கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல்

You are currently viewing கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல்

கருத்துரிமை பற்றிய கட்டுரை இது. மின்னம்பலம் இணைய இதழில் வெளியாயிற்று.

கருத்துரிமை: பரபரப்புச் சங்கிலியில் இழுபடுதல்

கடந்த ஒரு மாதத்திற்குள் கருத்துரிமை தொடர்பான மூன்று பிரச்சினைகள். கேரள வெள்ளப் பாதிப்பை முன்வைத்து மனுஷ்யபுத்திரன் எழுதிய ‘ஊழியின் நடனம்’ என்னும் கவிதை இந்துக் கடவுளை இழிவுபடுத்துகிறது எனச் சொல்லி எழுந்தது ஒன்று. மனுஷ்யபுத்திரன் அறியப்பட்ட கவிஞர் என்பதால் இப்பிரச்சினை இலக்கியத் தளத்திலும் ஊடகத் தளத்திலும் விரிவான கவனத்திற்கு உள்ளானது. அவருக்குக் குறிப்பிடத்தக்க அளவு ஆதரவு உருவாயிற்று. கவிஞர்கள், எழுத்தாளர்கள் தம் ஆதரவைக் காட்டும் வகையில் சமூக ஊடகங்களில் செயல்பட்டனர்.

இதற்கு ஓரிரு வாரங்கள் முன்னர் தொடங்கிய இன்னொரு பிரச்சினை தொல்லியல் ஆய்வாளர் ஆ.பத்மாவதி எழுதி ஜூன் மாதம் வெளியிடப்பட்ட ‘திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும்’ என்னும் நூல் சைவ சமயத்தையும் மாணிக்கவாசகரையும் இழிவுபடுத்துகிறது என்று எழுந்ததாகும். ஆ.பத்மாவதி மீதும் இந்நூலை வெளியிட்ட சைவ சித்தாந்தப் பெருமன்றத் தலைவர் நல்லூர் சா. சரவணன் மீதும் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. சைவத் தத்துவத்தில் ஆழ்ந்த அறிவு கொண்ட சா.சரவணன் சென்னைப் பல்கலைக்கழகச் சைவ சித்தாந்தத் துறைப் பேராசிரியர். பல்வேறு கோவில்களிலும் சமயச் சொற்பொழிவு நிகழ்த்துபவர்.

அவரைப் பேச விடாமல் தடுத்தும் நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வைத்தும் கடுமையான எதிர்ப்புகள் உருவாக்கப்பட்டன. நூல் பற்றிய தன் விளக்கத்தை அவர் சொல்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. பின்னர் தம் மன்றத்திலேயே அவர் பேசி அதை இணையத்தில் வெளியிடும்படி நேர்ந்தது. ஆய்வு நூலுக்கு எழுந்த எதிர்ப்புக்குக் கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்களிடம் இருந்து வலுவான கண்டனங்கள் வந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. மேலும் இது பொதுத்தளத்தில் பெரிதும் கவனம் பெறவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.

அதே சந்தர்ப்பத்தில் கர்நாடக இசைக் கச்சேரிகளில் கிறித்தவ, இசுலாமியக் கடவுளர் பற்றிய கீர்த்தனைகளைப் பாடுவது தொடர்பான பிரச்சினையும் நடந்தது. பாடகர் ஓ.எஸ்.அருண் தம் நிகழ்ச்சியை ரத்து செய்தார். நித்யஸ்ரீ மகாதேவன் வருத்தம் தெரிவித்தார். டி.எம்.கிருஷ்ணா ‘இனி மாதம் ஒரு கிறித்தவ, இசுலாமியக் கடவுள் தொடர்பான கீர்த்தனைகளை வெளியிடுவேன்’ என அறிவித்தார். அடுத்த மாதம் அமெரிக்காவில் சிவன் கோவில் ஒன்றில் நடக்கவிருந்த அவரது இசைக் கச்சேரி இந்த அறிவிப்பின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஆங்கில ஊடகங்கள் ஓரளவு கவனம் குவித்தன. கர்நாடக இசை வித்வான்களிடம் இருந்து போதுமான எதிர்வினைகள் உருவாகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

சமீபமான இம்மூன்று பிரச்சினைகளோடு சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கவிஞர் வைரமுத்து எழுதிய ‘ஆண்டாள்’ பற்றிய கட்டுரை குறித்து எழுந்த பிரச்சினையையும் இணைத்துப் பார்க்கலாம். திரைத்துறை சார்ந்து பல ஆண்டுகளாகப் பிரபலம் பெற்றிருக்கும் வைரமுத்துவின் பிரச்சினையில் அக்கட்டுரையை வெளியிட்ட பாரம்பரியம் மிக்க பத்திரிகை ஆசிரியர் மன்னிப்புக் கேட்டார். பல தரப்பிலிருந்தும் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. எனினும் திரைத்துறையினரிடமிருந்து பெரிதாக ஆதரவு வெளிப்படவில்லை.

இந்தப் பிரச்சினைகள் எல்லாம் நமக்கு உணர்த்தும் முக்கியமான விஷயம் கலை இலக்கியத் துறையின் எந்தப் பிரிவில் செயல்படுபவராக இருப்பினும் ஏதேனும் சந்தர்ப்பத்தில் அவருக்குப் பிரச்சினை நேரலாம் என்பதுதான். வெகுஜன பிரபலம், தீவிர இலக்கியத் தளம், கல்வித்துறை, ஆன்மீகத் தளம், இசைத்துறை எதுவாயினும் விதிவிலக்கில்லை. கலை இலக்கியத் துறைகள் இவ்விதம் தாக்குதலுக்குத் தொடர்ந்து இலக்காவதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் அறிவுத் துறை பன்முகத்தன்மை கொண்டதாகவும் சுதந்திரச் செயல்பாடு மிக்கதாகவும் இருப்பதாகும். அதை முடக்குவதன் நோக்கம் சிந்தனையை அறுத்துச் சமூகத்தை மந்தையாக மாற்றும் முயற்சி.

ஆகவே கலை இலக்கியத் துறையினருக்கு நேரும் எப்பிரச்சினைக்கும் ஒட்டுமொத்தச் சமூகமே விழிப்புணர்வுடன் எதிர்வினை ஆற்ற வேண்டும். அதற்கு முதன்மையாகக் கலை இலக்கியத் துறைப் பிரிவுகளில் செயல்படும் அனைவரும் எதிர்வினையாற்றுவது மிகவும் முக்கியம். தனிமனிதப் பிரச்சினை என்றோ ஒரு துறையில் நேரும் பிரச்சினை என்றோ குறுக்கிப் பார்த்து விலகிச் செல்லக் கூடாது.

பிரச்சினை உருவாக்கப்பட்ட அனைவருக்குமான பாதிப்பில் இருக்கும் பொதுத்தன்மைகள் முக்கியம். பொய்களை உருவாக்கிப் பரப்புவதும் அதற்கேற்ப ஒருவரின் பின்புலத்தை, கருத்து நிலையைப் பகைப்புலனாகப் பயன்படுத்திக் கொள்வதும் முதன்மையானது. எத்தகைய விளக்கங்கள் கொடுத்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் பொய்யையும் பின்புலம், கருத்து நிலை ஆகியவற்றை இணைத்துப் பரப்புதல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

சமூக ஊடகங்கள் மூலமாகவும் செல்பேசி வாயிலாகவும் நிகழ்த்தப்படும் தொடர் தாக்குதல் அடுத்த பொதுத்தன்மை. பக்தி, மதப்பற்று என்றெல்லாம் முகமூடி அணிந்துகொண்டு வருவோர் அந்த முகமூடிக்குக்கூட விசுவாசமானவர்கள் அல்ல. அவர்கள் கூறும் கருத்துக்களும் பயன்படுத்தும் சொற்களும் அநாகரிகம் மட்டுமல்ல, ஆபாசம், அசிங்கத்தின் உச்சம். புரையோடிய புண்ணிலிருந்து கொட்டும் புழுக்களை ஒத்தவை அவை. நம் மொழி இத்தனை நாராசமானதா எனச் சோர்வூட்டுபவை. தொடர்ந்து நூற்றுக்கணக்கில் இத்தகைய குரல்கள் வந்து விழுகையில் எத்தகைய திட மனதும் தடுமாறவே செய்யும். பேராசிரியர் சுந்தரவள்ளி முகநூலில் செய்த பதிவு ஒன்றுக்காக அவர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தது மட்டுமல்லாமல், அவர் தம் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பயன்படுத்தி இழிவான பதிவுகள் வெளியாயின. மொழியால் மட்டுமல்ல, படங்களைப் பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

அடுத்தது ஒருவருக்குரிய பொதுவெளியை முடக்கும் முயற்சி. பேசுதல், எழுதுதல், பாடுதல் என ஒரு படைப்பாளருக்குரிய வெளிகளை எல்லாம் மிரட்டியும் அச்சுறுத்தியும் பறித்துக்கொள்வார்கள். பொதுவெளி என்பது ஒருவரது செயல்தளம். அதைப் பறிப்பது பெரும் மனச்சோர்வுக்கு ஆளாக்கும். அத்துடன் புகார் கொடுப்பதையும் அதன் வழியாக அலைக்கழிப்பதையும் செய்யும் போது அன்றாட வாழ்வின் பாடுகளில் சிக்குண்டு கிடக்கும் படைப்பாளரால் அவற்றை எதிர்கொள்வது கடினம். மேலும் அரசமைப்புக்களை அணுகும் அனுபவத்தைப் போலக் கொடுமையானது எதுவுமில்லை.

இவற்றை எல்லாம் படைப்பாளர் எவ்வாறு எதிர்கொள்வார் என்பதைப் பற்றிய உணர்வு தேவை. ஆனால் ஏற்கனவே ஒருவர் மீது இருக்கும் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை முன்னிறுத்தி அவற்றைப் படைப்பின் மேலேற்றி வன்மத்துடன் ‘இது தரமற்ற படைப்பு’ என முத்திரை குத்துவது சரியானதல்ல. பிரச்சினை ஏற்படும் சூழலில் குறிப்பிட்ட படைப்பின் தரம், தகுதி பற்றிய விவாதம் எழுவது இயல்புதான்; தவிர்க்க இயலாததும்கூட.

அவ்விவாதம் ஒரு படைப்பை அணுகுவது பற்றியும் கருத்துக்களை முன்வைக்கும் விதம் பற்றியும் தெளிவைத் தரும் உதாரணத்துக்கு உரியதாக அமைய வேண்டும். அப்படைப்பைப் புறக்கணிக்கும் பார்வையாகவே இருப்பினும் அதை வெளிப்படுத்தும் முறை விவாதத்தின் பயனை உணர்த்துவதாக இருக்க வேண்டும். விவாதம் தவிர்த்த பிற வழிமுறைகள் ஜனநாயகத்தன்மை கொண்டவை அல்ல என்னும் உணர்வைக் கொடுக்க வேண்டும். எப்பேர்ப்பட்ட அகண்ட முதுகின் பின்னால் ஒளிந்துகொள்பவராக இருப்பினும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அம்முதுகு சட்டென விலகிவிடும். அப்போது அறிவுத்தளம் சார்ந்தவர்களே துணைக்கு வருவர் என்பதை நினைவில் இருத்துவது அவசியம்.

மேலும் இந்நிலையில் இந்தப் பொதுத்தன்மைகளை எதிர்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி நாம் யோசித்தாக வேண்டும். இப்படியே ஒவ்வொருவருக்கும் பிரச்சினை வரும்போது சில நாட்களுக்குப் பேசிக் கடந்து போவது சரியல்ல. பிரச்சினையை உருவாக்குவோருக்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம்; வேறொரு நெருக்கடியைத் திசை திருப்புவதற்கு இது பயன்படலாம். ஒருவர் தாம் கவனம் பெறுவதற்கான சுயநலம் கொண்டு இத்தகைய செயலில் ஈடுபடலாம். அதற்காக அறிவுத்துறையினர் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருவருக்குப் பிரச்சினை ஏற்படும் போது குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். குறைந்தபட்ச ஜனநாயக சக்திகள் ஒவ்வொரு துறையிலும் இருக்கவே செய்வார்கள். அவர்களை இணைப்பதற்கான நடைமுறைகள் தேவை. ஒற்றை அறிக்கை தருவதற்குக்கூட இயலவில்லை என்றால் பிழைத்து என்ன பயன்?

பன்மைத்தன்மையில் அக்கறை கொண்ட கட்சிகள், ஊடகங்கள், அமைப்புகளின் ஆதரவுகளை உருவாக்க முயல வேண்டும். வெகுஜன ஊடகங்களை நம்புவதை விடவும் அவற்றுக்கும் நிர்ப்பந்தம் தரும் வகையில் சமூக ஊடகங்களையும் சிற்றிதழ், நடுத்தர இதழ்கள் என அச்சு ஊடகங்களையும் விரிவாகப் பயன்கொள்ளலாம். மனுஷ்யபுத்திரனுக்குச் சமர்ப்பணம் செய்து சுகுமாரன் எழுதிய ‘தேவி மகாத்மியம்’ என்னும் கவிதை வெளியான பிறகு அதைத் தொடர்ந்து பலரும் எழுதிய ‘தேவி கவிதைகள்’ வெளியிடப்பட்டமை முன்னுதாரணமான செயல்பாடு. இத்தகைய செயல்பாடுகளுக்கு ஒருவரது கருத்து நிலைகள், செயல்பாட்டுத் தளம் ஆகியவற்றைக் கடந்து ஆதரவு தருவதுதான் ஜனநாயகக் கடமை என்னும் எண்ணம் தேவை.

காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையில் தமக்கு வந்த செல்பேசி உரையாடல்கள் சிலவற்றை மனுஷ்யபுத்திரன் வெளியிட்டிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. அவர்கள் பயன்படுத்திய ஆபாசச் சொற்கள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாச் சொற்களோடும் முழுமையாகவே வெளியிட வேண்டும். சமூகத்தின் பொதுமனத்திற்கு இந்த எதிர்ப்பாளர்களின் இலட்சணத்தை வெளிப்படுத்துவது முக்கியம். உரையாடல்களோடு அந்தச் செல்பேசி எண்களையும் பொதுவில் பகிர வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வசதியில் பேசுவோரின் பெயர், முகவரி ஆகியவற்றைக் கண்டறிவதும் எளிதுதான். ஒருவரது செல்பேசி எண்ணையும் பிற தகவல்களையும் பொதுவில் வெளியிட்டு அநாகரிகப் பேச்சைத் தூண்டுவது எதிர்ப்பாளர்கள் கடைபிடிக்கும் தந்திரம். அதை எதிர்கொள்வதற்குத் தமக்கு வரும் செல்பேசித் தகவல்களையும் சமூக ஊடகத் தகவல்களையும் பொதுவில் பகிர்ந்துகொள்வது தவறில்லை.

இவ்விதம் எதிர்கொள்ளும் வழிமுறைகளைப் பற்றி நாம் யோசித்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஒன்று முடிந்து இன்னொன்று எனப் பரபரப்புச் சங்கிலியில் இழுபட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். படைப்புக்குப் புதுப்புது உத்திகளை யோசிக்கும் நாம் பாதிப்புகளை எதிர்கொள்ளவும் புதுப்புது வழிகளை வகுப்பது அவசியம்.

Add your first comment to this post