மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அதன் தலைப்புக் கட்டுரை லண்டனில் உள்ள ஷெர்லக் ஹோம்ஸ் நினைவில்லத்தைப் பார்வையிட்ட அனுபவத்தைப் பேசுகிறது. எழுத்தாளர் ஆர்தர் கானன் டாயில் உருவாக்கிய கதாபாத்திரம் ஷெர்லக் ஹோம்ஸ். அப்பாத்திரம் வாழ்ந்ததாகக் கதையில் சித்திரிக்கப்பட்ட ஒரு வீடுதான் அந்த நினைவில்லம். கேரளம், பாலக்காடு அருகில் உள்ள தஸ்ரக் கிராமத்தில் எழுத்தாளர் ஓ.வி.விஜயனுக்கு நினைவில்லம் இருக்கிறது. ‘கஸாக்கின் இதிகாசம்’ நாவலில் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் (அஃறிணை உட்பட) பல சித்திரமாகவும் சிற்பமாகவும் அங்கே வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒரு கதாபாத்திரம் வாழ்ந்ததாகச் சித்திரிக்கப்பட்ட வீடு என ஒன்றை நினைவகம் ஆக்கியிருப்பது இது மட்டுமாகவே இருக்கும் எனக் கருதுகிறேன். எழுத்தாளர் இறந்து போகலாம். அவர் உருவாக்கி வாசகர் மனதில் ஆழப் பதிந்த பாத்திரங்களுக்கு ஒருபோதும் இறப்பில்லை.
அக்கட்டுரையை வாசித்த போது எழுத்தாளர் மார்க் ட்வைன் நினைவில்லம் மனதில் வந்தது. 2019இல் அமெரிக்கா சென்றிருந்த போது கனெடிக்ட் மாநிலத்தில் உள்ள மார்க் ட்வைன் நினைவில்லத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப் பற்றி எழுத நினைத்துக் காலம் கழிந்துவிட்டது. அதற்கு ஒருகாரணம் எஸ்.ராமகிருஷ்ணன் ‘மார்க் ட்வைனின் வீடு’ என்றொரு கட்டுரையை ஏற்கனவே எழுதியிருக்கிறார் என்பதும்தான்.
நினைவில்லத்தைப் பற்றி என்ன எழுத முடியும்? எழுத்தாளர் பயன்படுத்திய எழுதுபொருட்கள், அறைக்கலன்கள், புழங்கிய அறைகள், உடைகள், மூக்குக் கண்ணாடி உள்ளிட்டவை என அங்கங்கே காட்சிக்கு வைத்திருப்பார்கள். புகைப்படங்களும் ஓவியங்களும் இருக்கலாம். அது அருங்காட்சியகமாக விளங்கும். வேறென்ன சுவாரசியம் இருக்கப் போகிறது? எஸ்.ராமகிருஷ்ணன் தம் கட்டுரையில் இவற்றையெல்லாம் விரிவாகவே எழுதியுள்ளார். அத்துடன் அமெரிக்க இலக்கியத்தில் மார்க் ட்வைனின் முக்கியத்துவம், அவரது படைப்புகள் பற்றிய சில குறிப்புகள், தம் வாசிப்பனுவம் ஆகியவற்றையும் கூறியுள்ளார்.
அவையல்லாமல், அந்த நினைவகம் பற்றி எழுத எனக்கு இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று அவ்வீட்டின் பிரம்மாண்டம். அது மாளிகை. பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர் ஒருவர் அவ்வளவு பெரிய வீட்டில் வாழ்ந்திருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை. இத்தனைக்கும் அவர் முழுநேர எழுத்தாளர். பணியாளர்கள் தங்கியிருப்பதற்கான அறைகளும் உள்ளேயே இருந்தன. குடும்பத்தாருக்கு நல்ல வசதியோடு கூடிய பரந்த அறைகள். சமையலறையை ஆர்வத்தோடு கண்டேன். அக்காலத்துப் புழங்கிய பாத்திரங்கள், அடுப்புகள் எல்லாம் அங்கே இருந்தன. அவைதாம் பழமையைக் காட்டின.
கிட்டத்தட்ட இருநூற்றாண்டுகளுக்கு முன்பே ஓர் எழுத்தாளர் பெரும்பணக்காரராக வாழ்ந்திருக்கிறார் என்பது சாதாரண விஷயமல்ல. பொதுத்தளங்களில் செல்வாக்குப் படைத்தவராகவும் வாழ்ந்திருக்கிறார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் எழுதித்தான் அதிலிருந்து மீண்டிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே அமெரிக்காவில் கல்வியும் வாசகர் பெருக்கமும் நிகழ்ந்திருக்கின்றன. அதனால் புத்தகச் சந்தை உருவாகியிருக்கிறது. எழுத்தாளர் புகழோடு மட்டுமல்லாமல் வசதியோடும் வாழ்ந்திருக்க வாய்த்திருக்கிறது. நமக்கு அப்போது பள்ளிக்கூடமே ஏற்படவில்லை. கல்வியிலிருந்து பெரும்பாலானோரைத் தடுத்து வைத்திருந்த சாதிக் கட்டுக்களை மீறி வருவது இன்றும் பாடாக இருக்கிறது. இதில் எழுத்தாளர் வருமானம் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.
நினைவகத்தின் தரைத்தளத்தில் அவர் எழுதிய நூல்களை விற்கும் கடை ஒன்று இருந்தது. பெரிய அறை நிறைய அவர் எழுதிய நூல்கள். நாவல், சிறுகதை, சுயசரிதை, கட்டுரை எனக் கணிசமான நூல்களை எழுதியுள்ளார். எனினும் ஒரே ஒரு எழுத்தாளரின் நூல்களுக்கு இவ்வளவு பெரிய கடையா என வியந்தேன். நூல்களைப் பார்வையிட்ட போது ஒவ்வொரு நூலுக்கும் பல்வேறு வகைப் பதிப்புகள் இருந்ததைக் கண்டேன். உடன் வந்த நண்பர் (அவர் பெயரை மறந்துவிட்டேன்) அவற்றைப் பற்றித் தமக்குத் தெரிந்த விவரங்களைச் சொன்னார். The Adventures of Tom Sawyer, Adventures of Huckleberry Finn ஆகியவை அவர் எழுதிப் புகழ்பெற்ற நாவல்கள். அவற்றின் வெவ்வேறு வடிவப் பதிப்புகள் அங்கே விற்பனைக்கு இருந்தன.
‘ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்’ நூல் பதிப்புகளை மட்டும் எண்ணிப் பார்த்தேன். பன்னிரண்டு வகைப் பதிப்புகள் இருந்தன. ஆய்வுப் பதிப்பில் இரண்டு வகை; கெட்டி அட்டை ஒன்று; சாதாரண அட்டை ஒன்று. ஆய்வுக் குறிப்புகள் அற்ற பொதுவாசகருக்கான பதிப்பிலும் இப்படி இரண்டு வகை. சிறுவர்க்கான பதிப்புகள் நிறையப் படங்களுடன் இருந்தன. சிறுவர்களின் வயது அடிப்படையில் இரண்டு மூன்று வகை நூல்கள். அந்நாவல் கதையை மறுசொல்லல் (Retold) வகை நூல்கள் சில. எளியமுறைச் சொல்லல். சுருக்கமுறைச் சொல்லல். கையடக்கப் பதிப்பும் பையடக்கப் பதிப்பும் உண்டு. கனமற்ற தாளில் (பைபிள் தாள் என்று சொல்வோமே, அதுதான்) ஒரு பதிப்பு. மெல்லிய இறகைக் கையில் எடுப்பது போலிருந்தது அந்நூல். ‘இது பயணத்தில் படிப்பதற்கான பதிப்பு’ என்று நண்பர் சொன்னார். பெட்டிக்குச் சுமையாக இருக்காது. கையில் வைத்துப் படிப்பதும் எளிது. அப்பதிப்பை எனக்கென வாங்கி அன்பளிப்பாகக் கொடுத்தார் நண்பர்.
வெளிநாடுகளுக்குச் செல்லும் போது நண்பர்கள் வழங்கும் நூல்களை எடுத்து வருவது பெருங்கஷ்டமாகிவிடும். புத்தகம் என்றாலும் அளவு கூடும்போது சுமையாகும். விமானத்தில் இத்தனை கிலோதான் சுமை என்னும் கட்டுப்பாடு. ஆனால் இந்தப் பயணப் பதிப்பை எடுத்து வருவது எனக்குச் சுமையாகவே தெரியவில்லை. அப்படி ஒரு பதிப்பைப் பயன்படுத்த வேண்டும் என்னும் உந்துதலில் கைப்பையில் வைத்து விமானத்தில் வாசித்து வந்தேன்.
வழக்கம் போலத் தமிழைப் பற்றிய ஏக்கம் பீடித்தது. இப்படி ஏதாவது ஒரு தமிழ்நூலுக்குப் பதிப்பு வந்தால் அருமையாக இருக்குமே என்று தோன்றியது. ‘டாம் சாயரின் சாகசங்கள்’ நூலை மார்க் ட்வைன் 1876இல் எழுதியிருக்கிறார். ‘ஹக்கிள்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்’ நூலை 1884இல் எழுதியுள்ளார். இவ்வாண்டுகளுக்கு இடையில் 1879ஆம் ஆண்டு தமிழின் முதல் நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ வெளியாயிற்று. நம்முடைய முதல் நாவல் வந்த ஆண்டு 1876 என்று சிலரும் 1879 என்று சிலரும் குறிப்பிட்டு வந்த நிலையில் ‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ நூலை எழுதிய சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர்தான் 1879 என்பதைத் தெளிந்து காட்டினார்கள். நம் முதல் நாவலின் நிலையே இதுதான்.
பிரதாப முதலியார் சரித்திரம் இப்போதும் வாசிக்கச் சுவாரசியமாகவே இருக்கிறது. அதற்கு இன்று வரை ஆய்வுப் பதிப்பு ஏதுமில்லை. சுருக்கப் பதிப்பும் இல்லை. மறுசொல்லலும் இல்லை. பிரதாப முதலியாரின் லீலைகள் நகைச்சுவையாக எழுதப்பட்டிருக்கும். அப்பகுதியை மட்டும் படங்களுடன் சிறுவர் நூலாக்கினால் எப்படியிருக்கும் என்றெல்லாம் என் கற்பனை ஓடியது. மார்க் ட்வைன் அமெரிக்காவில் பிறந்தவர். வேதநாயகம் பிள்ளை தமிழ்நாட்டுக்காரர். என்ன செய்ய?
2029ஆம் ஆண்டு பிரதாப முதலியார் சரித்திரத்திற்கு நூற்றைம்பதாம் ஆண்டு. அதையொட்டி ஏதாவது ஒரு நல்ல பதிப்பு வெளியாகாதா என்று ஏக்கமாக இருக்கிறது.
—– 29-10-24
சிறப்பான பதிவுங்க ஐயா. தமிழகத்தில் எழுத்தாளர்கள் இப்படி ஒரு நிலையை அடைய இன்னும் குறைந்தபட்சம் ஐம்பதிலிருந்து நூறு ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன்.கலைஞர்களில் திரைக் கலைஞர்கள் திரைத்துறை சார்ந்த இசைக்கலைஞர்கள் தவிர யாரும் இவ்வாறு வாழ்வதற்கு சாத்தியமே இல்லாத சூழல்தான் தமிழில் உள்ளது. 😞