மலையாள மனோரமா விழாவில் நவம்பர் 2 அன்று முற்பகல் 10 மணிக்கு எனது அமர்வு. என்னுடன் உரையாடியவர் நண்பர் கண்ணன். இருவரும் தமிழிலேயே பேசலாம் என்று கூறியிருந்தனர். எனினும் மலையாள வாசகர்களுக்கு நன்றாகப் புரிய வேண்டும் என்பதற்காகக் கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்பது என்றும் நான் தமிழில் சொல்லும் பதில்களின் சாரத்தைக் கண்ணன் ஆங்கிலத்திலேயே மொழிபெயர்ப்பது என்றும் முடிவு செய்து ஒப்புதலும் பெற்றோம்.
முதலில் என் நாவல்கள் குறித்துப் பேசும்படி கேட்டிருந்தனர். இலக்கிய விமர்சனத்துறை தமக்குரியது அல்ல என்பதில் கண்ணன் தெளிவாக இருப்பவர். நாவல்கள் பற்றித் தான் கேள்விகள் கேட்பது சரியாக இருக்காது என்று சொல்லிவிட்டார். அதனால் எங்களையே தலைப்பை முடிவு செய்யும்படி கூறிவிட்டனர். மாதொருபாகன் நாவல் பிரச்சினை தொடங்கியது 2014 டிசம்பர் 1 அன்று. இந்த நவம்பரோடு பத்தாண்டு முடிகிறது. இதுவரைக்கும் அப்போது நடைபெற்ற விஷயங்கள் குறித்து ஊடகத்திடமோ இத்தகைய விழாக்களிலோ விரிவாக நான் பேசியதில்லை.
அதைப் பற்றிப் பேச எனக்குச் சில காரணங்களால் தயக்கம் இருந்தது. மீண்டும் மீண்டும் ‘அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?’ என்று கேட்கிறார்கள். ‘நெருப்பிலே நிற்பது போலிருந்தது’ என்று சொன்னால் போதாது. அதை விவரிக்கச் சொல்வார்கள். அந்தச் சூழலுக்கு மீண்டும் செல்ல என் மனம் விரும்பவில்லை. குணமாகி வரும் புண்ணைச் சரியாக்குகிறேன் என்று ஊசியால் குத்திக் கிளறுவது போன்ற இம்சை அது. இப்போது புண் சுருங்கி வடுவாகிவிட்டது.
அடுத்துப் பத்தாண்டுகளாக மாறாத அரசியல் சூழ்நிலை ஒருகாரணம். பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமான மதவாத அரசியல் அதிகாரத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில் அதைப் பற்றிப் பேச உள்ளூர அச்சம் இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சூழல் சற்றே ஆறுதல் அளிப்பதாக மாறியிருக்கிறது. வாய் திறந்து பேசலாம் என்னும் ஆசுவாசம் கிடைத்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் அரசு ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அரசு ஊழியருக்குச் சில எல்லைகள் உள்ளன. அதற்கு உட்பட்டுத்தான் பேச முடியும். பேச்சுச் சுதந்திரமோ எழுத்துச் சுதந்திரமோ அற்றது அரசுப்பணி. வீம்புக்குப் பேசுவோர் மீது அரசு நினைத்தால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இப்போது விருப்ப ஓய்வு பெற்று இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. எதையும் வெளிப்படையாகப் பேசும்படி கட்டுக்கள் தளர்ந்திருக்கின்றன; சுதந்திர வெளி கிடைத்திருக்கிறது.
மாதொருபாகன் பிரச்சினையைப் பற்றிப் பொதுவெளியில் நான் பேச வேண்டும் என்பதைத் தொடர்ந்து கண்ணன் வலியுறுத்தி வந்தார். என் மனம் திறக்கவில்லை. இப்போதைய சூழலில் அதைப் பேசத் தொடங்கலாம் என்று கண்ணன் மீண்டும் சொன்னார். ‘பத்தாண்டு’ என்பதும் கணிசமானது என்றே தோன்றியது. ஆகவே ஒத்துக் கொண்டேன். ‘புத்துயிர் பெற்ற கதை’ என்று சொன்னேன். எத்தகைய உண்மை நிகழ்வையும் கதையாக மாற்றிவிடும் பெருமை காலத்திற்கு உண்டு. அதைப் பின்பற்றி எங்கள் அமர்வுக்கு ‘Perumalmurugan’s Death and Resurrection’ என்று நேரடித் தலைப்பு கொடுத்திருந்தனர்.
பெங்களூருவில் முதல்நாள் இரவு எட்டுமணிக்கு ரயில் ஏறியவன் பன்னிரண்டு மணி நேரம் பயணம் செய்து மறுநாள் காலை எட்டுமணிக்குக் கோழிக்கோடு சேர்ந்திருந்தேன். Ravish விடுதியில் அறை. பயணத்தில் ஆழ்ந்து தூங்கும் வழக்கம் இல்லாததால் சற்றே உறங்கச் சொல்லிக் கண்கள் கெஞ்சின. பத்துமணிக்கு நிகழ்வு. தயாராகி உண்டு முடித்துக் கடற்கரை அரங்கிற்குச் செல்ல நேரம் போதாது. பரந்த அவ்வறையின் அழகிய அமைப்பும் பதினைந்தாம் மாடியிலிருந்து தெரிந்த கோழிக்கோடு நகரக் காட்சிகளும் உற்சாகத்தில் ஆழ்த்தின. அதைப் பற்றிக்கொண்டு தயாராகிக் கிளம்பினேன். கண்ணன் முதல்நாள் இரவு வந்துவிட்டதால் பிரச்சினையில்லை.
முற்பகலில் முதல் நிகழ்வு என்றாலும் அரங்கில் கூட்டம் நிறைந்திருந்தது. சமூக ஊடகங்களின் ஆதிக்கம் நிறைந்த காலம் எனினும் கேரளத்தில் மேடைக் கலாச்சாரத்திற்குப் பங்கம் நேரவில்லை. அங்கே பேச்சாளர்களுக்கும் பஞ்சமில்லை; வாசகர்களுக்கும் பஞ்சமில்லை. ஐம்பது பேர் இருந்தால் அது சாதாரண நிகழ்வு. நூறு பேர், இருநூறு பேர் எனத் திரள்வது அங்கே இயல்பானது. இப்பெரும் விழாவில் ஆயிரக்கணக்கில் மக்கள். சிறுஅறிமுகத்தோடு அமர்வு கண்ணன் கைக்குப் போயிற்று.
‘முதலில் இதைப் பேசக் கேரளத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்’ என்பது கண்ணனின் முதல் கேள்வி. மாதொருபாகன் பிரச்சினை நடந்தபோது கேரளத்தில் இருந்து பேராதரவு கிடைத்தது. ஆயிரக்கணக்கில் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. கருத்துரிமைக்கு ஆதரவாகக் களமிறங்காத எழுத்தாளர்களோ வாசகர்களோ இல்லை என்னும் அளவுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகள் ஏராளம். தமிழில் நூல்களை வெளியிட வேண்டாம் என நான் கேட்டுக் கொண்டிருந்ததால் மொழிபெயர்ப்பு பற்றியெல்லாம் கவனம் கொள்ளவில்லை.
அப்போது மாதொருபாகனை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்த பெங்குவின் பதிப்பகத்திடமிருந்து உரிமம் பெற்று ஆங்கில வழி மலையாள மொழிபெயர்ப்பாக டிசி புக்ஸ் வெளியிட்டு நூலை மலையாள உலகிற்குக் கொண்டு சேர்த்தது. எந்த உரிமமும் பெறாமலே என் கவிதைகளையும் கதைகளையும் மொழிபெயர்த்து நூலாக்கியதும் நடந்தது. கவிஞர் சச்சிதானந்தன்கூட என் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். கேரளத்துக்குக் குடிபெயர்ந்து வருமாறு அழைப்புகள் வந்தன. ஒருசமயம் போய்விடலாமோ என்று தோன்றியதும் உண்டு. குடும்பம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் அதைத் தவிர்க்க வேண்டியதாயிற்று.
பிரச்சினை ஓய்ந்த பிறகு தொடர்ந்து கேரளத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டேயிருக்கிறேன். கோழிக்கோடுக்கு மட்டும் கணக்கற்ற பயணம் செய்திருக்கிறேன். என் பெருவாரியான நூல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாள இதழ்களில் என் படைப்புகளுக்கு மதிப்புரைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து வருகின்றன. ஏராளமான நேர்காணல் கொடுத்திருக்கிறேன். இலக்கிய அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் மாணவர்களும் என்னை அழைத்துக் கொண்டேயிருக்கின்றனர். ஜேசிபி விருது பெற்றமைக்கு நிகழ்ந்த ஒரே ஒரு பாராட்டுக் கூட்டம் கொச்சியில் நடந்ததுதான். இப்படி எத்தனையோ சொல்லலாம்.
நேரம் கருதி இவ்வளவையும் பட்டியலிடாமல் சிலவற்றை மட்டும் கூறி ‘இந்த அளவு கருத்துரிமைக்கு ஆதரவு காட்டி என்னையும் என் படைப்புகளையும் போற்றும் கேரளத்தில் மாதொருபாகன் பிரச்சினையின் பரிமாணங்களைப் பேசுவதுதான் பொருத்தம்’ என்று சொன்னேன். ஆரவாரத்தோடு பார்வையாளர்கள் அதை வரவேற்றனர். 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தவை பற்றிக் கண்ணனின் கேள்விகள் தொடர்ந்தன. அவற்றைப் பேசப் பேசப் பல விஷயங்கள் என்னையறியாமல் வெளிவந்தன. முற்றிலும் பேசி முடியாது என்று தோன்றியது. ஒருகட்டத்தில் நிறுத்திக்கொண்டு கேள்விகளுக்கு இடம் கொடுத்தோம். இரண்டு கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல நேரம் இருந்தது.
இந்தத் தொடக்கம் எனக்கு வேறொரு உணர்வைக் கொடுத்தது. மாதொருபாகன் பிரச்சினை தொடர்பான என் எண்ணங்களைப் பேசித் தீராது; அவற்றை ஒருநூலாக எழுதினால்தான் அந்தச் சுமையிலிருந்து விடுபட முடியும் என்பதே அது. ஆம், நூலாக எழுதும் தூண்டுதலோடு மேடையிலிருந்து இறங்கி வாசகர்களுக்குக் கையொப்பம் இடுவதற்கான இடத்தை நோக்கி நடந்தேன்.
—– 08-11-24
Add your first comment to this post