மலையாள மனோரமா விழாவில் இன்னொரு குறிப்பிடத்தக்க நிகழ்வு தமிழ்நாட்டின் துணைமுதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் ஓர் அமர்வில் பங்கேற்றுப் பேசியது. மிகச் சில அரசியல்வாதிகளே இத்தகைய விழாக்களில் பங்கேற்பதைக் கண்டிருக்கிறேன். மேடைப் பேச்சாக அல்லாமல் அறிவார்ந்த உரைகளுக்கு இடம் வழங்கும் இத்தகைய நிகழ்வில் உதயநிதி பங்கேற்றுத் திராவிட இயக்கக் கொள்கைகள் தொடர்பாகப் பேசுவது முக்கியமானது, ஆரோக்கியமானது என்று தோன்றியது.
என் அமர்வு முடிந்து கருத்தாளர் அறையில் தேநீர் அருந்தியபடி சென்னை, மலையாள மனோரமா அலுவலகத்தில் பணியாற்றும் சுதீர் ஆபிரகாமிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர்தான் உதயநிதி வரும் தகவலைச் சொன்னார். The Week இதழில் பணியாற்றும் லட்சுமி சுப்பிரமணியமும் வந்திருந்தார். அந்நிகழ்விற்குச் செல்லலாமா, உட்கார இடம் கிடைக்குமா என்று சுதீரிடம் கேட்டேன். உரிய ஏற்பாடுகளைச் செய்து முதல் வரிசையில் என்னை அமரச் செய்தார். இருக்கைகள் போதாமல் பலர் நின்று கொண்டிருந்தனர். அரங்கு நிரம்பி வழியும் அளவு கூட்டம்.
என்னருகில் அமர்ந்திருந்தவர் பிரபல பத்திரிகையாளர் பி.சாய்நாத். விவசாயிகள் பிரச்சினையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருபவர். எழுதுவதோடு களப்பணியில் ஈடுபட்டுப் பல போராட்டங்களையும் முன்னெடுத்தவர். முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரியின் பேரன் என்னும் பின்னணியும் அவருக்குண்டு. சென்னை லயோலா கல்லூரியில் பயின்றவர். துபாயில் வசிக்கும் மலையாளிகள் நடத்தும் இலக்கிய அமைப்பு சார்பாக 2017ஆம் ஆண்டு ‘ஓ.என்.வி.குரூப் இலக்கிய விருது’ எனக்கு வழங்கினர். அதே விழாவில் சிறந்த பத்திரிகையாளருக்கான விருதைப் பி.சாய்நாத் பெற்றார். அப்போது அவரை நேரில் சந்தித்திருந்தேன். எனினும் என்னால் சட்டென நினைவுகூர முடியவில்லை. அவராக அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘மன்னிக்க வேண்டும் சார்’ என்று கூச்சத்துடன் சொல்லிச் சில நிமிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
ஒன்றிய அரசு விவசாயிகள் நலனில் சிறிதும் அக்கறை காட்டாமல் இருப்பதைப் பற்றிச் சில விஷயங்களைச் சொன்னார். அறுவடைப் பருவத்தில் பஞ்சாப் மாநில விவசாயிகளிடம் நெல்லைக் கொள்முதல் செய்து ஏற்றிச் செல்வதற்கென்றே சிறப்புச் சரக்கு ரயில்கள் செல்லுமாம். இப்போது அவை நிறுத்தப்பட்டு விட்டனவாம். அதனால் நெல்லை அதானி குழுமத்திடம் விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதாம். இந்தப் பிரச்சினை பற்றியெல்லாம் காங்கிரசும் கவனம் செலுத்துவதில்லை என்று வருத்தப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பழி வாங்க ஒன்றிய அரசு இத்தகைய செயலில் ஈடுபடுகிறது போல. இதைப் பற்றிய செய்திகள் பரவலாக வந்த மாதிரி தெரியவில்லை. மனிதரின் வாழ்வுரிமை சார்ந்த விஷயங்களுக்கு இன்று செய்தி மதிப்பு இல்லை போல.
அவரிடம் பேசிக் கொண்டிருந்த தருணத்தில் உதயநிதி வந்துவிட்டார். சென்னையிலிருந்து கோழிக்கோட்டுக்கு காலையில் ஒரே ஒரு விமானம்தான் இருக்கிறது. ஆகவே தனிவிமானத்தில் வந்தவர் கேரளத் திமுகவின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு நேரடியாக நிகழ்வுக்கு வந்துவிட்டார். மேடைக்கு அழைக்கும் முன் முதல் வரிசையில் உட்காரச் சொன்னார்கள். வந்தவர் எனக்கருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கமா நீங்கள்?’ என்று கேட்டார். ‘இல்லை’ என்று சொன்னேன். அரசு கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றேன் என்றும் மாநிலக் கல்லூரியின் தற்போதைய முதல்வர் இரா.இராமனும் நானும் ஒன்றாகப் பணியில் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னேன். இராமனை அவருக்கு நன்றாகத் தெரியும்.
அதற்குள் மேடைக்கு அழைப்பு வந்துவிட்டது. அவரைப் பற்றிய அறிமுகம் முடிந்ததும் பேசத் தொடங்கினார். மலையாள மனோரமாவின் நிர்வாகிகள் இருவர் பெயரைச் சொல்லி விளித்தவர் மூன்றாவதாகத் ‘இந்நிகழ்வில் பங்கேற்க வந்திருக்கும் தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகன்’ என்று என் பெயரையும் சேர்த்துக் கொண்டார். அவர் பேச்சு ஐ-பேடில் இருந்தது. அதில் என்பெயர் இருந்திருக்க வாய்ப்பில்லை. சாதாரண மனிதருக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பெயர் சொல்லி ‘அவர்களே’ என மரியாதையோடு மேடையில் விளிப்பது திராவிட இயக்கத்தின் மேடைக் கலாச்சாரம். அந்த மரபை உதயநிதி தொடர்கிறார் என்று தோன்றியது.
ஐ-பேடை அவ்வப்போது பார்த்துக் கொண்டாலும் இயல்பாகப் பேசினார். இடையிடையே சில தொடர்களைத் தமிழில் பேசினார். மற்றபடி ஆங்கில உரை. ஆற்றொழுக்கான பேச்சு. Literary Echoes in Dravidian Politics என்று நிகழ்ச்சி நிரலில் தலைப்பு இருந்தது. அத்துடன் ‘Linguistics’ என்பதையும் சேர்த்துக் கொண்டு பேசினார். கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள உறவு, பெரியார், நீதிக்கட்சி, இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்று சில வரலாற்றுச் செய்திகளை முன்வைத்த பேச்சு.
‘இன்றைக்கு இந்தியாவில் மாநில மொழிகள் உயிரோடு இருக்கின்றன என்று சொன்னால் அதற்கு முக்கியக் காரணம் திராவிட இயக்கம் என்பதில் பெருமை கொள்கிறோம்’ என்று சொன்னார். கொஞ்சம் மிகையான கூற்றாக இருக்கலாம். இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் இன்றுவரை வலிமையாகத் திராவிட இயக்கம் செயல்படுகிறது என்பது உண்மை. இந்தியை மூன்றாம் மொழியாக ஏற்றுக்கொண்ட பல மாநிலங்கள் தம் மொழிக்கான முக்கியத்துவத்தை இழந்துள்ளன; இழந்து வருகின்றன.
மனிதரின் மாபெரும் கண்டுபிடிப்பு மொழி. ஒருமொழியை உருவாக்க எத்தனையோ நூற்றாண்டு காலம் ஆகியிருக்கும். ஒவ்வொரு காலத்தின் படிவுகளையும் மொழிதான் சுமந்துகொண்டு அடுத்த காலத்திற்கு வருகிறது. ஒருசொல்லுக்குள் வரலாறும் பண்பாடும் புதைந்திருக்கும். ஈடற்ற கண்டுபிடிப்பான மொழியைக் காப்பாற்றுவது நாகரிக சமூகத்தின் கடமை. அது எழுத்துக்கு வரிவடிவம் உள்ள மொழியாக இருக்கலாம்; வரிவடிவம் அற்ற மொழியாக இருக்கலாம். ஒருமொழியில் எழுதப்பட்ட இலக்கியம் இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். எந்த நிலையில் ஒருமொழி இருந்தாலும் அதை அழியவிடக் கூடாது. அதைக் காப்பாற்றவும் மேம்படுத்தவும் உயிர்வாழச் செய்யவும் வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகம் எங்கும் மொழியியல் துறை பெரிதாக வளர்ந்தது. 1960, 70களில் தமிழ்நாட்டிலும் மொழியியல் கல்விக்கு முக்கியத்துவம் இருந்தது. அத்துறை சார்ந்த வல்லுநர்கள் பலர் ஒலிவடிவில் மட்டும் இருந்த மொழிகளுக்கு எல்லாம் எழுத்து வகுத்து வரிவடிவம் உருவாக்கினார்கள். மொழிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்தார்கள். பழங்குடியினர் மொழிகள் எல்லாம் கவனத்திற்கு வந்தன. இப்போது அத்துறை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய அளவிலேயே அழியும் நிலையில் இருக்கிறது. அக்கல்வியைக் கற்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. அரசுகள் அத்துறையை ஊக்கப்படுத்தவில்லை. உலக அளவிலும் இதுதான் நிலை என்றே கருதுகிறேன்.
தன் அன்றாட வாழ்வைச் சுகமானதாக்கிக் கொள்ள எத்தனையோ கண்டுபிடிப்புகளைச் செய்யும் நாம் மனித சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த மொழிகளை அழிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஒருமொழியைப் பேசுவோர் அதன்வழி ஆதிக்கம் பெற நினைக்கின்றனர். தம் மொழியைப் பிறர் மீது திணிப்பதன் மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று கருதுகின்றனர். அதற்கு வெளிப்படைச் சான்று இந்தி. படிப்படியாக மாநில மொழிகளை அது விழுங்க முயல்கிறது.
உதயநிதி பொருத்தமான சான்றுகளைக் கொடுத்துப் பேசினார். ஒருகாலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சமஸ்கிருத ஆசிரியருக்கு இருநூறு ரூபாய் ஊதியம்; தமிழாசிரியருக்கு எழுபது ரூபாய் ஊதியம். மொழி அடிப்படையில் இத்தகைய பாகுபாடுகள் இருந்தன என்பதை எல்லாம் எடுத்துக் காட்டினார். தென்னிந்தியா இந்தித் திணிப்பைத் தொடர்ந்து எதிர்த்து வருவதால்தான் திரைத்தொழிலிலும் தென்மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. வட இந்தியாவில் இந்தித் திரைத்துறையே பல மாநிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் சொன்னார்.
பாஜகவின் ஒருநாடு, ஒருதேர்தல், ஒருபண்பாடு, ஒருமொழி, ஒரு உணவு, ஒரு உடை, ஒருமதம் என்பதற்கு மாற்றாக இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து மொழிகளையும் அனைத்துப் பண்பாட்டையும் அனைத்து இலக்கியத்தையும் பாதுகாப்போம்; அதற்கு இணைந்து நிற்போம், செயல்படுவோம் என்று தம் உரையை நிறைவு செய்தார். தமிழ்நாட்டு மொழி அரசியல் வரலாற்றின் உரையாடலை முன்னெடுக்கும் வகையிலும் இன்றைய மொழி அரசியலை எடுத்துக்காட்டிய முறையிலும் நல்ல உரை.
—– 09-11-24
இந்தி சில வடநாட்டு மொழிகளை அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை உணரத்தொடங்கியுள்ளனர். ஜெய்ப்பூரில் சிறுவர்கள் ராசத்தானின் மொழியைப் பேசுவதில்லை எனக்கூறி இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தினார்கள். கோல்கோட்டாவில் திராவிடத் தலைவர்கள் போல எங்களுக்கு உண்ர்வூட்டும் தலைவர்கள் வாய்க்கவில்லையே என ஒரு போராட்டம் நடந்தது. பீகாரில் இனிமையான எங்கள் மைதிலி மொழியை இந்தி அழித்துக்கொண்டிருக்கிறது என்பதை மக்களே உணர்ந்து பிள்ளைகளுடன் இந்தி பேசுவதை நிறுத்தி வருகின்றனர். கன்னடரும் உணர்ந்து கொண்டார்கள். Better be late than never.