இலங்கு நாணயமே!
வழக்கத்திற்கு மாறான சில தூது நூல்களும் உள்ளன. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த புகையிலை விடு தூது மிக வித்தியாசமானது. இன்று திரைப்படங்களில் கூட புகையிலை சம்பந்தமான காட்சிகளில் புகையிலையைப் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கை வாசகம் போடுகிறார்கள். இந்தப் புகையிலை அறிமுகமான காலகட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்த புகையிலை விடு தூதை எழுதியவர் சீனிச் சர்க்கரைப் புலவர் என்பவர் ஆவார். அவர் பழனி முருகன் மீது காதல் கொண்ட தலைவி புகையிலையைத் தூது அனுப்புவதாக இந்த நூலை எழுதி இருக்கிறார். இதில் புகையிலையைப் போற்றிச் சொல்லக்கூடிய சில பகுதிகள் உள்ளன. பொதுவாக தூது நூல்களில் இவ்வாறு அமையும். எந்தப் பொருளைத் தூது அனுப்புகிறோமோ அந்தப் பொருளைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுவதாக அமையும். மற்ற பொருட்களை எல்லாம் தாழ்த்தி இழிவுபடுத்திப் பேசிவிட்டு இந்தப் பொருளை மட்டும் உயர்த்திப் பேசி ‘இவ்வளவு சிறப்புடைய நீ போய் எனக்கு தூது சொல்லு’ என அமைவது தூது இலக்கியத்தின் ஓர் அமைப்பு.
“கற்றுத் தெளிந்த கனப்பிரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ?”
உன்னைச் சுருட்டி வாய்க்குள் போட்டுக் கொண்டால் உனக்கு அடிமையாகி விடுகிறார்களே, நீ என்ன சூழ்ச்சி செய்திருக்கிறாய் என்று புகையிலையின் சிறப்பைச் சொல்வதாகப் பாடியிருக்கிறார்.
“சொற்காட்டு நல்ல துடிகாரரையும் போய்ப் பற்காட்ட விட்ட பழிகாரா..”
புகையிலை போடுபவர்கள் கையில் புகையிலை இல்லை என்று சொன்னால் அந்தப் பதற்றத்தில் யாரிடம் வேண்டுமானாலும் சென்று கேட்பார்கள். பீடி பிடிப்பவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் சென்று பீடி இருக்கிறதா என்று கேட்பார்கள். அதுமாதிரி இந்தப் புகையிலை எவ்வளவு சிறப்புடையவர்களாக இருந்தாலும் நல்ல சொல்வளம் உடைய புலவர்களாக இருந்தாலும்கூட பிறரிடம் பல்லைக் காட்டிக்கொண்டு உங்களிடம் இருக்கிறதா என்று கேட்கச் செய்யுமாம். அதனால் பற்காட்ட விட்ட பழிகாரா… என்று புகையிலையை அழைக்கிறார். அதுமட்டுமின்றி புகையிலை தமிழ் போல் நாவில் விளையாடும் என்கிறார். அதாவது புகையிலையைத் தமிழுக்கு நிகராகச் சொல்கிறார். இப்படிப் புகையிலையைப் பற்றி உயர்த்திப் பாடக்கூடிய இலக்கியமாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
இதில் ஒரு கதையும் இருக்கிறது. புகையிலை என்பதற்கு எப்படி அந்தப் பெயர் வந்தது என்று சொல்வதாக அது அமைந்திருக்கிறது. ஒருமுறை சிவபெருமான், பிரமன், திருமால் ஆகியவர்களுக்கு இடையில் ஒரு பிரச்சினை வருகிறது. அதைத் தீர்த்துக் கொள்வதற்காகத் தேவர்கள் அனைவரும் இருக்கும் அவையைக் கூட்டுகிறார்கள். அந்த அவையில் தேவர்கள் இவர்களின் வழக்கைக் கேட்டுவிட்டு அதைத் தீர்ப்பதற்காக ஒவ்வொருவரிடமும் ஒரு பொருளைக் கொடுக்கிறார்கள். சிவபெருமானிடம் வில்வத்தைத் தருகிறார்கள். திருமாலிடம் திருத்துழாய், துளசியைத் தருகிறார்கள். பிரமனிடம் புகையிலையைக் கொடுக்கிறார்கள். இந்தப் பொருட்களைப் பத்திரமாக வைத்திருந்து நாளை கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். சிவபெருமான் கையில் இருந்த வில்வம் கங்கையில் விழுந்து காணாமல் போய்விடுகிறது . திருமாலிடம் இருந்த துளசி பாற்கடலில் விழுந்து காணாமல் போய்விடுகிறது. பிரமன் மட்டும் தன்னிடம் தந்த புகையிலையைத் தன் நாவில் இருக்கும் கலைமகளிடம் கொடுத்து, அதாவது நாவில் பத்திரமாக வைக்கிறார்.
மறுநாள் மூவரிடமும் தேவர்கள் அந்தப் பொருட்களைக் கேட்கிறார்கள். அப்போது சிவபெருமானும் திருமாலும் தொலைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். பிரமன் தன்னுடைய நாவிலிருந்து புகையிலையை எடுத்துக் கொடுக்கிறார். அவர்களிடம் கொடுத்த பொருள்கள் போயின, என்னிடம் கொடுத்த பொருள் போகவில்லை என்று பிரமன் சொல்கிறார். அந்தப் ‘போகவில்லை’ என்பது தான் படிப்படியாக ‘போகயிலை’ என்றெல்லாம் மாறிக் கடைசியாகப் புகையிலை என்று வந்துவிட்டதாம். இப்படி ஒரு கதையை இந்த நூல் சுவாரசியமாகச் சொல்கிறது.
அதைப் போன்று ‘பணவிடு தூது’ என்ற நூலை வையாபுரிப்பிள்ளை பதிப்பித்திருக்கிறார். பணத்தைப் பற்றி, நாணயத்தைப் பற்றி பலவிதமாகப் பாடக் கூடியதாக இந்த நூல் அமைந்திருக்கிறது.
ஊதனத் தார்க்கெல்லாம் பொதுப்பொருளே சாதகம் செய்
நாதம் கதித்து இலங்கு நாணயமே
அனைவருக்கும் சாதகமாக இருக்கக்கூடிய நாணயமே என்று பணத்தை விளித்துப் பாடுகிறார். இன்னும் பலவிதமாகப் பணத்தைப் புகழ்ந்து பாடுகிறார்.
“ஆயுதமின்றி அரணின்றிச் சேனையின்றித் தீயார் போல் வென்ற திறல் வேந்தே.”
இந்தப் பணத்திடம் ஆயுதம் கிடையாது. பாதுகாப்பு அரண் கிடையாது. சேனைகள் கிடையாது. இவை எதுவும் இல்லாமலே இது ஒருவரை வெற்றிகொள்ளும். தீயவர்கள் சூழ்ச்சியால் வெல்வதைப்போல இது வெற்றிகொள்ளும். “அரசனே” என்று பணத்தை இந்தத் தலைவி அழைக்கிறாள். போயகன்று சாய் குணங்கள் இன்றித் தானே நிர்வாகம் வாய்க்கும்படி நடக்கும் மந்திரியே என்கிறாள். அரசன் மட்டுமல்ல, மந்திரியும் கூடத்தான். இது இருந்தால் எல்லாக் காரியமும் நடந்து விடும். அதனால் இது மந்திரியாம். இப்படிப் பணத்தின் சிறப்புகளைப் பலவிதமாகத் தலைவி பாடுவது பணவிடு தூது என்ற இந்த நூல்.
—– 19-03-25
பூராயமான பொருளை வெளிப்படுத்தும் சாராயம் தான் உன் தம்பியோ?- புகையிலை விடுதூதுவரி நினைவில் வருகிறது ஐயா.
புகையிலை விடு தூதும், பண விடு தூதும் சிரமமின்றிப் படிக்க முடிந்தது.’பழந்தமிழ் ஆராய்ச்சியாளர்’ என்னும் பட்டத்திற்கு தாங்கள் தகுதியானவரோ?
உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது ஐயா. புகையிலை விடு தூது என்பது. பணிச்சுமை காரணமாக கடந்த ஒரு வாரக் கட்டுரைகளைப் படிக்க முடியவில்லை. இன்றும் நாளையும் வாசித்து விட வேண்டும். உங்கள் கட்டுரைகளை வாசிப்பதென்பது எனக்கு புகையிலை பழக்கம் போலாகிவிட்டது. அப்படியே அந்த வையாபுரிப்பிள்ளை சொல்லும் பண விடு தூதும் ஆச்சரியமே.
💜