புத்தகமே பெருந்துணை

You are currently viewing புத்தகமே பெருந்துணை

 

 

ஈரோட்டில் இப்போது உள்ள ‘அரசு பொறியியல் கல்லூரி’யின் பழைய பெயர் ‘சாலை மற்றும் போக்குவரத்துத் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Road and Transport Technology).’ சுருக்கமாக  ‘ஐஆர்டிடி’ (IRTT) என்று அழைப்பர். 1984ஆம் ஆண்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் நிதிஉதவி கொண்டு தொடங்கிய கல்லூரி அது. தமிழ்நாடு முழுதுமிருந்து அத்தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் தம் பங்காகப் பத்து ரூபாய் வழங்கினார்கள். அப்போதைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சு.முத்துசாமி (இப்போதைய திமுக அரசில் மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர்) அவர்களின் முயற்சியால் கல்லூரி ஈரோட்டில் அமைந்தது.

ஈரோடு மாவட்டத்தில் சித்தோட்டுக்கு அருகில் அழகான மலைகள் சூழ்ந்த பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவில் கல்லூரி அமைந்திருக்கிறது. முன்னர் ஒதுக்கமான பகுதியாகக் காணப்பட்ட அவ்விடம் இப்போது சேலம் – கோவை புறவழிச்சாலையிலேயே இருக்கிறது. தொடங்கிய காலத்தில் காய்ந்து வெறும்கரடாகக் கிடந்த பகுதி கல்லூரி முதல்வர்களின் முன்னெடுப்பாலும் மாணவர்களின் தொடர் உழைப்பாலும் இன்று மரங்கள் சூழ்ந்த மலைப்பகுதியாகக் காட்சி தருகிறது. ஆம். மொட்டைக் கரடுகளை அழகிய குறிஞ்சியாக மாற்றியிருக்கிறார்கள். தொடங்கிய போதிருந்து இப்போது வரைக்கும் முதல்தரக் கல்லூரி என்னும் மதிப்பைப் பெற்றுத் திகழ்கிறது.

கல்லூரி தொடங்கி நாற்பதாண்டுகள் ஆகின்றன. அதில் பயின்றவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் பரவி நல்ல பணிகளில் இருக்கிறார்கள்; சுயதொழில் முனைவோர்கள் பலர்; பல நாடுகளிலும் பணியாற்றுகிறார்கள். அவர்கள் சேர்ந்து தொடங்கிய  ‘முன்னாள் மாணவர் சங்கம்’ பதிவு செய்த அமைப்பாகச் சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்லூரிக்குப் பலவகை உதவிகளையும் செய்து வருகிறது. அச்சங்க உறுப்பினர்களில் நூல் வாசிப்பு ஈடுபாடு கொண்ட ஒருபிரிவினர் ‘வாசிப்பு மாமன்றம்’ தொடங்கி வாரந்தோறும் சனிக்கிழமை மாலை நிகழ்ச்சி நடத்துகின்றனர். ஒருநூலை எடுத்துக்கொண்டு அதைப் பற்றி ஒருவர் உரை வழங்குவார். பின் கேள்விகள், விவாதங்கள் என்று தொடரும். குறைந்தபட்சம் இரண்டு மணி நேர நிகழ்ச்சி.

கடந்த சனியன்று (09-11-24) நூறாம் நிகழ்வு. அதைக் கல்லூரியில் நேரடியாக நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுச் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்தனர். நவம்பர் மாதத்தில் ஏற்கனவே ஒத்துக்கொண்டவை தவிரப் புதிதாக எதுவும் வேண்டாம் என்னும் மனநிலையில் இருந்தேன். அமெரிக்காவில் வசிக்கும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் கனகலட்சுமி எடுத்த முயற்சியால் தவிர்க்க இயலாமல் ‘வருகிறேன்’ என்று ஒப்புக்கொண்டேன். புத்தக வாசிப்பில் ஈடுபாடு உடையவர்களைச் சந்திப்பதிலும் அவர்களிடையே பேசுவதிலும் எனக்குப் பெருமகிழ்ச்சிதான்.

நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் செல்ல துளசிராம், கோவிந்தராஜ், மணிகண்ட பிரபு ஆகிய மூவரும் சேலத்திலிருந்து காலை ஏழு மணிக்கெல்லாம் நாமக்கல் வந்துவிட்டனர். நிகழ்ச்சி நிரலில் வரவேற்புரைக்கு இத்தனை நிமிடம், பொன்னாடை அணிவித்தலுக்கு இத்தனை நிமிடம் என்றெல்லாம் போட்டிருந்தனர். நான்கு நிமிடம், ஆறு நிமிடம் என்றெல்லாம் பிரித்திருந்ததைப் பார்த்துக் கொஞ்சம் அரண்டுவிட்டேன். நல்லவேளை, நொடிக்கணக்குப் போடவில்லை. இத்தனை சரியாக நேரத்தைப் பின்பற்ற முடியுமா?  அது ஒருவசதிக்காகப் போட்டதுதான், அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதில்லை என்று சொல்லி என் பதற்றத்தைப் போக்கினார்கள். மூவரோடும் உற்சாகமாக உரையாடிபடி சென்றது நல்ல பயணம்.

கோவை லட்சுமி மில்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற துளசிராம் தம் ஓய்வுக்காலத்தை நூல் வாசிப்பில் பெரிதும் செலவிடுகிறார். வாரம் ஒருபுத்தகம் என்று இலக்கு வைத்துக்கொண்டு வாசிக்கிறார். வாசிப்பு மன்றம் நடத்திய 98 நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். ஆச்சரியமாக இருந்தது. அக்கல்லூரிக்கு வாரத்தில் சிலநாள் சென்று மாணவர்களுக்கு வகுப்பெடுக்கிறார். அவர் வீட்டில் தனிநூலகமும் ஏற்படுத்தியிருக்கிறார். வாசிப்பு மன்றம் உருவாக்கியதிலும் அதைத் தொடர்ந்து முன்னெடுப்பதிலும் ஆர்வத்தோடு பங்கெடுக்கிறார். மணிகண்ட பிரபு இந்த வாசிப்பு மன்றம் தொடங்கிய பிறகுதான் ஆரம்பித்துத் தான் வாசித்த, நிகழ்வில் பேசிய நான்கைந்து நூல்களைப் பற்றிச் சொன்னார். ‘நிறையப் படித்திருக்கிறீர்களே’ என்றேன். ‘படிச்சதே இவ்வளவுதாங்க’ என்று சொல்ல எல்லோரும் சிரித்தோம்.

புத்தகமே பெருந்துணை

என்னுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் பலர் ஓய்வுக் காலத்தை எப்படிக் கழிப்பது எனத் தெரியாமல் மனச்சோர்வுக்கு ஆளானதைக் கண்டிருக்கிறேன். நடைப்பயிற்சி, குடும்ப வேலைகள் என்றிருந்தாலும் நேரம் நிறையக் கிடைக்கும். அன்றாடம் குறிப்பிட்ட நேரத்திற்குக் கிளம்பிப் போய் குறிப்பிட்ட நேரம் வரை பணியிடத்தில் இருக்க நேரும்போது ஒரு ஒழுங்கு வந்திருக்கும். பணியும் ஊதியமும் கொடுக்கும் அதிகாரம், மதிப்பு எல்லாவற்றையும் அனுபவித்திருப்பர். ஓய்வுக்குப் பிறகு அவற்றை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். நூல் வாசிப்புப் பழக்கம் உடையவர்களுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஒவ்வொரு நூலும் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு பெரும்பயணம் சென்று வந்த அனுபவத்தை வழங்கும். புதிய வாழ்க்கை ஒன்றைப் பற்றிய அறிதலைக் கொடுக்கும். புத்தகத்தைப் போலப் பெருந்துணை வேறேதுமில்லை. புத்தகத்தைப் போல உற்சாகம் தரும் சகபயணி வேறு யாருமில்லை.

வாசிப்பு மன்ற நிகழ்வுகளில் ஒவ்வொருவரும் எத்தனை ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் பேச்சின் வழி உணர்ந்தேன். எந்தெந்தப் புத்தகத்தை யார் யார் மதிப்புரை செய்தார்கள் என்று நினைவு வைத்துச் சொன்னார்கள். அப்போது நிகழ்ந்த உரையாடலைப் பற்றியும் மனம் ஒன்றிப் பேசினார்கள். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கில நூல்களையும் எடுத்துப் பேசுகிறார்கள். இலக்கியம்தான் என்றில்லை. சுயமுன்னேற்றம், அறிவியல் என்று பலதரப்பட்ட நூல்கள். தொண்ணூற்றொன்பது நூல்களில் கூளமாதாரி, பூனாச்சி ஆகியவையும் இருந்துள்ளன. நூறாவது நிகழ்வில் ‘எங்கள் ஐயா’ நூல் மதிப்புரை. நூற்றில் மூன்று என் இடம். குறையொன்றுமில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

நிகழ்வுக்கு ஈரோடு, அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து முன்னாள் மாணவர்கள் கிட்டத்தட்ட முப்பது பேர் வந்திருந்தனர். பெங்களூரில் இருந்து வந்திருந்தவர்களில் என் தொடக்கப்பள்ளி நண்பன் செங்கோட்டுவேல் ஒருவர். அவரும் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர். ஒன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். மூன்று, ஐந்தாம் வகுப்புகளில் ஒரே பிரிவு. நான்காம் வகுப்புப் படிக்கும்போது எடுத்த புகைப்படம் இருவரிடமும் உள்ளது. ஆனால் அந்த ஆண்டு இருவரும் வெவ்வேறு பிரிவு. அதனால் புகைப்படத்தில் சேர்ந்து இடம்பெற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

இடையில் ஓரிரு முறை பேசியில் உரையாடி இருந்தபோதும் நாற்பதாண்டுகளுக்குப் பிறகு சந்தித்துத் தொடக்கப் பள்ளிக்கால நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தோம். பத்மா டீச்சர், பார்வதி டீச்சர், காளியம்மாள் டீச்சர், கண்ணாடி டீச்சர் என்னும் ராஜேஸ்வரி டீச்சர் ஆகியோரைப் பற்றியெல்லாம் பேசினோம். உடன் பயின்ற நண்பர்கள் பலரை நினைவுகூர்ந்தோம். என்னை விடவும் செங்கோட்டுவேலுக்கு நல்ல ஞாபகம். என் நூல்கள் பலவற்றை வாசித்திருந்தார். இத்தனை காலம் கழித்துப் பார்க்கும்போது  ‘ர்’ போட்டுத்தான் பேச வந்தது. பெருமகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தோம்.

அக்கல்லூரியில் இப்போது பயிலும் மாணவர்கள் நிகழ்ச்சிப் பொறுப்பை முழுதுமாக ஏற்றிருந்தனர். வாசிப்பு மன்றத்தில் இவர்களும் பங்கேற்று நூல் மதிப்புரை செய்கின்றனர். கல்லூரியின் தொடக்க கால மாணவர்கள் பலரும் அறுபது வயதை எட்டும் நிலையில் உள்ளனர். இப்போது முதலாண்டு பயிலும் மாணவருக்குப் பதினேழு வயதுதான். எனினும் தம் மூத்தோரை அண்ணா, அக்கா என்றே அழைக்கின்றனர். அது இக்கல்லூரியின் தொடக்க கால மரபு என்றனர். மரபு தொடர்கிறது.

புத்தகமே பெருந்துணை

கல்லூரி முதல்வர் முனைவர் சாரதா அவர்கள் தமக்கு உடல்நிலை சரியில்லாத போதும் இந்த நிகழ்வுக்காகச் சிரமத்தையும் பாராமல் வந்திருந்தார். மகளிர் விடுதியில் ஓர் அறை ஒதுக்கச் சொல்லிக் கேட்டுச் சிறுநூலகம் தொடங்கியுள்ளனர். கிட்டத்தட்ட எண்ணூறு நூல்கள் இப்போது அதில் உள்ளன. மாணவியர் ஆர்வத்தோடு வாசிக்கின்றனர்; வாசிப்பு மன்றத்தில் பங்கேற்கின்றனர். அதைப் பார்த்து ‘ஆண்களுக்கு அந்த வாய்ப்பு இல்லையா?’ என்று மாணவர்கள் கேட்கின்றனர்.

ஆண்கள் விடுதியில் நூலகம் தொடங்கவும் இப்போது உறுதியளித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் வளாகத்தில் இருக்கும் நான்கு விடுதிகளுக்கும் செய்தித்தாள் வாங்க ஓராண்டுச் சந்தா கட்டவும் முதல்வரிடம் அனுமதி கேட்டனர். மாணவர்களுக்கு உதவி செய்ய யார் அனுமதி மறுப்பார்கள்? கல்லூரி முதல்வர் உடனடியாக அனுமதி வழங்கினார். தொடங்கிய போதிருந்து சாதாரணக் குடும்பத்துப் பிள்ளைகள் கல்வி கற்கும் நிறுவனத்திற்கு இப்படித் தேவையறிந்து உதவும் முன்னாள் மாணவர்கள் கிடைத்திருப்பது பெரிய விஷயம்.

வந்திருந்தவர்களிடம் பேசியதும் புகைப்படம் எடுத்துக்கொண்டதும் நல்ல நினைவுகள். அக்கல்லூரிக்கு விதவிதமான முன்னாள் மாணவர்கள். சேலம் தியாகராயா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் குமரகுருபரன் ஆவலாகப் பேசினார். மரபுக்கவிதை எழுதுவதில் ஆர்வம் உடையவர். வெண்பா எழுதும் ஆற்றல் கொண்டிருக்கிறார். தமிழ்க் கவிதை நவீனத்திற்கு நகர்ந்துவிட்டாலும் ஒருபுறம் மரபோடு இயைபவர்கள் இருக்கிறார்கள். இருக்க வேண்டும். எத்தனையோ வகைப் பாக்களும் பாவினங்களும் நமக்கு இருக்கின்றன. அந்த மரபை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வாழ்த்துப் பாக்களை மரபில் எழுதும் பழக்கத்தை இப்போதும் வைத்திருக்கிறேன். சடங்கில் இதை நுழைத்துவிட்டால் வெகுகாலம் உயிர்வாழும் என்னும் நம்பிக்கை.

நண்பர் குமரகுருபரனின் குடும்பப் பின்னணி தமிழோடு இயைந்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிய புலவர் குழாமைக் ‘கழகப் புலவர்கள்’ என்றழைப்பது வழக்கம். அவர்களுள் ஒருவர் தி.சங்குப் புலவர். மூவருலா, கைந்நிலை, இன்னிலை, அழகர் கிள்ளை விடு தூது, தமிழ் விடு தூது முதலிய நூல்களுக்கு உரை எழுதியவர் அவர். தமிழ் விடு தூது நூலைக் குறிப்புரையுடன் உ.வே.சாமிநாதையர் பதிப்பித்தார். அதற்குப் பொழிப்புரை, விளக்கவுரை ஆகியவற்றை விரிவாக எழுதியவர் சங்குப் புலவர். இப்போதும் இவர் உரையைப் பின்பற்றித்தான் வெவ்வேறு உரைகள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் உரை வரலாற்றில் முக்கிய இடம்பெற்றிருக்கும் சங்குப் புலவரின் பேரன் தான் பேராசிரியர் குமரகுருபரன். அவர் குடும்பத்தில் பலர் தமிழார்வம் உடையவர் என்று சொன்னார். அம்மரபை அவரும் பேணி வருகிறார். அவரோடு பேசியது உவப்பைத் தந்தது.

நிகழ்ச்சி முறையாகவும் கால அளவைச் சரியாகப் பின்பற்றியும் நடைபெற்றது. துளசிராம் செறிவான வரவேற்புரை ஆற்றினார். இறுதியாண்டு பயிலும் மாணவி பானுபிரதா ‘எங்கள் ஐயா’ நூலைப் பற்றிய மதிப்புரை வழங்கினார். தமிழ்ப் பேச்சுப்போட்டியில் பேசுவது போல அலங்கார வார்த்தைகளுடன் தொடங்கிய அவர் அப்படியே தொடர முடியவில்லை. இடையில் நூலைப் பற்றிய தம் எண்ணங்களை உணர்வுப்பூர்வமாகப் பேச ஆரம்பித்துவிட்டார். அது இயல்பாகவும் நன்றாகவும் இருந்தது. நூலை முழுமையாக வாசித்து அதன் முக்கியப் பகுதிகளை எல்லாம் தாம் உணர்ந்து கொண்ட விதத்தில் எடுத்துப் பேசினார்.

என் நூல்களின் வாசகரும் ‘கூளமாதாரி’ நாவலை வாசிப்பு மன்ற நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்திப் பேசியவருமான காங்கேஷ் என்னை அறிமுகப்படுத்திப் பேசினார். நவீன இலக்கிய வாசிப்பு மிக்க அவரது உரை சுருக்கமாகவும் நன்றாகவும் இருந்தது. வெற்று வார்த்தைகளால் புகழாமல் நூல்களின் வாயிலாக அறிமுகப்படுத்திப் பேசியது சிறப்பு. எழுத்தாளரின் அடையாளம் அவர் எழுதிய நூல்கள் தானே. வாசிப்பு மன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்துவதில் உதவியாக இருக்கும் கல்லூரி நூலகர் சக்திவேல் நூலகம் பற்றியும் அங்கு தொடர்ந்து வரும் மாணவர்கள் பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

என் உரைக்கும் உரையாடலுக்கும் முக்கால் மணி நேரம் ஒதுக்கியிருந்தனர். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் எடுத்துக்கொண்டேன். எப்போது மாணவர்களுக்குச் சொல்லும் படிப்புக்கும் வாசிப்புக்குமான வேறுபாட்டைக் குறித்துக் கொஞ்சம் பேசினேன். அதில் நம் சமூகத்திற்குக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட காலம், கிடைத்த காலம் பற்றியும் சொன்னேன். பொதுநூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளல், தனிநபர் நூலகம் உருவாக்குதல் பற்றிப் பேசினேன். நமக்கென்று மின்நூலகம் ஒன்றை உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு இன்று ஏற்பட்டிருப்பது பற்றியும் சொன்னேன். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த அரங்கில் என் பேச்சுக்குச் சிறு இடையூறும் ஏற்படவில்லை. ஆகவே மனஎழுச்சியோடு பேச முடிந்தது.

புத்தகமே பெருந்துணை

உரை முடிந்ததும் மாணவர்களோடு உரையாடல். பெண்கள் நிறையக் கேள்விகளைக் கேட்டனர். என்னால் இயன்ற அளவு பதில் சொன்னேன். பதில் பொருத்தமாகவும் நன்றாகவும் இருந்ததாகப் பின்னூட்டம் வந்தது. மாணவர்கள் சுதந்திரமாகக் கேள்வி கேட்டனர். கட்டுப்படுத்தவோ தடை செய்யவோ யாருமில்லை. ஆகவே மனம் திறந்த உரையாடலை நிகழ்த்த முடிந்தது. எல்லாவற்றிலும் பெரிது இந்த உரையாடல்தான்.

நல்ல வரவேற்பு; மதிப்பார்ந்த கவனிப்பு. அழைத்துச் சென்றது போலவே வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். அது முக்கியம்.

இன்று (16-11-24) மாலை இந்த வாசிப்பு மன்றம் நூற்றொன்றாவது நிகழ்ச்சி நடக்கப் போகிறது. இன்னும் பலநூறு நிகழ்ச்சிகளை நடத்த வாழ்த்துகிறேன்.

—–    16-11-24

Latest comments (2)

Gopalakrishnan Subramaniam

கட்டுரை மிக அருமைங்க
எங்கள் சொந்த காஞ்சிக்கோயில் ஊருக்கு அருகில் 7 KM தொலைவில் உள்ளதுங்க IRTT கல்லூரி …

உங்கள் கட்டுரையை வாசித்தேன்.மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருந்தது.வாழ்த்துகள் சார்.