொல்லவும் சாதாரணமான வழிகள் உண்டு. கவிழ்த்துப் போட்டுவிட்டு வெளியே வந்துவிட்டால் அடுத்த ஐந்து நிமிடத்தில் குழந்தை மூச்சு முட்டி இறந்துபோகும். கள்ளிப்பாலும் தேவையில்லை, எருக்கம்பாலும் தேவையில்லை. இந்தப் பிரச்சினை என்னை மிகவும் பாதித்தது. ஒரு நாவல் எழுதத் திட்டமிட்டேன். நடக்கவில்லை. கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பெண் சிசுக்கொலையின் விளைவு ‘முதிர்கண்ணன்’களை உருவாக்கியிருப்பதை உணர்ந்தேன். கொலையை எழுத முடியாவிட்டாலும் விளைவை விடக் கூடாது என்று ‘கங்கணம்’ எழுதினேன். அது இன்றைய கொங்குப் பகுதியின் மணப் பிரச்சினையாக உருவாயிற்று.
8. தாங்கள் எழுதும் முறை பற்றி ஒரு கேள்வி. நாவலின் சம்பவங்களை/அதன் நீளத்தை எவ்வாறு தீர்மானம் செய்கிறீர்கள்? நாவலை எழுதும் போக்கில் அவை அமைகின்றனவா அல்லது முன்கூட்டியே அது குறித்த திட்டம் உள்ளதா? ஏனென்றால் ‘கங்கணம்’ தவிர்த்து உங்களின் மற்ற நாவல்கள் ஒப்பீட்டளவில் சிறியவை. கங்கணம் மற்ற நாவல்களைவிட சற்று விரிவாக இருக்க ஏதேனும் தனி காரணம் உள்ளதா அல்லது அதன் போக்கு அவ்வாறு அமைந்ததா?
நாவலின் அளவை முன்கூட்டியே தீர்மானிப்பது கடினம். ஊகமாக இத்தனை பக்கங்கள் வரக் கூடும் என ஒரு அனுமானம் இருக்கும். எழுதும்போது கூடவும் செய்யலாம், குறையவும் செய்யலாம். சம்பவங்களில் பல முன்கூட்டியே தீர்மானித்து வைத்திருப்பவையாகவே இருக்கும். எழுதும் போக்கில் தானாக வந்துவிழும் சம்பவங்களும் பலவுண்டு. எதிர்பார்க்காமல் அவை கையைப் பிடித்து வேறொரு பக்கம் இழுத்துச் சென்றுவிடும். இப்போதைய ‘ஆலவாயன்’ நாவலில் நான் முன்கூட்டித் திட்டமிடாத ஒரு சம்பவம் சட்டென வந்துதித்து ஐந்தாறு இயல்களாக விரிந்தது. முன் தீர்மானம், எழுதும் போக்கு இரண்டுக்குமே நாவலின் அளவைத் தீர்மானிப்பதில் பங்குண்டு. ‘கூள மாதாரி’ நாவலும் அனேகமாகக் ‘கங்கணம்’ அளவில் எழுதப்பட்டதுதான். செம்மையாக்கத்தின்போது சில இயல்களையே நீக்க வேண்டி நேர்ந்தது. ஆகவே கொஞ்சம் அளவு குறைந்தது. பெருநாவல் எழுத ஆசை இருக்கிறது. ஆனால் தேவையா என்னும் எண்ணமும் அது எனக்குச் சாத்தியப்படுமா என்னும் தயக்கமும் முன்னிற்கின்றன. பல பெருநாவல்கள் வாசகச்சுமை ஆனது போல ஆகிவிடுமோ என்னும் பயமும் இருக்கிறது. காலம் எப்படிச் செலுத்துகிறதோ பார்க்கலாம்.
9. இந்திய தொன்ம பெருநீரோட்டத்தில் கலந்துவிட்டாலும், இன்னமும் தனித்து வழங்கப்படும் அண்ணன்மார் சரித்திரத்தை தகுந்த கள ஆய்வுகளுடன் மீட்டெடுக்கும் எதிர்கால திட்டம் ஏதும் இருக்கிறதா?
அண்ணன்மார் கதையில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கவனம் செலுத்தி வருகிறேன். சில கட்டுரைகளும் எழுதியுள்ளேன். அதில் நவீனப் படைப்புக்கான பல கூறுகளும் இடைவெளிகளும் உள்ளன. அவற்றை எல்லாம் எனக்குள் சேகரித்திருக்கிறேன். பெருநாவலாக அதை உருவாக்க ஆசை. ஆனால் ஒரு சாதியின் அடையாளமாக மாறிவிட்ட அதைச் சுதந்திரமாகப் படைப்பு வெளியில் மீட்டுருவாக்கம் செய்யச் சூழல் அனுமதிக்குமா எனத் தெரியவில்லை. சூழலை மீறிச் செயல்படும் உத்வேகத்தை எனக்குள் உருவாக்கிக்கொள்ள முயல்கிறேன். எப்போதும் எனக்கு நம்பிக்கை தரும் அசட்டுத் துணிச்சல் என்னுள் தோன்றி ஒரு சமயத்தில் வழி நடத்த வேண்டும்.
– பதாகை, இணைய இதழ் 2014
Add your first comment to this post