அரசுப் பள்ளியில் படிக்கும் எங்கள் ஊர் மாணவர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆறிலிருந்து பத்தாம் வகுப்பு வரை பயில்பவர்கள். அரசுப் பள்ளியில் இருக்கும் ஆங்கில வழிப் படிப்பில் பயில்வதாகப் பலர் சொன்னார்கள். 2013-2014ஆம் கல்வியாண்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழிப் படிப்புகள் தொடங்கப்பட்டன. பின்னர் உயர்நிலைப் பள்ளிகளுக்கும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. மாணவர் எண்ணிக்கையைக் கூட்டவும் ஆங்கில வழிக் கல்விக்காகத் தனியார் பள்ளிகளுக்குச் செல்வோரின் சிரமத்தைக் குறைக்கவும் இத்திட்டம் உதவும் என்று அப்போது கூறினர். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கும் ஆங்கில வழிக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்றனர்.
தாய்மொழி வழிக் கல்வியை இலக்காகக் கொண்டு செயல்படும் அரசாக இருந்தால் தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப்படுத்த முயன்றிருக்க வேண்டும். ஆங்கில வழிக் கல்வியை முதன்மையாகக் கொண்டு அதை வணிகமாக்கிப் பெரும்பொருளீட்டும் தனியார் பள்ளி முதலாளிகளின் ஆதிக்கம் அரசதிகாரத்தை விடவும் பெரிது. அவர்களைத் தமிழ் வழிக் கல்விக்கு மாற்ற அரசால் இயலாத நிலை. அரசியல்வாதிகள் பலர் கல்வித் தந்தைகளாக உள்ளனர் என்பதும் முக்கியமான விஷயம்.
ஆகவே பொதுமக்களைத் திருப்திபடுத்தும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியைக் கொண்டு வந்தனர். மேல்தட்டுப் பிரிவுப் பிள்ளைகள் பயிலும் சில பள்ளிகளைத் தவிரப் பெரும்பான்மையான தனியார் பள்ளிகளில் பெயரளவுக்குத்தான் ஆங்கில வழிக் கல்வி. அங்கு பயிலும் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தெரியாது; தமிழும் வராது; பாட அறிவும் இருக்காது. ஆங்கில வழியில் பாடம் நடத்தும் திறன் பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கையும் குறைவு. மனப்பாடம் செய்வித்து ஒப்பேற்றும் வேலைதான் நடக்கிறது. அரசுப் பள்ளி ஆங்கில வழிக் கல்வியிலும் அதுதான் நிலை. ஆனாலும் ஆங்கில வழிக் கல்வி மோகம் தீரவில்லை.
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி தொடங்கியபோது ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவர் சேர்க்கை அதிகரித்தால் கூடுதல் பணியிடங்கள் கிடைக்கும்; ஏற்கனவே இருக்கும் கூடுதல் பணியிடங்களைத் தக்க வைத்துக்கொள்ளலாம் என்பன முக்கியமான காரணங்கள். இப்போதும் அவை நீடிக்கின்றன. கிராமப்புறப் பள்ளியாக இருந்தால் ஆங்கில வழிக் கல்வி வகுப்பில் குறைந்தபட்சம் பதினைந்து மாணவர்கள் சேர வேண்டும்; நகர்ப்புறமாக இருந்தால் முப்பது பேர் வேண்டும். அப்போதுதான் அனுமதி கிடைக்கும். அனுமதி பெற்ற பிறகு குறைந்தபட்ச மாணவர்களாவது இருந்தால்தானே தொடர்ந்து அதைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்? ஒருவகுப்பு குறைந்தால் ஆசிரியர் பணியிடத்திற்கு ஆபத்து வந்துவிடும். ஓரிருவரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டிய நிலை வரும். இதைத் தவிர்ப்பதற்காக ஓரளவு படிக்கும் மாணவர்களை ஆங்கில வழி வகுப்புக்கு ஆசிரியர்களே மாற்றி அதைத் தக்க வைக்க முயல்கின்றனர்.
பெற்றோர் பெரும்பாலும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை. ஆசிரியரையும் பெற்றோரையும் மீறி மாணவர் ஏதும் செய்ய இயலாது. எங்கள் ஊர் மாணவர்கள் ‘எங்கம்மா இங்கிலீஷ்லயே படின்னு சொல்றாங்க’ என்றார்கள். ‘தமிழ்லதான் படிச்சிக்கிட்டு இருந்தன். சார்தான் மாத்தி உட்டுட்டாரு’ என்றும் சிலர் சொன்னார்கள். ஆசிரியர்கள் தங்கள் வேலைவாய்ப்பைக் கருதுகிறார்கள்; பெற்றோருக்கு ஆங்கிலத்தில் படித்தால் மதிப்பு என்னும் மனோபாவம். இன்றைய சூழலில் இதனால் பாதிப்படைவோர் மாணவர்கள்தான்.
தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இருபது விழுக்காடு இடஒதுக்கீடு உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம் முதலியவை அறிவிக்கும் வேலைவாய்ப்புகளில் தமிழ் வழி இட ஒதுக்கீடும் இடம்பெறுகிறது. ஒவ்வொரு இடஒதுக்கீட்டுப் பிரிவிலும் இருபது விழுக்காடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஒருவேலைக்குப் பத்தாம் வகுப்புதான் தகுதி என்றால் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து ஒருவர் தமிழ் வழியில் படித்திருந்தால் அவர் இந்த ஒதுக்கீட்டில் வரலாம். அதே போலப் பன்னிரண்டாம் வகுப்பு தகுதி என்றாலும் பட்ட வகுப்பு தகுதி என்றாலும் அதுவேதான் விதி.
அரசுப் பள்ளியிலோ கல்லூரியிலோ பயின்றிருந்தாலும் ஆங்கில வழியாக இருந்தால் அவர்கள் இந்த ஒதுக்கீட்டுப் பலனைப் பெற முடியாது. அரசுப் பள்ளிக்குப் பிள்ளையை அனுப்பும் பெற்றோருக்கு இந்த இடஒதுக்கீட்டு விவரம் தெரிந்திருக்காது. இட ஒதுக்கீடு பற்றி அறிந்துகொள்ளும் வயதும் மாணவருக்கு இல்லை. ஆசிரியர்தான் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். தம் நலனுக்காக ஒரு மாணவரை ஆங்கில வழிக்கு அனுப்பினால் எதிர்காலத்தில் அவர் தமிழ் வழி இடஒதுக்கீட்டு வாய்ப்பை இழக்கக் கூடும் என்னும் உணர்வு ஆசிரியருக்கு இருக்க வேண்டும்.
நமது துரதிர்ஷ்டம் பெரும்பான்மை ஆசிரியர்களுக்கு இடஒதுக்கீடு பற்றிய புரிதல் குறைவாகவே இருக்கிறது. இடஒதுக்கீட்டில் வேலை பெறும் ஒருவர் அதற்கு எதிராகப் பேசுவதைப் பல இடங்களிலும் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள அறுபத்தொன்பது விழுக்காடு இட ஒதுக்கீடு, அதற்குள் இருக்கும் பிரிவுகள், பெண்களுக்கான இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு, தமிழ் வழிக்கான ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளர் ஒதுக்கீடு முதலியவற்றைப் பற்றி அறிந்து வைத்திருக்கும் ஆசிரியர் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணத்தக்க அளவிலேயே இருக்கிறது.
ஆசிரியர்களுக்கு வழங்கும் பணியிடைப் பயிற்சிகளில் இடஒதுக்கீடு பற்றிய வகுப்புகள் இடம்பெற வேண்டும். மாணவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் ஒன்பது, பத்தாம் வகுப்புப் பாடநூல்களில் இடஒதுக்கீடு பற்றிய பாடத்தை வைக்க வேண்டும். இடஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு இருக்குமானால் ஆங்கில வழிக்குக் கட்டாயப்படுத்தி மாணவர்களை அனுப்பும் நிலை மாறும். ஆங்கில வழி வகுப்புகள் அரசுப் பள்ளிகளில் தொடங்கிய பிறகே தமிழ் வழி இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.
புதிய திட்டம் ஒன்று வரும்போது ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கும் இதற்குமான முரண்பாடுகளை ஆலோசித்துக் களைவது அவசியம். அரசுப் பள்ளிகளில் தான் பெரும்பாலும் தமிழ் வழியில் மாணவர்கள் பயில்கிறார்கள். தனியார் பள்ளிகள் சிலவற்றில் அரிதாக ஒன்றிரண்டு வகுப்புகள் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயில்வோருக்குக் கிட்டாத எதிர்கால வாய்ப்பு தமிழ் வழியில் பயின்றோருக்குக் கிடைக்கும். வாய்ப்பு பற்றியும் வாய்ப்பு இழப்பு பற்றியும் பெற்றோருக்கும் மாணவருக்கும் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகும் ஆங்கில வழியைத் தேர்வு செய்தால் அது அவர்கள் விருப்பம்.
அரசு நலத்திட்டம் பலருக்கும் போய்ச் சேர வேண்டும் என்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வு தேவை. மாணவர்களுக்கு அதைச் சொல்லும் இடத்தில் இருக்கும் ஆசிரியர்கள் தம் சுயநலனை மட்டுமே கருதக் கூடாது. சாதி, பொருளாதாரம் ஆகியவற்றால் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் மாணவர்களுக்குத் தமிழ் வழி இடஒதுக்கீடு பெரிதும் ஊக்கம் தரும். அதை எல்லாப் பள்ளிகளிலும் விளம்பரப்படுத்தி மாணவர்களுக்கு உற்சாகம் தர வேண்டும். தமிழ் வழியில் இடமில்லை என்றால்தான் ஆங்கில வழிக்கு அனுப்ப வேண்டும்.
சுயவிருப்பத் தெளிவோடு வருபவர்களை அவர்கள் விரும்பும் வழியில் சேர்க்கலாம். தமிழ் வழியில் பயிலும் மாணவர்களைக் கட்டாயப்படுத்தி ஆங்கில வழிக்கு மாற்றக் கூடாது. விவரம் அறியாமல் ஆங்கில வழிக்குச் செல்லும் மாணவருக்குத் தமிழ் வழி இடஒதுக்கீடு பற்றி அவர்கள் மனம் கொள்ளும் வகையில் சொல்ல வேண்டும். அதற்குப் பின் அவர்கள் முடிவெடுக்கட்டும்.
—– 08-02-25
வணக்கம் ஐயா
தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. இட ஒதுக்கீடு குறித்த தெளிவு பெரும்பான்மையோருக்குக் குறைவுதான். இட ஒதுக்கீட்டில் பணி வாய்ப்புப் பெற்றவர்கள்தான் இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் பேசிக்கொண்டு உள்ளனர். அதோடு இட ஒதுக்கிட்டுப் பிரிவுக்குட்பட்டோரை ஏளனமாகப் பார்க்கும் பார்வையும் மாறவேண்டும். அதற்கு இட ஒதுக்கீடு பற்றிய செய்திகள் கண்டிப்பாகப் பாடநூலில் இடம்பெற வேண்டும்.
அருமை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை.நல்லது மகிழ்ச்சி..
பாடத்திட்டத்தில் இட ஒதுக்கீடு பற்றிய செய்திகள் இடம் பெற வேண்டும் என்னும் கருத்து மிகவும் சிறப்பு. 2012இல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழ்வழி இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னைப் போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தமிழ்வழியில் பயின்றவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு.
ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் வாசிக்க வேண்டிய மிக நல்ல கட்டுரை.
தமிழ்வழிக் கல்வி, இட ஒதுக்கீடு குறித்த சிறந்த ஆலோசனைகளை, மாணவர்கள் அறிந்துகொள்ளும்படியான விளக்கத்தைக் கொடுத்தது அருமை ஐயா.