நானும் சபிக்கிறேன்!

You are currently viewing நானும் சபிக்கிறேன்!

சமீபத்தில் எழுத்தாளர் வண்ணநிலவன் தம் முகநூல் பதிவில்  ‘பாராளுமன்றம் என்பது தவறு. பார் என்றால் உலகம் என்று பொருள். நாட்டை ஆளும் மன்றம், நாடாளுமன்றம் என்பதே சரியானது’ (23-04-25) என்று எழுதியிருந்தார். அதன்பின் தேடிய போது வேறு சிலரும் இது தொடர்பாகச் சமூக ஊடகங்களில் விவாதித்திருப்பதை அறிந்தேன். பாராளுமன்றம், நாடாளுமன்றம் ஆகிய இருசொற்களும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இரண்டையும்  பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை எளிதான தேடலிலேயே அறிய முடிகிறது.

தமிழ்ப் பேரகராதியில் இச்சொற்கள் இரண்டுமே இடம்பெறவில்லை. ஆகவே 1950க்குப் பிறகுதான் இவை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என ஊகிக்கலாம். விடுதலைக்குப் பின்னர் முதல் தேர்தல் நடைபெற்று நாடாளுமன்றம் உருவாகும்போது தமிழ்ச் சொற்கள் வழக்கிற்கு வந்திருக்கலாம். தனித்தமிழ் ஆர்வலர்களோ திராவிட இயக்கத்தவரோ இருதரப்பினருமோ இச்சொல் உருவாகத்திலும் பரவலாக்கத்திலும் பங்களித்திருக்கலாம். இருபதாம் நூற்றாண்டில் தமிழில் உருவான சொற்களின் வரலாறு பற்றிப் பெரிதாக ஆய்வுகள் வரவில்லை. ஏற்கனவே மொழியில் வழங்கிய சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் ஏராளம் உருவான காலம் இது.

அவற்றின் வரலாற்றைத் தேடிச் சென்றால் சுவையான தகவல்கள் கிடைக்கும். Personality என்பதற்கு ஆளுமை என்னும் சொல்லை இப்போது பயன்படுத்துகிறோம். இச்சொல்லை உருவாக்கக் கலைக்களஞ்சியக் குழுவினர் முழுநாள் விவாதித்துள்ளனர். முடிவில் தமிழறிஞர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் தான் ஆளுமையைப் பரிந்துரைத்தார் என்று தெரிகிறது. இன்று இச்சொல் இயல்பாக வழக்கிறகு வந்துவிட்டதால் அதன் உருவாக்க வரலாறு நமக்குத் தெரியவில்லை.

இன்று கைப்பேசி, செல்பேசி, செல்லிடபேசி என்றெல்லாம் ஒருபொருள் சார்ந்து சொற்கள் உருவானாலும் கைப்பேசி பெருவழக்குப் பெற்று நிலைகொண்டிருக்கிறது. செல்பேசியே பொருத்தமானது எனக் கருதி அதைக் ‘கழிமுகம்’ நாவலில் முழுமையாகப் பயன்படுத்தினேன். ஆனால் அது நிலைபெறவில்லை. ஆகவே நானும் இப்போது கைப்பேசிக்கு மாறிவிட்டேன். அப்படி ஒருசொல் நிலைபெறாமல் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் வழங்கி வருவதும் உண்டு. சட்டப்பேரவை, சட்டமன்றம் ஆகிய இரண்டும் இப்போது வழக்கில் இருந்து வருகிறது. மேலவை என்று ஒன்று இருந்தபோது சட்டப்பேரவை, சட்டமேலவை என அவற்றை வேறுபடுத்தச் சொற்கள் வழங்கின. மேலவை இல்லாமல் போனபிறகு சட்டப்பேரவை, சட்டமன்றம் ஆகிய இரண்டுமே ஒருபொருளில் வழங்குகின்றன. இப்படியானதுதான் நாடாளுமன்றம், பாராளுமன்றம் ஆகியவை.

பார் என்றால் உலகம் என்று பொருள். ஆகவே பாராளுமன்றம் எனச் சொல்வது பொருந்தாது என்பதே பொதுவாதம். பார் – உலகத்தை மட்டும்தான் குறிக்கிறதா? ஒருசொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்கள் இருப்பது இயல்பு. பார் என்னும் வினைச்சொல் பற்றிப் பிரச்சினையில்லை. பார் – பெயர்ச்சொல்லாக வரும்போதுதான் பிரச்சினை. இதற்குப் பரப்பு, தேர்ப்பரப்பு, வண்டியின் அடிப்பாகத்தில் உள்ள நெடுஞ்சட்டம், பூமி உள்ளிட்ட பதினான்கு பொருட்களைச் சான்றுடன் தமிழ்ப் பேரகராதி தருகிறது.

அப்பொருட்களில் ஆறாவதாக வரும்பொருள் ‘தேசம்.’ அதாவது ‘நாடு’ என்னும் பொருள். அதற்குச் சான்றாகக் கம்பராமாயணப் பாடலடியைக் கொடுத்துள்ளனர். அப்பாடல் அயோத்தியா காண்டத்தின் ‘பள்ளி படைப் படலம்’ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தஞ்சென ஒதுங்கினர் தனது பாருளோர்

எஞ்சலின் மறுக்கினோடு இரியல் போயுற

வஞ்சிசென்று இறுத்தவன் வாகை மீக்கொள

அஞ்சின மன்னவன் ஆக யானுமே.                      (பா.எண்: 2299. ப.253)

இராமன் வனம் போய்த் தசரதனும் இறந்த பிறகு கோசல நாட்டுக்கு வரும் பரதன் செய்திகளை எல்லாம் அறிந்து தன்னை நொந்து  ‘நான் நரகத்திற்குப் போவேனாக’ என்று புலம்பி அரற்றும் பகுதியில் இப்பாடல் வருகிறது. படையெடுத்து வரும் பகைவனுக்கு அஞ்சி ஓடிய மன்னனுக்கு என்ன கதி கிடைக்குமோ அது எனக்கும் கிடைக்கட்டும் என்பது இப்பாடற்பொருளின் சாரம். ‘தம் நாட்டிற்குத் தஞ்சமென வந்து வாழும் பிறநாட்டுக் குடிமக்களும் வேறெங்கும் சென்றறியாமல் பிறந்தது முதல் தம் நாட்டிலேயே வாழும் குடிமக்களும் என அனைவரும் பெருங்கலக்கத்தோடு அஞ்சுமாறு பகைவன் வந்து வெற்றி கொள்ள எல்லாரையும் கைவிட்டு ஓடி ஒளிந்துகொண்ட அரசன் போல நானும் நரகத்திற்குச் செல்வேனாக’ என்பது முழுப்பொருள்.  ‘தனது பாருளோர் – தனது பார் உள்ளோர் – தனது நாட்டில் வாழும் குடிமக்கள்’ என உரையாசிரியர்கள் பொருள் தருகின்றனர். பார் என்பது இங்கு நாட்டையே குறித்து வருகிறது.

நானும் சபிக்கிறேன்!

இப்பாடலில் இன்னொரு சிறப்பு இருக்கிறது. ஓர் அரசன் தன் குடிமக்களைப் பாதுகாத்து ஆட்சி புரிந்தால் மட்டும் போதாது. தம் நாட்டைப் புகலிடமாகக் கருதி வந்தோரையும் பாதுகாக்க வேண்டும். பாடல் தொடக்கமே ‘தஞ்சென ஒதுங்கினர்’ என்றுள்ளது. அதாவது ‘தம்மைத் தஞ்சம் எனக் கேட்டு வந்து தங்கியோர்’ எனப் பொருள். இன்று அகதிகள் என்கின்றோம். புலம் பெயர்ந்தோர் என்கின்றோம். ஒருநாட்டில் ஏற்படும் போர், பஞ்சம், இயற்கைச் சீற்றம், அரசு நிர்வாகக் குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் மக்கள் புலம் பெயர்கின்றனர். அவர்களையே ‘தஞ்சம் அடைந்தோர்’ என்பது குறிக்கிறது. அக்காலத்திலும் அகதிகளாகச் சென்று புகலிடம் கேட்டுத் தங்குவோர் இருந்துள்ளனர் என்பதைக் கம்பராமாயணத்தின் இப்பாடல் பதிவு செய்துள்ளது.

இப்பாடலின் அடிப்படையில் நாடாளுமன்றம் என்று சொன்னாலும் சரி; பாராளுமன்றம் என்று சொன்னாலும் சரியே எனக் கருதுகிறேன். ஒருபொருட்பன்மொழி என்பது இயல்புதானே? ஒருசொல் பொதுவில் புழங்குமானால் அதன் பின்னணி, வழக்கிற்கு வந்த காரணம் ஆகியவற்றை அறிய வேண்டும். குறைந்தபட்சம் அகராதியைப் புரட்டிப் பார்க்கலாம். இணையத்தில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி உள்ளிட்ட பல அகராதிகள் எளிதாகக் காணக் கிடைக்கின்றன.

நானும் சபிக்கிறேன்!

தஞ்சென ஒதுங்கினர் என்பதை வாசித்ததும் சமகால அரசியல் பிரச்சினை நினைவிலாடி பெருவருத்தம் கொடுத்தது. குழந்தைகளின் மருத்துவத்திற்காக வந்த குடும்பத்தை விரட்டுகின்றனர். பாதி மருத்துவம் தான் முடிந்திருக்கிறது, முழுமையாக மருத்துவம் பார்த்து என் குழந்தைகளைக் காப்பாற்ற உதவுங்கள் என்று அந்தத் தந்தை கதறுகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டு வந்து கணவன், பிள்ளைகளோடு வாழும் பெண்ணைத் துரத்துகின்றனர். ‘அங்கே எனக்கு யாரும் இல்லையே, எங்கே போவேன்?’ என்று அப்பெண் புலம்புகிறார். தஞ்சமென வந்தோரைக் காப்பது ஓர் அரசின் கடமை; அதிலிருந்து வழுவினால் அவ்வரசன் நரகத்திற்குப் போவான் என்று கம்பர் சொல்கிறார். இராமனை நாயகனாகக் கொண்ட இராமாயணம் சொல்கிறது.  இராமனின் தம்பி பரதன் சொல்கிறான். தஞ்சமென வந்தோரை விரட்டும் ஆட்சியாளர்கள் நரகத்திற்குப் போகக் கடவார்களாக எனச் சொல்லி நானும் சபிக்கிறேன்.

—– 29-04-25

Latest comments (3)

சுராகி கொடுமுடி

ஒரு புத்தரே
சினம் கொண்டால்
அவருடைய
பித்த ரெல்லாம்
துப்பாக்கியைத் தூக்கத்
தொடங்கி விடுவார்களே!

எல் கோபாலகிருஷ்ணன்

இன்றைய இந்திய அரசினது அப்பாவி வெளிநாட்டினரை குறித்தான ஏதேச்சாரியார் போக்கை விமர்சித்து ஒவ்வொரு எழுத்து கலைஞனும் தம்முடைய கருத்தை பொதுவெளிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது எனது உள்ளக் கிடக்கையாக சமீபமாக இருந்து வருகிறது. தங்களுடைய இந்த பதிவை வரவேற்கிறேன். இன்று முகநூலில் குமாரநந்தன் அவர்களும் இதையொட்டிய சிறு பதிவினை வெளியிட்டு இருந்தார்.

ஒட்டுமொத்த இந்திய அறிவுஜீவிகளும் இப்பொழுது ஒன்று கூடும் அவசர காலகட்டம் இது.