பாடகர் இசைவாணி 2019இல் பாடிய ‘ஐ யாம் சாரி ஐயப்பா உள்ள வந்தா என்னப்பா’ என்னும் பாடல் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாகக் கூறி அவர் மீதும் அந்நிகழ்வை ஏற்பாடு செய்த நீலம் பண்பாட்டு மைய நிறுவனர் பா.இரஞ்சித் மீதும் இந்துத்துவ அமைப்பினர் பல இடங்களில் புகார் கொடுத்துள்ளனர். புகார் கொடுப்பதும் சட்டரீதியாக அணுகுவதும் ஜனநாயகம் கொடுத்திருக்கும் உரிமை. அவற்றை யாரும் பயன்படுத்தலாம். தவறென்று யாரும் சொல்வதில்லை.
ஆனால் அவரது செல்பேசி எண்ணைப் பொதுவில் பகிர்ந்தனர். வெவ்வேறு எண்களில் இருந்து அழைத்து ஆபாசமாகப் பேசினர்; மிரட்டினர். அவரது உருவப்படத்தை ஆபாசமாகச் சித்திரித்து வெளியிட்டனர். சமூக வலைத்தளங்களில் அவரைப் பற்றி இட்ட வசைப்பதிவுகள் கணக்கிலடங்கா. இத்தகைய செயல்களை எந்தச் சட்டம் அனுமதிக்கிறது? ஆபாசமாகப் பேசுவதையும் மிரட்டுவதையும் ஒருவழிமுறையாகவே இந்துத்துவ அமைப்பினர் வைத்திருக்கின்றனர். அதுவும் பெண் என்றால் சொந்த வாழ்க்கையையும் உடலையும் குறி வைத்து மிகக் கடுமையான வசைகளை ஏவுவதை ஓர் ஆயுதமாகவே கையாள்கின்றனர்.
யாரைக் குறி வைக்கிறார்களோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது போல ஒருபுறம் காட்டிக்கொண்டு மறுபுறம் இத்தகைய சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது அவர்கள் வழக்கம். தங்கள் அரசியலுக்கு எவையெல்லாம் முதலீடோ அவற்றில் குறுக்கீடு செய்பவர்களை மௌனமாக்குவதற்கான உத்தி இது. சர்ச்சையை முன்னெடுக்கும் விஷயத்தில் மட்டுமல்ல, தொடர்புடையவரை எதிர்காலத்திலும் முடக்குவதே நோக்கம். கலையின் வீச்சு பொதுவெளியில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி யாரையும் விடப் பெரிதும் அறிந்தவர்கள் இந்துத்துவர்கள். ஆகவே கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து குறி வைக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
ஆபாசமாகப் பேசிய செல்பேசி எண்களை எல்லாம் எடுத்து ஆதாரத்துடன் காவல்துறையில் இசைவாணி புகார் கொடுத்தார். அதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ‘ஒருமதத்தை இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர் இழிவுபடுத்துவதை அனுமதிக்க மாட்டோம். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து இசைவாணி மீது தவறு இருப்பின் உறுதியான நடவடிக்கை எடுப்போம்’ என்று சொன்னார். இது என்ன பதில்? குறைந்தபட்சம் இப்பிரச்சினை பற்றி விசாரித்து அறிந்தாரா? இசைவாணி எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று எதை வைத்து முடிவு செய்தார்? இப்பிரச்சினையில் இன்னொரு மதம் எங்கிருந்து வந்தது? இருபக்கம் இருந்தும் புகார்கள் வந்திருக்கின்றன. இசைவாணி கொடுத்த புகார் பற்றி எந்தப் பேச்சும் இல்லை. ஆட்சியாளர்களின் காது ஒருபக்கம் மட்டும் இருந்தால் எப்படி?
தனிமனிதரைக் குறிவைத்து ஆபாசமாகப் பேசுவதைத் தடுப்பதைத்தானே முதலில் செய்ய வேண்டும்? பாதிக்கப்படுபவருக்குப் பாதுகாப்புக் கொடுப்பதை அல்லவா அரசு உடனடியாகச் செய்திருக்க வேண்டும்? ‘இருபக்கம் இருந்தும் புகார்கள் வந்திருக்கின்றன. விசாரித்துச் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’ என்று சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லை. இந்துத்துவர்கள் கொடுத்த புகாரை அமைச்சர் கணக்கில் எடுக்கிறார். இசைவாணி கொடுத்த புகாரைப் பொருட்படுத்தவே இல்லை. தனிமனிதரைப் பாதுகாப்பது அரசின் முதல் கடமை. ‘இசைவாணியை யாரும் மிரட்டக் கூடாது; ஆபாசமாகப் பேசக் கூடாது. அப்படிச் செய்வோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும்’ என்றுதானே சொல்ல வேண்டும்? அதுவே ஜனநாயகத்தில் தனிமனித உரிமையைக் காக்கும் செயல்.
‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ‘கருத்துரிமை சார்ந்த பிரச்சினை ஏற்படும்போது அதைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் சுருக்கிக் காணக் கூடாது. தனிநபர்களின் கருத்துரிமையை அரசு பாதுகாக்க வேண்டும். சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க அரசு வேறு வழிமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அரசு ஒருபோதும் தனிமனித உரிமை சார்ந்து எதையும் காண்பதே இல்லை.
அரசைப் பொருத்தவரைக்கும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வந்துவிடக் கூடாது என்பதே முதன்மையாக இருக்கிறது. கும்பலாகக் குரல் எழுப்புவோர் பக்கமிருந்து காண்பதே வாடிக்கையாக நிகழ்கிறது. கலைஞர்கள் தனிமனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்த துறையிலிருந்தோ சமூகச் செயல்பாட்டர்களிடம் இருந்தோ வரும் ஆதரவுக் குரல் அரசின் காதுகளில் விழுவதில்லை. கும்பலின் கோஷம் பெருகிவிடக் கூடாது என்பதிலேயே அரசு கவனம் செலுத்துகிறது.
இசைவாணிக்கு ‘நீலம் பண்பாட்டு மையம்’ முழுமையாக ஆதரவு தெரிவித்து உடன் நின்றது. கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஆதரவு காட்டினர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அவ்வறிக்கையில் ‘எதற்கெடுத்தாலும் மனம் புண்பட்டதாகக் கூறிக்கொண்டு பரபரப்பையும் பதற்றத்தையும் உருவாக்கிச் சமூகத்தை அமைதியின்மையில் மூழ்கடித்துக் கவனக்குவிப்பு பெறும் மலிவான முயற்சியில் ஈடுபடுகின்ற சங்பரிவார் கும்பல் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் ‘இசைவாணி எந்த மதத்தவராக இருந்த போதிலும் வழிபாட்டுரிமை உள்ளிட்டுப் பாலினச் சமத்துவத்தைக் கோருவதற்கு அரசியல் சாசனப்படியும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் அவருக்குள்ள உரிமையினைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்’ எனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் அவ்வறிக்கை ‘சுதந்திரமான கலைச்செயல்பாட்டிற்கு அச்சுறுத்தலை உருவாக்குவதன் மூலம் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் சுயதணிக்கைக்குள் முடக்கி மழுங்கடிக்கப் பார்க்கும் சங்பரிவாரத்தின் இழிமுயற்சிகளை முறியடித்தாக வேண்டும். ஆக்கப்பூர்வமான விவாதக்களமாக இருக்க வேண்டிய பொதுவெளியை இப்படி மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அவதூறுகளாலும் ஆபாசங்களாலும் தனிமனிதத் தாக்குதல்களாலும் நிறைக்கும் சங் பரிவாரத்தின் போக்குக்கு எதிராக ஜனநாயகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள்ளவர்கள் குரலெழுப்ப வேண்டும்’ என்று மிகச் சரியாகச் சூழலைக் கணித்துக் கூறியுள்ளது.
கருத்துரிமை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக மட்டும் அதைக் காணக் கூடாது; தனிமனிதருக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைப் பிரச்சினையாகக் கருத வேண்டும். தனிமனிதருக்கு விடுக்கும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், ஆபாசப் பேச்சுக்கள் முதலியவற்றை அனுமதிக்கக் கூடாது. இந்துத்துவத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் என்று வாயளவில் சொன்னால் போதாது; பாதிக்கப்படுபவருக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்; அவர் குரலையும் கேட்க வேண்டும். தனிமனித உரிமை சார்ந்த கோணத்தில் கருத்துரிமைப் பிரச்சினையாக இதை அரசு காண வேண்டும். ‘ஐ யாம் சாரி அரசப்பா, பாதிக்கப் படுவோரைப் பாரப்பா’ என்பதை நாம் அனைவரும் ஒருசேர மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம்.
—– 05-12-24
அதிகாரம் நிலைத்திருக்க உண்மை ஒழித்துக்கட்டப்பட வேண்டும். எங்காவது சுதந்திரக் காற்று வீசினால் அங்கே விஷ வாயு வீசச் செய்யப்பட வேண்டும். ஏனெனில், மக்கள் எப்போதும் அதிகாரத்தையே ஆதரிக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள்.
கண்டிப்பா….. ஐ ஆம் சாரி அரசப்பா… பாதிக்கப்படுவோரைப் பாரப்பா….
நேர்மையான அதேசமயம் துணிச்சலான பதிவு ஐயா!