ஐந்து கவிதைகள்

You are currently viewing ஐந்து கவிதைகள்

 

1

எங்கிருந்தோ

சொல்லைப்

பஞ்சு போல் எடுக்கிறேன்

கன்னத்தில் ஒற்றி

மிருதுவைப் பரிசோதிக்கிறேன்

பூச்சாற்றில் நனைத்துத்

தேன் மணம் ஏற்றித்

தென்றல் வரும்போது

மெல்லப் பறக்க விடுகிறேன்

எங்கிருந்தோ

ஐயோவென்று ஓலம் எழுகிறது.

2

ஓராயிரம் தேனீக்கள்

 எழுந்தாடத் துடிக்கும் நாக்கின் நுனியைச்

சுண்டிய விரலால் பட்டென்று தட்டி

அடக்கி அடக்கி வைக்கிறேன்

முளைக்காத சொல்

அரும்பி அவிந்த சொல்

பாதியில் முடங்கிய சொல்

சுருண்டு ஒதுங்கிய சொல்

சொல் சொல் சொல்

சொற்கள் திரள்கின்றன

ஆசையுடன்

சிறுவிரல் எடுத்தெறிந்த கல்

தேன்கூட்டில் பட்டு

ஓராயிரம் தேனீக்கள் எழுகின்றன

கொடுக்கு நீட்டி.

3

விமோசனம்

 மேலும் கீழும்

சிரைத்து மழுக்கிச்

சிறைப்பிடித்து ஒடுக்கி

இரட்டைக் கோட்டுக்குள்

ஒரு சொல்லை எழுதும்

சாபத்திற்கு விமோசனம் கிடையாதா?

வெளித் தெரியும்படி  சிறுகொம்பு

அசைத்தால் அறியும்படி விரல்வால்

பக்கவாட்டிலிருந்து நீளும் மினிக்கொடுக்கு

சற்றே உடல் முறுக்க

நான்கு கோடுகள்  போதும் என்கிறேன்

அருளத்தான் ஆளில்லை.

4

எல்லாச் சொல்லும்

 எந்த சொல்லும்

விபத்துக்குத் தப்புவதில்லை

தானே சமாளித்துக்கொள்ளப்

பயிற்சியில்லையோ

கைப்பிடித்து அழைத்துச் செல்ல வேண்டிய

மழலை தானோ

ஒருசொல்லுக்கு முன்போ பின்போ

தறிகெட்ட வாகனத்தை

யாரோ அனுப்பிவிடுகிறார்கள்

இல்லை,

முன்போ பின்போ

வேண்டிய பாதுகாப்பு வாகனத்தை

அனுப்ப மறந்து விடுகிறேன்

நொறுங்கி வீழும் சொல்

மீண்டும் எழுவதேயில்லை

அப்புறம் இப்படித்தான் தோன்றுகிறது:

எல்லாச் சொல்லும் தப்பானவையே.

5

வித்தை

பல் பிடுங்கிய பாம்பு

வித்தை காட்டுவது போலச்

சொல் பிடுங்கிய நாவு

சுழன்று சுழன்று அலைகிறது

இதுவும் ஒரு

அவல வித்தைதான்.

18-12-24

Latest comments (3)

Savithri Tamilmani

‘விமோசனம்’ அருமைங் ஐயா… சொற்கள் குறித்து எப்போதும் அதிக கவனம் கொண்டிருப்பீர்கள். ஒரு சொல்லை மட்டும் எடுத்துக்கொண்டு நீங்கள் விவரிக்கும் முறை அருமையாக இருக்கும். உங்கள் படைப்புகளில் ஒவ்வொரு சொல்லையும் பூச்சரத்தில் தொடுக்கப்படும் ஒவ்வொரு மலரைப் போல கையாண்டிருப்பீர்கள்.