இத்தாலியின் பழமையான நகரங்களில் ஒன்று பிளோரன்ஸ். ஆர்னோ ஆற்றங்கரையின் இருபுறமும் நகரம். ஆற்றங்கரைக்குப் போக வேண்டுமானால் பெருந்தடுப்புச் சுவர்களில் எங்காவது விடப்பட்டிருக்கும் வழியில் இறங்கிச் செல்ல வேண்டும். ஆற்றில் படகுகள் செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் ஆறு நிதானமாக உள்ளடங்கிக் கீழாக ஓடிக் கொண்டிருந்தது. கல் பாவிய பழங்காலத் தெருக்கள் குறுகியவை. பல தெருக்களுக்குள் நான்கு சக்கர வாகனம் செல்ல இயலாது. பலமாடிக் கட்டிடங்களைக் காண முடியவில்லை. நான்கைந்து மாடியோடு சரி. அவையும் நவீனத்தன்மை துலங்குபவை அல்ல. பழஞ்சாயல் படிந்து மெல்லிய துயரத்தைத் தாங்கியவை போல நிற்கின்றன. பழமை மாறாத வகையில்தான் கட்ட வேண்டும்; வண்ணம் அடிக்க வேண்டும் என்று கடும்விதிகள் இருக்கின்றன.
பிளோரன்ஸ் நகரத் தெருக்களில் உலவுவது காலச்சக்கரத்தில் பத்து நூற்றாண்டுக்கு முன் சென்று காண்பதாகத்தான் தோன்றுகிறது. குளிருக்கு ஏற்ற வகையில் மூடுண்ட கட்டிடங்கள். ஜன்னல்கள் இருப்பினும் எப்போது திறப்பார்கள் எனத் தெரியவில்லை. டிசம்பரில் கடுங்குளிர் இல்லை என்றாலும் அடர்த்தியான ஆடைகள் இல்லாமல் உலவ முடியவில்லை. பிளோரன்ஸ் நகரத்திற்கு இரண்டு பெயர்கள் இருக்கின்றன. கலை நகரம் (Art city) என்றும் நடை நகரம் (Walking city) என்றும் அழைக்கிறார்கள். பெரும்பெரும் கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். எங்கெங்கும் சிற்பங்கள். அழகொளிரும் கட்டிடங்கள். தேவாலயங்கள். ஓவியங்களும் சிற்பங்களும் நிறைந்த காட்சிச்சாலைகள். திரள் திரளாக மக்கள் நடக்கிறார்கள். எங்கும் இப்படி நடை போடும் மக்களைப் பார்த்ததில்லை. பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்கள். அவசரமில்லை. ஓட்டமில்லை. மிதவேக நடை.
அவ்வளவு பேர் நடந்து செல்வதுமே நகருக்குப் பழமைச் சாயலைத் தருகிறது. உண்பதற்கும் வெவ்வேறு இடங்களைக் காண்பதற்கும் பகலிலும் இரவிலும் நாங்களும் நடந்தே சென்றோம். ஒருநாளைக்குச் சராசரியாகப் பத்துக் கிலோ மீட்டர் தூரம் நடந்திருப்பதாகக் கண்ணனின் செல்பேசி தகவல் சொன்னது. இரண்டு கிலோ எடை குறைந்திருப்போம் என்றார் கண்ணன். உண்மைதான். ஊருக்குத் திரும்பிய பிறகு எடை போட்டுப் பார்த்தால் ஒன்றரைக் கிலோ குறைந்திருந்தேன்.
நடப்பது மட்டுமல்ல, இத்தாலி மக்கள் வாய்விட்டுப் பேசுகிறார்கள். கத்துவதில்லை. பிறரோடு பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். நடக்கும்போதும் பேருந்து, ரயில் பயணங்களின் போதும் உணவகங்களிலும் பேசுகிறார்கள்; சிரிக்கிறார்கள். டிசம்பர் 11ஆம் நாள் முழுக்க நானும் கண்ணனும் நகரின் ஒருபகுதியில் நடந்து கொண்டேயிருந்தோம். கலை நகரம் என்பதால் வெவ்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிகுதி. அதனால் பல நாட்டு உணவகங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு உணவகத்தின் முன்னும் அங்கு கிடைக்கும் உணவு, மது வகைகளின் பெயரும் விலையும் கொண்ட பட்டியல் ஒட்டப்பட்டிருக்கிறது. உள்ளே நுழையும் முன்பே அதைப் பார்த்து நமக்கான உணவு இருக்கிறதா, நம் நிதிவசதிக்குப் பொருந்துமா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம். எங்கும் உண்ணலாம்.
உணவுத் தரக் கட்டுப்பாடு சிறப்பாகச் செயல்படுகிறது. டேஸ்ட் அட்லஸ் என்னும் அமைப்பு இவ்வாண்டு உணவில் உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. அதில் இரண்டாம் இடத்தை இத்தாலி பெற்றிருக்கிறது. மிகச் சிறந்த உணவுகள் கிடைக்கும் நகரங்களின் வரிசையில் முதல் நான்கும் இத்தாலியில் உள்ளவை. நேப்பிள்ஸ், மிலன், போல்க்னா, பிளோரன்ஸ் ஆகியவை. நாங்கள் பிளோரன்ஸ் நகரத்தில் தங்கியிருந்த போது இச்செய்தி வெளியாயிற்று. அதனால் எப்படியிருக்குமோ என்ன செய்யுமோ என்னும் பயம் இல்லாமல் உண்டோம். தேர்வு செய்துகொள்வதற்கு ஏராளமான உணவகங்கள். மெக்சிகன் உணவகம் ஒன்றில் இரவு உண்டோம். எந்த வகை உணவும் ஏமாற்றம் தரவில்லை.
நகரில் அங்கங்கே பொதுவெளிகள் இருக்கின்றன. மக்கள் அங்கு கூடி ஆசுவாசமாக உட்கார்ந்திருக்கிறார்கள். போராடுபவர்களுக்கு அவ்விடத்தை ஒதுக்குகிறார்கள். ஐரோப்பிய நகரங்களின் அமைப்பிலேயே இந்த அம்சம் இருக்கிறது போல. நாங்கள் தங்கியிருந்த ரோமா (Roma) ஹோட்டலின் எதிரிலும் அப்படியொரு பொதுவெளி இருந்தது. அதில் மட்டுமல்ல, எங்கெல்லாம் அத்தகைய இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் கிறிஸ்துமஸ் சந்தை போட்டிருந்தார்கள். டிசம்பர் மாதத்தில் இவ்வாறு தற்காலிகக் கடைகள் அமைப்பது வழக்கமாம். நம் ஊர்த் தேர்த்திருவிழாக் கடைகள் போலவே தோன்றின.
பலவிதமான இனிப்புக் கடைகள். பொம்மைகள், துணிகள், செல்லப் பிராணிகளுக்கான பொருள்கள் என விதவிதமான கடைகள். சென்று திரும்ப அகலமான வழிகள். அழகான அடுக்குகள். இரண்டு மூன்று சந்தைகளுக்குள் புகுந்து வந்தோம். முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் தந்தையான காலத்தில் எங்கு போனாலும் பிள்ளைகளுக்காகப் பொம்மை தேடிக் கண்கள் அலையும். இப்போது மீண்டும் அத்தகைய காலம். பேரனுக்காகக் கண்கள் பொம்மை தேடின. இத்தாலிப் பொம்மலாட்டக் கலைச் சின்னமான பொம்மை ஒன்றைப் பேரனுக்காக வாங்கினேன். கீழே தொங்கும் நூலை இழுத்தால் கைகளையும் கால்களையும் மேலும் கீழும் அசைக்கும் பொம்மை. பல அளவுகளில் அப்பொம்மை பல கடைகளில் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு கிறிஸ்துமஸ் சந்தையில் பொம்மலாட்ட நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. சிறிது நேரம் அதைப் பார்த்தோம். என்ன கதை என்று தெரியவில்லை. ஆனால் நம்முடைய பொம்மலாட்டம் போலத்தான் அதுவும் இருந்தது.
ஒருசந்தையில் விவசாயிகள் அமைத்திருந்த கடைகள் இருந்தன. அவற்றில் ஒன்று சுடுஒயின் கடை. ஒயின் சூடாகவா? பழச்சாறுகளைப் பானைகளில் ஊற்றி வரிசையாக வைத்திருப்பது போல ஒயின் வரிசை தெரிந்தது. உடனடியாக இரண்டு வகை ஒயினை வாங்கிப் பகிர்ந்து பருகினோம். இந்தியாவுக்குக் கோகோகோலா வந்தபோது ‘நீருக்குப் பதிலாகக் கோலா குடிக்க வைப்பதுதான் எங்கள் இலக்கு’ என்று அதன் முதலாளியோ மேலாளரோ சொன்ன வாசகம் பிரபலமாக அடிபட்டுக் கொண்டிருந்தது. இத்தாலி உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் தண்ணீருக்குப் பதிலாக ஒயின் என்னும் நிலையே இருக்கிறது. குடிநீர் கிடைக்கிறதோ இல்லையோ ஒயின் கிடைத்துவிடும்.
ஒயினை எத்தனையோ விதமாக மாற்றி மாற்றி வைத்திருக்கிறார்கள். தேநீர் பருகுவது போலச் சுடுஒயினை ஊதி ஊதிக் குடித்தோம். என் சிறுவயதில் எங்கள் ஊரிலேயே சாராயம் காய்ச்சுவார்கள். கள்ளில் ஊறல் போட்டுச் சாராயம் காய்ச்சி வடிக்கும் இரவில் என் அப்பா போய்விடுவார். சுடச்சுடச் சாராயம் குடித்ததைப் பற்றி மறுநாள் பெருமை பொங்கப் பேசுவார்கள். சுடுஒயினைப் பருகிய போது ஏனோ அந்த நினைவு வந்தது.
பிளோரன்ஸ் நகரத்தில் எந்நேரமும் மெல்லிய வாடைக்காற்று வீசிக் கொண்டேயிருந்தது. மிதமான பனிப்பொழிவும் இருந்தது. தடித்த ஆடைகளை அணிந்துகொண்டுதான் நடந்தோம். உதடு காயாமல் இருக்கத் தடவும் களிம்பைக் கைவசம் வைத்திருந்தேன். தடவினாலும் சில நிமிடங்களில் உதடு காய்ந்துவிடுகிறது. நாளுக்கு இரண்டு மூன்று முறை கீழ் உதட்டில் தோல் உரிந்து வந்தது. குளிர் பழகாத உடம்புக்குச் சுடுஒயின் ஒத்தடம் கொடுத்துத் தேற்றியது. இன்னும் கொஞ்சம் பருகலாம் என நினைக்கும் அளவு தனிச்சுவை. கிறிஸ்துமஸ் சந்தை போன்ற சந்தர்ப்பங்களில்தான் சுடுஒயின் கிடைக்குமாம்.
சுற்றுலாத் தலங்களில் இருக்கும் பொதுநியதிகளை இங்கும் பார்க்க முடிந்தது. வெவ்வேறு வகையான பொருட்களை விற்கும் மக்கள். அவர்களின் பலவிதத் தந்திரங்கள். முதல் நாள் என் நிகழ்ச்சியின் போது ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவர் நட்போடு பேசுவது போல வந்து ஏதோ ஒருகயிற்றை நீட்டினார். அவர் கொடுத்த முறையைப் பார்த்தபோது அவ்விழாவைச் சேர்ந்தவர், ஏதோ அன்பளிப்பாகத் தருகிறார் போலத் தெரிந்தது. திரைப்பட விழா இயக்குநர் ‘வேண்டாம்’ என்று தடுத்துவிட்டார். அப்போது எனக்குப் புரியவில்லை.
அடுத்த நாள் பிளோரன்ஸ் தெருக்களில் நடந்து திரிந்த மாலையில் மூன்று ஆப்பிரிக்கர்கள் சாலையில் மகிழ்ச்சியோடு ஆடியும் உரையாடியும் எதிரில் வந்தனர். எங்களைப் பார்த்ததும் அவர்களில் நல்ல உயரமாக இருந்தவர் வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் (கென்யா என்று நினைவு) என்றும் இந்தியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் ஒற்றுமை உண்டு என்றும் பேசினார். நாங்கள் இத்தனை அன்பாகப் பேசுகிறாரே என்று கேட்டுக் கொண்டிருந்தோம். திடுமென்று இரண்டு கயிற்று வளையங்களை எடுத்துக் கையில் திணித்தார். வேண்டாம் என்று மறுத்தோம். விடவில்லை. சம்பந்தமே இல்லாத ஒருவர் நமக்கு எதற்கு ஒருபொருளைத் தர வேண்டும் என்று யோசிக்கும் நேரத்திற்குள் ஒரு பெல்ட்டை எடுத்து நீட்டி அதை வாங்கிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தினார். ‘நீங்கள் எவ்வளவு தந்தாலும் சரி’ என்று தன் நிலையைப் பற்றிப் புலம்பத் தொடங்கினார்.
இது ஒருவகை வியாபார உத்தி போல. முதல் நாள் புரியவில்லை. பத்து ஈரோக்கள் கொடுத்து அவரிடம் இருந்து தப்பித்து வந்தோம்.
—– 05-02-25
சிறந்த அனுபவம் உலகம் சுற்றும் தமிழன் ஏ. கே. செட்டியார் போல் நீங்களும் எழுத வேண்டும் ஐயா. யதார்த்தங்களும் இத்தாலி பயண அனுபங்களும் ரசிக்க வைக்கிறது.
நல்ல விவரிப்பு ஐயா. ஏற்கனவே இத்தாலி பற்றி ஓரளவு படித்துத் தெரிந்திருக்கிறேன் (வரலாற்று மாணவர் என்ற முறையில்) உங்கள் கட்டுரை கூடுதல் தகவல்கள் எனக்கு.