இத்தாலியின் பிளோரன்ஸ் நகரத்தில் ஆண்டுதோறும் ‘இந்தியத் திரைப்பட விழா’ நடைபெற்று வருகிறது. 2001இல் தொடங்கிய இதற்குக் கங்கை, பிளோரன்ஸ் நகரில் ஓடும் ஆர்னோ ஆறு ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் ‘River to River : Florence Indian Film Festival’ என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்தியாவுக்கு வெளியில் இந்தியத் திரைப்படங்களுக்காக நடக்கும் ஒரே விழா இதுதானாம். பெரும்பாலும் இந்தித் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இவ்வாண்டு திரையிட்ட படங்களில் இந்தி தவிர மலையாளம், குஜராத்தி, மராத்தி ஆகிய மொழிப் படங்கள் ஒவ்வொன்று இருந்தன. இந்தியத் தூதரகமும் இந்த விழாவில் இணைந்திருக்கிறது.
இதன் இருபத்தைந்தாம் ஆண்டு 2025இல் வருகிறது. இந்தியத் திரைப்படங்களைத் திரையிடலும் அவற்றைப் பற்றிய உரையாடலுமாக இவ்விழா ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. அமிதாப்பச்சன், ஷபனா ஆஸ்மி, அனுராக் காஷ்யப் முதலிய இந்தித் திரைப் பிரபலங்கள் இதுவரைக்குமான விழாக்களில் பங்கேற்றுள்ளனர். ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு திரைக்கதை உருவாக்கியவரும் கேரளத்தைச் சேர்ந்தவருமான ஷாலினி இம்முறை வந்திருந்தார். அவர் திரைக்கதை எழுதிய ‘என்னென்னும்’ மலையாளப் படம் திரையிடப்பட்டது. வேறு சில இந்தி நடிகர்களும் வந்திருந்தனர்.
2024 டிசம்பர் 5இல் தொடங்கி 10வரை இவ்விழா நடைபெற்றது. அதன் இறுதி நாளில் ‘எழுத்தாளர் சந்திப்பு’ ஒன்றிற்காக அழைக்கப்பட்டேன். ஓர் எழுத்தாளரை அழைப்பது இதுதான் முதல் முறையாம். என் இரண்டு நாவல்கள் தமிழிலிருந்து நேரடியாக இத்தாலியில் மொழிபெயர்ப்பாகி உள்ளன. 2022இல் ‘பூனாச்சி’ மொழிபெயர்ப்பானது. இப்போது இரண்டாம் பதிப்பு வெளியாகியுள்ளது. இவ்வாண்டு ‘பூக்குழி’ மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தேர்ந்தெடுத்த நாவல்களை இத்தாலி மொழியில் வெளியிடும் ‘உடோபியா’ என்னும் இத்தாலியப் பதிப்பகம் இவ்விரண்டு நூல்களையும் வெளியிட்டுள்ளது.
பிளோரன்ஸ் நகரில் ‘BRAC’ என்னும் புத்தகக் கடை உள்ளது. இப்புத்தகக் கடையின் நிதியுதவியில் எங்களுக்கான அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உடோபியா பதிப்பகமும் அதில் இணைந்து கொண்டது. நானும் கண்ணனும் சென்றோம். டிசம்பர் 10 அன்று மாலை அமர்வு. இலக்கிய விழாவும் சரி, திரைப்பட விழாவும் சரி அன்றாடம் மாலையில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் மட்டும் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள். ஆர்வம் உள்ளோர் வருவதற்கு அதுதான் வசதி. நாள் முழுக்கக் கொண்டாட்டம் என்றால் ஐந்தாறு நாட்களை முழுமையாக ஒருவர் ஒதுக்க முடியாது. பார்வையாளர்களுக்கும் வசதி; ஏற்பாட்டாளர்களுக்கும் வசதி.
அன்று மதிய உணவு ‘BRAC’யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புத்தகக் கடையில் உணவு என்றதும் வெளியிலிருந்து வாங்கி வந்து பரிமாறுவார்கள் போல என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியல்ல. அது புத்தகக் கடையும் உணவகமும் இணைந்த இடம். Books Recipes Artists Cooking என்பது ஒருநூலின் தலைப்பு. அதைச் சுருக்கிப் புத்தகக் கடைக்குப் பெயர் வைத்துள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் இக்கடை செயல்பட்டு வருகிறது. உள்ளே நுழைந்ததும் புத்தகக் கடை வரவேற்கிறது. இத்தாலி மொழி நூல்களும் ஆங்கில நூல்களும் விற்பனைக்கு இருக்கின்றன.
இடப்பக்கக் கதவு வழியாக நுழைந்தால் உள்ளே உணவகம். எளிய சமையலறை. இன்னொரு கதவைத் திறந்து சிறுதோட்டத்தைக் கடந்து உள்ளே போனால் இருபத்தைந்து பேர் ஒரே சமயத்தில் உட்கார்ந்து சாப்பிடும் அளவு இடவசதி. அழகான மேசைகள். நல்ல உள்ளலங்காரம். உயரமான கட்டிடம். சுவரோர அலமாரிகள் அனைத்திலும் ஒயின் அடுக்கு. மனைவியும் கணவரும் சேர்ந்து அதை நடத்துகின்றனர். புத்தகக் கடைக்கு உரிமையாளர் மனைவி. உணவகத்திற்கு உரிமையாளர் கணவர். புத்தக முகத்தில் விழித்துவிட்டுத்தான் உணவைக் காணச் செல்ல முடியும்.
2010ஆம் ஆண்டு எழுத்தாளர் முகாம் ஒன்றில் தங்குவதற்காகத் தென்கொரியா சென்றேன். அங்கே உள்ள கபேக்கள் சிலவற்றில் புத்தகங்கள் அடுக்கிய அலமாரிகள் இருந்ததைக் கண்டேன். அங்கே நொறுக்குகளும் தேநீர் வகைகளும் மட்டும் கிடைக்கும். வருவோர் தேநீர் வாங்கிக் குடித்துக்கொண்டே ஒருபுத்தகத்தை எடுத்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் வாசித்துக் கொண்டிருக்கலாம். குறிப்பிட்ட இடைவெளியில் தேநீரைப் பருகிக் கொண்டே ஒருபுத்தகத்தையே முழுதாக வாசித்து முடிக்கலாம். அடுத்த நாளும் வந்து ஒருதேநீரோடு தொடர்ந்து வாசிக்கலாம். யாரையும் விரட்டுவதில்லை. புதிதாக வருவோர் இடமிருந்தால் உட்கார்வார்கள். இல்லாவிட்டால் வேறு கடை பார்த்துச் சென்றுவிடுவார்கள்.
கடைக்குள் பத்துப் பதினைந்து பேர் உட்கார்ந்து நொறுக்குத் தீனி கொறித்துக்கொண்டும் தேநீர் பருகிக் கொண்டும் ஏதேனும் ஒருநூலைப் பற்றி உரையாடலாம். அது ஒரு சிற்றரங்கு போன்ற இடம். அதற்கு மட்டும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். அப்படி வாராவாரம் வந்து பேசிச் செல்லும் வாசிப்புக் குழுக்கள் இருப்பதாகவும் சொன்னார்கள். அரங்குக்குக் கட்டணம் இல்லை. தீனிக்கும் தேநீருக்கும் மட்டுமே கட்டணம். ‘எதுவும் வாங்காமலே உட்கார்ந்து வாசிக்க அனுமதிப்பார்களா?’ என்று அபத்தமான கேள்வி ஒன்றை உடன் வந்த நண்பரிடம் கேட்டுவிட்டேன். என் புத்தி அம்மட்டுத்தான்.
‘அனுமதிப்பார்கள். ஆனால் தேநீருக்கும் புத்தகத்திற்கும் நல்ல பொருத்தம் இருக்கிறது அல்லவா?’ என்றார் அவர்.
இத்தாலியிலோ புத்தகக் கடையும் உணவகமும் இணைந்திருந்தது. ‘Book with kitchen’ என்றே சொல்கிறார்கள். ‘BRAC’ உணவகம் நனிசைவம். Vegan என்பதைத் தமிழில் ‘நனிசைவம்’ என்கிறார்கள். கடும்சைவம் என்றும் சொல்லலாம். விலங்குகள் தொடர்பான உணவுப் பொருட்கள் எதுவும் இல்லாத சைவம். முட்டை, பால் பொருட்கள் முதலியவையும் தவிர்க்கப்பட்ட முழுமையான தாவர உணவு. உலகளவில் நனிசைவம் ஒருவகையாக உருவாகியுள்ளது. அதைப் பின்பற்றுவோர் தொகையும் கூடிவருகிறது. நாய் வளர்ப்பும் பூனை வளர்ப்பும் பெருகி வரும் சூழலில் நனிசைவர் எண்ணிக்கை கூடுவது தவிர்க்க இயலாது என்றே தோன்றியது.
இத்தாலியில் பெரும்பாலும் ஒயின் இல்லாமல் உணவு உண்பதில்லை. விதவிதமான ஒயின் வகைகள். ஒவ்வொரு ஒயின் போத்தலுக்கும் ஒவ்வொரு வரலாறு சொல்கின்றனர். இத்தாலியின் பாரம்பரிய ஒயின் வகை ஒன்றைத் தேர்ந்து கொண்டோம். உலர்பழங்களில் தயாரித்த ஒயின். மிடறு மிடறாக ரசித்துக் குடிக்கும்படி மென்சுவை. ஒயின் கோப்பையைக் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை முகநூலில் அன்றைக்கே கண்ணன் வெளியிட்டுவிட்டார். மூலைக்கு மூலை டாஸ்மாக் கடை இருக்கும் தமிழ்நாட்டில் அப்படம் ஒரு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒயின் கோப்பையைக் கையில் வைத்திருக்கும் தைரியத்தைப் பாராட்டியும் ‘அங்கே குளிர். அதனால் பரவாயில்லை’ என்று சமாதானம் சொல்லியும் பதிவுகள் வந்தன. எங்கெங்கும் ஒயின் அடுக்குகள் கொண்ட உணவகங்கள் நிறைந்த பிளோரன்ஸ் நகரிலிருந்த எங்களைக் கலாச்சார அதிர்ச்சி பாதிக்காமல் பார்த்துக் கொண்டோம்.
—– 26-01-25
மணப்பாறையில் புத்தகங்களோடு கூடிய ஒரு உணவகம், அமைத்திட எண்ணம் இருந்தது. நண்பர்களோடு நாம் ஓர் உணவகம் வைத்திருக்கிறோம். அதில் கொஞ்சம் இதனை செயல்படுத்திட முனைகிறோம் ஐயா.
கட்டுரை ஊடாக தென்கொரிய அனுபவத்தை பகிர்ந்திருக்கிறீர்கள். அது ஒரு வகையில் புது உத்வேகம் கொடுக்கிறது. மணப்பாறையில் தென்கொரிய ஸ்டைலில் ஒரு தேனீரகம் கட்டுமொரு எண்ணம் ஐயாவின் கட்டுரையை வாசிக்கும்போது முளைவிடுகிறது. அடுத்தடுத்த நாளும் வந்து அந்த நூலை வாசிக்கிறார்கள் என்பது ஆச்சரியம். வாசகர்கள் சேர்ந்து உரையாடல் நடத்துகிறார்கள் என்பதும் அழகு.
இந்திய திரைப்படங்களுக்கான இத்தாலிய விழாவில் தமிழ்ப் படங்கள் வரும்காலங்களில் திரையிடப் படவேண்டும் என்னும் ஆசை மேலிடுகிறது. 24 ஆண்டுகளில் முதல்முறையாக ஒரு எழுத்தாளர் அழைக்கப்பட்டிருக்கிறார். அதுவும் எங்கள் ஐயா அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதும் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.