வரலாற்று ஆய்வாளராகவும் நவீனப் பதிப்பாசிரியராகவும் விளங்கும் ஆ.இரா.வேங்கடாசலபதி இத்தகைய துறைகளில் எப்போதிலிருந்து ஈடுபடத் தொடங்கினார் என்று சொல்வது கடினம். டவுசர் போட்ட சிறுவனாக இருந்த போதே அவர் பணிகள் தொடங்கியிருக்கின்றன. அப்படியானால் எது தொடக்கம்? அவருடைய பணிகள் முடிந்த முடிவானவையா? இரண்டுக்கும் பதில் சொல்ல வேண்டுமானால் ‘ஆதியும் அந்தமும் இல்லாத தனிப்பெரும் ஆளுமை’ எனலாம்.
பதிப்பிலும் ஆய்விலும் அவர் காட்டும் பொறுமையைக் கண்டு பல சந்தர்ப்பங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இவ்வாண்டு ஆங்கிலத்தில் வெளியாகிப் பெருங்கவனம் பெற்ற நூல் ‘Swadeshi steam.’ அந்த நூலின் தொடக்க விதை விழுந்து நாற்பதாண்டுகள் கழிந்தன. விதையுறக்கம் முடிந்து முளையிலேயே பெருமரமாக எழுந்து நின்றது. அவரது ஒவ்வொரு நூலுக்கும் பின்னால் இப்படி மாபெரும் பொறுமை இருக்கிறது. அவர் செய்யும் பணிகளில் மட்டுமல்ல, அவரின் வழிகாட்டுதல் கொண்டவற்றிலும் பொறுமை காப்பார்.
ப.சரவணன் பதிப்பில் வெளியாகியிருக்கும் உ.வே.சாமிநாதையர் எழுதிய ‘மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ நூல் அச்சுக்குத் தயாரான நிலையிலும் குறிப்பிட்ட தகவல் ஒன்றைப் பெற வாய்ப்பிருக்கிறது என்பதற்காகச் சில ஆண்டுகள் அதை நிறுத்தி வைத்தார். புதுமைப்பித்தன் நூல்களைப் பதிப்பிக்க அவர் முப்பது ஆண்டுகளுக்கு முன் முயற்சி எடுத்தார். புதுமைப்பித்தன் சிறுகதைகள், கட்டுரைகள் உள்ளிட்டவை நூல்களாக வந்துவிட்டன. இன்னும் வராதவை உள்ளன. அப்பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒருநூலை அவசரம் அவசரமாக வெளியிட்டுவிட வேண்டும் என்னும் எண்ணம் அவருக்குக் கிடையாது. நூலுக்குத் தேவைப்படும் உழைப்பை முழுமையாக வழங்குவதோடு தேவைப்படும் கால அவகாசத்தையும் எடுத்துக் கொள்வார்.
சிறந்த ஆய்வாளர் ஒருநூலை முடித்து வெளியிட்டுவிட்டால் அத்துடன் தமக்கும் அதற்குமான தொடர்பு அறுந்துவிட்டதாகக் கருத மாட்டார். அதற்குச் சலபதியே வாழும் சான்று. அவரது ஒவ்வொரு நூலும் அடுத்தடுத்த பதிப்பு வரும்போது புதிய தகவல்கள், சேர்க்கைகள் என விரிந்திருக்கும். 2000இல் வெளியான ‘புதுமைப்பித்தன் கதைகள்’ நூல் இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட பதிப்பு வந்திருக்கிறது. ‘பொய்க்குதிரை’ கதை வெளியீட்டு விவரத்தைக் கண்டுபிடித்து ஒருபதிப்பில் சேர்த்திருப்பார். ‘புதிய கூண்டு’ கதையைக் கண்டுபிடித்து அதன் பாடத்தை ஒருபதிப்பில் செம்மைப்படுத்தியிருப்பார். அச்சுப் பிழைகள் சிலவற்றை ஒருபதிப்பில் திருத்தியிருப்பார். தலைப்பு அகரவரிசையை ஒருபதிப்பில் இணைத்திருப்பார். ஒவ்வொரு பதிப்பிலும் இப்படி ஏதேனும் ஒருபுதுமை இருக்கும்.
ஆய்வுக் கட்டுரையைச் செழுமைப்படுத்துவதும் அப்படித்தான். உள்ள சான்றுகளைக் கொண்டு தமக்கு உருவான கருதுகோள் அடிப்படையில் முதலில் உரையாற்றுவார் அல்லது சிறுகட்டுரையாக எழுதுவார். கூடுதல் சான்றுகள் கிடைக்கக் கிடைக்கக் கட்டுரை விரிவாகிக் கொண்டே செல்லும். சில கட்டுரைகள் அப்படி விரிவாகித் தனித்தனி நூல்களாக வடிவம் பெற்றதுண்டு. ‘வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா’ என்னும் நூல் அப்படி உருவானதுதான். அவர் எழுதிய குறுங்கட்டுரை 2003இல் ஆங்கில இந்து நாளிதழில் வெளியாயிற்று. பிறகு 2019இல் தமிழ் இந்து நாளிதழில் ஒருகட்டுரை. அவையே விரிந்து சான்றாதார இணைப்புகளுடன் தனிநூலாயின.
வரலாற்று ஆய்விலும் பதிப்பிலும் முன்னுதாரணம் இல்லாதவர் சலபதி. பழந்தமிழ் இலக்கியப் பதிப்பாசிரியர்களின் இயல்புகள் இவரிடம் உண்டு எனினும் அவர்களிலிருந்து மாறுபட்ட நவீன இலக்கியம், வரலாறு என இவர் பதிப்புகள் எழுந்தன. நவீன இலக்கியத்தைச் செம்பதிப்பாக்க முடியும் என்று காட்டிய வகையில் இவரே முன்னோடி. ஆய்விலும் அப்படித்தான். தமிழ்ச் சமூக வரலாறு சார்ந்து அவர் எழுதியிருக்கும் நூல் ஒவ்வொன்றும் புதுமையானதே. புதிய வரலாற்று அறிதலைத் தருவதாகவோ வரலாற்றுப் பிழையைச் சரி செய்வதாகவோ வதந்திகளாக உலவுபவற்றைத் தெளிவுறுத்துவதாகவோ அவர் நூல்கள் அமையும்.
கல்விப்புலம் சார்ந்த ஆய்வாளர் என்பதால் அதற்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றுவார். ஆனால் பொதுச்சமூகத்திற்கு ஏற்ற வகையில் எழுதி வெளியிடுவார். அவரது ஆய்வு நூல்களின் வாசிப்புச் சுவையைப் பலரும் விதந்தோதுவதன் காரணம் அதுதான். ‘துப்பறியும் நாவல் ஒன்றை வாசிப்பது போல அவர் எழுதிய வரலாற்று ஆய்வு நூலை வாசிக்க முடிகிறது’ என்றெல்லாம் சொல்லப்படும் பாராட்டுகளுக்குக் காரணம் அதுதான். கல்வி வளாகங்களிலும் கருத்தரங்குகளிலும் பேசிக் கலைவதல்ல வரலாறு; வரலாற்றுக்கும் பொதுச்சமூகத்துக்கும் தொடர்பு தேவை என்பதை உணர்ந்த எழுத்து அவருடையது.
வரலாற்று ஆசிரியருக்குப் பலதுறை ஈடுபாடும் அறிவும் தேவை என்பது அவர் நிலைப்பாடு. நவீன இலக்கியங்களைத் தேடி வாசிப்பவர். ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய போது ‘நவீன எழுத்தாளர்கள் வரலாற்று ஆசிரியர்களை முந்திச் செல்கிறார்கள்’ என்று குறிப்பிட்டார். அவரது வாசிப்பிலிருந்து வெளிப்பட்ட அவதானம் அது. இலக்கியத்தை வரலாற்றுக்கு ஆதாரமாக எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதை அவரது ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’, ‘நாவலும் வாசிப்பும்’ ஆகிய நூல்களைப் படித்து அறியலாம். இலக்கியச் சான்றுகள், ஆவணங்கள் ஆகியவை தரும் ஒளியில் தம் நூல்களை எழுதுகிறார். ஆகவே அவை செழுமையுடன் திகழ்கின்றன.
சலபதி எழுதியிருக்கும் எந்த நூலையும் ஒதுக்க முடியாது; ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துலங்குகின்றது. அவர் பதிப்பித்த நூல்கள் பெருவாசகர் பரப்பைச் சென்று சேர்ந்திருக்கின்றன. அவை வாசகருக்குச் சுவை தருகின்றன. பதிப்பாசிரியர்கள் பின்பற்றத்தக்கவையாக விளங்குகின்றன. தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதித் தமிழ்ச் சமூக வரலாற்றை உலகம் கவனிக்கச் செய்திருக்கிறார். பல பல்கலைக்கழகங்களில் உரையாற்றியுள்ளார். வருகை தரு பேராசிரியராக விளங்கியுள்ளார். ‘எம்முளும் உளன் ஒரு பொருநன்’ என்று நாம் மகிழச் சலபதி ஒருவரே உள்ளார்.
தமிழ்ச் சமூக வரலாற்றுக்குத் தரமான பங்களிப்புகளைத் தாம் மட்டும் வழங்கினால் போதாது; இன்னும் பலர் வேண்டும் என்னும் உணர்வு கொண்டவர். அவரால் தூண்டுதல் பெற்று ஆய்விலும் பதிப்பிலும் காலூன்றி நிற்கும் வரிசை ஒன்று இருக்கிறது. திராவிட இயக்க வரலாற்று ஆய்வில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் சலபதி. ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ நூல் அவர் எழுதியது. அவரது வழிகாட்டுதலில் இயங்கி இன்று முக்கிய ஆய்வாளராகத் திகழ்பவர் ‘வைக்கம் போராட்டம்’ முதலிய நூல்களை வழங்கியுள்ள பழ.அதியமான். பாரதியாரைப் பற்றிப் பல புதிய தகவல்களைக் கண்டறிந்து வரிசை நூல்களை எழுதிவரும் ய.மணிகண்டனுக்கும் சலபதியின் ஆற்றுப்படுத்தல் உண்டு. சூறைக்காற்றாகச் சுழலும் ப.சரவணனின் பதிப்புகள் எல்லாம் சலபதியின் ஆசிக்கு உட்பட்டு வெளிவந்தவையே.
சலபதியின் மாணவர்களாகிய ஜெ.பாலசுப்பிரமணியன், ஆ.திருநீலகண்டன் ஆகியோர் எழுதிய நூல்களும் பெருங்கவனம் பெற்றிருக்கின்றன. ‘அறியப்படாத தமிழகம்’ நூல் மூலம் தொ.பரமசிவன் பெயரைத் தமிழுலகம் அறியச் செய்தவர் சலபதி. பெரும்பேராசிரியராக விளங்கிய எஸ். நீலகண்டனின் ‘ஒரு கிராமமும் ஒருநகரமும்’ நூல் மிகச் சிறப்பானது. அதை அவர் எழுதவும் வெளியாகவும் காரணம் சலபதி. அதன்பின் பொருளியல் துறை சார்ந்த இரண்டு முக்கியமான நூல்களை அவர் எழுதினார். தே.வீரராகவன் எழுதிய ஆய்வேட்டைத் தேடிக் கண்டு ‘சாதிக்குப் பாதிநாளா?’ நூல் வெளியானதும் சலபதியால்தான்.
அவர் கை பட்டும் கண் பட்டும் மெருகேறிச் செழித்த நூல்கள் பல; ஆசிரியர்கள் பலர். அந்த வரிசையின் கடைநிலையில் என்னையும் வைத்துக்கொள்கிறேன். ‘கு.ப.ரா. சிறுகதைகள்’ நூலை அவரது அழுத்தத்தினாலேயே பதிப்பித்தேன். அதன் மூலம் நான் பெற்ற அறிவும் அனுபவமும் பெரிது. ‘இவர் செய்துவிடுவார்’ என்னும் நம்பிக்கை வந்துவிட்டால் போதும். எல்லா நிலையிலும் உதவும் இயல்புடையவர் சலபதி.
ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதிக் கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பெரும்பங்களிப்பு செய்திருக்கும் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு இவ்வாண்டு விருது வழங்கிச் சாகித்திய அகாதமி பெருமை பெற்றுள்ளது. திட்டமிட்டுள்ள பல பணிகளையும் அவர் தொடர்ந்து செய்து முடிக்க இவ்விருது ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன். சலபதியை ‘வாழ்க வாழ்க’ என்று வாழ்த்துகிறேன்.
—– 19-12-24,
ஐயா! ‘எம்முளும் உளன் பொருநன் ‘ வாழ்த்துக்கட்டுரை, சலபதி அவர்களுக்கு
மீண்டும் ஒரு விருது வழங்கி உலகிற்கு அறிமுகம் செய்ததைப் போல அமைந்துள்ளது. வாழ்த்துகள் நன்றி
சிறப்பு ஐயா. விருதாளருக்கு என்னுடைய வாழ்த்துகள்
கலைக்களஞ்சியத்தின் கதை, நாவலும் வாசிப்பும் முதலான நூல்கள் சிறப்பானவை. வரலாற்று நூல்கள், செம்பதிப்பு ஆகியவற்றை தமிழ் உலகிற்கு வழங்கியவர். எனக்கு 2007ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை மெய்ப்புத் திருத்தம் செய்திட சொல்லித் தந்தார். வரலாற்றுத் தகவல்களுடன் கற்பித்த அணுகுமுறை மெய்சிலிர்க்க வைத்தது. சிறந்த ஆளுமை. சாகித்திய அகாதமி விருது பெறும் ஆ.இரா.வேங்கடாசலபதி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். நன்றி ஐயா.
ஐயாவை சில இடங்களில் அழைத்துச் செல்லும் பொழுது.
சில பெயர் தெரியாத தெருக்களை கூட நினைவில் வைத்துக் கொண்டு இது இப்படி மாறிவிட்டதா? இதில் நான் சைக்கிளில் சுற்றி இருக்கிறேன். அப்படி என்று சொல்லிக் கொண்டே வருவார்.
சென்னையில் உள்ள வால் டாக்ஸ் ரோடு. அந்த ரோட்டுக்கு.
எப்படி பெயர் வந்தது? அப்படி என்பதை ஒரு சில வரிகளில் சொல்லி அதன் வரலாற்றை சொல்லிக் கொடுத்தவர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள தெருக்களின் பெயர்களை முறையாக நினைவில் வைத்து
என்னையும் சில தெருக்களில் கடந்த கால நினைவுகளுக்கு இட்டுச் செல்வார்.
நானும் கற்பனை செய்து பார்த்திருக்கிறேன்.
ஐயாவுக்கு இந்த விருது கிடைத்ததற்கு மனம் மகிழ்வு கொள்கிறேன் .
“துப்பறியும் நாவல் ஒன்றை வாசிப்பது போல அவர் எழுதிய வரலாற்று ஆய்வு நூலை வாசிக்க முடிகிறது”
மிக அற்புதமான வரி.
மிகச் சிறந்த வாழ்த்துக் கட்டுரை ஐயா. இன்னும் ஆய்வாளர் சலபதி அவர்களை கூடுதலாய் புரிந்து கொள்ளவும், அவரின் உழைப்பின் மேன்மையை அறிந்திடம் இந்த கட்டுரை உதவுகிறது. இன்னும் அவரின் ஆய்வுகளை தேடிக் கற்கிறோம். வெகு நாளுக்குப் பிறகு சாகித்ய அகாதெமியின் கண்கள் ஆய்வின் பக்கம் திரும்பியதும், ஒரு ஆய்வு நூல் விருது பெறுவதும் கூடுதல் மகிழ்ச்சி.