1983ஆம் ஆண்டு. ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழிலக்கியம் சேர்ந்திருந்தேன். கவிதை எழுதும் ஆர்வம் இருந்ததால் ஆசிரியர்களைச் சந்திக்க அடிக்கடி தமிழ்த்துறை ஆசிரியர்கள் அறைக்குச் செல்வேன். ஆசிரியர்களைத் தேடி வரும் மாணவர்களுக்கு எளிதில் கவனம் கிடைத்துவிடும். தமிழுக்கு அருகிலேயே ஆங்கிலத்துறையும் இருந்தது. ஆங்கிலத் துறைத் தலைவராகப் பேராசிரியர் ரங்கராஜன் இருந்தார். ஆங்கிலப் பாடங்களுக்கு அவர் எழுதி வெளியிடும் ‘நோட்ஸ்’ நூல்கள் மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவை. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் அவை நன்றாக விற்பனை ஆகிக் கொண்டிருந்தன. அவர் என்னைக் கவனித்திருந்தார்.
ஒருநாள் ஆசிரியர் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்த அவர் அழைத்தார். என்னைப் பற்றிய விவரங்கள் கேட்டார். தமிழ் இலக்கியம் சார்ந்து சில கேள்விகள். தடுமாற்றத்தோடும் அச்சத்தோடும் பதில் சொன்னேன். ஆசிரியர், அதுவும் ஆங்கில ஆசிரியர், ஓய்வுபெறும் வயதில் இருந்தவர் என்னும் போது அச்சம் வராமல் இருக்குமா? ஆனால் அவர் சிரித்தபடியே முதுகில் தட்டி ‘நெறையப் படி’ என்று சொன்னார். அவரிடம் பேசுதல் தொடர்ந்தது. தமிழ்த்துறைக்கு நான் செல்லும்போதசெல்லும்போதோ வழியிலோ பார்க்க நேர்ந்தால் நின்று என்னிடம் அன்பாகச் சில சொற்கள் பேசுவார். ஏனோ என் மேல் அவருக்கு ஓர் ஈர்ப்பு.
நண்பர்கள் ‘டேய்… பாத்துப் பழகு. நோட்ஸ் வித்துத் தரச் சொல்லப் போறாருடா’ என்று கேலி செய்தார்கள். எனக்கும் அந்தப் பயம் இருந்தது. ஆனால் ஒருபோதும் ‘நோட்ஸ்’ பற்றிய பேச்சை அவர் எடுத்ததேயில்லை. ‘என்னப்பா, இங்கிலீஷ் டிபார்ட்மெண்டுக்கு மாறப் போறயா?’ என்று தமிழாசிரியர்களும் கிண்டலாகக் கேட்டனர். நான்கு பருவத்து ஆங்கிலத் தாள்களிலும் தேர்ச்சி அடைந்தாலே பெரும்சாதனை என்று எண்ணி அவற்றைத் துரத்திக் கொண்டிருக்கும் எனக்கு ஆங்கில ஆசிரியர், அதுவும் துறைத்தலைவர் பழக்கமானது பெரிய விஷயமாக இருந்தது. தமிழ் இலக்கியம் தொடர்பாக அவர் ஏதாவது கேள்விகள் கேட்பார். பதில் சொன்னால் மகிழ்வார். தெரியாவிட்டால் மென்மையாகக் கடிந்துகொள்வார். ‘நெறையப் படி’ என்பதை ஒரு மந்திரம் போலச் சொல்லிக் கொண்டேயிருப்பார்.
அப்படி ஒருமுறை அவரைச் சந்தித்தபோது என் கையில் வ.சுப.மாணிக்கம் எழுதிய ‘கம்பர்’ என்னும் நூல் இருந்தது. அப்போது கம்பராமாயணம் தொடர்பான நயநூல்களைத் தேடித் தேடிப் படிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தேன். ‘கம்பர்’ நூல் மிகவும் பிடித்திருந்தது. மீண்டும் மீண்டும் அதைப் படித்துக் கொண்டிருந்தேன். இப்போதும் அந்நூலை அவ்வப்போது வாசிப்பதுண்டு. அந்நூலை வாங்கிப் பார்த்தார். அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார். நான் உள்வாங்கிக் கொண்ட அளவில் அதன் சாரத்தைச் சொன்னேன். அன்றைக்குக் கம்பராமாயணம் தொடர்பாகக் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
‘சுந்தர காண்டத்துக்கு ஏன் அந்தப் பேரு வந்துச்சு?’ என்பது முதல் கேள்வி.
‘சுந்தரம்னா அழகு. ராமாயணத்துலயே இதுதான் அழகான காண்டம். அதனால் அந்தப் பேருங்க ஐயா’ என்று எனக்குத் தெரிந்த விதத்தில் பதில் சொன்னேன்.
அதைக் கேட்டுச் சிரித்தார்.
‘ராமாயணத்தோட எல்லாக் காண்டத்துக்கும் ராமன்தான் தலைவன். ஆனா சுந்தர காண்டத்துல பாரு, ராமனோட பங்கு ரொம்பக் கொறச்சல். அது முழுக்க அனுமன்தான் ஆக்கிரமிச்சு அப்படியே விஸ்வரூபம் எடுத்து நிப்பான். அவன்தான் தலைவன். அனுமனுக்குச் சுந்தரன்னு ஒரு பேரு உண்டு. அவனோட பேரத்தான் இந்தக் காண்டத்துக்கு வெச்சிருக்கறாங்க’ என்று அவர் விளக்கம் சொன்னார்.
எனக்குப் புதிய செய்தி ஒன்று கிடைத்தது. இளங்கலை முதலாண்டு மாணவனுக்கு எதுவாக இருந்தாலும் அது புதிய செய்திதான். என் ஆர்வத்தைப் பார்த்ததும் மேலும் கேட்டார்:
‘சுந்தர காண்டத்தோட கடவுள் வாழ்த்துப் பாட்டு என்ன?’
அப்போது எனக்குக் கம்பராமாயணத்தின் அடிமுடி எதுவும் தெரியாது. நயநூல்கள் வழியாக அதை அணுகுவதற்கு முயன்று கொண்டிருந்தேன். ‘உலகம் யாவையும்’ பாடல் எப்போதோ மனப்பாடப் பாடலாக இருந்தமையால் படித்திருந்தேன். சுந்தர காண்டப் பாடல் எனக்கு எப்படித் தெரியும்? வானத்தை நோக்கி அண்ணாந்து கண்களை மூடிக் கொண்டார். பக்தியும் பரவசமும் சேர்ந்த குரலில் பாடலைச் சொன்னார். ‘அஞ்சு அஞ்சு அஞ்சு’ என்று பாடல் வந்துகொண்டேயிருந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. உண்மையாகவே நான் அஞ்சினேன்.
பாடல் முடிந்ததும் என் முகத்தைப் பார்த்தார். அச்சம் தெளிவாகத் தெரிந்தது போலும். வாவென்று உள்ளே அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார். ஒரு தாளை எடுத்து அப்பாடலை எழுதினார். பின் என்னை வாசிக்கச் சொன்னார். தட்டுத் தடுமாறி வாசித்தேன். வாங்கிய அவர் சரளமாகப் பாடலைப் படித்துப் பொருள் விளக்கம் சொன்னார். கிட்டத்தட்ட அப்போதே அந்தப் பாடல் மனப்பாடம் ஆயிற்று. ஆங்கில ஆசிரியர் ஒருவர் மூலமாக நான் கற்ற பாடல் இது:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்கண்(டு) அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்எம்மை அளித்துக் காப்பான்.
‘ஐம்பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் (காற்று) மகன் அனுமன். அவன் ராமனுக்காகச் சீதையைத் தேடிச் சென்றான். அப்போது ஐம்பூதங்களில் ஒன்றாகிய நீரைக் கொண்ட கடலைத் தாவிக் கடந்தான். தாவியபோது அவனுக்கு வழியாக அமைந்தது ஐம்பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம். அவ்விதம் இலங்கைக்குச் சென்று ஐம்பூதங்களில் ஒன்றாகிய பூமி பெற்ற மகள் சீதையைக் கண்டான். அயலார் ஊராகிய இலங்கையில் ஐம்பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான். அப்படிப் பட்டவனாகிய அனுமன் அருள் கொடுத்து எங்களைக் காப்பான்.’
இதுதான் அந்தப் பாடலின் பொருள் என்று விளக்கினார். பாடலை மனப்பாடம் செய்துகொண்டதோடு அனும பக்தனாகவும் ஆகிவிட்டேன். பதின்வயதில் புதிதாக ஒன்று அறிமுகமானால் அது முழுமையாக ஈர்த்துக் கொஞ்ச நாளுக்குப் பாடாய்ப் படுத்துவது இயல்பு. ஏதாவது மனக்கஷ்டம் நேரும்போது அஞ்சிலே ஒன்றாகிய பூமியில் நின்றுகொண்டு அஞ்சிலே ஒன்றாகிய ஆகாயத்தைப் பார்த்து அண்ணாந்து அஞ்சிலே ஒன்றாகிய தீயைக் கொண்ட பொழுதின் எரிப்புத் தாங்காமல் அஞ்சிலே ஒன்றாகிய நீரைத் தாங்கியக் கண்களை மூடிக் கொண்டு அஞ்சிலே ஒன்றாகிய காற்றின் உதவி கொண்டு அப்பாடலைச் சத்தமாகச் சொல்வேன். அனுமனே வந்து கஷ்டத்தை எல்லாம் தீர்த்துவிட்ட மாதிரி தோன்றும்.
ஒருமுறை நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்ல வாய்த்தது. இப்பாடலை மனதுக்குள் பலமுறை சொல்லித் துதித்து வந்தேன். பிற்காலத்தில் நாமக்கல்லில் வாழ நேர்ந்ததுகூட ‘அஞ்சிலே ஒன்று பெற்ற’ அனுமன் அருளாக இருக்கலாம் என்று நண்பர்களிடம் கேலியாகச் சொல்வதுண்டு. நாமக்கல் வரும் நண்பர்கள் ஆஞ்சநேயர் கோயிலைப் பார்த்துத் தரிசிக்க விரும்புவர். அவர்களை அழைத்துச் செல்ல நேரும் போதெல்லாம் என் வாயில் தானாக இப்பாடல் வந்துவிடும்.
பலருக்கும் இந்தப் பாடலைச் சொல்லியிருக்கிறேன். இதைச் சொல்லிப் பொருளையும் சொன்னால் தமிழில் ஏதோ கரைகண்டவன் போல மரியாதையுடன் பார்ப்பார்கள். தமிழ்ப் படித்தவன் என்னும் மரியாதையை அடிக்கடி இந்தப் பாடல் எனக்குக் கொடுத்திருக்கிறது. சிலசமயம் மரியாதையைக் காப்பாற்றியும் இருக்கிறது. ஆசிரியர் சொன்னதைத் தாண்டி இப்பாடலை இன்னும் பலவிதமாக விரிவாக்கிக் கொண்டேன்.
அஞ்சு என்பதை இலக்கணம் ‘ஐந்து என்னும் எண்ணுப் பெயரின் போலி’ என்று சொல்லும். ஒரு எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து வந்து பொருள் மாறுபடாமல் இருந்தால் அது போலியாகும். முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என்று போலி மூவகைப்படும். இச்சொல்லில் மூவகைப் போலியும் இடம்பெற்றுள்ளன. ‘ஐ’ என்பதன் இடத்தில் ‘அ’ வந்துள்ளது. ந் – ஞ், து – சு எனப் போலி எழுத்துக்கள் வந்துள்ளன. இவ்விதம் அஞ்சு என்பதை முப்போலிக்கும் சான்றாகச் சொல்வதுண்டு.
என்னைப் பொருத்தவரைக்கும் இதை மரூஉ என்றே சொல்வேன். எழுத்து வழக்குச் சொல் பேச்சில் திரிந்தால் அது மரூஉ. இன்றும் பேச்சு வழக்கில் அஞ்சுதான். அஞ்சு என்பது தொகைப்பெயர். ஐம்பூதங்களையும் உள்ளடக்கி வருவதால் தொகை. மேலும் சொல்லிலக்கணப்படி இப்பாடலில் ஆகுபெயராக வருகிறது. ஐம்பூதங்களில் ஒவ்வொன்றையும் ராமாயணச் செய்தியோடு பொருத்திச் சொல்வதுதான் பாடலின் சிறப்பு.
இப்பாடல் வழியாகச் சில சொற்களையும் கற்றுக்கொண்டேன். ‘ஆறு’ என்பது இப்பாடலில் ‘வழி’ எனப் பொருள்படும். அது தொல்காப்பியத்தில் வரும் ‘ஆற்றுப்படை’ இலக்கணத்திலேயே பயின்று வரும் சொல். ஆரியர், அணங்கு, அளி ஆகியவை எனக்குப் புதியவை. சொல்பின்வருநிலை அணி இப்பாடலில் அமைந்திருப்பதால் பாடம் நடத்தும்போதும் சரி, மற்றவர்களுக்கு விளக்கும்போதும் சரி, பிரமிக்கும்படி சொல்லிவிடலாம்.
ஆங்கில ஆசிரியர் சொன்னபடி வெகுகாலம் இது சுந்தர காண்டத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் என்றே நினைத்திருந்தேன். பின்னொரு சமயம் சுந்தர காண்டத்தை வாசிக்கும்போது இப்பாடலைத் தேடித் தேடிப் பார்த்தேன். காணவில்லை. சுந்தர காண்டத்திற்கு என்று தனியாகக் கடவுள் வாழ்த்து ஏதுமில்லை. தனிப்பாடல் எதையாவது கம்பராமாயணப் பாடல் என்று தவறாக ஆசிரியர் சொல்லிவிட்டாரோ?
‘கண்டேன் சீதையை’ என்று கம்பர் கூறியுள்ளார் என்பர். கம்பர் எழுதிய பாடலடி ‘கண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்’ என்பதுதான். அருணாசலக் கவிராயர் தம் ‘இராமநாடகக் கீர்த்தனை’ நூலில் எழுதி கர்நாடக சங்கீத உலகில் மிகவும் பிரபலமான கீர்த்தனை ‘கண்டேன் கண்டேன் சீதையைக் கண்டேன் ராகவா’ என்பதாகும். கம்பன் அடிகளை எளிமைப்படுத்திய வடிவம் இது.
அதே போலக் ‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்னும் அடிகளைக் கம்பர் எழுதினார் என எண்ணிப் பலரும் மேற்கோள் காட்டி வருகின்றனர். சிலர் அதை அருணாசலக் கவிராயர் எழுதிய ‘இராம நாடகக் கீர்த்தனை’ நூலில் உள்ள விருத்தம் என்று கருதுகின்றனர். ‘விநோதரச மஞ்சரி’ப் பாடல் என்றும் கருத்து உண்டு. ஆனால் அந்நூல்கள் எதிலும் இது இல்லை. ‘தனிப்பாடல் திரட்டு’ நூல்களிலும் காணப்படாத ‘தனிப்பாடல்’ போலும். இவ்வடி இடம்பெறும் விருத்தத்தின் முழு வடிவம் இது:
விடம்கொண்ட மீனைப் போலும் வெந்தழல் மெழுகு போலும்
மடம்கொண்ட பாந்தள் வாயில் பற்றிய தேரை போலும்
திடம்கொண்ட இராம பாணம் செருக்களத் துற்ற போது
கடன்கொண்ட நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்.
பாடலில் வரும் ‘கடன் கொண்ட நெஞ்சம்’ என்பது வழக்கில் ‘கடன் பட்டார் நெஞ்சம்’ என மாறி வழங்குகிறது. இவற்றைப் போலக் கம்பர் மேல் ஏற்றி வழங்கும் பாடல்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றுதான் ‘அஞ்சிலே ஒன்று பெற்றான்’ என்பதும். கம்பராமாயணம் முழுவதும் காண முடியாத இப்பாடலைப் பிறகு பாலகாண்டம் நூலின் முன்னிணைப்பில் கண்டேன். இது கம்பர் பாடிய பாடல் அல்ல. யாரோ எழுதி எப்படியோ பாராயணத்திற்கு வந்துவிட்ட பாடல். கம்பராமாயணப் பதிப்பாசிரியர்கள் இதை ‘மிகைப் பாடல்’ என்று கருதியுள்ளனர். எனினும் என் மனதில் நிலைத்துவிட்ட பாடல் இது.
—– 10-12-24
அருமையான கட்டுரை ஐயா. “விடம்கொண்ட” எனத் தொடங்கும் அறுசீர் விருத்தப் பாடலில் இரண்டாம் அடியின் அரையடிகளுக்குள் மோனை பயிலவில்லை எனக் கருதுகிறேன்.
“மடம்கொண்ட பாந்தள் வாயில்
பற்றிய தேரை போலும்”
என்பதில் மடம்கொண்ட என்பதற்குப் பதிலாகப் படம்கொண்ட என்று வரின் படம்கொண்ட பாந்தள் – படம் எடுக்கும் பாம்பு எனப் பொருளும் மோனையும் பொருத்தமுற அமைகின்றன. இல்லையெனில்
“மடம்கொண்ட பாந்தள் வாயில்
வற்றிய தேரை போலும்”
என்றவாறு அமைத்து ‘மடமுடைய பாம்பு கொழுத்த தேரையை விடுத்து வற்றிய தேரையை உண்டு அவதியுறுவதைப் போல’ எனவும் பொருளும் மோனையும் கொள்ள வாய்ப்புள்ளது.
முதல் பாடமே சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன். ஒருவேளை நான் கருதும் இப்பாடங்கள் தவறாகவும் இருக்கலாம். இப்பாடலுக்கு வேறு பாடங்கள் இருப்பின் அவற்றைத் தந்துதவ வேண்டுகிறேன் ஐயா. நன்றி.