கருத்துரிமைக் கதவுகள்

You are currently viewing கருத்துரிமைக் கதவுகள்

48ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் நடந்த ஒரு நிகழ்வு பரவலான விவாதத்தை ஏற்படுத்தியது. டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட ‘தமிழ்த் தேசியம் ஏன் எதற்கு?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அந்நிகழ்வில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’க்குப் பதிலாகப் பாரதிதாசன் எழுதிய  ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ எனத் தொடங்கும் பாடல் பாடப்பட்டது. புதுச்சேரி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பாடல் அது.

தமிழ்நாட்டு அரசு சார்ந்த நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவதும் இறுதியில் நாட்டுப்பண் பாடுவதும் வழக்கம். அந்த மரபைப் பின்பற்றியே பல தனியார் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. பொதுவாக நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தோ நாட்டுப்பண்ணோ பாடுவது அரிது. சென்னைப்  புத்தகக் காட்சிக்கு அரசு பெரும் நிதியுதவியும் வழங்குகிறது. அரசின் ஆதரவுடன் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த மரபைப் பின்பற்றுவதே  தார்மீக ரீதியாகச் சரியானது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

ஒரு நிகழ்ச்சியின் நிரலை அதை நடத்துவோர் முடிவு செய்வது இயல்பு. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்போர் அதற்கேற்ப நடந்துகொள்வதே சரி. ஒருவேளை, சிறப்பு விருந்தினர் சில நிபந்தனைகளை விதித்து அதை ஏற்றுக்கொண்டால்தான் நிகழ்ச்சிக்கு வருவேன் என்று சொல்லலாம். இந்த நிகழ்வில் ஏற்பாட்டாளர்களுக்குப் பபாசி ‘அரசியல் பேசக் கூடாது’ என்று நிபந்தனை விதித்தே அனுமதி வழங்கியதாகக் கூறுகின்றது. அப்படியானால் அதை மீறித்தான் சீமான் பேசியிருக்கிறார் என்று தெரிகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தும் அவர் விருப்பப்படி பாடப்பட்டுள்ளது.

அரசியல் தலைவர்கள் பலர் புத்தக வெளியீட்டில் பங்கேற்றுப் பேசிய நிகழ்வுகள் இருக்கின்றன. மிக நாகரிகமாக, ஏற்பாட்டாளர்களுக்குப் பிரச்சினை ஏதும் வராத வகையில் தம் பேச்சை அமைத்துக்கொள்வர். ஒருநிகழ்வில் அரசியல் பேசாமல் இருக்க முடியாது. குறிப்பிட்ட நூல் வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்பதே அரசியல்தான். பேசும்போது தம் அரசியல் கருத்துக்களை நேரடியாக இல்லாமல் மென்மையாகவோ குறிப்பாகவோ வெளிப்படுத்துவர். சீமானிடம் அத்தகைய நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது. பொதுவாக ஆவேசமாகவும் தன் கருத்து ஒன்றே சரி என்னும் மனநிலையிலும்  பேசுவது அவர் கைக்கொண்டிருக்கும் முறை.

டிஸ்கவரி புக் பேலஸ் நிகழ்விலும் அதையே பின்பற்றியிருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்கும் பதிப்பாளருக்கும் பபாசிக்கும் தம் பேச்சு எத்தகைய சிக்கலை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அவர் சிறிதும் சிந்திக்கவில்லை. அவருக்குப் பேச எத்தனையோ மேடைகள் இருக்கின்றன. தம் கட்சி நிகழ்ச்சிகளில் பாரதிதாசன் பாடலைப் பாடுவதை யாரும் தடை செய்யவும் இல்லை. இவ்விடத்தில் இப்படிப் பேசினால், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பதிலாக இன்னொரு பாடலைப் பாடினால் எத்தகைய சிக்கல் வரும், எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை அவர் கருத்தில் கொள்ளவில்லை.

ஒருவேளை சிக்கல் வரவேண்டும் என்று எண்ணித் திட்டமிட்டும் இப்படிச் செய்திருக்கலாம். அரசியலில் எப்படியும் யோசிப்பார்கள். சீமானின் அரசியல் நடவடிக்கைகளில் அறிவுத்துறையினருக்கு எந்தப் பங்கும் இல்லை. பலதரப்பையும் விலக்கும் அரசியலே அவருடையது என்பதால் பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோருக்கு ஏற்படும் பாதிப்பு அவருக்குப் பொருட்டே அல்ல. அவர் அரசியல் நிரலுக்குள் அவர்களுக்கு எந்த இடமும் இல்லை.

கருத்துரிமைக் கதவுகள்

அவர் வெளியிட்டது ‘தமிழ்த் தேசியம்’ பற்றிய நூல் என்பதால் தம் கொள்கையை விளக்கும் வகையில் உரையை அமைத்திருக்கலாம். தமிழ்த் தேசியம் புதிய அரசியல் போக்கல்ல. இருபதாம் நூற்றாண்டு முழுமையும் பேசி வந்த அரசியல்தான். அதில் விளக்க வேண்டிய, பொதுத்தளத்தில் பேச வேண்டிய எத்தனையோ கூறுகள் உள்ளன. அவற்றைப் பேசியிருக்கலாம். நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் கலைஞர் கருணாநிதி, தொல்.திருமாவளவன் ஆகியோர் உரைகள் பலவற்றைக் கேட்டிருக்கிறேன். தம் அரசியல் நிலைப்பாடுகளைச் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் அதேசமயம் ஏற்பாட்டாளர்களுக்குச் சிக்கல் ஏற்படாத வகையில் தம் கொள்கைகளை விளக்கி உரையாற்றுவதில் வல்லுநர்கள்.

சிக்கல் ஏற்பட்ட பிறகு அனுமதி கொடுத்ததைத் தவிர நிகழ்ச்சிக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனப் பபாசி அறிவித்தது. நிபந்தனையோடுதான் அனுமதி கொடுத்தோம் என்றும் விளக்கியது. நிகழ்வு மேடையில் பபாசித் தலைவரும் இருந்திருக்கிறார். எனினும் எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை. பிரச்சினையான பிறகு  டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் இயக்குநர் மு.வேடியப்பன், ‘இந்த பாடல் புதுச்சேரி அரசின் வாழ்த்து என்றோ இதன் மூலம் தமிழ்நாடு அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்படுகிறது என்கிற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது என் அறியாமைதான். அதற்காக வருந்துகிறேன். மேலும் சீமான், நல்ல ஒரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்துப் பேசிய கருத்துகள் எனக்கோ எங்களின் பபாசி அமைப்புக்கோ விருப்பம் இல்லாதது; நாங்கள் ஒருபோதும் இதை ஆதரிக்கவில்லை. பொதுமேடையில் சீமான் பேசும்போது குறுக்கிடுவது நாகரிகம் இல்லை என்பதால் அமைதி காத்தோம்’ என்று கூறியிருக்கிறார்.

கருத்துரிமைக் கதவுகள் கருத்துரிமைக் கதவுகள்

மேலும், ‘இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம். 15 ஆண்டுகளாக அரசியல் சார்பற்று வாசிப்பை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். எதிர்பாராமல் நடந்த சம்பவத்துக்கு ஒட்டுமொத்தமாக எங்கள் இலக்கியச் செயல்பாடுகளை முடக்க திட்டமிடுவது வருத்தத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’ என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியம் தொடர்பான நூல் வெளியீட்டில் அரசியல் பேச மாட்டார்கள் என்று நினைக்க வாய்ப்பில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பாகத் தமது அறியாமையைப் பற்றி வெளிப்படையாக அவர் தெரிவித்துள்ள கருத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் தமிழ்ப் பேரவை சார்பில் சீமானைக் கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ மீது நடவடிக்கை வேண்டும் என சுபவீ பேசினார். கருத்தியல் ரீதியாகச் செயல்படும் அவரைப் போன்றவர்கள் அவ்வாறு பேசியது ஏற்புடையதல்ல. பல சமயங்களில் அரசின் குரலை எதிரொலிப்பவர் அவர். ஆகவேதான் வேடியப்பனின் அறிக்கைக்குப் பிறகும் அப்பதிப்பகம் மீது பபாசி நடவடிக்கை மேற்கொண்டு ஓராண்டுக்குப் புத்தகக் கண்காட்சிகளில் இடம்பெறத் தடை விதித்திருக்கிறது.  அது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயல். அதைப் பறிக்கும் அளவு நடவடிக்கை மேற்கொள்ளத்தக்க சம்பவம் அல்ல இது. மு.வேடியப்பன் வருத்தம் தெரிவித்ததை ஏற்று எச்சரிக்கை செய்வதோடு நிறுத்தியிருக்கலாம்.

இச்சம்பவத்தை விடவும் இதற்குப் பிறகு கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரக்கூடும் என்றே அஞ்சுகிறேன். திறந்திருக்கும் கருத்துரிமைக் கதவுகளை ஏதேனும் ஒரு சம்பவத்தை, சந்தர்ப்பத்தைக் காரணமாக வைத்து மூடிவிட முயல்வதே அரசின் இயல்பு. அதுவும் சமீப காலத்தில் எல்லா அரசுகளும் இந்த நடைமுறையைப் பின்பற்றி வருகின்றன. எத்தனையோ காலம் போராடிப் பெற்ற கருத்துரிமைக் களங்களைப் பறிப்பதற்குச் சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில் பல்லாண்டுகளாக இலக்கியக் கூட்டங்கள் நடந்துவந்தன. வாடகையும் குறைவாக இருந்தது. அங்கே நடந்த ஒரே ஒரு சம்பவம் காரணமாக வாடகைக்குத் தருவதையே நிறுத்திவிட்டனர். அரசு சார்ந்த எந்த அரங்கும் பொதுநிகழ்ச்சிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்பதால் அதிக வாடகைக்குத் தனியார் அரங்குகளை நாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது இலக்கிய நிகழ்வுகள் பலவும் பொதுஅரங்குகளில் நடப்பதில்லை. புத்தகக் கடைகள் கொண்டிருக்கும் சிறுஅறையில் நடப்பனவாக மாறிவிட்டன.

டிஸ்கவரி புக் பேலஸ் நிகழ்ச்சிச் சர்ச்சையால் வரும் ஆண்டுகளில் புத்தகக் காட்சி அரங்குகளைப் பதிப்பக வெளியீட்டு நிகழ்வுகளுக்கு வழங்குவதில் கடும் நிபந்தனைகள் வரலாம். கொடுக்காமல் தவிர்க்கும் நடைமுறைகள் பின்பற்றப்படலாம். அரசியல்வாதிகளை அழைக்கக் கூடாது என்றும் சொல்லலாம். பபாசி அமைப்பு புத்தக விற்பனை ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது. புத்தகக் காட்சி என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு என்னும் உணர்வு அதற்கில்லை. ஏற்கனவே பதிப்பகங்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

‘வாடிவாசல்’ கிராபிக் நாவல் வெளியீட்டு நிகழ்வு காலச்சுவடு அரங்கில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அரங்கிற்குள் பேச ஒலிபெருக்கி அனுமதியில்லை என்பதால் அவர் உரையைக் குழுமியிருந்த மக்கள் திரள் முழுமையாகக் கேட்க இயலவில்லை. பிறருக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறைந்த தூரத்திற்குள் மட்டும் கேட்கும் ஒலிபெருக்கிகள் இன்று பலவகையாக வந்துவிட்டன. யாரோ ஒருவர் சத்தமாக வைத்துவிட்டார் என்பதால் மொத்தமாகவே ஒலிபெருக்கியைத் தடை செய்வது நியாயமானதல்ல. டிஸ்கவரி புக் பேலஸ் நிகழ்வுக்குப் பிறகு பொதுஅரங்குக்கும் சில கட்டுப்பாடுகள் வரலாம்.

புத்தகக் காட்சி நடத்த அரசு வழங்கும் நிதியுதவி சார்ந்தும் நிபந்தனைகள் விதிக்கப்படலாம். இவர்களைத்தான் அழைக்க வேண்டும் என்று சொல்லலாம். அரசு சொல்லவில்லை என்றாலும் மாற்றுக் கருத்துள்ளவர்களை அழைப்பதில் பபாசிக்கும் பதிப்பகங்களுக்கும் அச்சம் ஏற்படக் கூடும். விதவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தும் புத்தகங்களை விற்கும் ஒரு பண்பாட்டு நிகழ்வு ஒற்றைத்தன்மை கொண்டதாகச் சுருங்கிவிடக் கூடாது.

—–  16-01-25

Latest comments (3)

கரூர் சண்முகம்

வராற்றுசூழல் பற்றிய அக்கறையே புதிய புரிதலை ஏற்படுத்தும்.
தமிழக அரசியல் சூழலில் கலை இலக்கியம் இல்லாத மேடை உப்பு – சப்பில்லாத, கார சாரமில்லாத விருந்தாகிவிடும் என்று அனைவரும் அறிந்தது. வெகு ஜன ஈர்ப்பை உருவாக்க அதிக உப்பையும் காரத்தையும் போடுவது அளவற்ற செயல். இது இங்கேயும் பொருந்தும்.

சி வடிவேல்

நூல் வெளியீட்டு விழா என்பது நூல்களையும் நூலாசிரியர்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். நூலை வெளியிடுவோர் நூலின் நிறைகுறைகளைப் பட்டியலிடலாம். அதில் தம் கருத்தை இலைமறைகாயாக வெளியிடலாம். அதைவிடுத்து வரம்பின்றி மேடையைப் பயன்படுத்துவது இதுபோன்ற சிக்கலை உருவாக்குகிறது.
இருப்பினும் வேடியப்பன் அவர்களின் ‘புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற தெளிவு இல்லை’ என்ற வாதத்தை ஏற்க முடியவில்லை.

இருப்பினும் புத்தக் கண்காட்சியில் பங்கேற்க ஓராண்டு தடை என்பது ஏற்புடையதன்று.

Fazul Rahuman

சீமானின் நடவடிக்கை தெரிந்த எவரும் புத்தக வெளியீட்டு விழா போன்ற அறிவுசார் நிகழ்ச்சிக்கு அவரை அழைக்க மாட்டார்கள்.பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பற்றி தனக்கு தெளிவு இல்லை என்று வேடியப்பன் கூறியிருப்பது ஏற்புடையதன்று.ஆகவே பபாசி எடுத்த நடவடிக்கை சரியானதே.